புறநானூற்றுக் கையறுநிலைப்பாடல்கள்
முனைவர் ந. செண்பகலட்சுமி,
தமிழ்
இணைப்பேராசிரியர் மற்றும்
துறைத்தலைவர், அரசினர் மகளிர் கலைக்கல்லூரி,
சேலம் - 636 008.
மனிதனைப்
பிறவுயிர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவனது ஆறாம் அறிவு எனக்
கூறினாலும், மனிதன் அடிப்படையில் உணர்வு சார்ந்தவன்.
மனிதன் நிலத்தாலும், நிறத்தாலும், உணர்வாலும், மொழியாலும் வேறுபட்டவனாயினும்
உணர்வுகளால் ஒன்றுபட்டே விளங்குகிறான். தொன்மைமிக்க நாகரிகம் பெற்ற
நாடுகளனைத்திலும் காதலும் வீரமுமே வாழ்வெனக் கொண்டிருந்தாக அறியமுடிகிறது. காதல்
கூட வீரத்தை அடிப்படையாகக் கொண்டு வீரனைச் சுற்றியே நிகழ்வதை சங்கப் பாடல்களில்
காணமுடிகிறது.
""""கொல் லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்""என்றும்,
""""அஞ்சார் கொலையேறு கொள்பவரல்லதை
நெஞ்சிலர்
தோயதற்கரிய ----- ஆய்மகன் தோள்""
என்றும் அன்றைய பெண்களின் காதல், வீரத்தைச் சுற்றியே அமைந்திருந்ததை அறிய முடிகிறது. இத்தகைய வீரநிலைத் தலைவனைச்
சார்ந்திருக்கும் சமுதாயம் அவனை இழந்த நிலையில் கையற்று வாடுகின்ற நிலையை
சங்கப்பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இத்தகைய பாடல்கள் அவலச் சுவை மிகுந்ததாகக்
காணப்படுகின்றன. இவற்றைக் ‘கையறுநிலை’
என்னும் ஒரு
துறைக்குள் நம் இலக்கணநூலார் பொருத்துகின்றனர். இப்பாடல்கள்
""""உணர்த்தும் கலைஞரின் உள்ளத்து உண்மையும் அனுபவ ஆற்றலும்
சுரந்து விளங்குபவை என்றும் கூறல் பொருந்தும்"" என்றும் ‘புலவர் கண்ணீர்’ என்னும் நூலில் டாக்டர்.மு.வ. அவர்கள்
கூறுவது பொருந்தத்தக்கது. இத்தகைய கையறுநிலைப் பாடல்கள் புறநானூற்றின் மூலம்
நமக்கு உணர்த்தும் அரசியல், அவல,
பண்பாட்டியல்
கூறுகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கையறுநிலை : திணைக்குழப்பம்
‘கையறுநிலை’ என்பது புறப்பொருள் துறைகளுன் ஒன்றாகும்.
""""கழிந்தோர் தேஎத்துக் கழிபடர் உறீஇ
ஒழிந்தோர்
புலம்பிய கையறுநிலையும்"" (தொல் - புறத் : 77)
என்கிறது தொல்காப்பியம். செத்தோர் மாட்டுச் சாவாதார்
வருத்தமுற்றுப் புலம்பிய கையறுநிலையும் என இளம்பூரணர் கூறுகிறார்.
தொல்காப்பியத்தில் காஞ்சித்திணையில் கையறுநிலை எனும் இத்துறை உள்ளது. இதன்பின்
வந்த இலக்கணநூலான புறப்பொருள் வெண்பாமாலையிலும் ‘கையறுநிலை’
எனும் துறை
விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
""""வெருவரும் வாளமர் விளிந்தோற் கண்டு
கருவி மாக்கள்
கையற உரைத்தன்று"" (புறப்பொருள் : கரந்தை - 10)
எனக் கரந்தைப் படலத்திலும்,
""""செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
கையறவுரைத்துக்
கை சோர்ந்தன்று"" (புறப்பொருள் : பொது - 28)
எனப் பொதுவியல் படலத்திலும்
பாடப்பட்டுள்ளது. சங்கத் தொகை நூலான புறநானூற்றில் கையறுநிலைப் பாடல்கள் 43 எண்ணிக்கையில் உள்ளன. இப்பாடல்கள் பெரும்பான்மை பொதுவியல் திணையிரும், சிறுபான்மை கரந்தைத் திணையிலும் கூறப்பட்டுள்ளமை திணை வரையறை குறித்த
குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இக்கையறுநிலைப் பாடல்களை தொல்காப்பியம்
சுட்டும் காஞ்சித்திணையில் வைக்காமல்,
புறப்பொருள்
வெண்பாமாலையில் உள்ளபடி பொதுவியல் மற்றும் கரந்தைப் படலத்தில் வைப்பது ஏன்? மேலும் மூவேந்தர் மற்றும் கடையெழு வள்ளல்கள் குறித்த கையறுநிலைப் பாடல்களை
பொதுவியல் திணையிலும் ஆநிரை மீட்டு இறந்துபடும் வீரர்கள் பற்றிய கையறுநிலைப்
பாடல்கள் கரந்தை திணையிலும் வைக்கப்பட்டுள்ளமை திணைப் பாகுபாட்டில் அரசியல்
நோக்கம்ஏதேனும் உள்ளதா? என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
தொல்காப்பியத்தில் பொதுவியல் என்ற திணையே வகுக்கப்படாத போது, புறநானூற்றுக்குப் பிற்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கண நூலின் அடிப்படையில்
இத்தகைய திணைப் பாகுபாடு காலக்குழப்பம் விளைவிப்பதாக உள்ளது. ஒரு சிலத்
தமிழறிஞர்கள் புறப்பொருள் வெண்பா மாலையின் திணை,
துறைப் பாகுபாடு
பன்னி ருபடலம் என்னும் இலக்கணநூலை அடியொற்றிப் பகுக்கப்பட்டது என்று கூறுவது
இன்னும் பொருத்தமற்றதாக உள்ளது. எனவே இப்பயிலரங்கம் மூலம் ஆய்வு மாணவர்கள்
தொல்காப்பியம் மற்றும் புறநானூற்றை மறுவாசிப்பு செய்து சில மாற்றங்கள் செய்வது
தவிர்க்க முடியாததாகும்.
புறநானூறும் - கையறுநிலைப் பாடல்களும்
இறந்தவனை எண்ணி
அவனை இழந்தவர் பாடுவது கையறுநிலை என்பதை மேறகண்ட துறை விளக்கம் மூலம்
அறியமுடிகிறது. ஆங்கிலத்தில் நுடநபல என்பது இரங்கலைப் புலப்படுத்தும் கையறுநிலைப்
பாடலையே குறிக்கிறது. கிரேக்க மொழியில் ‘எலிஜியா’
(நுடநபநயை) என்ற
சொல்லுக்கு அவலம் என்ற பொருளுண்டென்றும் அதிலிருந்தே இச்சொல் பிறந்தது என்றும்
கருதுவதுண்டு. உலக இலக்கியங்களிலெல்லாம் அவலச் சுவையை உணர்த்தும் தன்னுணர்ச்சிப்
பாக்கள் உள்ளதைப் போல், புறநானூற்றிலும் கையறுநிலைப் பாடல்கள்
உள்ளன.
43 கையறுநிலைப்
பாடல்களில் 244 - ஆம் பாடல் முழுமையாகக் கிடைக்கவில்லை. 245 - ஆம் பாடல் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன்
மனைவியாகிய பெருங்கோப் பெண்டு துஞ்சிய காலை கையறவுடன் பாடிய பாடல். கையறுநிலைப்
பாடல்களில் இந்த ஒரு பாடல் மட்டுமே ஒரு பெண்ணுக்காகக் கணவன் இரங்கிப் பாடுவதாக
உள்ளது.
""""யாங்குப் பெரிதாயினு நோயள வெனைத்தே
உயிர்செகுக்
கல்லா மதுகைத் தன்மையிற்
கள்ளி போகிய
களரியம் பறந்தலை
வெள்ளிடை
பொத்திய விளைவிற கீமத்
தொள்ளழற்
பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர்
மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வ
லென்னிதன் பண்பே"" (புறம் - 245)
என்றும் பாடல் சேரமான் தன் மனைவியின்
மேல் கொண்டிருந்த காதலைப் பறை சாற்றுவதாக உள்ளது. எஞ்சிய பாடல்களில்
1.
சேரமான்
பெருஞ்சேரலாதன் - 1
(புறம் : 65)
2.
பாரிமகளிர்
பாடியது - 1
(புறம் : 66)
3.
பாரி - 8
4.
கோப்பெருஞ்சோழன்
- 7
5.
கரிகாற்பெருவளத்தான் - 1
6.
சோழன் நலங்கிள்ளி - 1
7.
சோழன்
குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் - 2
8.
எழினி - 1
9.
அதியமான்
நெடுமான் அஞ்சி - 4
10.
வேள் எவ்வி - 2
11.
வெளிமான் - 2
12.
நம்பி
நெடுஞ்செழியன் - 1
13.
ஆய் அண்டிரன் - 2
14.
ஒல்லையூர்
கிழான் மகன் பெருஞ்சாத்தன் - 2
15.
கரந்தை வீரர்கள் - 6
-----
41
-----
ஆகியோரைப் பற்றிய பாடல்கள் உள்ளன.
பாடல்களின் வைப்பு முறையிலேயே மூவேந்தர்,
கடையெழுவள்ளல்கள், குறுநிலத் தலைவன், ஆநிரை மீட்கும் வீரன் என்ற பாடல் வரிசை
அமைந்துள்ளமை உற்றுநோக்கத்தக்கதாகும்.
அரசியல்
ஒருவரை ஒருவர்
அடுதலும் தொலைதலும் புதுவதன்று என்பது நாம் அறிந்ததே.கையறுநிலைப் பாடல்களில்
முற்பகுதியிலேயே பாரியைப் பற்றிய பாடல்கள் காணப் படுகின்றன. புறநானூற்றி அமைப்பு முறையில்
மூவேந்தருக்கு இணையான ஆட்சிமுறையும்,
செல்வாக்கும்
பாரியிடமிருந்ததால் பாடலின் வைப்புமுறையிலும் அவனைப் பற்றிய பாடல்கள் முன்
வைக்கப்பட்டிருக்கலாம். பண்டைத் தமிழர் போர் முறையில் பகைநாடுகளை அழிக்கும் செயல்
ஓர் அரசியல் நோக்கமாகவே அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. ‘எரிபரந்தெடுத்தல்’ என்னும் துறையை தொல்காப்பியமும் ‘பெருவஞ்சி’ என்ற துறையைப் புறப்பொருள்
வெண்பாமாலையும் சுட்டுகின்றன.
""""ஏம நன்னாடு ஒள்எரி ஊட்டினை"" (புறம் - 16)
எனப் புறநானூறும் கூறுகிறது. பாரி
மாய்ந்த பின் அவனது பறம்பு மலை நலங்குன்றி இருப்பதைக் கபிலரின் கையறுநிலைப்
பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
""""தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ
கூர்வேற் குவைஇய
மொய்ம்பிற்
தேர்வண் பாரி
தண்பறம்பு நாடே"" (புறம் - 118)
என நீர்நிலை பாழ்பட்டுக் கிடப்பதையும்,
""""மென்றினை யாணர்த்து நந்துங் கொல்லேர்"" (புறம் - 119)
என்ம் ‘புன்புலத்தது’ என்றும் வரும் தொடர்கள், அரசனை அழிப்பதோடு அவன் சார்ந்த
நிலவியலையும் பாழ்படுத்தி, ஒரு சமூகத்தையே புலம் பெயரச் செய்யும்
அவலத்தைக் காட்டுவதாக உள்ளது.
வடக்கிருத்தல் அரசியலா? தாக்கமா?
புறநானூற்றுக்
கையறுநிலைப் பாடல்களில் ஏறத்தாழ ஏழு பாடல்கள் வடக்கிருத்தலைப் பற்றிப் பாடுகின்றன.
வடக்கிருத்தல் பற்றிய பல வினாக்களை நம்முள் இப்பாடல்கiள் எழுப்புகின்றன. கோப்பெருஞ்சோழன் வடக்கிருத்தமையும், அவனுடன் ஏராளமானோர் வடக்கிருந்த செய்தியையும்,
நட்பின் உச்சமாக
பிசிராந்தையார் மற்றும் பொத்தியார் வடக்கிருத்தலையும் அறியமுடிகிறது. இங்கு நாம்
வடக்கிருத்தலுக்கான அரசியல் மற்றும் சமூக காரணிகளை ஆராய முற்பட வேண்டும். சோழனின் மேல் படையெடுத்துச் சென்ற
சேரலாதன் வெண்ணிப் பறத்தலையில் கரிகால் வளவனோடு போரிட்டுத் தோல்வியுற்று
அவ்வெண்ணிப் பறந்தலையிலேயே வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை புறம் 65 - ஆம் பாடல் குறிப்பிடுகிறது.
""""தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த
புறப் புண்ணானி
மறத்தகை மன்னன்
வாள் வடக்
கிருந்தன னீங்கு"" (புறம் - 65)
என்னும் பாடல் வரிகள் பெருஞ்சேரலாதன்
வாளொடு வடக்கிருந்த செய்தியைக் காட்டுகிறது. புறம் 236
- ஆம் பாடலின்
துறை விளக்கம் கபிலர் வடக்கிருந்த செய்தியை உரைக்கிறது.
கோப்பெருஞ்சோழனும், பெருஞ்சேரலாகனும், கபிலரும் வடக்கிருந்ததை பாடல் மூலமாகவும், துறை விளக்கத்தின் வாயிலாகவும்,
வரலாற்றுக்
கொளுவின் மூலமாகவும்
அறியமுடிகிறது.
பெருஞ்சேரலாதன்
வடக்கிருந்தமைக்குக் காரணம் அவன் இனிதான் அரசியலில் ஈடுபட முடியாது என்ற
கழிவிரக்கமே காரணமாக இருந்திருக்கலாம். போரிலே தோற்ற மன்னனுக்கு அவன் நாட்டில்
பழைய மரியாதையும் செல்வாக்கும் கிடைக்குமா என்ற ஐயப்பாட்டினை பெருஞ்சேரலாதான்
கொண்டிருக்கலாம். அவன் வாளொடு வடக்கிருந்ததற்கு
""""புண்கிழித்து உயிர்விடும் பொருட்டு வாளையும் உடன்வைத்துக்
கொண்டு வடக்கிருந்தான் எனலாம்"" என கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
சி. சத்யமூர்த்தி தன் கட்டுரையில் குறிப்பிடுவார்.
அரசு
உரிமைக்காகத் தந்தை மகனைக் கொல்லுதல்,
மகன் தந்தையைக்
கொல்லுதல், அண்ணந்தம்பியைக் கொல்லுதல் போன்ற
நிகழ்ச்சிகள் மொகலாய மன்னர்களிடம் காணப்படக்கூடியவை. ஆனால் நம் பழந்தமிழ்
மன்னர்களிடம் இது அரிது. ஆனால் தன் மக்களிhலேயே அரசுரிமை துறந்த கோப்பெருஞ்சோழன்
வடக்கிருந்த செய்தியின் பின்னணியிலும் அரசியல் காரணமாக இருந்திருக்கலாமோ என்ற
ஐயப்பாடு ஏற்படுகிறது. தந்தையிடம் இருந்து அரசைப் பறித்த மைந்தர்களால் தந்தையைக்
கைது செய்யவோ சிறையில் அடைக்கவோ, கொல்லவோ தமிழர் சமூகம் இடம் கொடுக்காத
சூழலில் கோப்பெருஞ்சோழன் எடுக்கம் முடிவாக வடக்கிருத்தல் இருந்திருக்கலாம்.
வடக்கிருத்தல்
பண்டைத் தமிழரின் நம்பிக்கையை சார்ந்த பழக்க வழக்கங்களில் ஒன்று. ஆடவரே இச்செயலை
மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம்
உண்ணா நோன்பிருந்து உயிர்துறப்பதே வடக்கிருத்தல் எனப்பட்டது.
""""உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழுஉ வள்ளுர
முணக்கு மள்ள"" (புறம் - 219)
என்ற பாடல் வரிகளில் ஆற்றிடை
நிலப்பகுதியில் வடக்கிருந்தமை புலப்படுகிறது.
""""வலி அழிந்தார் மூத்தோர் வடக்கிருந்தார் நோயால்
நலிபு இழந்தார்
நாட்டு அறைபோய் நைந்தார் - மெலிவு ஒழிய
இன்னவரால்
என்னாராய் ஈந்த ஒரு துற்று
மன்னவராச்
செய்யும் மதித்து"" (சிறுபஞ்சமூலம் - 71)
என வடக்கிருந்தார் என்ற சொல்லை
சிறுபஞ்சமூலத்திலும் காணமுடிகிறது. இவ்வாறு வடக்கிருந்து உயிர் துறந்தவருக்கு
நடுகல் அமைப்பது பண்டைத் தமிழர் மரபாயிருந்துள்ளது. இந்த வடக்கிருத்தல் சமண சமய
தாக்கத்தினால் ஏற்பட்டது என்றும், சமண சமய வரவுக்கு முன்பே தமிழர்களிடம்
இம்முறை இருந்துள்ளது என்றும் இருவேறு பட்ட கருத்துகள் நிலவுகின்றன. சமணர்களிடம் ‘சல்லேகணை’ என்ற முறை இருந்துள்ளமையை அறியமுடிகிறது.
""""இடையூறு ஒழிவில் நோய் மூப்பு இவைவந்தால்
கடைதுறத்தல்
சல்லேகணை"" (அருங்கலச்செப்பு - 145)
என அருங்கலச்செப்பு சல்லேகணையைப் பற்றிக்
குறிப்பிடுகிறது. ஆனால் ஆண், பெண் இருபாலரும் சல்லேகணையை
மேற்கொள்ளலாம். இதன் நோக்கம் வீடுபேறு அடைவதேயாகும். எனவே வடக்கிருத்தலும்,
சல்லேகணையும்
ஒன்றா அல்லது வேறுவேறா என்ற ஐயம் எழுகிறது. அதேபோல் சமணர்களிடம் ‘அஞ்சினான் புகலிடம்’ என்ற ஒரு இடம் இருந்துள்ளமையையும்
அறியமுடிகிறது. சமண சமயத்தினரின் நான்கு முக்கிய தானங்களுள் ஒன்று அபயதானம். கமண ஆலயங்களுக்கு அருகில் அண்டி வந்தோரை பாதுகாப்பதற்கென்று
தனி இடங்கள் இருந்தன. இவற்றுக்கு ‘அஞ்சினான் புகலிடம்’ என்று பெயர். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் வெள்ளாடைக்
காரருக்கு அஞ்சினான் புகலிடம் அளித்ததாகக் கூறும் கல்வெட்டு இன்றும்
காணப்படுகிறது. கையறுநிலைப் பாடல்கள் வடக்கிருத்தல்,
சல்லேகணை, அஞ்சினான் புகலிடம் ஆகிய மூன்றையும் தொடர்புப்படுத்திப் பார்க்கும் போது தன்
மானம், வீரம்,
நோக்கம்
நிறைவேறாமை, நட்பு ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படும்
போது, சமண சமயக் கோட்பாடுகளை தனக்கேற்ற வகையில்
வடக்கிருத்தலாக மாற்றி தன் பெருமையை நிலைநாட்டியிருக்கலாம் எனக் கருதத்
தோன்றுகிறது. இவ்வடக்கிருத்தல் என்னும் பழக்கத்தை பிற்காலத்தினருக்கு உணர்த்தும்
இலக்கியப் பெட்டகமாகக் கையறுநிலைப் பாடல்கள் காணப்படுகின்றன.
நடுகல்
நடுகற்கள்
வரலாற்று ஆவணங்களில் இன்றியாமையாதது. புறநானுற்றில் 12 பாடல்களில் நடுகல் தொடர்பான செய்திகள் வருகின்றன. வீரர்களுக்கு மட்டுமனிறி
நாடாண்ட மன்னர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் பற்றிய செய்தியும் கையறுநிலைப்
பாடல்களில் அதிக அளலில் காணப்படுகின்றன. அதியமான் அஞ்சிக்கு நடுகல் நாட்டப்பட்டதை,
""""நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத்
துகுப்பவும் கொள்வன் கொல்லோ"" (புறம் - 232)
என்ற கையறுநிலைப் பாடலில் ஔவையார்
காட்டுகிறார். நடுகல்லிற்கு மயிற்பீலி சூட்டப்பட்டதையும், மதுவை நடுகல்லிற்கு முன் வைப்பதையும் மேற்கண்ட வரிகள் உணர்த்துகின்றன. ஆவூர்
மூலங்கிழார் என்ற புலவர் காரியாது என்ற குறுநிலத்தலைவனுக்குப் பாடிய கையறுநிலைப்
பாடலில் காரியாதுக்கு நடுகல் நடப்பட்ட செய்தியைக் கூறுகிறார்.
""""நாகுமுலை அன்ன நறுப்பூங் கரந்தை
விரகறிய யாளர்
மரபிற் சூட்ட
நிரையிவன் தந்து
நடுகல் ஆகிய
வெள்வேல் விடலை"" (புறம் - 261)
என்னும் பாடலடிகள் கரந்தை வீரனுக்கு
நடுகல் அமைத்தமையை உணர்த்துகிறது.
நடுகல்லை
வழிபட்டால் மழைபொழியும் என்ற நம்பிக்கைக் கையறுநிலைப் பாடல் வழியாக
வெளிப்படுகிறது.
""""தொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டுமேம்
படூஉமிவ் வறநிலை யாறே
பல்லாத் திரணிரை
பெயர்தரப் பெயர்தந்து
கல்ல விளையர்
நீங்க நீங்கான்
வில்லுமிழ்
கடுங்கணை மூழ்கக்
கொல்புனற்
சிறையின் விலங்கியோன் கல்லே"" (புறம் - 263)
என்னும் பாடலடிகள் கரந்தை வீரனின்
நடுகல்லை வழிபடின் வறநிலை வழியும் வண்டு மேம்படும் என உணர்த்துகிறது. மேலும்
இந்நடுகற்கள் ஊரின் வெளியே பறலுடை நிலத்தில் அமைக்கப்பட்டமையைக் கையறுநிலைப்
பாடல்கள்,
""""பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி"" (புறம் - 264)
""""ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை"" (புறம் - 265)
என்ற பாடலடிகளில் விரித்துரைக்கின்றன.
வடக்கிருந்தோருக்கும், கரந்தை வீரனுக்கும், வீரமரணம் அமைந்த மன்னருக்கும் நடுகல்
அமைத்து வழிபட்ட செய்திகள் சங்க இலக்கியத்தில் பரவலாகக் காணப்படினும், கையறு நிலைப் பாடல்களில் காட்டப்படும் நடுகற்கள் தமிழர் வரலாற்றை விவரிக்கும்
வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன என்பதில் ஐயமில்லை.
புற செய்திகள்
கையறுநிலைப்
பாடல்கள் உணர்த்தும் அவலச் சுவை குறித்து தமிழான்றோர் பலர் பல ஆய்வுரைகள் எழுதிய
நிலையில் தமிழர் சமுக, பண்பாட்டு விழுமியங்களை கையறுநிலைப்
பாடல்கள் உணர்த்தும் விதத்தின் ஒரு சில சான்றுகளை மேலே கண்டோம். இவை தவிர
இப்பாடல்களை ஆழ்ந்து படித்தபோது பெறப்பட்ட செய்திகள் பின்வருமாறு.
1.மன்னர்கள் வேள்வி செய்த செய்தி,
""""பருதி யுருவிற் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில் முடித்ததூ
உம்"" (புறம் - 224)
என்ற வரிகள் காட்டுகின்றன.
2.
""""ஈன்றோள் நீத்த குழவி போல"" (புறம் - 230)
என்னும் அடி, தாயால்கைவிடப்பட்ட குழந்தை பற்றிய செய்தியைக் கூறுகிறது. இவ்வடி அக்கால
சமுதாயச் சூழல் குறித்த பலவினாக்களை நமக்கு முன் எழுப்புகின்றன.
3. இறந்தவர்களுக்குப் புல்மேல் பிண்டம் வைத்து வழிபடும் செய்தி,
""""தன்னமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பண்டம்
யாங்குண் டனன் கொல்"" (புறம் - 234)
என்ற அடிகள் மூலம் புலப்படுகிறது.
4. கணவனை இழந்த பெண்களின் அன்றைய நிலைப்பற்றி பல செய்திகள் கையறுநிலைப்
பாடல்களில் காணப்படுகின்றன. மார்பில் அறைந்து அழுவதையும், வளையல்கள் அடைக்கப்படுவதையும்,
""""ஊழி னுருப்ப வெருக்கிய மகளிர்
வாழைப் பூவின்
வளைமுறி சிதற"" (புறம் - 237)
என்ற பாடலடிகள் காட்டுகின்றன.
""""தொடிகழி மகளிர்"" (புறம் - 238)
என்றும் தொடர் பெண்கள் கணவனை இழந்த பின்
வளையல் நீக்கிய செய்திகயைக் காட்டுகிறது.
""""கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல
மகடூஉம்"" (புறம் - 261)
எனும் அடிகள் கைம்மையுற்ற பெண்கள் மழித்த
தலையுடன் இருந்தமையை எடுத்துரைக்கிறது.
5.
""""தளரும் நெஞ்சஞ் தலைஇ மனையோள்
உளரும் கூந்தல் நோக்கிக் களர
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி""
(புறம் - 260)
என்னும் அடிகள் பெண்கள் விரி கூந்தலுடன்
எதிர் வருவதை தீ நிமித்தமாகக் கொண்டன என்பதைத் தெரிவிக்கிறது.
தொகுப்புரை
புறநானூற்றுக்
கையறுநிலைப் பாடல்களை வாசித்தவழி அவ்வடிகளின் வழியே பயணித்த வழி பெறப்பட்ட
முடிவுகள் பின்வருமாறு.
·
கையறுநிலைப்
பாடல்கள் அவலச்சுவையை உணர்த்துவதோடு அக்கால பண்பாடு,
சமூகம், வரலாற்றை எடுத்துரைக்கிறது.
·
திணை – துறை அமைப்பு முறையில் மறுவாசிப்பு தேவை.
·
மன்னர்களின்
நாடிழப்பில் அரசியல் காணப்படுகிறது.
·
வடக்கிருத்தலில்
சமண சமயத் தாக்கமும், அரசியல் மற்றும் உளவியல் தாக்கங்கள்
வெளிப்படுகின்றன.
·
கையறுநிலைப்
பாடல்களில் கூறப்படும் நடுகல் சங்க காலச் சமுதாயத்தை எடுத்துரைக்கும் வரலாற்று
ஆவணமாக உள்ளது.
·
சடங்குகள்
குறித்த செய்திகள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் குறித்த செய்திகள் காணப்படுகின்றன.
·
சங்ககாலம்
என்பது நீண்ட காலப்பகுதியைக் கொண்டது. அதில் ஒரு துளியினைக் காட்டும் வரலாற்றுப்
பெட்டமாக கையறுநிலைப் பாடல்கள் திகழுகின்றன என்பதில் ஐயமில்லை.
உசாத் துணை நூல்கள்
1.
புறநானூறு - கழக வெளியீடு
2.
நடுகற்கள் - ச. கிருஷ்ணமூர்த்தி
3.
சங்க இலக்கிய
ஒப்பீடு - தமிழண்ணல்
4.
பத்தாவது
கருத்தரங்கு ஆய்வுக்கோவை (இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்)
5.
நான்காவது
கருத்தரங்கு மலர்.
No comments:
Post a Comment