Saturday, 11 January 2014

பெண்ணும் பழமொழியும்

கட்டுரை-1

பெண்ணும் பழமொழியும்க.கலைச்செல்வி 

(முனைவர்பட்டடஆய்வாளர்,அரசுகலைக்கல்லூரி,சேலம்-7நெறியாளர் முனைவர்ப.முத்துசாமி)

முன்னுரை

    மனித மனத்தின் வெளிப்பாடாக முகிழ்ப்பதே இலக்கியங்களாகும்.  மொழி எப்பொழுது தோற்றம் பெற்றதோ, அப்பொழுதே இலக்கியங்களும் வாய்மொழியாகத் தோன்றிக் காலப்போக்கில் எழுத்துருப் பெற்றன.  இவ்வாறு தோன்றிய நாட்டுப்புற இலக்கியங்கள் கிராமப்புற மக்களின் இன்ப, துன்பங்களைச் சுவையாக எடுத்தியம்புவனவாக உள்ளன. 
இவ்விலக்கியங்கள் 1.  உரைநடை இலக்கியங்கள்       2. பாட்டிலக்கியங்கள் என இரு வகைப்படும்.
பழமொழிகள் ஓர் இனத்தின் குரலாகவும் மதிப்பீடாகவும் விளங்குகின்றன. தமிழ்ப்பழமொழிகளில் பெண் பற்றிய மதிப்பீட்டை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.                                                                

பழமொழி

    பழமையான மொழிகளே பழமொழிகள் ஆகும்.  பழமொழிகளைக் கொண்டு  மக்களின் பண்பாட்டினையும், நாகரிகத்தையும் அறிய முடிகிறது.  தொல்காப்பியர் பழமொழியை,‘முதுசொல்’1 என்றும், அதன் விளக்கமாக,
‘நுண்மையும் சுருக்கமும் ஒளியுமு டைமையும்
     மென்மையும் என்றிவை விளங்கத்  தோன்றிக்
     குறித்தபொருளை  முடித்தற்கு  வரூஉம்
         ஏது  நுதலிய முதுமொழி""2
என்றும் உரைக்கிறார்.  மேலை நாட்டறிஞரான ரிச்சார்டு டார்சன் """"பழமொழியானது எளிதில் கவனிக்கக்கூடிய, சேகரிக்கக்கூடிய தொன்மை வாய்ந்த கருத்தாகும்""3  என்கிறார்.  """"நாட்டுப்புற மக்களின் நுண்மையான அறிவின் வெளிப்பாடே பழமொழி""4  என்று ஆய்வாளர்   ஒருவர் குறிப்பிடுகிறார்.  பழமொழி பழஞ்சொல், முதுமொழி, முதுசொல், வசனம், சொலவம், சொலவடை என்றும் அழைக்கப்படுகிறது.  பழமொழிகளைத் தொகுத்துக்கூறும் முதல் நூல் பழமொழி நானூறு ஆகும்.

பெண்ணும் பழமொழியும்

    """"பெண்ணின்  பெருந்தக்க  யாவுள""5 என்று வள்ளுவர் நாட்டின் கண்களாக விளங்கும் பெண்களைச் சிறப்பித்துள்ளார்.  அத்தகு சிறப்புடைய பெண்மை குறித்த பழமொழிகள் பல்வேறு கண்ணோட்டங்களில் நாட்டுப்புறங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
அடிமை நிலை
பெண் விடுதலை குறித்துப் பாரதி  அழுத்தமாகவும் ஆவேசமாகம் குரல் கொடுத்துள்ளார்.
        """"பெண்ண  றத்தினை  ஆண்மக்கள்  வீரந்தான்
        பேணு  மாயின்  பிறகொரு  தாழ்வில்லை""6
என்று அது நிலைபெற்றிருப்பதற்குரிய வழியையும் எடுத்தியம்பியுள்ளார். பெண்ணடிமைநிலையானது பழமொழிகளில் இயல்பாய் அமைந்துள்ளது.  ஆணுக்குப்  பெண்  சரிநிகர்சமம் என்பதற்கு எதிரான கருத்துகளே பழமொழிகளில் பரவலாகக் காணப்படுகின்றன.
    """"அகத்துக்காரர் ‘ஆத்துமுண்டை’ என்றால், பிச்சைக்கு வந்தவன் பேய்முண்டை என்றானாம்""   என்னும் பழமொழி பெண்  தன் கணவனால் இழிவுபடுத்தப்படும் நிலையை உணர்த்துகிறது. கணவனால் மதிக்கப்படாத நிலையில் மற்றவர்களாலும் அவள் அவமானப்படத்தப்படுகிறாள். 
பெண்கள் எத்தனை காலமானாலும் அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையை, """"அஞ்சு  வயசு ஆண் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் அடக்கம்"" என்னும் பழமொழி உணர்த்தும். ஆண்களின் ஆதிக்க நிலையை,
    """"அவள் அழகுக்குத் தாய்வீடு ஒரு கேடா""
    """"பெட்டைக்  கோழி  கூவியா பொழுது விடிகிறது""
    """"பெட்டை நாயைப்  போலக் கத்தாதே""
என்னும் முதுமொழிகள் உணர்த்துகின்றன.

இழிநிலை

    பெண்கள் சமுதாயத்தில் எவ்வளவு முன்னேற்றம் எய்தியிருப்பினும் சில இடங்களில் பிறர் இழிவு செய்யும் நிலை இன்றளவும் நிலவி வருகிறது.  பெண்களே பெண்களுக்கு எதிராக உள்ள நிலையும் காணப்படுகிறது.
    """"பெண்ணாய்ப்  பிறப்பதிலும் மண்ணாய்ப் பிறக்கலாம்""
    """"பெண்ணாய்ப் பிறப்பதும் பாவம்; பெண்ணோடு கூடிப் பிறப்பதுவும் பாவம்""
    """"பெண்ணைப் பெற்றுக் கெட்டுப் போகாதே""
    """"பெண்  புத்தி  பின்  புத்தி""
முதலான பழமொழிகள் ஆண்களைப் பெறுவதும் பெண்கள் தாம் என்பதனை மறந்து, பெண்ணாய்ப் பிறப்பது மட்டுமின்றி, பெண்களுடன் பிறப்பதும் பாவம் என எடுத்துரைக்கின்றன.  பெண்ணை விடப் பொன் பெரிது என்பதை,
    """"பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்""
என்னும் பழமொழி வழி அறியலாம்.  குழந்தையைப் பெற்றெடுப்பதே பெண்ணின் கடமையென்றும் பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள்  பயனற்றவர்களென்றும் சமுதாயம் கருதுகிறது.
    """"மலடி அறிவாளா  பிள்ளையின்  பெருமை""
    """"மலடிக்குத்  தெரியுமா  பிரசவ  வேதனை""
என்னும் பழமொழிகள் மலட்டுத்தன்மைக்குப் பெண்ணை மட்டும் காரணங்காட்டி அவளை இழிவு படுத்துவனவா உள்ளன.

வறுமை நிலை

    வறுமைநிலைக்கு ஆண்,பெண் வேறுபாடு காரணமாக இல்லாத நிலையில் அதனைப் பெண் மீது ஏற்றி அவள் சாடப்படுவதைப் பழமொழிகளில் காணமுடிகிறது.  குடும்ப வறுமை நிலையின் பழியைச் சுமப்பவளாகப் பெண் சித்தரிக்கப்படுகிறாள்.
    """"அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு""
    """"அஷ்டதரித்திரம் தாய்வீடு;  அதிலும் தரித்திரம் மாமியார் வீடு""
என்னும் பழமொழிகள் வறுமையின் மையமாகப்பெண்ணை அடையாளப் படுத்துகின்றன.    """"அவசம் அடைந்த அம்மங்காள் அரைப் புடைவை இல்லாவிட்டால் சொல்லலாகாதா"",    """"பாடுபட்ட அம்மாளுக்குப் பழைய சேலை, கூர்கெட்ட அம்மாளுக்குக் குறியோடு சேலை"" என்னும் பழமொழிகள் உடுத்தும் உடைக்குத் துன்பப்படும் நிலையைச் சித்தரிக்கின்றன.

உறவுகள்

    உறவுகள் இருப்பதினாலேயே இவ்வுலகானது இயங்கிக் கொண்டிருக்கிறது.  மனித உறவுகளை மேம்படுத்துவதே இலக்கியங்களின் நோக்கமாகவும் அமைகிறது.  நாட்டுப்புற இலக்கியங்களில்  உறவுமுறைகள் மிகச்சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டப்படுகின்றன. அவை உறவுகளின் மேன்மை, தேவை, வலிமை முதலானவற்றை வலியுறுத்துகின்றன. பழமொழி அக்காள், தங்கை உறவுமுறையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.  ஒருவருக்கொருவர் கொடுத்து உதவும் மனப்பாங்கு, உடன் பிறப்பினும் இருவரும் வேறு வேறு தான் என்கிற நிலை ஆகியனவற்றை, """"அக்காள் அரிசி கொடுத்தால் தானே தங்கை தவிடுகொடுப்பாள்""    """"அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்""    """"அரிசி கொடுத்து அக்காள் உறவு என்ன""
என்னும் பழமொழிகள் எதார்த்தமாக எடுத்தியம்புகின்றன.  அண்ணனின் மனைவியிடம் எந்த உதவியும் எதிர் பார்க்க இயலாது என்பதனை,
    """"அண்ணன் தான் சொந்தம்;  அண்ணியுமா சொந்தம்""""""அண்ணனிடத்தில் ஆறுமாசம் வாழ்ந்தாலும் அண்ணியிடத்தில் அரை நிமிஷம் வாழலாமா""
என்னும் பழமொழிகள் வழி உறவுநிலை இடைவெளியையும் அறிய முடிகிறது.  அத்தை உறவின் மேம்பட்ட நிலையினையும், போரிடும் குணத்தினையும்
    """"அஞ்சு மூன்றும் எட்டு  அத்தை மகளைக் கட்டு""
    """"பூச்சூட்ட அத்தை இல்லை, போரிட அத்தை உண்டு""
என்னும் முதுமொழிகள் இயம்புகின்றன.

இல்லறம்   

    இல்லறமே நல்லறமாய் இயம்புவது தமிழர் பண்பாடாகும். இல்லறம் சிறந்தால் எல்லாம் சிறப்பெய்தும். வள்ளுவமும்,
    """"தெய்வந்  தொழாஅள்  கொழுநன்  தொழுதெழுவாள்""
     பெய்யெனப்  பெய்யும்  மழை""7
எனப் பெண்கள் இல்வாழ்வில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து விளக்குகிறது.  கணவனுக்கு இன்முகத்துடன் உணவு பரிமாறும் மனைவியின் இயல்பினைக் குறுந்தொகை,
    """"தான் துழந்து அட்ட தீம்புளிப்  பாகர்
     இனிது  எனக்  கணவன்  உண்டலின்
     நுண்ணிதின்  மகிழ்ந்தன்று  ஒண்ணுதல்  முகனே""8
என எடுத்துரைத்துள்ளது. பெண்கள் கணவனையே சார்ந்திருக்கவேண்டும் என்பதையும் ஆண் இல்லாமல் பெண்ணுக்கு வாழ்க்கை இல்லை என்பதையும் பழமொழிகள் சுட்டிக்காட்டுகின்றன.
    """"அடித்தாலும் புருஷன்;  அணைத்தாலும் புருஷன்""
    """"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்""
    """"கணவனே கண்கண்ட தெய்வம்""
என்பனவும்,    """"அடிபெண்ணே சோறு ஆச்சா? நொடிக்குள்ளே சோறு ஆச்சு’’ என்னும் பழமொழியும் கணவன் மேல் மனைவி வைத்துள்ள பற்றினை விளக்குகின்றன.  பொருத்தமில்லாத்தம்பதியினரை, """"அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம்"" என்னும் பழமொழி விளக்குகிறது. அடக்கத்தையும், அடக்கமின்மையையும்,
    """"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
      ஆரிருள் உய்த்து  விடும்""9என்று குறள் இயம்பும்.  பெண்ணுக்கு அடக்கம் என்பது இன்றியமையாத பண்பாகும்.  அத்தகைய பெண்ணே இல்லிற்கு அழகாய்த் திகழ்வாள் என்பதை,    """"அகத்துக்கு அழகு அகமுடையாள்""    """"அடக்கமே பெண்ணுக்கு அழகு""என்னும் முதுமொழிகள் இயம்புகின்றன.  அடக்கமில்லாப் பெண்களால் பயனில்லை என்பதை,    """"அடங்காப் பெண்டிரைக் கொண்டவனும் கெட்டான்; அறுகங்காட்டை உழுதவனும்  கெட்டான்""    """"அண்ணனை அகம்காக்க வைத்துவிட்டு மன்னி மல்லுக்குப் போனாளாம்""    """"அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும்""
என்னும் பழமொழிகள் இயம்புகின்றன.

புராணம்

    புராணச் செய்திகள் வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்து  மக்களின் மனதில் பதிந்து பழமொழிகளாக உருப்பெற்றன.    """"அழகால் கெட்டாள் சீதை, வாயால் கெட்டாள் திரௌபதி"" என்ற பழமொழியால் அழகு ஆபத்தானது என்பதும், நாவடக்கம் பெண்களுக்கு இன்றியமையாதது என்பதும் உணர்த்தப்படுகின்றன.    """"அகமுடையானைக் கொன்ற அற நீலி"" எனும் பழமொழி, """"கொலையும் செய்வாள் பத்தினி"" என்னும் பிற்கால மொழிக்கு அடிகோலியது.

பொருளாதாரம்

வாழ்க்கைக்குப் பொருளே இன்றியமையாதது. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது உண்மையே ஆகும்.
    """"இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
      எல்லாரும் செய்வர் சிறப்பு""10
என்பது வள்ளுவர் வாக்கு.  .  பொருளால், பெண்கள் சிறப்படைந்த நிலையினை,
    """"அஞ்சும் இரண்டும் அடைவானால் அறியாப் பெண்ணும் கறிசமைப்பாள்""
    """"பெண் பிறந்த வீடோ புடவையை காய்த்த பந்தலோ""
என்னும் பழமொழிகள் உணர்த்தும் நிலையில், பொருளின்றி மதிப்பிழந்த பெண்கள் நிலையை, """"அரைக்காசு பெறாத பாட்டியம்மாவுக்கு மூன்று காசு கொடுத்து மொட்டை அடிக்க வேண்டுமா""என்னும் பழமொழி உணர்த்துகிறது.

சோதிடம்

    பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதைச் சோதிடம் மூலம் அறிந்து கொள்ளும் வழக்கம் அன்று  முதல் இன்று வரை நிலவி வருகிறது.  பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்கக் கூடாது என்பதை,    """"பெண் மூலம் நிர்மூலம்"" என்னும் பழமொழியும், மகத்தில் பிறந்த பெண் உலகாளுவாள் என்பதை, """"மகத்துப் பெண் சகத்துக்கு அதிசயம்"" என்னும் பழமொழியும் விளக்குகின்றன.  மகநட்சத்திரத்தில் பிறந்த பெண் பூரத்தில் பிறந்த ஆணை மணத்தல் வேண்டும் என்பதை,     """"மகத்தில் மங்கை; பூரத்தில் புருஷன்""எனும் பழமொழி விளக்கும்.

பெருமை

பெண்களை இழிவு படுத்தியும், அடிமைப்படுத்தியும் வந்த சமுதாயம் காலப் போக்கில் பெருமைப்படுத்தவும் செய்தது.
    """"பெண் இன்றிப் பெருமையும் இல்லை; கண் இன்றிக் காட்சியும் இல்லை""
    """"பெண் மகிழ பிறந்தகம் வாழ""
    """"தொட்டிலை ஆட்டும் கை தொல்லுளலகை ஆளும்கை""
    """"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே""
    """"பெண்கள் நாட்டின் கண்கள்""
    """"பெண் கிளை பெருங்கிளை""
என்னும் முதுமொழிகள் பெண்கள் நாட்டின் முதுகெலும்பாய்த் திகழ்வதை அறிவுறுத்துகின்றன.

முடிவுரை

    ஆணாதிக்கத்தால் பெண்கள் அடிமைநிலையில் இருப்பினும், வறுமை நிலையிலும் கணவனைப் போற்றியும், புரந்தும் வாழ்ந்து வந்துள்ளமை விளங்குகின்றது.  உறவுகளால் மேம்பட்ட நிலையும், அடக்கத்தால் ஏற்படும் சிறப்பும், அடங்காமையால் ஏற்படும் இழிவும் பழமொழியில் சித்தரிக்கப்பட்டுள்ளன.  புராணப் பெண்கள் நிலையையும், சோதிட வழக்கமும் பற்றியும் அறிய முடிகிறது.   பொருளாதார மேம்பாடும் காலப்போக்கில் பெண்கள் பெருமைப்படுத்தப்பட்ட நிலையும் பழமொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சான்றெண் விளக்கம்

1.    தொல்காப்பியம், (பொருள்),  செய். நூ. 384,  
2.    தொல்காப்பியம், (பொருள்), செய். நூ. 479,  
3.     டாக்டர் சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு,  ,    ப-104
   ஞ.1174.     மீ.அமு.நாசிர்அலி, பழமொழியில் நாட்டுப்புற வழக்காறுகள், நாட்டுப்புறவியல் ஆ.கோ.       ப-519
5.    திருக்குறள்   - 54
6.    மகாகவி பாரதியார் கவிதைகள் (பெண்மை வாழ்க) செண்பகாப்பதிப்பு,   ப-288
7.    திருக்குறள்   - 55
8.    குறுந்தொகை, - 167
9.    திருக்குறள்   - 121
10.    திருக்குறள்  - 752




























No comments: