அலகு 2 - சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும்
13FTL 02
அ. முத்தொள்ளாயிரம்
தமிழ் நாவலர் சரிதை
முத்தொள்ளாயிரத்தைக் கடைச்சங்க நூலாகக் கூறுகின்றது. இந்நூலின் 108 வெண்பாக்களே தற்போது கிடைக்கின்றன.
மூவேந்தரைப் பற்றியும் அமைந்துள்ள இவ்விலக்கியம், மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டிருந்ததா, மூன்று தொள்ளாயிரங்களாக இரண்டாயிரத்து எழுநூறு
வெண்பாக்கள் கொண்டிருந்ததா என்பது புலப்படுமாறு இல்லை.
நூலாசிரியர், காலம் பற்றி எந்தக் குறிப்புமில்லை. ஆயின்,
கிடைக்கும் வெண்பாக்கள் உவமையும்
கற்பனையும் வருணனையும் சொல்லாட்சி நயமும் கொண்டு விளங்குகின்றன.
முத்தொள்ளாயிர வெண்பாக்களில்
சேரன் (2), சோழன் (2), பாண்டியன் (2) பாடல்கள் வீதம் மொத்தம் ஆறு பாடல்கள் இப்பகுதியில்
நம்பாடப் பகுதியாக இடம்பெற்றுள்ளன.
அடைப்பும் திறப்பும்
தாயர் அடைப்ப
மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த
குடுமியவே – ஆய்மலா
வண்டுலா அங் கண்ணி
வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக்
இழந்ததும் பெற்றதும்
வாமான்தேர்க் கோதையை
மான்தேர் மேற் கண்டவர்
மாமையை யன்றோ
இழப்பது – மாமையிற்
பன்னூறு கோடி
பழுதோ! என் மேனியிற்
பொன்னூறி யன்ன
பசப்பு!
பெரும் பழி
திறந்திடுமின் தீயவை
பிற்காண்டு மாதர்
இறந்து படிற்பெரிதாம்
ஏதம் - உறந்தையர்கோன்
தண்ணார மார்பிற்
தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காணக்
கதவு!
கானல் நீர்
குதலைப் பருவத்தே
கோழிக்கோ மானை
வதுவை மெறுகென்றாள்
அன்னை – அதுபோய்
விளைந்தவா இன்று!
வியன் கானல் வெண்தேர்த்
துலங்குநீர் மாமருட்டி
அற்று!
ஆற்றாமையும் அறியாமையும்
கோட்டெங்கு கூழ்கூடற்
கோமானைக் கூடவென
வேட்டாங்குச் சென்றெவன்
நெஞ்சறியாள் – கூட்டே
குறும்பூழ் பறப்பித்த
வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண்
டாள்!
நானும் இழப்பதா!
களியானைத் தென்னன்
இளங்கோவென் றெள்ளிப்
பணியாரே தம்பார்
இழக்க – அணியாகங்
கைதொழு தேனும்
இழக்கோ, நறுமாவின்
கொய்தளிர் அன்ன
நிறம்!
ஆ. நந்திக்கலம்பகம்
பதினெட்டு உறுப்புகளைக் கொண்டு
அகப்பொருளும் புறப்பொருளும் கலந்து பல்வேறு பாவகைகளும் பாவினங்களும் கலந்து
வருமாறு பாடப்படும் சிற்றிலக்கியம் கலம்பகமாகும். தெய்வத்துக்கு 100, முனிவர்க்கு 95, அரசர்கட்கு 90, அமைச்சர்கட்டு 70, வணிகர்க்கு
50, வேளார்க்கு 30 என்ற முறையில் கலம்பகப் பாடல்கள் அமையவேண்டும்
என்று வெண்பாப் பாட்டியல் கூறுகிறது. ஆயின், பெரும்பான்மையான கலம்பகங்கள் 100 பாடல்களிலேயே அமைந்துள்ளன.
கிடைக்கும் கலம்பகங்களுள் தொன்மை
வாய்ந்தது, மூன்றாம் நந்திவர்ம
பல்லவன் மீது பாடப்பட்ட நந்திக் கலம்பகமாகும். இதன் ஆசிரியர் பெயர்
அறியப்படவில்லை. இது பாடி முடிக்கப்படுவதற்குள் நந்திவர்மன் இறந்துபோனதாகத்
தெரிகிறது. கற்பனையும் சொல்விளையாட்டும் கலந்தது இது.
பாணன் பெற்ற பேறு
உரை வரம்பு இகந்த உயர் புகழ்ப்
பல்லவன்,
அரசர் கோமான், அடு போர் நந்தி
மா வெள்ளாற்று மேவலாக கடந்த
செரு வேல் உயர்வு பாடினன்கொல்லோ?
நெருநல், துணி அரைச் சுற்றி,
பரடு திறப்பத் தன்னால் பல் கடைத்
திரிந்த பாணன் நறுந் தார் பெற்ற,
காஅர் தளிர்த்த கானக் கொன்றையின்
புதுப் பூப் பொலன் கலன் அணிந்து,
விளங்கு ஒளி ஆணனன் இப்போது;
இளங் களி யானை எருத்தமிசை
மன்னே!
1
நந்தியின் வென்றிச் சிறப்பு
திறை இடுமின்; அன்றி, மதில் விடுமின்; நுங்கள்
செரு ஒழிய, வெங் கண் முரசம்
அறை விடுமின்; இந்த அவனிதனில் எங்கும்
அவனுடைய தொண்டை அரசு
நிறைவிடுமின்; நந்தி கழல் புகுமின், நுங்கள்
நெடு முடிகள் வந்து; நிகளத்து
உறைவிடுமின்; அன்றி, உறைபதி அகன்று
தொழுமின்; அலது உய்தல் அரிதே!
2
ஊரும், அரவமும், தாமைரக் காடும், உர
வரம்பும்,
தேரும் உடைத்து என்பர், சீறாத நாள்; நந்தி சீறிய பின்பு,
ஊரும் அரவமும், தா மரைக் காடும்; உரவர் அம்பும்,
தேரும் உடைத்து என்பரே – தெவ்வர் வாழும் செழும் பதியே. 3
அகப்பாடல்கள்
அன்னையரும் தோழியரும் அடர்ந்து
பொரும் காலம்;
ஆனி போய் ஆடி வரை ஆவணியின் காலம்;
புன்னைகளும் பிச்சிகளும்
தங்களின் மகிழ்ந்து,
பொற் பவள வாய் திறந்து பூச்
சொரியும் காலம்;
செந்நெல் வயல் குருகு இனம் சூழ்
கச்சி வள நாடன்,
தியாகி எனும் நந்தி தடந் தோள்
சேராக் காலம்;
என்னை அவர் அற மறந்து போனாரே
தோழி!
இளந்தலை கண்டே நிலவு பிளந்து
எரியும் காலம்! 4
ஈட்டுபுகழ் நந்தி பாண! நீ
எங்கையர்தம்
வீட்டு இருந்து பாட, ‘விடிவு அளவும், காட்டில் அழும்
பேய்’ என்றாள், அன்னை; பிறர், ‘நரி’ என்றார்; தோழி
‘நாய்’ என்றாள்; நீ என்றேன் நான்.
5
கையறு நிலை
வான் உறு மதியை அடைந்தது உன்
வதனம்;
மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி;
கான் உறு புலியை அடைந்தது உன்
வீரம்;
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்;
தேன் உறு மலராள் அரிஇடம்
புகுந்தாள்;
செந் தழல் அடைந்தது, உன் மேனி;
யானும் என் கலியும் எவ் விடம்
புகுவேம்?
எந்தையே! நந்தி நாயகனே!
6
இ. கலிங்கத்துப்பரணி - களம்
பாடியது
(ஜெயங்கொண்டார்)
96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணியின் இலக்கணத்தை
இலக்கண விளக்கப் பாட்டியல்,
""""ஆனை
ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது
பரணி""
என்று வகுத்துள்ளது.
வெற்றியணங்காகிய காளி (கொற்றவை) – யை
வழிபாடும் நாள் பரணியாகும். தொல்காப்பியப் புறத்திணையியலில் கூறப்படும் ‘களவேள்வி’ என்ற துறையே பரணி இலக்கியம் தோன்ற இலக்கணமாகத்
திகழ்ந்தது. தோல்வியுற்ற மன்னன் பெயரைக் கொண்டு பரணி இலக்கியங்கள் பெயர் பெற்றுள்ளன.
கலிங்கத்துப் பரணி, தக்கயாகப்
பரணி, பாசவதைப் பரணி, சூரன் வதைப் பரணி, கஞ்சவதைப் பரணி, பாசவதைப் பரணி, மோகவதைப் பரணி ஆகியன இதற்குச் சான்றுகள். இதில் தாழிசை யாப்புக்கு முதலிடம்
உள்ளது.
காலத்தால் முந்தையது கலிங்கத்துப்
பரணி. அகமும் புறமும் கலந்திருக்கும் இதனைப் பாடியவர் ஜெயங்கொண்டார். கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் முதல் குலோத்துங்கன்
படைத்தலைவன் கருணாகரத்தொண்டைமான், அனந்தவர்ம
சோடகங்கனின் கலிங்க நாட்டின்மீது படையெடுத்துச் சென்று பெற்ற வெற்றியைப் போற்றுவது
இது.
கடவுள் வாழ்த்து முதல் கூழடுதல்
வரையிலான 14 பகுதிகளைக் கொண்டது
கலிங்கத்துப் பரணி. களம்பாடியது பகுதியில் அமைந்த முதல் 10 பாடல்கள் நம்பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
களச் சிறப்பு
தேவாசுரம், ராமாயணம்
மா பாரதம், உள என்று
ஓவா உரை ஓயும்படி
உளது, அப் பொரு களமே!
1
பேய் வேண்டக் காளி அணுகல்
‘காலக் களம் அது கண்டருள் –
இறைவீ! கடிது’ எனவே,
ஆலக் களம் உடையான் மகிழ்
அமுது அக் களம் அணுகி, 2
காளி களம் கண்டு வியத்தல்
‘என்னே ஒரு செரு வெங்களம்!’
எனவே அதிசயம் உற்று,
அந் நேரிழை அலகைக் கணம்
அவை கண்டிட, மொழியும்-
3
யானையும் கப்பலும்
உடலின் மேல் பல காயம் சொரிந்தது,
பின் கால்
உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை,
கடலின்மேல் கலம் தொடரப் பின்னே
செல்லும்,
கலம்போன்று தோன்றுவன, காண்மின், காண்மின்! 4
குதிரையும் குதிரைத் தறியும்
நெடுங் குதிரை மிசைக் கலணை
சரியப் பாய்ந்து
நிணச் சேற்றில் கால் குளிப்ப நிரையே
நின்று,
படுங் குருதிக் கடும் புனலை
அடைக்கப் பாய்ந்த
பல குதிரைத் தறி போன்ற பரிசு
காண்மின்!
5
வீரர் முகமலர்ந்து கிடந்தமை
விருந்தினமும் வறியவரும்
நெருங்கி உண்ண,
மென்மேலும் முகம் மலரும் மேலோர்
போலப்
பருந்தினமும் கழுகினமும் தாமே
உண்ணப்
பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின்!
பார்மின்!
6
வீரர்களும் கருவிகளும்
சாம் அளவும் பிறர்க்கு உதவா தவரை
நச்சிச்
சாருநர்போல, வீரர் உடல்
தரிக்கும் ஆவி
போம் அளவும் அவர் அருகே இருந்து
விட்டுப்
போகாத நரிக் குலத்தின் புணர்ச்சி
காண்மின்!
7
வண்டும் விலைமாதரும்
மா மழைபோல் பொழிகின்ற தான வாரி
மறித்து விழும் கடகளிற்றை வெறுத்து,
வானோர்
பூ மழைபோல் பாய்ந்து, எழுந்து, நிரந்த வண்டு
பொருட் பெண்டிர் போன்றவையும்
காண்மின் ; காண்மின்! 8
கொடியோடு கிடக்கும் யானைகள்
சாய்ந்து விழும் கடகளிற்றி னுடனே
சாய்ந்து,
தடங்குருதி மிசைப்படியும் கொடிகள,
தங்கள்
காந்தருடன் கனல் அமளி அதன்மேல்
வைகும்
கற்புடை மாதரை ஒத்தல் காண்மின்,
காண்மின்! 9
கணவரைத் தேடும் மகளிர்
‘தம் கணவருடன் தாமும் போக’
என்றே
சாதகரைக் கேட்பாரே, தடவிப் பார்ப்பார்;
‘எம் கணவர் கிடந்த இடம் எங்கே!’
என்று என்று,
இடாகினியைக் கேட்பாரைக் காண்மின்,
காண்மின்! 10
ஈ. தமிழ் விடுதூது
தூதுவிடுதல் பற்றிப் புறவிலக்கியங்களும்
உண்டெனினும், அகத்தூது
இலக்கியங்களே மிகுதியாக உள்ளன. தனித்திருக்கும் தலைவனிடம் தூது அனுப்புமாறே
தமிழ்த் தூது இலக்கியங்கள் அமைந்துள்ளன. தொல்காப்பியர் குறிப்பிடும் ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்ற துறையே இவ்விலக்கியம் தோன்றக் காரணமாகிய
இலக்கணமாகும்.
தூது போகும் பொருள் அஃறிணையாயும்
அமையும். இதன் பெயரிலேயே இலக்கியத்தின் பெயரும் அமையும். சங்கப் பாடல்களிலேயே நாரை
விடுதூது போன்ற அமைப்பில் இவ்விலக்கியக்கூறு தென்படுகிறது.
தற்போது கிடைக்கும் தூது
இலக்கியங்களுள் சிறந்ததாகக் கருதப்படும் ‘தமிழ் விடு தூது’வின்
காலம், ஆசிரியர் ஆகியன
அறியப்படவில்லை. தமிழின் சிறப்புகளை வரலாற்றுப் பாங்கில் கூறுகிறது
இச்சிற்றிலக்கியம். சிவபெருமான் மீது காதல் கொண்ட தலைவி, அவன் தமிழ் சொன்னால் கேட்பான் என்பதற்காகத் தனது நிலையை
எடுத்துக் கூறுவதற்காகத் தமிழைத் தூது அனுப்புவதாக அமைந்துள்ள இது கலிவெண்பாக்
கண்ணிகளால் ஆனது.
சீர்கொண்ட கூடற் சிவராச
தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் -
போர் கொண்
1
டிசையுந் தமிழரசென்
றேந்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் -
நசையுறவே
2
செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு
கையிலெடுத்த கணபதியும் -
மெய்யருளாற்
3
கூடல் புரந்தொருகாற் கூடற்
புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் -
வீடகலா
4
மன்னுமூ வாண்டில் வடகலையுந்
தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோரும் -
முன்னரே 5
மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட
பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோரும் -
தோன்றயன்மால்
6
தேடிமுடி யாவடியைத் தேடாதே
நல்லூரிந்
பாடி முடியாப் படைத்தோரும் -
நாடிமுடி
7
மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை
சேர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் -
முட்டாதே 8
ஒல்காப் பெருந்தமிழ்மூன்
றோதியருண் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த
தொன்முனியும் - மல்காச்சொற் 9
பாத்திரங்கொண் டேபதிபாற்
பாய்பசுவைப் பன்னிரண்டு
சூத்திரங்கொண் டேபிணித்த
தூயோரும் - நேத்திரமாம் 10
தீதில் கவிதைத் திருமா
ளிகைத்தேவர்
ஆதி முனிவ ரனைவோரும் -
சாதியுறும்
11
தந்திரத்தி னாலொழியாச்
சார்வினையைச் சாற்றுதிரு
மந்திரத்தி னாலொழித்த வல்லோரும்
- செந்தமிழிற் 12
பொய்யடிமை யில்லாப் புலவரென்று
நாவலர்சொல்
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் -
ஐயடிகள்
13
காடவருஞ் செஞ்சொற் கழறிற்
றறிவாரும்
பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் -
நாடவரும் 14
கல்லாதவர் சிங்கமெனக் கல்விகேள்
விக்குரியர்
எல்லாரு நீயா யிருந்தமையால் –
சொல்லாரும் 15
என்னடிக ளேயுனைக்கண் டேத்தினிடர்
தீருமென்றுன்
பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன் -
பன்னியமென்.
16
உ. முக்கூடற் பள்ளு
பள்ளர்களின் வாழ்க்கைமுறையை மையமாகக்
கொண்டு மருதநில நீர்வள வருணனையுடன் நாயக்கர் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியம்
இது. பிற்காலத்தில் ‘சுதந்திர
பள்ளு’ போன்ற தனிப்பாடல்
அமைப்பிலும் உருவமைத்தது.
திருவாரூர்ப் பள்ளு, திருலைப் பள்ளு, சிவகயிலைப் பள்ளு, சீகாழிப் பள்ளு, வடகரைப் பள்ளு, வைசியப் பள்ளு, குதிரை
மலைப்பள்ளு, கண்ணடையம்மைப் பள்ள,
பறாளை விநாயகர் பள்ளு, திருவிடை மருதூர்ப் பள்ளு, திருநீலகண்டன் பள்ளு, ஞானப் பள்ளு, திருச்செந்தூர்ப் பள்ளு, வையாபுரிப்
பள்ளு, கனகராயன் பள்ளு என்று
பல்வேறு பள்ளுகள் இருப்பினும், முக்கூடற்
பள்ளுவே அனைவரும் போற்றமாறு நாடகப் பாங்கில் அமையப் பெற்றதாகும். இதன் ஆசிரியர்
பெயர் அறியப்படவில்லை; காலம்
தெரியவில்லை.
பாடப்பகுதியில் இடம்பெற்ற பாடல்கள்,
கற்பனை, உவமை, வருணனைத்
திறங்களைக் கொண்ட முக்கூடற்பள்ளுப் பாடல்களாகும்.
1. இராகம் - சங்கராபரணம் சிந்து தாளம் - அடதாளம்.
மேடை ஏறித்தன் காலைப் பவுசு
விரித்த பீலி
மயிலெட்டிப் பார்க்கப்
பேடை மாங்குயில் வாய்கொண்டு
உசாவப்
பிளந்த வாய்தனைப்
பேசாமல் மூடக்
கோடை போய்விட்ட சோபனம் கொண்டு
குளிர்ந்த கொண்டற்
குறுந்துளி யோட
வாடை யோடி வரக்களி சூரும்
வளமை யாசூர்
வடகரை நாடே!
2. இராகம் - சங்கராபரணம் சிந்து தாளம் - அடதாளம்
வென்றல் லோவிடு வேனென வேயிரு
வேழங் கூடி
மதிக்குடை தாவக்
குன்றே லாந்தர மில்லையென் றாடவர்
கொம்ப னார்முலைக்
குன்றிற் பதுங்க
மன்றல் சேரிள வேனிற் புறாக்கள்
மாங்குயி லுக்கு
மாராயஞ் சொல்லித்
தென்ற லோடி வரக்களி கூரும்
சீவல மங்கைத்
தென்கரை நாடே.
3. இராகம் - சங்கராபரணம் சிந்து தாளம் - அடதாளம்
கொண்டல் கோபுரம் அண்டையில்
கூடும்
கொடிகள் வானம்
படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும்
கனக முன்றில்
அனம்விளை யாடும்
விண்டபூமது வண்டலிட் டோடும்
வெயில்வெய் யோன்பொன்
னெயில்வழி தேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
அழகர் முக்கூடல்
ஊரெங்கள் ஊரே.
4. இராகம் - சங்கராபரணம் சிந்து தாளம் - அடதாளம்
சங்கம் மேடைகள் எங்கும் உலாவும்
தரங்க மீன்பொன்
அரங்கிடைத் தாவும்
திங்கள் சோலை மரங்களை ராவும்
தெருக்கள் தோறும்
மருக்களைத் தூவும்
பொங்கர் ஊடினம் பைங்கிளி மேவும்
பூவை மாடப்
புறாவினங் கூவும்
வங்க வாரிதி வெங்கடு உண்ட
மருதீசர் மருதூர்
எங்கள் ஊரே.
5. இராகம் - சங்கராபரணம் சிந்து தாளம் - அடதாளம்
கறைப்பட் டுள்ளது வெண்கலைத்
திங்கள்
கடம்பட் டுள்ளது
கம்பத்து வேழம்
சிறைபட் டுள்ளது விண்ணெழும்
புள்ளு
திரிபட் டுள்ளது
நெய்படும் தீபம்
குறைபட் டுள்ளது கம்மியர் அம்மி
குழைபட் டுள்ளது
வல்லியங் கொம்பு
மறைபட் டுள்ளது அரும்பொருட்
செய்யுள்
வளமை ஆசூர்
வடகரை நாடே.
6. இராகம் - சங்கராபரணம் சிந்து தாளம் - அடதாளம்
காயக் கண்டது சூரிய காந்தி
கலங்கக் கண்டது
வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
மறுகக் கண்டது
வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்க்குலைச்
செந்நெல்
தனிப்பக் கண்டது
தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடும்
சந்தனம்
சீவல மங்கைத்
தென்கரை நாடே.
7. இராகம் - சங்கராபரணம் சிந்து தாளம் - அடதாளம்
சோதி மாமணி வீதி நெருக்கும்
சுரும்பு பாடி
இரும்பும் உருக்கும்
சாதி நால்வளம் நீதி பெருக்கும்
தடத்து வாளை
குடத்தை நெருக்கும்
போதில் மேய்ந்திள மேதி
செருக்கும்
புனமெல் லாந்தண்
மலர்விண் டிருக்கும்
ஆதி நாதர் அனாதி யொருத்தர்
அழகர் முக்கூடல்
ஊரெங்கள் ஊரே!
8. இராகம் - சங்கராபரணம் சிந்து தாளம் - அடதாளம்
தத்தும் பாய்புனல் முத்தம்
அடைக்கும்
சாலைவாய்க் கன்னல்
ஆலை யுடைக்கும்
கத்தும் பேரிகைச் சத்தம்
புடைக்கும்
கலிப்பு வேலை
ஒலிப்பைத் துடைக்கும்
நித்தம் சர்றயர் சித்ரம்
படைக்கும்
நிதியெல் லாந்தன்
பதியிற் கிடைக்கும்
மத்தம் சூடும் மதோன் மத்த ரான
மருதீசர் மருதூர்
எங்கள் ஊரே.
9. இராகம் - சங்கராபரணம் சிந்து தாளம் - அடதாளம்
மீது யர்ந்திடும் தெங்கிள நீரை
மிடைந்த பூகஞ்
சுமந்துதன் காயைச்
சூத மொன்றிச் சுமக்கக்
கொடுக்கும்
சூதந் தன்கனி
தூங்கும் பலாவில்
ஓதும் அந்தப் பலாக்கனி வாழை
உளுக்க வேசுமந்து
ஒண்குலை சாய்க்கும்
மாது ளங்கொம்பு வாழையைத்
தாங்கும்
வளமை ஆசூர்
வடகரை நாடே.
10. இராகம் - சங்கராபரணம் சிந்து தாளம் - அடதாளம்
பங்க யந்தலை நீட்டிக்
குரம்பினில்
பச்சை இஞ்சியின்
பார்சடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சட்
கழுத்தைத்
தடவி மெள்ளத்
தொடுமந்த மஞ்சள்
அங்க சைந்திடும் காய்க்கதிர்ச்
செந்நெல்
அளாவி நிற்குமச்
செந்நெலு மப்பால்
செங் கரும்புக்குக் கைதரும்
போல்வளர்
சீவல மங்கைத்
தென்கரை நாடே.
ஊ. காளமேகப் புலவர் பாடல்கள்
இவரது இயற்பெயர் வரதன். மேகம் மழை
பொழிவதைப் போன்று இயல்பாக விரைந்து கவிபாட வல்லவர். சிலேடையாகவும்
நகைச்சுவையாகவும் பாடும் திறம் மிக்கவர். காலம் 15 ஆம் நூற்றாண்டு. திருவானைக்கா உலா, பரப்பிரம்ம விளக்கம், திருவானைக்கா சரசுவதி மாலை, சமுத்திர விலாசம், சித்திர மடல் போன்ற சிற்றிலக்கியங்களையும் 187 தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.
ஆமணக்குக்கும் யானைக்கும் சிலேடை
முத்து இருக்கும், கொம்பசைக்கும், மூரித்தண்டு ஏந்திவரும்
கொத்திருக்கும், நேரே குலைசாய்க்கும், - எத்திசைக்கும்
தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆமணக்கு மால்யானை யாம்.
வைக்கோலுக்கும் யானைக்கும்
சிலேடை
வாரிக் களத்து அடிக்கும் ; வந்துபின்பு கோட்டைபுகும் ;
போரில் சிறந்து பொலியாகும் ;
- சீருற்ற
செங்கோல மேனித் திருமலைரா
யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்.
பாம்புக்கும் வாழைப்
பழத்திற்கும் சிலேடை
நஞ்சிருக்கும் ; தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் ;
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது
; - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா
யன்வரையில்
பாம்புஆகும் வாழைப் பழம்.
சந்திரனும் மலைக்கும் சிலேடை
நிலவாய் விளங்குதலால் ; நீள்வான் படிந்து
சிலபோது உலாவுதலால் ; சென்று – தலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதித்து நிகராக வழுத்து.
நாய்க்கும் தேங்காய்க்கும்
சிலேடை
ஓடும் இருக்கும் ; அதன் உள்வாய் வெளுத்திருக்கும்!
நாடும் ; குலை தனக்கு நாணாது ; - சேடியே!
தீங்கானது இல்லாத் திருமலைரா
யன்வரையில்
தேங்காயு நாயுமிணை செப்பு.
எ. ஔவையார் பாடல்கள்
இடைக்கால ஔவையார் பாடிய
தனிப்பாடல்களில் ஐந்து பாடல்கள் இங்கு பாடப்பகுதியாக இடம்பெற்றள்ளன.
விருந்தோம்பல் தன்மை
1.இருந்து முகந்திருத்தி ஈரோடு
பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப –
வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப்
பழமுறத்தால்
சாடினாள்
ஓடோடத்
தான்.
மூவகை மனிதர்
2 .சொல்லாம லேபெரியர் சொல்லிச்
செய்வர் சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே –
நல்ல
குலாமாலை வேற் கண்ணாய் கூறுவமை
நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்.
அரசுக்கு நல்லது
3.நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் -
நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத்
துணையாவான்
அந்த வரசே யரசு.
4.நகைக்கப் பெற்றாள்
வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் -
பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப்
பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.
வீடும் விழல்
5.மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிபம்நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவது –
கூடும்
குருவில்லா வித்தை குணமில்லாப்
பெண்டு
விருந்தில்லான் வீடு விழல்.
No comments:
Post a Comment