Tuesday, 29 October 2013

அடித்தளப் படிப்பு - தமிழ் - இரண்டாம் பருவம், பாடங்கள் அலகு-1

அலகு 1  சமய இலக்கியங்கள்
அ. தேவராம் - திருப்புக்கொளியூர் அவிநாசி           சுந்தரமூர்த்தி நயனார்

இறைவன் - அவிநாசியப்பர்,                                      இறைவி பெருங்கருணை நாயகி.

            சுந்தரர் திருவாரூரிலிருக்கும் போது சேரர் பெருமானை நினைந்து புறப்பட்டனர். வழியிலுள்ள திருவூர்களை வணங்கிச் சென்று, அவிநாசித் திருவூர் வந்தனர். மறையவர் தெருவில் எதிரெதிர் வீட்டில் ஒன்றில் மங்கலவொலியும், மற்றொன்றில் அழுகையொலியுங் காணப்பட்டன. அவற்றைக் கேட்ட சுந்தரர் வினவினர் ஐயாட்டைப் பருவத்து அந்தணச் சிறுவர் இருவர் குளத்திற்குச் சில ஆண்டுகளுக்கு முன் முழுகப்போயினர். ஒருவனை முதலை விழுங்கி விட்டது. அவ் வீட்டார் அழும் அழுகையொலி அது. மற்றச் சிறுவனுக்குப் பூணூல் போடுகின்றனர். அதனால் ஏற்படும் மங்கலவொலி இஃது என விடையிறுத்தனர். இவற்றையுணர்ந்த சுந்தரர் இரக்கம் பூண்டனர். இழந்த சிறுவனுக்குரிய பெற்றோர் சுந்தரரைக் காணப்பெற்றமைக்குப் பெரிதும் மகிழ்ந்து வந்து வணங்கினர். சுந்தரர் """"சிறுவனை யான், அந்த முதலை வாய்நின்றும் அழைத்துக் கொடுத்தே அவிநாசி, எந்தை பெருமான் கழல்பணிவேனென்றார்"" அவ்வாறே இத் திருப்பதிகம் பாடிச் சிறுவனை அழைத்தளித்தனர். வெண்ணூல் பூட்டுவித்து மகிழ்வித்தனர். செந்நெறி முதல்வர் செய்துகாட்டிய நன்னெறி உயிர்க்குத் துன்பம் நீக்கி இன்பமாக்குவதென்பது இதனால் நன்கு புலனாகும்.

மேலும் வாசிக்க...

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே

உற்றாயென் றுன்னையே உன்குகின் றேனுணர்ந் துள்ளத்தால்

புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே

பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.                                                     1

வழிபோவார் தம்மோடு வந்துடன் கூடிய மாணிநீ

ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே

பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை

இழியாக் குளித்த மாணி என்னைக்கிறி செய்ததே.                                        2

எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்கால்

கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலை

பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே

எங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.                              3

உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்

அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்

புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே

கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.                                    4

அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியும்

சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்

புரங்கோட வெய்தாய் புக்கொளி யூரவி நாசியே

குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.                               5

நாத்தானும் உனைப்பாட லன்றி நவிலா தெனாச்

சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்

பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே

கூத்தா வுனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.                                        6

மந்தி கடுவனுக் குண்பழ நாடி மலைப்புறம்

சந்திகள் தோறுஞ் சலபுட்ப மிட்டு வழிபடப்

புந்தி யுறைவாய் புக்கொளி யூரவி நாசியே

நந்தி யுனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.                                   7

பேணா தொழிந்தேன் உன்னை யலாற்பிற தேவரைக்

காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன் நான்

பூணா ணரவா புக்கொளி யூரவி நாசியே

காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.                                          8

நள்ளாறு தெள்ளா றரத்துறை வாயெங்கள் நம்பளே

வெள்ளாடை வெண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்

புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை

உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.                                        9

நீரேற வேறு நிமிர்புன்சடை நின்மல மூர்த்தியைப்

போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக்

காரேறு கண்டனைத் தொண்டனா ரூரன் கருதிய

சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.                                        10

ஆ. ஐந்தாம் திருமொழி தருதுயரந் தடாயேல்

(குலசேகராழ்வார்)

            பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் குலசேகராழ்வார் ஆவார். இவர் சேரநாட்டுத் திருவஞ்சைக் களத்தில், பவ வருடம் மாசித்திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் கௌத்துப (மணி) அம்சமாகப் பிறந்தவர். அரியனை துறந்து வைணவத் தொண்டரானவர். வடமொழியும் தென்மொழியும் தெளிந்தவர். இராமனிடத்து மிக்க ஈடுபாடுடையவர்.

            இவர் தமிழில் பெருமாள் திருமொழியும், வடமொழியில் முகுந்தமாலையும் செய்துள்ளார். திருவேங்கடமுடையானிடமும், கண்ணபிரானிடமும் காண்தகு காதல் கொண்டு பாடியுள்ளார். வேங்கடத்தில் படியாய்க் கிடந்து மகிழவிரும்பினார். இன்றும் அங்கு படிகள் குலசேகரன் படிஎன்று கூறப்படுகின்றன. இவர் காலம் 9-ஆம் நூற்றாண்டு. திருவரங்கத்தில் மூன்றாம் மதிலை இவர் கட்டினாராம்.

            இவர் திருமொழி 10 பிரிவுகளும் ; ஒவ்வொரு பிரிவும் முதற்பாட்டின் முதற்றொடரைத் தலைப்பாகவும், இறுதிப் பாடல்கள் கோழியர் கோன் குலசேகரன் சொன்னஎன முத்திரை பெற்றும் அமைகின்றன.

            நம் பாடப் பகுதியாக அமைந்துள்ள 10 பாசுரங்களும் ஐந்தாம் திருமொழியில் """"தருதுயரம் தடாயேல்"" என்னும் பகுதியில் அமைந்தவையாகும்.

தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை

விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் வித்துவக்கோட்டாம்மானே

அரிசின்னத்தா லீன்றத்தாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள் நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே.                           1

கண்டாரி கழ்வனவே காதலனறாள் செய்தினும்

கொண்டானை யல்லா லறியாக் குலமகள்போல்

விண்டோய்ம திள்புடைசூழ் வித்துவக்கோட்டம்மானே

கொண்டாளா யாகிலுமுன் குறைகழலே கூறுவேனே.                                      2

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மானே

பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்

தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்

கோல்நோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே.                                                 3

வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்

மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்

மீளாத்து யர்தரினும் வித்துக்கோட்டம்மானே

ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே.                                                             4

வெங்கண்திண் களிறடர்த்தாய் வித்துவக்கோட் டம்மானே

எங்குப்போயுய் கேனுன் னிணையடியே யடையலல்லால்

எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்

வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே.                                          5

செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்

அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்

வெந்துயர்வீட் டாவிடினும் வித்துவக்கோட் டம்மாஉன்

அந்தமில்சீர்க் கல்லால கங்குழைய மாட்டேனே.                                               6

எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்

மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைபோல்

மெய்த்துயர்வீட் டாவிடினும் வித்துவக்கோட்டம்மாஎன்

சித்தமிக அன்பாலே வைப்பன் அடியேனே.                                                     7

தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடித் தொடுகடலே

புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்

மிக்கிலங்கு முகில்நிறத்தாய் வித்துவக்கோட்டம்மாஉன்

புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே.                                       8

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்

தன்னையே தான்வேண்டும் செல்வம் போல் மாயத்தால்

மின்னையே சேர்திகிரி வித்துவக்கோட்டம்மானே

நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே.                                                    9

வித்துவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்

மற்றாரும் பற்றில்லே வென்றவனைத் தான்நயந்த

கொற்றவேல் தானைக்கு லசேக ரன்சொன்ன

நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணாந ரகமே.                                                       10

இ. பட்டினத்தார் பாடல்கள்

            இவர் காலம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு எனக் கருதுவர். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் - ஞானகலையின் புதல்வராகத் தோன்றிய இவரது இளமைப் பெயர் திருவெண்காடர். அவருக்கு அய்ந்து வயதானபோது தந்தையை இழந்தார். மணப்பருவம் அடைந்ததும் சிவகலையை மணந்து இல்லறத்தில் புகுந்தார். சிவனருட்செல்வராக இறைப்பணி செய்தும் மகப்பேறு கிட்டவில்லை. அவ்வூர் சிவசருமரிடம் பொருள் கொடுத்து வளர்ப்புக் குழந்தையைப் பெற்றார். அக்குழந்தைக்கு மருதபிரான் எனப் பெயரிட்டார்.

            மருதபிரான் காளைப் பருவம் அடைந்தபின் திரைகடல் தாண்டித் திரவியம் தேடச் சென்றான். சில நாட்களுக்குப் பின் கப்பல் நிறைய வரட்டிகளும் தவிடு மூட்டைகளுமாகத் திரும்பினான். மகனுக்குப் பித்துப் பிடித்ததோ எனக் கலங்கிய பட்டினத்தார் அவனை ஓர் அறையில் பூட்டிவிட்டுக் கப்பலுக்குச் சென்று ஒரு வரட்டியை எடுத்துச் சினத்துடன் வீசினார். அஃது உடைந்து நவரத்தின மணிகளாகச் சிதறியது ; தவிடெல்லாம் பொன்மணலாக மாறிற்று.

            திகைத்த பட்டினத்தார் இல்லம் திரும்பியபோது மகன் காணப்படவில்லை. அம்மகன் விட்டுச் சென்ற பெட்டியைத் திறந்தபோது அதில் காதற்ற ஓர் ஊசியும் ஓர் ஓலைத் துணுக்கும் கிடந்தன. அந்த ஓலைத் துணுக்கில், """"காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே"" என எழுதப்பட்டிருந்தது.

            தம் மகனாக வளர்ந்தவர் திருவிடை மருதூர் இறைவன் மருதப்பரே என உணர்ந்த பட்டினத்தார் துறவு பூண்டு சிற்றாடையுடன் வெளியேறினார். ஊர்ப்பொதுவிடத்தில் நிட்டையில் அமர்ந்தும் ஊர்மக்களிடம் பிச்சை வாங்கி உண்டும் திரிந்து வந்தார்.

            தமது குலப்பெருமை அழிவதாக எண்ணிய அவர் தமக்கையார் அவருக்கு நஞ்சு கலந்த அப்பம் ஒன்றை உண்ணக்கொடுத்தார். இதனை உணர்ந்த பட்டினத்தார், ‘தன்வினை தன்னைச் சுடும்எனக் கூறி அந்த அப்பத்தைத் தம் தமக்கை வீட்டுக் கூரையில் செருகினார். அவ்வீடு தீப்பற்றி எரிந்தது.

            கோயில்   திரு அகவல்,   கச்சித் திரு அகவல்,    திருவேகம்ப மாலை, அருட்புலம்பல்

ஆகியவற்றைப் பாடியதுடன், பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது ஆகிய சிற்றிலக்கியங்களையும் பாடியுள்ளார்.

            இவர் பாடிய நிலையாமை குறித்து அமைந்த 5  பாடல்கள் நம்பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே

அல்லாதுவேறு நிலையுளதோ? அகமும் பொருளும்

இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழில் உடம்பும்

எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சி ஏகம்பனே.                                         1

பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை ; பிறந்து மண்மேல்

இறக்கும் பொழுது கொடுபோல தில்லை ; இடைநடுவில்

குறிக்குமிச் செல்வம் சீவன் தந்ததென்று கொடுக்கறியாது

இறக்கும் குலாமருக்கு என்சொல்லுவேன்? கச்சி ஏகம்பனே.                         2

ஊருஞ் சதமல்ல ; உற்றார் சதமல்ல ; உற்றுப்பெற்ற

பேருஞ் சதமல்ல ; பெண்டீர் சதமல்ல ; பிள்ளைளும்

சீருஞ் சதமல்ல ; செல்வம் சதமல்ல ; தேசத்திலே

யாருஞ் சதமல்ல ; நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே.                                          3

வாதுக்குச் சண்டைக்குப் போவார் வருவார்வழக்குரைப்பார் ;

தீதுக்கு உதவியும் செய்திடுவார், தினந்தேடி ஒன்று

மாதுக் களித்து மயங்கிடுவார்விதி மாளுமட்டும்

ஏதுக்கு இவர்பிறந்தார்? இறைவா! கச்சி ஏகம்பனே.                                      4

ஓயாமல் பொய்சொல்வர் நல்லோரை நிந்திப்பர்உற்றுப்பெற்ற

தாயாரை வைவர் ; சதி ஆயிரஞ் செய்வர் ; சாத்திரங்கள்

ஆயார் ; பிறர்க்குபகாரம் செய்யார் ; தமைஅண்டினர்க்கொன்

றீயார் இருந்தென்ன போயென்ன காண்கச்சிஏகம்பனே.                                 5

ஈ. திருக்காவலூர்க் கலம்பகம் - புயவகுப்பு

( வீரமாமுனிவர்)

            தமிழகத்தில் சமயத்தைப் பரப்பும் நோக்குடன் வந்த பாதிரிமார்கள் தமிழ் மொழியில் சமயக்கருத்துக்களைக் கூறுதல் நலம் பயக்கும் என நினைத்துத் தமிழ்மொழியைக் கற்று, அதன் இனிமையில் தங்கள் மனம் தொலைத்தனர். எண்ணற்ற இலக்கிய, இலக்கண ஆய்வு நூல்களைப் படைத்தளித்துத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அருந் தொண்டாற்றினர். அத்தகையோர்களில் குறிப்பிடத்தக்கவர் கான்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி. இவர் 8.6.1680 இல் இத்தாலி நாட்டில் பிறந்தார்.

            தாம் கொண்ட தமிழ் புலமையினால் தேம்பாவணி, திருகாவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, கித்தேரியம்மாள் அம்மானை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகிய நூல்களைப் படைத்தார். தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கொண்டுவந்தார். 1606 இல் தொடங்கி மதுரையில் சமயப் பணியாற்றிய வீரமாமுனிவர் 1656 ல் சென்னை மயிலாப்பூரில் சனவரி பதினாங்காம் நாள் தன் இன்னுயிரை நீத்தார். திருக்காவலூர்க் கலம்பகம் என்னும் கிறித்துவ இலக்கியத்தில் தேவனின் தோள் சிறப்புகள் பற்றிக்கூறும் புயவகுப்பு பகுதி நம்பாட பகுதியாக அமைந்துள்ளது.

வெளிமதிகதி ருடுக்குல மணிநிதியொளி முகத்தவை

            மலர்கனியமு துமற்றைய பலவுலகுள வனைத்தையு

            மீறிலா தெங்கணு மருளிப் பயந்தன;

வெளியமைசுரர் முதற்பல வினையமைநர ரினத்தொடு

            விரிபலவுல கனைத்தினு முளபலவுயி ரனைத்தையு

            நாளுமா றின்றிய ரிதுயிர்த் தமைத்தன;

வினைவிளைபுவி பகைத்தன முழுதுளதுக டுடைத்திட

            விரிமுகிலிடி யிடித்தரி துயர்மலைமுடி யொளித்திட

            மாரிமா றொன்றிவ் வுலகிற் பொழிந்தன;

விரவியவிர கமுற்றிய வினையொடுவெகு ளிபற்றிய

            அழலெமுமுகில் இயற்றிய சுடும்எரியுல கழற்றிய

            மாரியால் ஐம்புரம் எரியச் சினந்தன ;

தெளிமறையவர் செலப்பரி கடலிருமதி லெனக்கடி

            திருபுடையெழ நிறுத்தின நிலையெழுதிரை கவிழ்ந்தெதிர்

            நேரலார் நைந்துயி ரொழியக் கடிந்தன;

திகிரியதுயர் குவட்டிழி திரைநிலையுற நிறுத்துபு

            மலைமிசைமலை யடுக்கென வலைமிசையலை யடுக்குபு

            யோருதா னுந்திந டைதடுத் துயர்ந்தன;

செருமிகுசெறு நர்மொய்த்துறை முகிறவழரண் மதிற்சுவர்

            பொடியெழவடி பெயர்த்தொரு படையிலநகர் தகர்த்திரு

            ஞாலமே யஞ்சமி குகதத் ததிர்ந்தன;

சிதவழிசிதை சினக்கர னரசுடனுயி ரறப்பல

            கரிபரியல துமுப்படி யுறழவுமப யர்முற்றறு

            நூறுநூ றன்றொழி யவதைத் தெறிந்தன;

ஒளியெழுமுரு ணடத்தின; நிலையுறவுரு ணிறுத்தின;

            பிறகுறவுரு ளிழுத்தன; பகலிடையுரு ளொளித்தன;

            மாயிரா வென்றுல கிருளக் கரந்தன;

உயிரியவரை முகட்டிடை யழலெழவிடி முழக்குட

            னதிர்வனவுல குவப்புற விருசிலைமிசை திருந்திய

            வேதநூ லன்புட னெழுதிப் பரந்தன;

உலகுயிர்கனி யவொத்துரு வுடலுறியடை சயக்கொடி

            யெனவொருசிலு வைநட்டிட வுயர்லைமுக டுபற்றுளி

            வானுளொ ரஞ்சிவெ ருவுறச் சிவந்தன;

வொருவிலபடை யெனப்பொறை யொருபொழுதெம துயிர்ப்பகை

            யெனமுகிவில வுடற்றிய வெளியினமுழு தடக்கிய

            வாகையே கொண்டிட ருலகிற் பரிந்தன;

களியறவுட லுணக்கிய பிணியறமிடி பெருக்கிய

            துயரறவினை யியற்றிய குறையறவரி தியக்கிய

            வீரவா யுண்பு துமையிற் சிறந்தன;

கடிதெழுவளி யடக்கின; பகமலைபுவி நடுக்கின;

            பகலிடை வெளியிருட்டின; கனல்குளிரிட நிலைத்தன;

            நீருமா யைந் ததையு மரிதிற் புரந்தன;

கதிபெறுமறை யுரத்தொடு கொடையருடவ நலத்தொடு

            பொறைதுணிவற வயத்தொடு பொருணயநல மனைத்தையு

            ஞாலம் தெங்கணு மலியப் பயந்தன;

கசடிடர்முழு தொழிப்பன வொழிவிலகளி யுயிர்ப்பன

            நாககல்கத வடைப்பன கடையிலகதி யிலுய்ப்பன

            காவலூ ரங்கனை மகன்றன் புயங்களே.

உ. பராபரக் கண்ணி

( குணங்குடி மஸ்தான் சாகிபு )

            குணங்குடி மஸ்தான் சாகிபின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர் என்பதாகும். மஸ்தான் - ஞானி என்பதைக் குறிக்கும். இவருடைய பாடல்கள் மஸ்தான் சாகிபு திருப்பாடல்கள் என்றே வழங்குகின்றன. தாயுமானார் பாடல்கட்கும் இவற்றிற்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளன.

            இவர் பிறந்த ஆண்டு கி.பி. 1792 – ஹிஜ்ரி 1207 ஆகும். இவரின் ஊர் குணங்குடி. தொண்டி மாநகர்க்கு அருகில் அமைந்துள்ளது. இவரது தந்தையார் பெயர் நயினார்முகமது என்பதாகும். இவரின் தாயார் பெயர் பாத்திமா. இவர் துறவு பூண்ட ஆண்டு கி.பி. 1813 ஆகும். இவரது இறுதி நாட்கள் இராயபுரம் பாவா லெப்பை சாகிப் தோட்டம் என்னும் பகுதியில் அமைந்ததாகும். இவ்விடத்தை முட்புதர்கள், மூங்கில்காடு, சப்பாத்திக் கள்ளி மண்டிய இடம் என்பர்.

            நம் பாடப்பகுதியில் இவர் இயற்றிய பராபரக்கண்ணி என்னும் பகுதியில் முதல் 10 கண்ணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பரம்பொருளின் சிறப்புகள் குறிப்பிடப்படுகின்றன.

அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்

கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.                                                       1

ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்

சோதியாய் நின்மலமாய்ச் சூழ்ந்தாய் பராபரமே.                                                2

வேத மறைப்பொருளை வேந்தாந்தத் துஉட்கருவை

ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே.                                                        3

அண்ட புவனமுடன் ஆகாச மென்று உசும்பிக்

கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே.                                            4

நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்

பூவாய் மலர்ந்திருக்கப் பூத்தாய் பராபரமே.                                                       5

பேரால் பெரிய பெரும்பொருளே பேதைதனக்கு

ஆரா ரிருந்தும்பலன் ஆமோ பராபரமே.                                                            6

மாராய நற்கருணை மாவருள்சித் தித்திடவே

பாராயோ ஐயா பகராய் பராபரமே.                                                                     7

ஆனாலு முன்பாதம் யாசித்து இருப்பதற்குத்

தானாய் இரங்கியருள் தாராய் பராபரமே.                                                          8

நாதாந்த மூல நடுவீட்டுக்குள் இருக்கும்

மாதவத்தோர்க்கு ஆன மருவே பராபரமே.                                                       9

உடலுக்கு உயிரேஎன் உள்ளமே உன்பதத்தைக்

கடலுமலை யும்திரிந்தும் காணேன் பராபரமே.                                                  10

                       

No comments: