அலகு –
2 மரபுக்கவிதை
அ. கண்ணன் - என் சேவகன் - பாரதியார்
எளிய தமிழில் ஏற்றமிகு கருத்துக்களைப் பாடித் தமிழின் மறுமலர்ச்சிக்கு
வித்திட்ட புதுமைக் கவிஞர் இவர். நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல் என்ற
நோக்கத்தோடு கவியரசர் பாட்டுத் திறத்தாலே பைந்தமிழின் சிறப்பினைப் பாரதியார்
செய்தார். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்பவை
இவருடைய முப்பெருங் கவிதைச் செல்வங்களாகும்.
தேசியம், சர்வ தேசியம் என்ற எல்லைகளைத் தொட்ட இவர்
கவிதைகளில் தமிழும் தமிழ்நாடும் ஏற்றம் பெற்றன.
""""நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா காடு கமழ வந்த கற்பூரச்
சொற்கோ""என்று பாவேந்தர்,
பாரதியாரைப் பாராட்டி
மகிழ்கின்றார்.கவிதை மட்டுமல்லாது சிறுகதை, புதினம், கட்டுரை என்ற பல்துறைகளிலும் ஆற்றல் மிகச் சாதனைகள் புரிந்தவர் கவியரசர்
பாரதியார். சமூக பார்வை கொண்ட
பாரதியின் பாடல்கள் நம் பாடப்பகுதியாக அமைந்து கண்ணன் மீது கொண்ட பக்தியை நமக்கு
வெளிப்படுத்தி அன்றைய நாட்டின் நிலையையும் இக்கவிதையில் எடுத்துரைக்கிறார்.
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார் ;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார் ;
‘ஏனடா நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார் ;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார் ;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார் ;
ஓயாமல் பொய்யுரைப்பார் ; ஒன்றுரைக்க வேறு
செய்வார் ;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார் ;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார் ;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார் ;
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர் ;
சேவகரில் லாவிடிலோ செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் ‘இடைச் சாதி நான்’ என்றான்
""""மாடுகன்று மேய்த்திடுவேன் :
மக்களைநான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன் ;
சொன்னபடி கேட்பேன் : துணிமணிகள் காத்திடுவேன்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன் ;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும் ;
இரவிற் பகலிலே எந்நேர மானாலும் ;
சிரமத்தைப் பார்ப்பதில்லை தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன் ;
கற்ற வித்தை யேதுமில்லை ; காட்டு மனிதன் ; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன் ; சற்றும் நயவஞ்
சனைபுரியேன்""
என்றுபல சொல்லி நின்றான்
""""ஏதுபெயர் சொல்"" என்றேன்
""""ஒன்றுமில்லை ; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை"" என்றான்.
கட்டுறுதி யுள்ளவுடல் ; கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் - ஈங்கிவற்றால் ;
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
""""மிக்கவுரை பலசொல்லி விருதுபல
சாற்றுகிறாய் ;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு""
கென்றேன் """"ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை ;
நானோர் தனியாள்! நரைதிரை தோன்றா விடினும்
ஆனவயதிற் களவில்லை ; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை ; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை""
யென்றான்.
பண்டைக் காலத்து பயி த்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை
ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் ; கண்ணனால்
பெற்றுவரு நன்மையெலாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான் ; வீடு சுத்த மாக்குகிறான்
;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான் ;
மக்களுக்கு வாத்தி வளர்ப்புத்தாய் வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான் ; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கிமோர்வா ங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய் ; நல்லா சிரியனுமாய் ;
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி யென்று சொன்னான்
இங்கிவனை யான்பெறவே என்ன தவஞ் செய்துவிட்டேன்!
கண்ணன் எனதகத்தே கால்வைத்தநாள் முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம்,
இளமாண்பு ; சீர்சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி,
அறிவு, கவிதை, சிவயோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!
ஆ.தொழிலாளர் விண்ணப்பம் பாவேந்தர் பாரதிதாசன்
பாரதியாரைக் குருவாக ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டில் கவிஞர்கள்
பலர் கவிதைகள் எழுதினர். பாரதியார் தமக்குப் பின்னர்க் கவிஞர் பரம்பரையைத்
தோற்றுவித்து மறைந்தார். பாரதியின் அடிச்சுவட்டில் வளர்ந்த கவிஞர்களில், கனகசுப்புரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட பாரதிதாசனும் ஒருவர். பாரதிதாசன் தமிழையே மூச்சாகக் கொண்டு, பாடல்கள் பாடினார். தமிழியத்திற்கு ஆணிவேராகத் திகழ்ந்தார். அவருடைய
பாடல்களில், பல சீர்திருத்தக் கருத்துகள் காணப்படுகின்றன.
தீண்டாமை, பெண்ணடிமை, கைம்மை, மூடப்பழக்கவழக்கங்கள் என்னும் சமுதாயத் தீமைகளை வெறுத்தார். திராவிட
இயக்கப் போர்வாள் கவிஞராகவும் விளங்கினார். இவர் எழுதிய ‘தொழிலாளர் விண்ணப்பம்’ ஏழைத்தொழிலாளிகளின் துயரங்களை எடுத்துரைப்பதாய்
அமைந்துள்ளது.
காடு களைந்தோம் - நல்ல
கழனிதிருத்தியும் உழவுபுரிந்தும்
நாடுகள் செய்தோம் ; - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்.
வீடுகள் கண்டோம் ; அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்.
பாடுகள் பட்டோம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.
மலையைப்பிளந்தோம் - புவி
வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்.
அலைகடல் மீதில் – பல்
லாயிரங்கப்பல்கள் போய்வரச்செய்தோம்.
பல தொல்லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்.
உலையில் இரும்பை – யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.
ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றை வளைத்துநெல் நாற்றுகள் நட்டோம்.
கூடை கலங்கள் – முதல்
கோபுரம் நற்சுதை நல்ல நடையன்கள் செய்தோம்
கோடையைக் காக்க – யாம்
குடையளித்தோம் நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.
வாழ்வுக் கொவ்வாத – இந்த
வையத்தை இந்நிலை எய்தப் புரிந்தோம்.
ஆழ்கடல்,
காடு, - மலை
அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை, அசுத்தம் - குப்பை
இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக் கிடந்தோம் - புவித்
தொழிலாளராம் எங்கள் நிலைமையைக் கேளீர்!
கந்தை யணிந்தோம் . இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்ந்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்.
சந்தையில் மாடாய் – யாம்
சந்ததம் தங்கிட வீடு மில்லாமல்
சந்ததம் தங்கிட வீடு மில்லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?
மதத்தின் தலைவீர்! – இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே,
குதர்க்கம் விளைத்தே – பெருங்
கொள்ளை யடித்திட்ட கோடீ சுரர்காள்,
வதக்கிப் பிழிந்தே – சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் - விளை
நிலமுற்றும் உங்கள்வசம் பண்ணி விட்டீர்.
செப்புதல் கேட்பீர்! – இந்தச்
செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
சுப்பல்களாக – இனித்
தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!
இப்பொழு தேநீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே (ஒப்படைப்பீரே!)
-------------------------------------------------------
இ.நெஞ்சு பொறுக்கவில்லையே -
முடியரசன்
உலகை நினையுங்கள்
முடியரசன், பாவேந்தரின் மாணவர்
பரம்பரையில் மூத்த கவியரசர். சீர்திருத்த நோக்கும், செந்தமிழ் மரபில் ஆழ்ந்த
பற்றும் கொண்டவர். பாவேந்தரின் கொள்கையைப் பின்பற்றி இலக்கியத் தூய்மையோடு இலக்கிய
இன்பம் தருபவர். மொழியின்பம் தருபவர். தமிழரின் வீட்டில் விழாவில் ஆவணத்தில், ஆலயத்தில் தமிழுண்டா? என்று சினந்து கேட்கின்றார். இவரது கவிதைகள்
""""முடியரசன் கவிதைகள்""
""""பூங்கொடி"" """"காவியப்
பாவை"" """"எக்கோவின் காதல்"" """"வீரகாவியம்""
முதலியன. """"பூங்கொடி"" தமிழ் நாட்டரசின் பரிசு
பெற்றது.""""நெஞ்சு பொறுக்கவில்லையே"" என்னும்
நூலிலிருந்து எடுக்கப்பட்டது """"உலகை
நினையுங்கள்"" என்னும் இக்கவிதை.
உழைப்பினை நல்கா திங்கே
உறங்கியே காலம் போக்கிப்
பிழைப்பினை நடத்த எண்ணல்
பேதமைச் செயலே யாகும்
தொழத்தகும் தொழிலோர் சோம்பித்
துஞ்சிடின் நாட்டு வாழ்வு
விழத்தகும் அன்றோ? உங்கள்
வியர்வையால் உலகம் பூக்கும்.
அயர்வினை அகற்றல் வேண்டும்
ஆர்ப்பொலி தவிர்த்தல் வேண்டும்
வியர்வையைச் சிந்தி நாளும்
விளைவினைப் பெருக்கல் வேண்டும்
பயன்பெற விழைவோர் என்றும்
பாடுபட் டுயர்தல் வேண்டும்
செயலிவை தொழிலோர் கொண்டால்
சீர்பெறும் நமது நாடு
நாட்டினை உயர்த்தும் மாந்தர்
உழைப்பினை நல்கல் மட்டும்
கேட்டினை அகற்று மென்று
கிளத்திலேன்; செல்வம் அள்ளிப்
போட்டவர் நெஞ்சும் சற்றுப்
புதுமையிற் பொருந்தல் வேண்டும்
மேட்டுயர் வாழ்க்கை யொன்றே
மேன்மையென் றெண்ணல் வேண்டா
உடலினை வருத்தி இந்த
உலகினைக் காக்கும் மாந்தர்
படுதுயர் கண்டும் நெஞ்சிற்
பரிவோடும் அணுக லின்றிச்
சுடர்தரும் உழைப்பை யெல்லாம்
சுரண்டியே வாழ எண்ணின்
அடகெடும் வாழ்வை நீங்கள்
அடையும் நாள் தொலைவில் இல்லை
அடிமுத லாகத் தங்கள்
அயர்விலா உழைப்பை வைத்தோர்
மிடிபடத் துயரில் வீழ்ந்தால்
மேவிடும் புரட்சி திண்ணம்;
அடியொடு சுரண்டும் ஆசை
அகற்றிடல் வேண்டும்; இந்தப்
படியுணர்ந் துரிய பங்கைப்
பகர்ந்தளித் திடுதல் வேண்டும்.
இணைந்தொரு துறையிற் புக்கோர்
இரண்டணி யாகத் தம்முள்
தணந்துளம் பகைமை கொண்டு
தரியல ராதல் கண்டேன்
தரியல ராதல் கண்டேன்
சுணங்கிடும் எனது நெஞ்சிற்
சுடுதழல் பெய்தல் போல
உயர்ந்துளம் வாடு கின்றேன்
இருவர்க்கும் ஒன்று சொல்வேன்
உரியவர் உழைப்போர் எல்லாம்
உலகினை நினைதல் வேண்டும்
இருமுனை யாகத் தம்மை
எண்ணியே பிரிந்து நின்றால்
வருமிடர் நாட்டுக் கன்றோ?
வளமெலாம் சிதையுமன்றோ?
ஒருமுனை யாக நின்றால்
உலகெலாம் வாழும் அன்றே.
-------------------------------------------------- ஈ.சொல்லின்
பெருமை - நாமக்கல் கவிஞர்
பாரதியாரின் பாடல்களில் விடுதலை உணர்வும், பாரதிதாசன் பாடல்களில்
தமிழ் உணர்வும் மிஞ்சிக் காணப்படுவது போல், நாமக்கல் கவிஞரின்
பாடல்களில் காந்தியம் மிகுந்து காணப்படுகின்றது. அவருடைய பாடல்கள் அனைத்திலும்
காந்தியத்தின் தாக்கத்தைக் காணலாம். காந்தியின் புகழைப் பரப்புவதைத் தம்
குறிக்கோளாகக் கொண்டு, பாடல்கள் இயற்றினார். சொல்லின் மகத்துவத்தை ‘சொல்லின் பெருமை’ என்னும் இக்கவிதையில் மேம்பட உரைத்துள்ளார்.
பேச்சிழந்து போனால் – அறிவின்
பெருமை என்ன வாகும்?
மூச்சிழக்கு மானால் – தேகம்
முன்னிருந்த தாமோ?
முன்னிருந்த தாமோ?
கூச்சமில்லை யென்றால் – பெண்மை
குறைவு பட்ட தன்றோ?
நீச்ச மற்ற மீன்போல் - சமூகம்
நிலைகு லைந்து போகும்.
சொன்னசொல்ல ழிந்தால் – வாழ்க்கை
சுகமி லாத தாகும்
சின்ன ஏழைக் கேனும்
- சொல்லே
ஜீவ
நாடி யாகும்
மன்ன ரான பேரும் - பேச்சை
மாறி மீறி விட்டால்
சின்னா பின்ன மாவார் - அதில்
சிறிதும் ஐய மில்லை.
வாக்க ழிந்து விட்டால் – பின்னர்
வாழ்வு தாழ்வ தாகும்
மூக்க றுந்து போனால் – நல்ல
முகவி
லாச மெங்கே?
நோக்கி லாது போனால் – கண்கள்
நோகும் புண்க ளாகும்.
காக்க வேணும் சொல்லை – அதுவே
கர்ம வீர மாகும்.
வார்த்தை மாறி விட்டால் – மனிதன்
வாசம் அற்ற மலரே
கீர்த்தி யென்ப தெல்லாம் - சொல்லில்
கெட்ட பேருக் கேது?
கெட்ட பேருக் கேது?
பூர்த்தி தவறி னாலும் - வாக்கில்
புரட்டு செய்தி டாமை
நேர்த்தி யான தாகும் - என்று
நினைவில் வைக்க வேணும்.
--------------------------------------------------------
கவிஞர் பொன்முடியின் இயற்பெயர் சுப்பிரமணியம். இவர் மலேசியத் தமிழ்க்
கவிஞர். கவிதை, கட்டுரை எழுதுவதில் வல்லவர். இவர் தமிழ்மொழிச்
சிறப்புப் பயிற்றுநராகவும், மாவட்டக் கல்விப் பொறுப்பாளராகவும், புதிய பாடத்திட்டக் குழு,
பாடநூல் ஆக்கக் குழுக்களில்
உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கவிதைப் பயிலரங்குகளும் சமய இலக்கியச்
சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார். 35 ஆண்டுகளாகக் கவித்துறையில் உள்ளார். இவர்
எழுதி வெளியானவை 16 நூல்கள். ஞதுமு, ஹளுஹ அரச விருதுகளைப் பெற்றவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்
தங்கப் பதக்கம், இலக்கியக் கழகத்தின் குழந்தை எழுத்தாளர் விருது, கவிதை மாநாட்டில் தங்கப்பதக்கம் ஆகியவற்றுடன் பல அமைப்புகளில் இலக்கியப்
பரிசுகளும் பெற்றுள்ளார். தமிழ் மொழியின் இன்றையஅவல நிலையை ‘யார் தமிழ் படிப்பார்?’ என்னும் கவிதைமூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்மா ணவரே தமிழ்மா ணவரே
தமிழைப் படிக்கத் தயங்குகின் றீரே
தமிழைத் தமிழ்மா ணவர்ப்படிக் காமல்
இமிழ்கடல் உலகில் எவர்படிப் பாரே!
தாய்மொழி நமக்குத் தமிழ்மொழித் தேனே
தாய்நலங் காப்பது சேய்கடன் தானே
தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை
இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா?
ஓராண் டல்ல ஈராண் டல்ல
ஆறாண் டாக அடிப்படைக் கல்வி
அளித்த மொழியின் அருமை மறந்து
புளித்தது
என்று புகல்வதா இன்று!
ஆதியில் அறிவியல் உறைத்த தமிழை
பாதியில் ஏளனப் படுத்தி ஒதுக்கிட
எண்ணும் எண்ணம் எப்படி வந்தது?
உண்ணும் உணவோ உவட்டிப் போகலாம்
தின்னும் பண்டம் தெவிட்டிப் போகலாம்
கண்ணும் கூடக் காண மறுக்கலாம்
பெற்ற தாயைப் பிள்ளை மறுப்பதும்
உற்றதாய் அன்பினை உதறிப் போவதும்
மற்றவர் நடுவில் மதிப்பை நல்குமா?
கற்றவர் அவையில் கையொலி பெறுமா?
சொந்தம் என்று வந்த பந்தம்
சோறு போடுமா என்று கேட்கும்
ஓரினம் தமிழர் போலிவ் வுலகில்
வேறினம் இல்லை விதிவிதி என்றே
வீறு குறைந்த வீணன் இவனைக்
கூறுபோட்டுக் கொன்றிட்டாலும்
தீரா தென்றன் சினம்தீ ராது!
எந்த நாட்டினில் எந்த மொழிதான்
எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
துவையல் கறியுடன் ஊட்டு கின்றது?
உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்
மொழியில் பழியை ஏற்றுவ தில்லை
தமிழால் தமிழன் தாழ்ந்துபோ னானாம்
தமிழ்தான் இவனைத் தலையெடுக் காமல்
தரையொடு தரையாய்ச் சிறைப்படச் செய்ததாம்
இப்படி யாஇவன் செப்பித் திரிவது
ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது
தாயா அருமைச் சேயினுக் கெதிராய்த்
தீயாய் மாறித் தீய்க்க முனைவாள்
மொழிநம் உணர்வு. மொழிநம் உயிர்ப்பு.
மொழிநம் உரிமை காக்கும் பட்டயம்.
உரிமை வாழ்வை உலகில் இழந்தவர்
பெருமை வாழ்வைப் பெறவா முடியும்
மொழிநலம் ஒன்றே இனநலம் காக்கும்
மொழிக்காப் பொன்றே இனக்காப் பாகும்
தமிழ்இந் நாட்டில் தழைப்பதும் இளைப்பதும்
தமிழ்மா ணவர்தம் தங்கக் கைகளில்
தமிழைப் படிப்பதே தமிழை வளர்க்கும்
இமயச் செயலாம் என்மாணவரே!
------------------------------------------
ஊ. கவிதை
பிறப்பது எப்படி?
- சௌந்திரா கைலாசம்
கரூருக்கு அருகில் அமராவதிக் கரையில் அமைந்துள்ள செட்டிப்பாளையம் என்ற
சிற்றூரில் 28.2.1927 இல் பிறந்தவர் திருமதி சௌந்தரா கைலாசம் அவர்கள். அவரது தந்தை
சுந்தரக்கவுண்டர், தாய் காளியம்மாள். கரூர்த்திருக்கோயிலுள்
குடிகொண்டுள்ள இறைவி சௌந்திர நாயகியின் பெயர் இவர்க்குப் பெற்றோர்களால்
சூட்டப்பட்டது. தேசபக்தியும் தெய்வபக்தியும் நிறைந்த குடும்பத்தில் பிறந்த
இக்கவிஞர் செட்டிபாளையத்திலேயே 9 ஆம் வகுப்பு வரை பயின்றார். இவரது பதினான்காம்
வயதில் இவருக்குத் தாய்மாமன் இறையுடைய கைலாசம் அவர்களோடு திருமணம் நடந்தது. இவரது
கணவர் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஆவார்.
கேட்டுப் பெற்ற ஞானமும் உழைத்துப்பெற்ற அறிவும் இவரைக் கவிஞராக்கியது.
திருவாசகத்தில் ஈர்ப்புக் கொண்ட இவர் திருமுருகாற்றுப்படையைப் பாராயணம் செய்து
கொண்டே இருந்தவர். செவ்வாய்க்கிழமை தோறும் வடபழனி சென்று முருகப்பெருமானை
வழிபட்டவர். கவிதை, வாழ்வை வடிக்கவேண்டும் வாழ்வுக்குப் பயன்தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்
இவர். இதனை, அழகிய கவிப்பாட்டில் புவிவாழ்வை வடித்தால் அது
கவிதை என்ற அவரது வரிகள் புலப்படுத்தும்.
எது கவிதை எனும் கேள்வி எழுப்புகிறாய் சற்று பொறு;
இது கவிதை எனக்கூறி இனம் காட்ட நான் முயல்வேன்.
உறங்குகின்ற சொற்களினை ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்துத்
திறங்குவியச் சேர்த்துவிட்டால் செழுங்கவிதை தோன்றிடுமா?
மூளை எனும் சூளையிலே முழுநேரம் வெந்தசொற்கள்
நீள அடுக்கிவிட்டால் நிறைகவிதை ஆகிடுமா?
மண்ணின் குழம்பு எடுத்து மணம்பரப்பும் சந்தனமாய்க்
கண்ணின்முன் காட்டிவிட்டால் கவிதைமணம் வீசிடுமா?
வற்றாத பொன்னி என வாய்க்காலைக் காட்டிவிட்டால்
கற்றார்கள் போற்றுமொரு கவிச்சோலை பூத்திடுமா?
ஆற்று மணலை அள்ளி அரிசி என உலையிட்டால்
சோற்றுக்கு வாடாமல் சுகம்வந்து சேர்ந்திடுமா?
கன்னங் கரியதொரு காக்கையினை அரங்கேற்றின்
சின்னஞ் சிறுகுயிலின் தேனிசையைச் சிந்திடுமா?
உள்ளத்தில் ஊறும் உணர்வுகளின் மேகங்கள்
கொள்ளைக் கவிதைமழை கொட்டி மகிழ்வு தரும்
உணர்வுகளின் ஓவியமே உயர்கவிதை ; நெஞ்சழகின்
இணைவுகளின் சாசனமே இயற்கவிதை எழிற்கவிதை
மணல்பறக்க வறண்டு விட்ட மனிதமனம் குளுமை உறப்
புனல் நிறைக்கும் நதியாகப் பொழிந்தால் அது கவிதை!
மேதினியில் உள்ள உயிர் மிக்க நலம் பெற்றுயரச்
சாதனைகள் செய்யத் தலைப்பட்டால் அதுகவிதை!
கேடுகெட்ட சமுதாயக் கீழ்மையெலாம் கீழ்மையுறப்
பாடுபட்டு நிற்பவரைப் படைத்தால் அதுகவிதை!
ஓட்டைக் குடிசையிலும் உன்னதத்தைக் காணவழி
காட்டி ஒரு நிம்மதியைக் கனிவித்தால் அதுகவிதை!
சழக்குடைய சாதிகளும் தன்னலத்து வாதிகளும்
வழக்கறுந்து போகவழி வகுத்தால் அதுகவிதை!
கொட்டிக் கொடுத்துவரன் கொண்டுவரும் தாழ்வதனை
விட்டுச் சிறக்க விதித்தால் அதுகவிதை!
கரும்பதனின் நற்சாறு கவியாகி வந்ததென
விரும்புகின்ற வண்ணம் வியன்கவிதை செய்திடலாம்!
கடினமென எண்ணாதே! கற்பனையும் உன்மொழியும்
அடிமையென எண்ணவிடு! அழகுக்கவி பிறக்கும்!
பாடும் பொருளுக்குப் பார்முழுதும் தேடாதே!
கூடும் பொருள் எல்லாம் கோலக் கவிப்பொருளே!
மண்ணும் பொருளாகும் மண்மீது நெல்விளையப்
பண்ணும் தொழில் அதுவும் பாட்டுப் பொருளாகும்!
எது பற்றியேனும் எழுதுகவி! நெஞ்சத்தின்
கதிமட்டும் அதில்சேர்ந்து சுகம் சேர்த்து நிற்கட்டும்!
இலக்கணமாம் கோட்டுக்குள் இதயத்தைப் பூட்டாமல்
துலக்கமுற எண்ணத்தைச் சொல்ல முயன்றுவிடு!
வீட்டுக்கு நாற்புறமும் வெளிச்சுவர்போல் எழுதுமொரு
பாட்டுக்கு இலக்கணமும் பரிமளித்தால் நல்லதுதான்!
ஆனாலும் அச்சுவர்கள் அகத்தில் இருப்போர்க்கு
வீணாய்ச் சிறையானால் வேண்டுவதா சிந்தனை செய்!
ஆற்றுக்கு இருகரைகள் அவசியம்தான் அதுபோல
ஊற்றுக் கவிதைக்கு ஒரு நியதி அவசியம்தான்!
உணர்வுக்கு முன்னிடமும் உருவுக்கு மறுஇடமும்
புனையும் கவிதைக்குப் பொருந்திவிடும் அதுபோதும்!
--------------------------------------------------------
No comments:
Post a Comment