Thursday, 4 August 2022

2021 -2022 முதுகலை புறம்

 முதுகலை புறம்

முதுகலை புறம்

1.புறநானூறு பாடல் 11 - சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ

முடிவேந்தர் மூவருள் ஒருவனான இச்சேரமான் நல்லிசைச் செய்யுள் பாடும் சான்றோன் ஆவான். இவன் பாடிய பாட்டுக்கள் பலவும் பாலைத் திணைக்கு உரியனவாகும். நற்றிணை, குறுந்தொகை, அகம் முதலிய தொகை நூல்களில் காணப்படும் பாலைப் பாட்டுக்கள் பல இவனால் பாடப்பட்டவை. இப்பாட்டுக்கள் அனைத்தும் இலக்கிய வளமும், அறவுணர்வும், நல்லிசை மாண்பும் உடையன.

இச்சேரமானைப் பேய்மகள் இளவெயினி என்பவர் பாடியுள்ளார். பேய்மகள் கண்ணுக்குத் தெரியாத வடிவுடையளாதலால், கண்ணுக்குத் தெரியுமாறு பெண்வடிவு கொண்டு இளவெயினி என்ற பெயருடன் இதனைப் பாடினாளென்று கூறப்படுகிறது. போர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து விரிய இவர் பாடிய சிறப்பால், இளவெயினி என்னும் இயற்பெயருடைய இவருக்கு பேய்மகளென்பது சிறப்புப் பெயராய் அமைந்திருக்க வேண்டும்.

குறமகள் இளவெயினி என்ற ஒருவர் சான்றோர் குழுவில் காணப்படுதலின், அவரிடமிருந்து வேறுபடுத்த இவரை பேய்மகள் என்று சிறப்பித்தனர். குறிஞ்சிநிலத்து நன்மகள் என்று கொள்ளாது, குறக்குடியில் பிறந்த மகளென்று பிழைபடக் கொண்டது போல தெரிகிறது.

இனி பாடலைப் பார்ப்போம்.

அரிமயிர்த் திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனல்பாயும் 5

விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய வரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே
புறம்பெற்ற வயவேந்தன் 10

மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே 15

எனவாங் கொள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.

பதவுரை:

அரிமயிர்த் திரள் முன் கைமென்மையான முடிகளையுடைய திரட்சியான முன் கைகளில்

வாலிழை மடமங்கையர்தூய ஆபரணங்களை அணிந்த விளையாடும் பருவத்து இளமகளிர்

வரி மணல் புனை பாவைக்குவண்டலிழைத்த சிறுமணலில் செய்த பாவைக்கு

குலவுச் சினைப் பூக்கொய்துவளைந்த மரக்கிளைகளிலிருந்து கோட்டுப் பூக்களைப் பறித்து

தண் பொருநைப் புனல் பாயும்பொருநை ஆற்றின் குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும்

விண்பொரு புகழ் விறல்வஞ்சிவானளாவிய புகழினையும், வெற்றியினையும் உடைய கருவூரில்

பாடல் சான்ற விறல் வேந்தனும்மேபாடல் பெறுவதற்குத் தகுதியான வெற்றியையுடைய அரசன்

வெப்புடைய அரண் கடந்துபகைவரின் கடும் பாதுகாப்புடைய காவற்கோட்டையை அழித்து

துப்புறுவர் புறம் பெற்றிசினேவலிமையோடு எதிர்த்த பகைவரை வென்று, அவரிடமிருந்து திறையை கொடையாகப் பெற்றவனே

புறம் பெற்ற வயவேந்தன் மறம்பாடிய பாடினியும்மே - திறையை கொடையாகப் பெற்ற வலிமையான அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும்

ஏர் உடைய விழுக்கழஞ்சின்தோற்றப் பொலிவுடைய சிறந்த கழஞ்சுகளை உருக்கிச் செய்யப்பட்ட

சீருடைய இழை பெற்றிசினேஅருமையான பொன்னரிமாலை, முத்துமாலை போன்ற அணிகலன்களைப் பெற்றாள்!

இழைபெற்ற பாடினிக்கு - அணிகலன்களைப் பெற்ற பாடினியின்

குரல் புணர் சீர்க் கொளைவல் பாண் மகனும்மேகுரலுக்கு இணக்கமாகவும், சிறப்பாகவும் கைகளால் தாளமிட்டு இனிமையாகப் பாடவும் செய்த பாணனும்

ஒள்ளழல் புரிந்த தாமரைபிரகாசமான உலை நெருப்பிலிட்டு உருவாக்கப்பட்ட பொற்றாமரை

வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே ஆங்குவெள்ளி நாரினால் தொடுத்த பூக்களை அங்கே பெற்றான்.

பொருளுரை:

மென்மையான முடிகளையுடைய திரட்சியான முன் கைகளில் தூய ஆபரணங்களை அணிந்த விளையாடும் பருவத்து இளமகளிர் (மங்கை - 12 முதல் 13 வயது வரை உள்ள பெண்) வண்டலில் இழைத்த சிறுமணலில் செய்த பாவைக்கு வளைந்த மரக்கிளைகளிலிருந்து கோட்டுப் பூக்களைப் பறித்து பொருநை ஆற்றின் குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும் வானளாவிய புகழினையும், வெற்றியினையும் உடைய கருவூரில் பாடல் பெறுவதற்குத் தகுதியான வெற்றியையுடைய அரசனே!

பகைவரின் கடும் பாதுகாப்புடைய காவற் கோட்டையை அழித்து, வலிமையோடு எதிர்த்த பகைவரை வென்று, அவரிடமிருந்து திறையை கொடையாகப் பெற்றவனே!

திறையை கொடையாகப் பெற்ற வலிமையான அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும், தோற்றப் பொலிவுடைய சிறந்த கழஞ்சுகளை உருக்கி செய்யப்பட்ட அருமையான பொன்னரிமாலை, முத்துமாலை போன்ற அணிகலன்களைப் பெற்றாள்!

அணிகலன்களைப் பெற்ற பாடினியின் குரலுக்கு இணக்கமாகவும், சிறப்பாகவும் கைகளால் தாளமிட்டு இனிமையாகப் பாடவும் செய்த பாணனும் பிரகாசமான உலை நெருப்பிலிட்டு உருவாக்கப்பட்ட வெள்ளி நாரினால் தொடுத்த பொற்றாமரைப் பூக்களைப் பெற்றான். யான் அது பெற்றிலேன்! என்று அரண்மனை வாயிலில் நின்று தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது போல இப்பாடல் அமைந்திருக்கிறது.

அருஞ்சொற்கள்:

மங்கை - 12 முதல் 13 வயது வரை உள்ள பெண்

வெப்பு: Severity – கொடுமை

கழஞ்சு - பன்னிரண்டு பணவெடை

கொளை: Melody – இசை, பாட்டு, Beating time with hands or cymbals, கைகளால் தாளமிட்டு ஒற்றுக் கை

ஒள் – 1. Bright, பிரகாசமான 2. good, excellent , நல்ல; 3. beautiful, அழகுள்ள; 4.knowing , அறிவுள்ள

அழல் - fire, நெருப்பு; 2. heat, உஷ்ணம், தணல் கொழுந்து, சுடர், அனல் பொறி, அடுப்புக் கனல், உலை நெருப்பு

இப்பாடல் பாடாண்திணை ஆகும்.

துறை பரிசில்கடாநிலை ஆகும். பரிசில் கடாநிலை என்பது பரிசில் தரும்படி வேண்டிக்கொண்டு வாயிலில் நிற்பதைக் குறிக்கும். புறநானூற்றைத் தொகுத்துத் துறை குறிப்பிட்டவர் 17 பாடல்கள் இத்துறையைச் சேர்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடாநிலை என்பது கடைநிலை என்பதன் திரிபு. கடை என்பது அரண்மனை வாயில். கடாவும் = வேண்டும் நிலை அன்று. பரிசில் வேண்டுவோர் வாயிலில் நின்றுகொண்டு தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது கடைநிலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பரிசில் நிலை என்றும் குறிப்பிடுகிறது.

பாடினி இழைபெற்றாள், பாணன் பூப்பெற்றான், யான் அது பெறுகின்றிலேன் என்பது பரிசில் கடாநிலை ஆயிற்று. இங்கு நின்னோடு எதிர் வந்து பட்டோரெல்லாம் பரிசில் பெற்றார்கள்; ஆனால் நான் பேய்மகளானதால் உன் கண் முன் தோன்றிப் பரிசில் பெற்றிலேன் என்பதாலும் பரிசில் கடாநிலை ஆயிற்று.

 

2. புறநானூறு - 74 - (வேந்தனின் உள்ளம்)

பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை.
திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி .
====================================

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'
ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?

அருஞ்சொற்பொருள்:-

குழவி = குழந்தை
தடி = தசை
தொடர்ப்பாடு = பற்று
தொடர் = சங்கிலி
ஞமலி = நாய்
இடர்ப்பாடு = இடையூறு
இரீஇய = இருக்க
கேளல் கேளிர் = பகைவர், அயலார்
வேளாண் = கொடை (உபகாரம்)
சிறுபதம் = தண்ணீர் உணவு
மதுகை = வலிமை (மனவலிமை)
அளவை = அளவு
ஈனுதல் = பெறுதல்

இதன் பொருள்:-

எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஒரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம் மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

பாடலின் பின்னணி:-

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை மூண்டது. அப்பகையின் காரணத்தால் அவர்களுக்கிடையே போர் தொடங்கியது. இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே போர் செய்யத் தொடங்கினர். போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டமெனத் தமிழ் நாவலர் சரிதையும், வெண்ணிப் பறந்தலை என்று நற்றிணை முன்னுரையும், திருப்போர்ப்புறம் என்று புறநானூற்றுக் குறிப்பும் கூறுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் உரை நூலில் குறிப்பிடுகிறார்3. போரில் சேரன் கணைக்கால் இரும்பொறை தோல்வியுற்றுச் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். ஒரு நாள், சேரமான் பசியின் கொடுமை தாங்காமல், சிறைக் காவலர்களிடம் உணவு அளிக்குமாறு கேட்டதாகவும், அவர்கள் காலம் தாழ்த்திச் சிற்றுணவை கொண்டு வந்ததாகவும். அதனால் வெட்கமும் வேதனையுமும் அடைந்த சேரமான் தன்னிரக்கத்தோடு இப்பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்ததாகவும், புறநானூற்றில் இப்பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது. ஆனால், வேறு சிலர், சேரமான் கணைக்கால் இரும்பொறை இப்பாடலை பொய்கையார் என்ற புலவருக்கு அனுப்பியதாகவும், அதைப் பெற்ற பொய்கையார் சோழனிடம் சென்று சேரமானைச் சிறையிலிருந்து விடுவிக்கச் செய்ததாகவும் கருதுகின்றனர். இப்பாடலின் பின்னணியைப் பற்றிய பல செய்திகள் ஆய்வுக்குரியன.

குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதை மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது மறக்குல மரபாகப் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாக இப்பாடலில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அரசர்களிடத்தில் இந்த வழக்கம் இருந்ததாகப் புறநானூற்றுப் பாடல் 93-இல் ஒளவையார் பாடியிருப்பதும் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், மானத்தோடு வாழ்வதே ஒருவற்குப் பெருமை தரக் கூடியது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. திருவள்ளுவர், மானத்தோடு வாழ்வதே சிறந்தது என்ற கருத்தை பல குறட்பாக்களில் கூறுகிறார். மானம் என்பதின் பெருமையை உணர்த்துவதற்குத் திருக்குறளில் ஒரு அதிகாரமே (மானம் - அதிகாரம் 97) உள்ளது.

 

72. இனியோனின் வஞ்சினம்!

பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்1
பாண்டிய நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்த மன்னர்களில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் ஓருவன். நிலந்தரு திருவீர் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் கடைச் சங்க காலத்துப் பாண்டிய மன்னர்களுள் முதன்மையானவன். அவனுக்குப் பிறகு முடத்திருமாறன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டதாக வரலாறு கூறுகிறது. பாண்டியன் முடத்திருமாறனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்டவன் பாண்டியன் பல்யாகசாலை முடுகுடுமிப் பெருவழுதி. இவன் பல யாகங்களைச் செய்ததால் அவ்வாறு அழைக்கப் பட்டான். இவனுக்குப் பிறகு இவன் மகன் நெடுஞ்செழியன் என்பவன் பாண்டிய நாட்டின் பெரும் பகுதியை மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தான். இவன் வட நாட்டுக்குச் சென்று போரிட்டு அங்குள்ள மன்னர்களை வென்றதால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டான். இவன் கண்ணகியின் கணவன் கோவலனைக் கள்வன் என்று பழி சுமத்திக் கொலை செய்தான். தன் தவற்றை உணர்ந்த பின், “யானோ அரசன்?, யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்ததுஎன்று கூறி உயிர் துறந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. நெடுஞ்செழியன் இறந்த பிறகு, அவன் தம்பி வெற்றிவேற் செழியன் என்பவன் பாண்டிய நாட்டை ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். வெற்றிவேற் செழியன் இறந்தவுடன் அவன் மகன் நெடுஞ்செழியன் என்பவன் பாண்டிய நாட்டுக்கு மன்னனாக சிறுவதிலேயே முடிசூட்டப்பட்டான். இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் இவனை எதிர்த்துப் போர் செய்தனர். தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான். இவனைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சின்னமனூர், வேள்விக்குடி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் காணப்படுவதாக வரலாறு கூறுகிறது. இவனைப் புகழ்ந்து பாடியவர்கள் பலர். புறநானூற்றில் 12 பாடல்களில் இவன் புகழ் கூறப்படுகிறது. பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்ற பாடலுக்கும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை என்ற பாடலுக்கும் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பது குறிப்பிடத் தக்கது.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒர் சிறந்த அரசன் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த புலவனாகவும் திகழ்ந்தான் என்பது புறநானூற்றில் அவன் இயற்றிய இந்தப் பாடல் மூலம் தெரிய வருகிறது.

பாடலின் பின்னணி: தலையாலங்கானத்தில் பகைவர் எழுவரும் ஒன்று கூடிப் போரிட வந்தனர் என்பதை அறிந்த நெடுஞ்செழியன், “ நான் இளையவன் என்று நினைத்து என் வலிமையை அறியாமல் இவர்கள் என்னிடம் போரிட வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் போரில் அழிப்பேன்; அங்ஙனம் நான் அவர்களை அழிக்காவிட்டால், என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும்; புலவர்கள் என்னைப் பாடது என் நாட்டைவிட்டு நீங்கட்டும்; இரவலர்க்கு ஈயவொண்ணாத கொடிய வறுமையும் என்னை வந்து சேரட்டும்என்று வஞ்சினம் கூறுகிறான்.


திணை: காஞ்சி; துறை: வஞ்சினக் காஞ்சி

நகுதக் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
5
படைஅமை மறவரும், உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
10
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
15
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

அருஞ்சொற்பொருள்:
1.
மீக்கூறல் = புகழ்தல். 2. உளைதல் = மிக வருந்துதல். 3. படு = பெரிய; இரட்டுதல் = மாறி மாறி ஒலித்தல்; பா = பரவுதல். பணை = பருமை. 6. உறு = மிக்க; துப்பு = வலிமை; செருக்குதல் = அகங்கரித்தல். 7. சமம் = போர். 8. அகப்படுத்தல் = சிக்கிக்கொள்ளுதல், பிடிக்கப்படுதல். 10. செல்நழல் = சென்றடையும் நிழல். 16. வரைதல் = நீக்கல். 17 புன்கண் = துயரம்; கூர்தல் = மிகுதல்

உரை: “இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் ஏளனத்துக்குரியவர்கள்; இவன் இளையவன்என்று என் மனம் வருந்துமாறு கூறி, தங்களிடத்து மாறி மாறி ஒலிக்கும் மணிகளணிந்த பரந்த பெரிய பாதங்களையுடைய நெடிய நல்ல யானைகளும், தேர்களும், குதிரைகளும் படை வீரர்களும் இருப்பதை எண்ணி, எனது வலிமையைக் கண்டு அஞ்சாது, என்னைப்பற்றி இழிவாகப் பேசும் சினத்தொடு கூடிய வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அழியுமாறு தாக்கி அவர்களையும் அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன். நான் அவ்வாறு செய்யேனாயின், என் குடை நிழலில் வாழும் மக்கள் சென்றடைய வேறு இடமில்லாமல், “ எம் வேந்தன் கொடியவன்என்று கண்ணீர் வடித்து அவர்களால் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவேனாக. மற்றும், மிகுந்த சிறப்பும் உயர்ந்த கேள்வியுமுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக. என்னால் காப்பாற்றப்படுபவர் துயரம் மிகுந்து என்னிடம் இரக்கும் பொழுது அவர்கட்கு ஈகை செய்ய இயலாத வறுமையை நான் அடைவேனாக.

சிறப்புக் குறிப்பு: முந்திய பாடலில் பூதப்பாண்டியன் கூறியதைப்போல், இப்பாடலில் பாண்டியன் தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மக்களால் கொடுங்கோலன் என்று கருதப்படுவது ஒரு பெரும்பழி என்று எண்ணுவதைக் காண்கிறோம். மற்றும் புலவர்களால் புகழ்ந்து பாடப்படுவது ஒரு தனிச் சிறப்பு என்பதும் அதை மன்னர்கள் பெரிதும் விரும்பினார்கள் என்பதும் இப்பாடலில் காண்கிறோம். தன்னிடம் இரப்பவர்க்கு ஈகை செய்யவியலாத அளவுக்கு வறுமையை அடைவது இறப்பதைவிடக் கொடுமையானது என்ற கருத்தைசாதலின் இன்னாதது இல்லை; இனிது அதூஉம் ஈதல் இயையாக் கடைஎன்ற குறளில் (குறள் - 230) திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறளுக்கும் இப்பாடலில் இம்மன்னன் கூறும் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை சிந்திக்கத் தக்கது.

 

188. மக்களை இல்லோர்!

பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி(188). இவன் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். புறநானூற்றில் இவன் இய்றிய பாடல் இது ஒன்றுதான். இவனைப் பிசிராந்தையார் பாடியுள்ளார் (184).
பாடலின் பின்னணி: மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை இப்பாடலில் பாண்டியன் அறிவுடை நம்பி சிறப்பித்துப் பாடுகிறான்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
5
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே.

அருஞ்சொற்பொருள்:
1. படைப்பு = செல்வம்; படைத்தல் = பெற்றிருத்தல். 4. துழத்தல் = கலத்தல் (துழாவல்). 5. அடிசில் = சோறு; விதிர்த்தல் = சிதறல். பயக்குறை = பயக்கு+உறை = பயன் அமைதல்

உரை: பலவகையான செல்வங்களையும் பெற்றுப் பலரோடு உண்ணும் பெருஞ்செல்வந்தராயினும், மெள்ள மெள்ள, குறுகிய அடிகளைவைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி, அதை உணவில் இட்டு, தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப் பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவையாகும்.

சிறப்புக் குறிப்பு: சிறுகுழந்தை நடக்கும் பொழுது, அது ஒருஅடி வைப்பதற்கும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கும் சற்று கால தாமதாவதால், “இடைப்படஎன்று நயம்படக் கூறுகிறார் பாண்டியன் அறிவுடை நம்பி.

மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை பல குறட்பாக்களில் வள்ளுவர் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (குறள் - 64)

மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (குறள் - 65)

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)

PuRanaanuuRu - Poem 73

73. உயிரும் தருகுவன்!


பாடியவர்: சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம். சோழன் நலங்கிள்ளிக்கும் அவன் உறவினன் சோழன் நெடுங்கிள்ளிக்குமிடையே பகை இருந்தது. ஒரு சமயம் அவர்களுக்கிடையே போர் மூண்டது. புலவர் கோவூர் கிழார் அவர்களைச் சமாதானப்படுத்திப் போரை நிறுத்தியதைப் புறநானூற்றுப் பாடல் 45-ல் காணலாம். மற்றொரு சமயம் சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்ட பொழுது சோழன் நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான். அவனுக்குப் புலவர் கோவூர் கிழார் அறிவுரை கூறியதாகப் புறனானூற்றுப் பாடல் 44 கூறுகிறது. சோழன் நலங்கிள்ளி படை வலிமையும் சிறந்த ஆட்சித் திறமையும் தமிழ்ப் பலமையும் கொண்டவன். புறநானூற்றில் 15 பாடல்களில் இவன் புகழப்படுகிறான். புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல்கள் இரண்டு (73 மற்றும் 75).

பாடலின் பின்னணி: சோழன் நெடுங்கிள்ளி சோழன் நலங்கிள்ளியை எதிர்த்துப் போரிட வருகிறான். நெடுங்கிள்ளி ஏன் போருக்கு வருகிறான்? என்னுடைய நாடு வேண்டுமென்று என்னடி பணிந்து என்னைக் கேட்டால் என் நாட்டையும் தருவேன்; என் உயிரையும் தருவேன். ஆனால் என்னையும் என் ஆற்றலையும் மதிக்காமல் போரிட நினைத்தால் அவனுக்குப் பெருமளவில் துன்பந்தரும் வகையில் போரிடுவேன் என்று சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: காஞ்சி

துறை: வஞ்சினக் காஞ்சி

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி

ஈயென இரக்குவர் ஆயின், சீருடை

முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;

இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து

5 ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாதுஎன்

உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்

துஞ்சு புலி இடறிய சிதடன் போல

உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்

கழைதின் யானைக் கால்அகப் பட்ட

10 வன்றிணி நீண்முளை போலச், சென்றுஅவண்

வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய

தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

பல்லிருங் கூந்தல் மகளிர்

ஒல்லா முயக்கிடைக் குழைக, என்தாரே!

அருஞ்சொற்பொருள்:

2. சீர் = புகழ், பெருமை. 3 தாயம் = உரிமைச் சொத்து; தஞ்சம் = எளிமை. 7. சிதடன் = குருடன். 8. மைந்து = வலிமை. 10. வன்திணி = வலிய திண்ணிய. 13. இரு = கரிய 14. ஒல்லா = பொருந்தாத; முயக்கு = தழுவல், புணர்தல்; குழைக = துவள்க, வாடுக

உரை: மெல்ல வந்து என் காலில் விழுந்து கொடு என்று என்னைக் கெஞ்சிக் கேட்டால் புகழுடைய முரசோடு கூடிய என்னுடைய உரிமைச் சொத்தாகிய இந்நாட்டை அடைவது எளிது. அது மட்டுமல்லாமல், என் இனிய உயிரைக்கூடக் கொடுப்பேன். ஆனால், வெட்ட வெளியில் படுத்துறங்கும் புலிமேல் தடுக்கி விழுந்த குருடன் போல் இந்நாட்டு மக்களின் ஆற்றலைப் போற்றாது போருக்கு வந்து என்னை ஏளனப்படுத்தும் அறிவிலி நெடுங்கிள்ளி இங்கிருந்து தப்பிப்போவது அரிது. மூங்கில் தின்பதற்கு வந்த வலிய யானையின் காலில் குத்திய வலிய பெரிய நீண்ட முள்போல் அவனைத் துன்புறுத்திப் போரிடேனாயின், தீதில்லாத நெஞ்சத்தோடு காதல் கொள்ளாத மிகுந்த கரிய கூந்தலையுடைய மகளிர் (விலை மகளிர்) என்னைத் தழுவுவதால் என் மாலை வாடட்டும்.

சிறப்புக் குறிப்பு: விலைமகளிரோடு தொடர்பு கொள்வது நல்லொழுக்கமில்லை என்பதை திருவள்ளுவர்,

அன்பின் விழையார்; பொருள் விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். (குறள் - 911)

என்ற குறளில் கூறுவதை இமன்னனின் கூற்றோடு ஒப்பு நோக்குக.

212. யாம் உம் கோமான்?

பாடியவர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி. இப்புலவர், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ் சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. சந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது, “புணர்ச்சிப் பழகுதல் வேண்டா; உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும் (குறள் - 785).” என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாக இவர்களுடைய நட்பு இருந்தது. தன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகையின் காரணத்தால் மனம் வருந்திக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். அதைக் கேட்ட பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ் சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும், அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர். இவர் செய்யுட்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.

பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்(67, 212, 213, 219, 221, 222, 223). கரிகாலனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் கிள்ளிவளவன் என்பவனும் ஒருவன் என்று வரலாறு கூறுகிறது. கிள்ளி வளவன் கரிகாலனின் பேரன் என்று சிலர் கூறுவர். ஆனால், வேறு சிலர் கிள்ளி வளவனுக்கும் கரிகாலனுக்கும் இருந்த உறவுமுறை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பர். கிள்ளி வளவனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் கோப்பெருஞ் சோழன். கோப்பெருஞ்சோழன் சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாக இருந்தான் என்பது, புறநானூற்றில் இவன் இயற்றிய மூன்று பாடல்களிலிருந்தும் (214, 215, 216), குறுந்தொகையில் இவன் இயற்றிய நான்கு பாடல்களிலிருந்தும் (20, 53, 129, 147) தெரியவருகிறது. இவனுக்கும் இவனுடைய இருமகன்களுக்கும் இடையே பகை மூண்டது. பகையின் காரணத்தால், தன் மகன்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான். புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பெருமக்கள் கூறிய அறிவுரைக்கேற்ப கோப்பெருஞ்சோழன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான். தன் மக்களுடன் தோன்றிய பகையால் வருத்தமடைந்த கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.
பாடலின் பின்னணி: பாண்டிய நாட்டில் இருந்த பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனிடம் மிகுந்த நட்புகொண்டவராக இருந்தார். அந்நட்பின் காரணமாகக் கோபெருஞ்சோழனைத் தன் வேந்தனாகவே கருதினார். “என் வேந்தன் கோப்பெருஞ்சோழன் உழவர்களை விருந்தோம்பல் செய்து ஆதரிப்பவன். அவன் உறையூரில் பொத்தியார் என்னும் பெரும் புலவருடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


நுங்கோ யார்என வினவின் எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெம்கள்
யாமைப் புழுக்கில் காமம் வீடஆரா
ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ
5
வைகுதொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நன்நாட் டுள்ளும் பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்;
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
10
வாயார் பெருநகை வைகலும் நக்கே.

அருஞ்சொற்பொருள்:
2. களமர் = உழவர்; அரித்த = வடித்த; வெம்மை = விருப்பம். 3. புழுக்கு = அவித்தது; ஆர்தல் = உண்டல்; காமம் = ஆசை; வீடல் = விடுதல். 4. ஆரல் = ஒருவகை மீன்; சூடு = சுடப்பட்டது; கவுள் = கன்னம். 5. வைகுதல் = இருத்தல்; மடிதல் = முயற்சி அற்றுப்போதல். 6. யாணர் = புது வருவாய். 7. பைதல் = துன்பம், வருத்தம். 8. கோழியூர் = உறையூர். 9. பொத்து = குற்றம், குறை; கெழீஇ = பொருந்தி. 10. வாயார் = வாய்மை அமைந்த; நக்கு = மகிழ்ந்து.

கொண்டு கூட்டு: நும்கோ யார் என வினவின், எம் கோ கோப்பெருஞ்சோழன்: அவன் பசிபகையாகிப் பொத்தியொடு வைகலும் நக்குக் கோழியிடத்திருந்தான் எனக் கூட்டுக.

உரை: “உம் அரசன் யார்?” என்று என்னைக் கேட்பீராயின், எம் அரசன் கோப்பெருஞ்சோழன். உழவர்களுக்காக வடிக்கப்பட்ட, விரும்பத்தகுந்த கள்ளை ஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அவ்வுழவர்கள் உண்டு, வதக்கிய கொழுத்த ஆரல் மீனைத் தம் கன்னத்தில் அடக்கித் தம்முடைய தொழிலை மறந்து விழாக்கோலம் கொண்டதுபோல் சுற்றித் திரியும் வளமை மிகுந்தது சோழநாடு. அத்தகைய புதுவருவாய் உடைய வளமான சோழநாட்டில், பாணர்களின் வருத்தமடைந்த சுற்றத்தாரின் பசியாகிய பகையைப் போக்குபவன் உறையூரில் வாழும் கோப்பெருஞ்சோழன். அவன் குறையற்ற நண்பர் பொத்தியாரோடு கூடி நாள்தோறும் உண்மையான பெருமகிழ்ச்சியோடு உள்ளான்.

190. எலியும் புலியும்

பாடியவர்: சோழன் நல்லுருத்திரன் (190). இவன் சங்க காலத்துச் சோழர்களுள் காலத்தாற் பிற்பட்டவன் என்பது இவன் பெயரிலிருந்து தெரிய வருகிறது. புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடலின் பின்னணி: பிறருடைய முயற்சியால் வாழ்பவர்களின் நட்பைத் தவிர்த்து, நல்ல கொள்கை உடையவர்களின் நட்பைக்கொள்ள வேண்டும் என்று இப்பாடலில் சோழன் நல்லுருத்திரன் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
5
இயைந்த கேண்மை இல்லா கியரோ;
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
10
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ.

அருஞ்சொற்பொருள்:
1. பதம் = பருவம்; சீறிடம் = சிறிய இடம். 2. வல்சி = உணவு; அளை = வளை; மல்கல் = நிறைதல். 4. உறுத்தல் = இருத்தல். 5. கேண்மை = நட்பு. 6. கேழல் = பன்றி. 7. அவண் = அவ்விடம், அவ்விதம்; வழிநாள் = மறுநாள். 8. விடர் = குகை; புலம்பு = தனிமை; வேட்டு = விரும்பி. 9. இரு = பெரிய; ஒருத்தல் =ஆண் விலங்குக்குப் பொதுப்பெயர். 10. மெலிவு = தளர்ச்சி. 11. உரன் = வலிமை, அறிவு, ஊக்கம். 12. வைகல் = நாள்.

உரை: நெல் விளைந்த சமயத்தில், சிறிய இடத்தில், கதிர்களைக் கொண்டுவந்து உணவுப்பொருட்களை சேகரித்துவைக்கும் எலி போன்ற முயற்சி உடையவராகி, நல்ல உள்ளம் இல்லாமல், தம்முடைய செல்வத்தை இறுகப் பிடித்துக் கொள்பவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்க. கொடிய பார்வையையுடைய பன்றி, தன்னால் தாக்கப்பட்டவுடன் இடது பக்கமாக விழுந்தது என்பதால் அதை உண்ணாது, பெரிய குகையில் தனித்திருந்து, பின்னர் வேட்டையாட விரும்பி, எழுந்து, பெரிய யானையைத் தாக்கி வலப்பக்கம் வீழ்த்தி அதை உண்ணும் பசியுடைய புலிபோல் தளராத கொள்கையையுடைய வலியவர்களோடு நட்பு கொள்க.

சிறப்புக் குறிப்பு: தன்னால் தாக்கப்பட்ட விலங்கு இடப்பக்கமாக வீழ்ந்தால் அதைப் புலி உண்ணாது என்ற கருத்து சங்க காலத்தில் நிலவியது என்பதற்குச் சான்றாக அகநானூற்றிலும் ஒருபாடல் காணப்படுகிறது.

தொடங்குவினை தவிரா அசைவுஇல் நோன்தாள்
கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலி…… (அகநானூறு, 29, 1-3)

185. ஆறு இனிது படுமே!

பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன் (185). இவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த தொண்டைமான் மரபினன். இவன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படைக்குப் பாட்டுடைத் தலைவன். இவன் சிறந்த அரசனாகவும், கொடை வள்ளலாகவும் இருந்தது மட்டுமல்லாமல் நல்ல தமிழ்ப்புலமை உடையனாகவும் விளங்கினான். இவன் நற்றிணையிலும் மூன்று பாடல்களை (94, 99, 106) இயற்றியுள்ளான்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், “அரசன் ஆட்சி புரியும் ஆற்றல் உடையவனாக இருந்தால் நாடு நலம் பெறும்; அவன் ஆற்றல் அற்றவனாக இருந்தால் பலவகையான துன்பங்கள் வந்து சேரும்என்று தன் கருத்தைத் தொண்டைமான் இளந்திரையன் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
5
பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

அருஞ்சொற்பொருள்:
1. கால் = வண்டிச் சக்கரம்; பார் = வண்டியின் அடிமரம் (அச்சு); ஞாலம் = உலகம். 2. சாகாடு = வண்டி; உகைத்தல் = செலுத்துதல்; மாண் = மாட்சிமை. 4. உய்த்தல் = செலுத்தல்; தேற்றான் = தெளியான்; வைகலும் = நாளும். 5. அள்ளல் = சேறு; கூழ் அள்ளல் = கலங்கிய சேறு. 6. தலைத்தலை = மேன்மேல்.
உரை: சக்கரத்தோடு அடிமரமும் சேர்ந்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம். வண்டியைச் செலுத்துபவன் திறமை உடையவனாக இருந்தால் வண்டி இடையூறு இல்லாமல் செல்லும். அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும். அது போல், மன்னன் மாட்சிமை பொருந்தியவனாக இருந்தால் நாடு நலம் பெறும். மன்னன் தெளிவில்லாதவனாக இருந்தால், பகை என்னும் சேற்றில் நாடு மூழ்கி ஒவ்வொரு நாளும் பலவிதமான கொடிய துன்பங்கள் மேலும் மேலும் வந்து சேரும்.

 

 

அலகு -2


APR

7

 

புறநானூறு 250

கைம்மை

 

கைம்மை நோன்பு பற்றிக் கூறும் பாடல் இது

அந்த வளங்கெழு திருநகர் அன்று

·         கண்ணீரோடு வந்தவர்கெல்லாம் தாளித்த துவையலோடு உணவு படைத்து அவர்களின் கண்ணீரைத் துடைத்த புரவலன் ஒருவன் இருந்துகொண்டிருந்த பந்தலைக் கொண்டிருந்தது.

அந்தப் புரவலனின் தலை, தனித்தலை, சிறப்பால் தனிமை பெற்று விளங்கிய தலை, இன்று பெருங்காடு சென்றுவிட்டது. அதனால்,

அந்த வளங்கெழு திருநகர் இன்று

 

அந்தப் பந்தலில்

·         அவனது புதல்வன்முனித்தலைப் புதல்வன், (தந்தை இல்லாமையால் தந்தை வரவேண்டும் என்று) அடம் பிடிக்கும் புதல்வன், முனிவு கொண்டிருக்கும் புதல்வன்வான்சோறாகிய தண்ணீரைப் பருகிவிட்டு, தாயிடம் தீம்பால் வேண்டுமென்று அழுகிறான்.

·         தாயோ தன் கூந்தல் கொய்யப்பட்ட நிலையில் அல்லி இலையில் போட்டு சிறதளவு உணவை உண்டுகொண்டிருக்கிறாள்.

(அந்த முனித்தலைப் புதல்வனுக்குத் தாய்ப்பால் ஊறுமா?)

 

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

 

குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயில்புரவலர்

கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்,

கூந்தல் கொய்துகுறுந் தொடி நீக்கி,

அல்லி உணவின் மனைவியொடுஇனியே      5

புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்!

வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்

முனித்தலைப் புதல்வர் தந்தை

தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே.

 

திணை பொதுவியல்; 

துறை தாபத நிலை.

...................தாயங்கண்ணியார் பாடியது.

2. 66. நின்னினும் நல்லன் அல்லனோ!

பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்(66). வெண்ணி என்பது திருவாரூர் மாவட்டத்தில், நீடாமங்கலம் என்னும் ஊருக்கு அருகே உள்ள ஓரூர். இவ்வூர் வெண்ணில் என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. சங்க காலத்தில் மண்பாண்டங்கள் செய்தவர்கள் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் சிறந்தவர்களுக்குகுயம்என்ற பட்டம் அரசர்களால் வழங்கப்பட்டது என்றும் இப்பழக்கம் பத்தாம் நூற்றண்டு வரை இருந்ததாகவும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை  அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே, இப்புலவர் குயக்குலத்தைச் சார்ந்த பெண் என்பது இவருடைய பெயரிலிருந்து தெரியவருகிறது.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 7- இல் காண்க.
பாடலின் பின்னணி: கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அதைக் கேள்வியுற்ற வெண்ணிக் குயத்தியார், இப்பாடலில், சேரமான் பெருஞ்சேரலாதனின் செயலை வியந்து, கரிகாலனை நோக்கி, “வேந்தே, போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு நாணி, அவன் வடக்கிருந்து பெரும்புகழ் பெற்றான். ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் அல்லனா?” என்று கேட்கிறார்.


திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
5
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே.

அருஞ்சொற்பொருள்:
1.
நளி = செறிதல், குளிர்ச்சி; இரு = பெரிய; முந்நீர் = கடல்; நாவாய் = கப்பல். 2. வளி = காற்று; உரவோன் = வலியவன்; மருகன் = வழித்தோன்றல். 3. களி = செருக்குறுதல். 4. அமர் = போர்; கடந்த = அழித்த. 5. அன்றே = அல்லவா; 6. கலி = தழைத்தல்; பறந்தலை = போர்க்களம்.

கொண்டு கூட்டு: உரவோன் மருக, கரிகால் வளவ,வென்றோய்,வெண்ணிப் பறந்தலைப்பட்ட புறப்புண் நாணி, உலகத்துப் புகழ் மிக எய்தி வடக் கிருந்தோன், நின்னினும் நல்லன் அன்றே எனக் கூட்டுக.

உரை: காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?

சிறப்புக் குறிப்பு: காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் முறையைச் சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பது இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது.

 

83. இருபாற்பட்ட ஊர்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். நக்கண்ணன் என்னும் ஆண்பாற் பெயரைப் போல் நக்கண்ணை என்பது பெண்பாற் பெயராகும். கோழி என்பது உறையூருக்கு மற்றொரு பெயர். நாய்கன் என்ற சொல்லுக்கு வணிகன் என்று பொருள். ஆகவே, இப்பாடலை இயற்றிய நக்கண்ணையார் என்பவர் உறையூரைச் சார்ந்த வணிக குலத்தில் இருந்த ஒருவரின் மகள். இவர் புறநானூற்றில் மூன்று பாடல்களையும் (பாடல்கள் 83, 84 மற்றும் 85), அகநானூற்றில் 252-ஆம் பாடலையும் நற்றிணையில் 19, 87 ஆம் பாடல்களையும் இயற்றியவர்.


பாடப்பட்டோன்: சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி. இவனைப்பற்றிய செய்திகளை 80 ஆம் பாடலில் காணவும்.



பாடலின் பின்னணி: இப்பாடலின் பின்னனியைப் புரிந்து கொள்வதற்கு, இப்பாடலோடு அடுத்து வரும் இரண்டு பாடல்களையும் (பாடல்கள் 84, 85) ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும். சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளிக்கும் ஓரு மல்லனுக்கும் இடையே ஆமூர் என்னும் ஊரில் மற்போர் நடைபெற்றது. நற்கிள்ளி ஆமூரைச் சார்ந்தவன் அல்லன். ஆனால் மல்லனோ ஆமூரைச் சார்ந்தவன். இருவருக்கும் இடையே நிகழ்ந்த மற்போரைப் பார்த்த மக்களில் ஒரு சாரார் நற்கிள்ளிக்கும் மற்றொரு சாரார் மல்லனுக்கும் ஆதரவு அளித்தனர். நற்கிள்ளி மல்லனை எதிர்த்து மற்போர் புரிந்த ஆற்றலையும், அவன் வலிமையும், அழகையும் கண்டு அவன் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார். இப்பாடலில், அவர் தன் காதலை மறைக்கவும் முடியாமல் வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியாமல் கலக்கமுற்று இருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறார். தான் என்ன செய்வது என்று தெரியாமல் இருவகையான எண்ணங்களோடு போராடுவதைப் போலவே ஆமுர் மக்களும் யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்ய முடியாமல் கலங்கட்டும் என்ற கருத்தை இப்பாடலில் நக்கண்ணையார் கூறுகிறார்.


திணை: கைக்கிளை. ஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.
துறை: பழிச்சுதல். தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.

அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
5
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!

அருஞ்சொற்பொருள்:
1. புனைதல் = அணிதல்; தொடுதல் = அணிதல்; மை = கருநிறம்; அணல் = தாடி. 2. தொடி = கைவளை; கழித்தல் = விலக்கல், நேக்கல்; யாய் = தாய். 3. அடுதல் = வெல்லுதல், வருத்துதல், போரிடுதல்; முயங்கல் = தழுவல். 4. விதுப்பு = நடுக்கம். 6. மையல் = மயக்கம்

கொண்டு கூட்டு: யான் யாய் அஞ்சுவல்; அவை நாணுவல்; இம்மயையலூர் என்போல் பெருவிதுப் புறுக எனக் கூட்டுக.

உரை: கழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நற்கிள்ளிமேல் நான் கொண்ட காதலால் என் கைவளைகள் கழல்கின்றன. ஆகவே, நான் காதல்கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். அவன் வலிய தோள்களைத் தழுவவேண்டுமென்று என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், அவையில் பலரும் இருப்பதால் அவனைத் தழுவுவதற்கு நாணுகிறேன். நான் என் காதலை வெளிப்படுத்தாமலேயே என் தாய்க்கு என் காதல் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், நான் காதலை வெளிப்படுத்தினால் ஊர் மக்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற நாணம். அச்சத்திற்கும் நாணத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு நான் நடுக்கமடைவதுபோல், நற்கிள்ளியை ஆதரிப்பதா அல்லது மல்லனை ஆதரிப்பதா என்று புரியாமல் மயங்கும் இவ்வூர் ஒரு கட்சியாக இல்லாமல் இரு கட்சியாய் இருந்து என்றும் என்போல் பெரிய நடுக்கம் உறுக.

 

புறநானூறு 87, பாடியவர் – ஔவையார்பாடப்பட்டோன் – அதியமான் நெடுமான் அஞ்சிதிணை – தும்பைதுறை – தானை மறம்

பாடல் பின்னணி:  அதியமானின் எதிரிகள் அவனோடு போர் செய்யத் திட்டமிட்டனர்.  அதை அறிந்த ஔவையார் அவர்களிடம் சென்று அதியமானின் வலிமையைப் புகழ்ந்து, போர் செய்வதைத் தவிருங்கள் என்று அறிவுரை கூறுவதை நாம் இப்பாடலில் காணலாம்.

களம் புகல் ஓம்புமின் தெவ்விர், போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன், வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.

பொருளுரை:   பகைவர்களே!   போர்க்களத்தில் புகுவதைத் தவிருங்கள்.  எதிர்த்துப் போரிடும் வீரன் ஒருவன் எங்களிடத்தும் இருக்கின்றான்.   ஒரே நாளில் எட்டு வலிமையான தேர்களைச் செய்யும் திறனுடைய தச்சன் ஒருவன், ஒரு மாதம் கருத்துடன் உழைத்துச் செய்த தேர்ச்சக்கரம் போன்றவன் அவன்.

சொற்பொருள்:   களம் போர்க்களம், புகல் புகுதல், ஓம்புமின் பாதுகாத்துக் கொள்ளுங்கள் (மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), தெவ்விர் பகைவர்களே,  போர் போர் செய்ய, எதிர்ந்து எதிர்த்து, எம்முளும் –  எங்கள் உள்ளும், உளன் உள்ளான், ஒரு பொருநன் ஒரு போர் வீரன், வைகல் நாள், எண் தேர் எட்டுத் தேர்கள், செய்யும் செய்யும் திறன் கொண்ட, தச்சன் மர வேலைப்பாடு செய்பவன், திங்கள் மாதம், வலித்த கருத்துடன் செய்த, கால்  தேர்ச் சக்கரம், அன்னோனே போன்றவன் (ஏகாரம் அசை நிலை)

 

86. கல்லளை போல வயிறு!

பாடியவர்: காவற் பெண்டு (காதற்பெண்டு எனவும் பாடம்.) காவற் பெண்டு என்பவர் மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்து கொண்ட பெண்பாற் புலவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடலின் பின்னணி: ஒரு நாள், ஒரு பெண்மணி காவற் பெண்டுவின் இல்லத்திற்கு வந்து, அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டாள். அதற்கு, காவற் பெண்டு தன் வயிற்றைக் காட்டி, “ புலி இருந்து சென்ற குகையைப் போன்றது என் வயிறு; என் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. என் மகன் போர்க்களத்தில் இருப்பான்என்று கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரிப்பது வாகை எனப்படும்.
துறை: ஏறாண் முல்லை. வீரம் மிகுந்த மறக்குடியை மேல் மேலும் உயர்த்திக் கூறுதல்.

சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுஉள னோஎன வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
5
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!


அருஞ்சொற்பொருள்:
4.
கல் = மலை; அளை = குகை . ஓரும் மற்றும் மாதோ என்பவை அசைச் சொற்கள்

உரை: சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு, “உன் மகன் எங்கே உள்ளான்என்று கேட்கிறாய். என் மகன் எங்கே உள்ளான் என்பதை நான் அறியேன். புலி தங்கிச் சென்ற குகையப் போல் அவனைப் பெற்ற வயிறு இது. அவன் போர்க்களத்தில் தோன்றுவான். அங்கு போய்ப் பார்.

112. உடையேம் இலமே!

பாடியவர்: பாரி மகளிர். இப்பாடலை இயற்றியவர் வேள் பாரியின் மகளிர் இருவர். சங்க இலக்கியத்தில் அவர்கள் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடலின் பின்னணி: பாரி இறந்த பின்னர், பாரியின் மகளிரைக் கபிலர் பாதுகாவலான இடத்தில் சேர்த்து அவர்களைக் காப்பாற்றி வந்தார். பாரி இறந்து ஒரு மாதம் ஆகிய பிறகு, ஒரு நாள் முழு நிலவில் அவர்களுக்குத் தங்கள் தந்தையின் நினைவும் நாட்டின் நினைவும் வந்து அவர்களை வாட்டியது. அவர்களின் மனவருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்கள்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
5
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!

அருஞ்சொற்பொருள்:
1.அற்றை = அன்று; திங்கள் = மாதம். 4. எறிதல் = அடித்தல். 5. இலம் = இல்லாதவர்கள் ஆனோம்.

உரை: ஒரு மாதத்திற்கு முன் வெண்நிலவு ஓளிவீசிக் கொண்டிருந்த பொழுது நாங்கள் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்; எங்கள் (பறம்பு) மலையையும் பிறர் கொள்ளவில்லை. அதேபோல், இன்று வெண்நிலவு வீசுகிறது. ஆனால், வெற்றி முரசு கொட்டும் வேந்தர்கள் எங்கள் மலையைக் கொண்டனர்; நாங்கள் எங்கள் தந்தையை இழந்தோம்.

சிறப்புக் குறிப்பு: மூவேந்தர்களும் பாரியைப் போரில் வெல்ல முடியவில்லை. ஆனால், அவர்கள் அவனை சூழ்ச்சியால் வென்றனர். “வென்றெறி முரசின் வேந்தர்என்பது மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு.

புறநானூறு - 9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!

புறநானூறு - 9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!

பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண்
துறை :இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து,இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!  


பொருளுரை

பசுக்களும், பசுக்களின் இயல்பையுடைய பார்ப்பன இனத்தவர்களும் மகளிரையும், நோய் உடையோரையும் பாதுகாத்து தென் திசையில் வாழும் அவரவர் குடியில் இறந்தோர்க்குச் செய்ய வேண்டிய பிண்டோதகக் (பிண்டம்சோறு, உதகம்நீர்) கிரியை செய்யும் பொன்போன்ற தங்கமான பிள்ளையைப் பெறாத மணமக்களும் எம்முடைய அம்பை விரைவாகச் செலுத்தும் போது நீங்கள் உங்களுக்குப் பாதுகாப்பான இடம் தேடிச் செல்லுங்கள் என்று அறநெறியைச் சொல்லும் கொள்கையுடையவன்

அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான உறுதியான குணமும் கொல்லும் தன்மையுள்ள யானை மேலே எடுத்துச் செல்லப்பட்ட வானுயர்ந்த கொடிகள் ஆகாயத்தையே மறைத்து நிழல் தரும்படி ஆட்சி செய்பவனாகிய எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க

தனது அரசாட்சியின் செம்மையான சிறந்த நேர்மையான ஆட்சியில் செய்த சுத்தத் தங்கத்தை தன் அரசவையில் மகிழச் செய்யும் கூத்து நடிப்போர்க்கும், நடனக் கலைஞர்களுக்கும் வழங்கியவன் உன் முன்னோன் நெடியோன்

நிலத்திற்கும், ஆற்று நீர், ஊற்று நீருக்கும் முன் தோன்றிய கடல் தெய்வத்திற்கு குடுமியின் முன்னோராகிய நெடியோன் விழா நடத்திய நல்ல நீரையுடைய பஃருளி என்னும் ஆற்று மணலினும் பல ஆண்டு காலம் எங்கள் அரசன் குடுமி நீடூழி வாழியவே! என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாராட்டிப் பாடியிருக்கிறார்

புறநானூறு 299

குதிரை மறம் பொன்முடியார் பாடியது.

இரண்டு சிற்றூர் மன்னர்களுக்கு இடையே போர்

இருவரும் குதிரைமீது வந்து போரிட்டனர்

 

ஒருவன் பருத்திச்செடி வேலியாக விளங்கும் சீறூர் மன்னன்

அவன் குதிரை உழுந்துச் சக்கையை உண்டு வளர்ந்தது.

 

மற்றொருவன் தண்ணடை (நன்செய்நிலம்) அரசன்

இவன் குதிரை நெய் ஊற்றி மிதித்த சோற்றினைத் தின்று வளர்ந்தது

இது பிடரி மயிர் கத்திரிக்கப்பட்டு அழகிய தோற்றம் கொண்டது. மாலையிட்டு அழகு செய்யப்பட்டது.

 

உழுந்து-அதர் தின்ற குதிரை போரிடுவோரை விலக்கிக்கொண்டு பாய்ந்தது

 

நெய்ச்சோறு தின்ற குதிரை அந்தக் குதிரைப் பக்கம் செல்லாமல் ஒதுங்கி நின்றது

 

குதிரைமீது வந்த மன்னர்கள் இவ்வாறு போரிட்டனர்.

குதிரை எப்படி ஒதுங்கி நின்றது?

 

மாதவிடாய்க் காலத்தில் சமையல் செய்யாமல் ஓய்ந்திருக்கும் மகளிர் முருகன் கோயிலுக்குள் நுழையாமல் அதன் வெளிப்புறம் நின்று வழிபடுவது போல நெய்ச்சோறு தின்ற குதிரை ஒதுங்கி நின்றது.

 

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

 

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி,

கடல் மண்டு தோணியின்படை முகம் போழ

நெய்மிதி அருந்தியகொய் சுவல் எருத்தின்,

தண்ணடை மன்னர்தாருடைப் புரவி,               5

அணங்குடை முருகன் கோட்டத்துக்

கலம் தொடா மகளிரின்இகந்து நின்றவ்வே.

 

திணை நொச்சி

துறை குதிரை மறம்.

 

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு