Friday, 6 November 2015

.‘குழவி மருங்கினும் கிழவதாகும்’- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப – உலா இலக்கியம்



.‘குழவி மருங்கினும் கிழவதாகும்’- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்



 

முனைவர் வ.ஜெயா,
பேராசிரியர், துறைத்தலைவர்,
பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை
 குழவி மருங்கினும் கிழவதாகும்என்று தொல்காப்பியர் பாடாண் திணையைப் பற்றி விளக்கும்போது கூறுகிறார். பாராட்ட வேண்டிய அரசனைக் குழந்தையாகப் பாவித்துப் பாராட்டும் வழக்கம்     தொல்காப்பியர் காலத்திலேயே இருந்ததை இது காட்டுகிறது. பாடவேண்டிய தலைவனை அல்லது தெய்வத்தை ஒரு குழந்தையாகப்     பாவித்து, ஒரு தாய் பாடுவது போல நூறு பாடல்களால்     பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பத்துப் பருவங்களில், ஒவ்வொரு பருவத்திலும் பத்துப்பாடல்கள் இடம் பெறும் இப்பிள்ளைத்தமிழினைப் பிள்ளைக் கவி, பிள்ளைப்பாட்டு என்றும் கூறுவர் இப்பிள்ளைத் தமிழின் பாட்டுடை நாயகர்கள் கடவுள், ஆசிரியர், வள்ளல், தொண்டர், தலைவர், புலவர் ஆவர்.
    

இப்பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற்   பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். தமிழ் இலக்கியங்களில்தமிழ்என்ற சொல்பிள்ளைத்தமிழ்என்ற சிற்றிலக்கியத்தில் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகப்படியான இலக்கிய நூல்கள் வெளியானதும் இந்தபிள்ளைத்தமிழ்இலக்கிய வகையில்தான் என்பதும் சிறப்பாகும்.     குமரகுருபரர் பாடிய மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழும்,   முத்துக்     குமாரசாமிப் பிள்ளைத்தமிழும்பிள்ளைத்தமிழ் நூல்களுள் நிகரற்றவை. பகழிக் கூத்தரின்திருச்செந்தூர்ப் பிள்ளைத்மிழும், பத்துப் பிள்ளைத்தமிழ்  நூல்களைப் பாடிய மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சேக்கிழார் பிள்ளைத்தமிழும் குறிப்பிடத்தக்கவை.

                 
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் முதலான பல நூல்கள் உள்ளன. தமிழில் பக்தி இலக்கியங்கள் தோன்றியிராவிட்டால், தமிழ் இலக்கியங்களுக்கு எந்தவிதப் பெருமையும் கிடையாது. பக்தி இலக்கியங்களே மற்ற தமிழ் இலக்கியங்களை வளரச்செய்து, இன்றளவும் நின்று, நிலைத்திருக்க உதவின என்பது யாராலும் மறுக்கவியலாத உண்மை.
  20-ஆம் நூற்றாண்டில் பக்தி இலக்கியம் தழைத்தோங்கச் செய்தவர்களுள் ஈடு இணையற்ற பாவலராகத் திகழ்ந்தவர் குமரகுருபர சுவாமிகள். தமிழும் சைவமும் தரணியில் ஒருசேரத் தழைத்தோங்க, தனிப்பெருந் தொண்டாற்றிய தவநெறிச் செல்வர்.

 ஐந்து வயது வரை ஊமைக் குழந்தையாகவே இருந்த குமரகுருபரரை அவரது பெற்றோர், திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கோயில் கொண்டிருக்கும் செந்திலாண்டவரின் அருளால் இவர் பேசும் ஆற்றல் பெற்றார். ஆற்றல் பெற்ற அந்நொடியிலேயே "தமது செவ்விதழைத் திறந்து "கந்தர் கலிவெண்பா' பாடி முருகனை வாழ்த்தினார்.

பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுள் எல்லாம் முதன்மை பெற்றுத் திகழ்வது இவர் இயற்றிய "மீனாட்சி பிள்ளைத்தமிழ்'. முதன்மைபெற்றுத் திகழ்வது மட்டுமல்லாமல், பிள்ளைத் தமிழ் இலக்கியங்களுக்கே பெருமை சேர்க்கிறது இப்பிள்ளைத் தமிழ். அதற்குக் காரணம் என்ன? அதில் மட்டும் அப்படி என்ன அற்புதம் நிகழ்ந்தது? இந்தக் கேள்விகளுக்கு சொக்கநாதனின் மனங்கவர் மனையாட்டியான அம்மை மீனாட்சியே, குமரகுருபரரின் செந்தமிழ்ப் பாக்களைக் கேட்க சிறுநடையிட்டு வந்தாள் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.
 
96 வகை சிற்றிலக்கியங்களுள், அந்தாதிக்கு அடுத்து புகழ்பெற்றுத் திகழ்வது பிள்ளைத்தமிழ் இலக்கியம். தமக்குப் பிடித்த தெய்வங்கள், பாட்டுடைத் தலைவன் அல்லது பாட்டுடைத் தலைவியை, குழந்தையாய் பாவித்து இயற்றப்படும் சிற்றிலக்கியமே பிள்ளைத்தமிழ். இதைப் "பிள்ளைப்பாட்டு' எனவும் கூறுவர். இதனைக் குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல், இருபத்தோராம் திங்கள் வரை வரும் ஒற்றித்த திங்கள் பத்தினும் கூறுவதாக அமைப்பர்.

 பிள்ளைத் தமிழ் - ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். ஆண்பாற் பிள்ளைத்தமிழில், காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழங்கல், சிறுதேர் உருட்டல் ஆகிய பத்து பருவங்கள் இடம்பெறும். பெண்பாற் பிள்ளைத் தமிழில் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரிய முதல் ஏழு பருவங்கள் இருக்க, அம்மானை, நீராடல், ஊசல் ஆகிய பெண்களுக்குரிய பருவங்கள் காணப்படும். இதுவே பிள்ளைத் தமிழின் இலக்கணமாகும்.

  "குழவி மருங்கினும் கிழவதாகும்' என்ற தொல்காப்பியர் வரி பிள்ளைத் தமிழ் இலக்கியத்திற்கு அடிப்படை எனலாம். இது வளர வழிவகுத்தவர் பெரியாழ்வார் ஆவார். அவர்தம் பாசுரங்களில் கண்ணனைத் தாலாட்டி, செங்கீரையாட்டி, சப்பாணி கொட்டி, தளர்நடை இடுதலை எழிலுறப் பாடியுள்ளார். "மன்னுபுகழ் கோசலை' எனத் தொடங்கும் பாடலில் ராகவனைத் தாலாட்டி மகிழ்கிறார் பெரியாழ்வார்.
  காலத்தால் முற்பட்டது, ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட "குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்' தான். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. என்றாலும் மீனாட்சி பிள்ளைத் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அப்படி என்னச் சிறப்பு? காண்போம்.

 இந்நூல் திருமலைநாயக்கர் முன்னிலையில் அவரது வேண்டுகோளுக்கிணங்க குமரகுருபரரால் அரங்கேற்றப்பட்டது. அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில், ஆறாவது பருவமான "வருகை'ப் பருவத்தின் 9-வது பாடலான "தொடுக்கும் கடவுள்' என்ற பாடலைப் குமரகுருபரர் பாடியபோது அதிலிருந்த சொற்சுவை, பொருட்சுவைகளைக் கேட்டு மயங்கிய மீனாட்சியம்மை, சிறுமிபோல் வடிவெடுத்து, தளர் நடையிட்டு வந்தாள்... குமரகுருபரரின் தேன்தமிழில் தன்னை மறந்தாள்...அவரது மடிமீது ஏறி அமர்ந்து பிற பாடல்களையும் கேட்டு இன்புற்றாள் என்பது வழிவழியாக வழங்கிவரும் செய்தி! ஆம்! இதைவிட இப்பிள்ளைத் தமிழின் சிறப்பையும், மேன்மையையும் சொல்லவும் வேண்டுமோ?

  "அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி' என்று வேதங்களால் போற்றப்படும் அன்னை ஸ்ரீ மீனாட்சியைத் தளர் நடையிட்டு வரச்செய்த அப்பாடல் இதுதான். படிக்கப் படிக்கத் திகட்டாத தேன்தமிழ் பாமாலை.
  ""தொடுக்கும் கடவுள் பழம் பாடல்
  தொடையின் பயனே நறைபழுத்த
  துறைந்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
  சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
  எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு
  ஏற்றும் விளக்கே வளர்சிமய
  இமயப் பொருப்பில் விளையாடும்
  இளமென் பிடியே எறிதரங்கம்
  உடுக்கும் புவனம் கடந்து நின்ற
  ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
  ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
  உயிரோ வியமே... மதுகரம்வாய்
  மடுக்கும் குழல்காடேந்தும் இள
  வஞ்சிக் கொடியே வருகவே!
  மலயத் துவசன் பெற்ற பெரு
  வாழ்வே! வருக... வருகவே...!''

குமரகுருபரனார் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், செங்கீரைப் பருவத்தில் சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது. ஆச்சரியமாக இருப்பினும், அழகு திகழ அமைந்த இப்பாடல், சிறு குழந்தைகளுக்கிடையேயான ஒரு விளையாட்டைப் பாடும் முகமாக, உலகியல், மானுட உளவியல், தெய்வத் தத்துவம், உலக உருவாக்கம் எனும் தொடர்ந்து நடக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைச் சுழற்சி முதலியனவற்றை உட்பொருளாகக் கொண்டு திகழ்கின்றது.

சிறு குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில், ஆண் குழந்தைகள் சிலர் முரட்டுத்தனமான விளையாட்டுகளை விளையாடுவர்.  மற்றக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களை உடைப்பது, அவர்கள் கட்டும் மணல் அல்லது சிறு மண்வீட்டைக் காலால் எற்றி உதைத்துச் சிதைப்பது, அவர்கள் பின்னலைப் பிடித்திழுத்து அவர்களைத் துன்புறுத்துவது என்பன இவற்றுள் சில.

உளவியல் ரீதியாக இதைக் காணப் போனால், நாம் வாழும் மானிட சமுதாயத்தை ஆதாரமாகக் கொண்டே இவை நிகழ்கின்றன எனலாம். அன்னையர் சமைப்பது, வீட்டிற்குரிய பணிகளைச் செய்து வீட்டை நன்முறையில் பராமரிப்பது, தமது குழந்தைகளைப் பேணுவது போன்றவற்றை நோக்கியே சிறுமியரும் தாய்மாரின் அடிச்சுவட்டில் சிற்றில் இழைத்து மணல் சோறாக்கி, குழந்தைகளைப் பேணும் விளையாட்டை விளையாடுவர். சிறுவர்களும் தந்தை, அண்ணன் முதலானோர் உடல் வலிமை தேவைப்படும் செயல்களைச் செய்வது போலத் தாமும் செய்ய முயல்வர். இவையே, சிற்றில் சிதைத்தல், சிறுபறை  முழக்குதல், சிறுதேர் உருட்டல், என்ற விளையாட்டுகளாகப் பரிணமித்ததோ என்னவோ!
உலகங்களையே சிறிய வீடாக உருவாக்கி விளையாடும் சிறுமியாக மீனாட்சியன்னை உருவகிக்கப் படுகிறாள். இவ்வாறு அவள் பெருமையைப் பேசுமிடத்து, சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. அன்னை உருவாக்கும் அழகிய சிற்றிலையும் ஒருவன் சிதைக்க இயலுமா? அவ்வாறு செய்யத் துணிந்த அவன் யார்? அவன் ஒரே ஒருவன் தான்- அவனே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்த தலைவனான சிவபிரான்.

சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எவ்வாறு? முதலில், நெடிய சக்கரவாள மலையை எல்லா உலகங்களையும் வளைத்து நிற்கும் சுவராக அமைக்கிறாள். எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை இந்தச் சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள். முழுதும் எழுந்தெழுந்து மோதும் ஊழிக்கால வெள்ளத்தில் கழுவப்படும் புவனங்களே அவளுடைய பழைய பாத்திரம் பண்டங்கள்; அவற்றை வரிசையாக அடுக்கி வைத்துபுதுக்கூழான இனிய அமுதத்தைச் சமைக்கிறாள். இவ்வாறு பலமுறை தாயாகிய மீனாட்சி சலிப்பின்றிச் செய்து வருகிறாள்.அவற்றை அழித்த வண்ணமாக இருக்கிறான் பித்தனான சிவபிரான். அவன் ஒரு முற்ற வெளியான தில்லையில், சிதம்பரத்தில் திரிகின்றவன்; ஊமத்தம்பூவை அணிந்திருக்கும் பெரும் பித்தன்; கூத்தன் அவன் அழித்ததுடன் நில்லாது  மீனாட்சியின் முன் நின்று கூத்தாடுகின்றானாம்!
வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள்.

(உ- ம்) திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்.
கூவிப் பரிந்து முலைத்தாயர்
        …………………………………..
       
ஆவித்துணையே வழியடிமை
                       
அடியேம் சிற்றில் அழியேலே
               
அலைமுத் தெறியும் திருச்செந்தூர்
                       
அரசே சிற்றில் அழியேலே,’ என வேண்டுவர் சிறுமியர்.

அல்லது சினம் கொண்டு கூச்சலிடுவார்கள்; இல்லாவிடில் அழுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்! இவ்வாறு விளையாடுகின்ற ஒப்பற்ற இளமையுடன் கூடிய பச்சைப் பெண்பிள்ளையே! செங்கீரை ஆடி அருளே!என வேண்டுகிறார் குமரகுருபரர்.
     
   சுற்றுநெடு நேமிச் சுவர்க்குஇசைய எட்டுச்
                       
சுவர்க்கால் நிறுத்திமேருத்
               
தூண்ஒன்று நடுநட்டு வெளிமுகடுமூடிஇரு
                       
சுடர்விளக்கு இட்டுமுற்ற
       
எற்றுபுன லில்கழுவு புவனப்பழங்கலம்
                       
எடுத்துஅடுக் கிப்புதுக்கூழ்
               
இன்னமுதமும் சமைத்து அன்னைநீபன்முறை
                       
இழைத்திட அழித்தழித்தோர்
       
முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
                       
முன்னின்று தொந்தமிடவும்
               
முனியாது வைகலும் எடுத்தடுக்கிப்பெரிய
                       
மூதண்ட கூடமூடும்
       
சிற்றில்விளை யாடும்ஒருபச்சிளம் பெண்பிள்ளை
                       
செங்கீரை ஆடியருளே
               
தென்னற்கும் அம்பொன்மலைமன்னற்கும் ஒருசெல்வி
                       
செங்கீரை ஆடியருளே.

தாயான மீனாட்சி (பராசக்தி) உலகத்தை அடிக்கடி ஆக்குதலையும் அவற்றைச் சிவபிரான் அடுத்தடுத்து அழித்தலையும் ஆகிய செய்கைகள் சிறுமியர் சிற்றில் இழைத்தலும். சிறுவர்கள் அவற்றை அழித்தலும் ஆகிய செய்கைகளாக உருவகித்துக் கூறப்பட்டன. மானிடப் பெண்கள் வீட்டிற்கு வேண்டியவற்றைச் செய்வது போல, எல்லா உலகங்களையும் படைக்கும் பராசக்தியும் தன் கடமைகளாக இவற்றைச் செய்கின்றாள். அவற்றைத் திரும்பத் திரும்ப அழித்துத் திருவிளையாடல் புரிகிறான் சிவபெருமான்.

எற்றுபுனல் என்பது அலை மோதும் ஊழிப் பெருவெள்ளமாகும். இதில் அண்டங்களைக் கழுவி எடுத்து அன்னை புதுக்கூழாகிய இன்னமுதைப் படைக்கின்றாள். இவ்வாறாக உலகை உருவாக்குவதையே மீனாட்சி சிற்றில் இழைப்பதாகப் புலவர் கற்பனை செய்கிறார். உன்மத்தம் கொண்டு பித்தனாகிய கூத்தபிரான் மீண்டும் மீண்டும் சிதைக்கிறான். இவ்வாறு உலக உருவாக்கமும் அழிவும் மாறி மாறி வருவது சுட்டப்படுகிறது. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில் உருவாக்கமாகவும் ஈசனின் சிற்றில் சிதைத்தலாகவும் அமைந்துள்ளன.

ஆண்பால் பிள்ளைத்தமிழில் ஒரு தனிப் பருவமாகப் பாடப் பெறும் சிற்றில்பருவம் இப்பாடலில் குறிப்பிடப் படுகின்றது.இறைவனின் படைத்தலும் காத்தலும் கரத்தலும் அழித்தலும் அருளுதலும் ஆகிய ஐந்தொழில்கள் ஓயாது நடை பெறுவதை  தத்துவ விளக்கமாக இப்பாடல் அழகுறக் காட்டுகிறது.  அதுவும் சிவபெருமான் தான் செய்யும் திருவருள் தொழில்களைத் தனது திருமேனியாக விளங்கும் சக்தி மூலமாகவே செய்தருள்கிறான் என்பது மறைபொருளாக விளங்குகிறது எனக் கொள்ளலாம்.
       
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
               
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
               
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
               
தங்கும் சிவனருள் தன் விளையாட்டதே (திருமந்திரம்)

சிவம் அகண்டமாய் எங்கும் வியாபித்திருப்பதால், எல்லாவற்றிலும் பொருந்தி நின்று ஐந்தொழில்களையும் தனது சக்தியாலே செய்கின்றான் எனலாம். சிவமும் சக்தியும் ஒன்றே; அந்த ஒன்றான இறையே  சிவம், சக்தி என இரண்டாகப் பிரிந்து நிற்கின்றது.ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,’ என்ற இன்னொரு திருமந்திரப் பாட்டின் மூலம் இதை அறிந்து கொள்ளலாம். ஆக, சக்தியின் வடிவில் இறைவன் திரும்பத் திரும்ப உலகங்களைப் படைத்துக் காக்கின்றான்; பின் மறைத்துச் சிறுவர்கள்  சிற்றில் சிதைப்பது போல விளையாட்டாக அழிக்கின்றான். இச்சமயம் அவனது இயக்கம் நடன வடிவில் இருப்பதால், சக்தியான அன்னை சிவகாமி, அசைவற்று, சிவம் போல அந்த நடனத்தைக் கண்டவண்ணம் நிற்கிறாள். பின்பு அவன் இன்னும் தொடர்ந்து  அவள் முன்பு ஆனந்தக் கூத்தாடுகின்றானே, தாண்டவமாடுகின்றானே, எதற்காக? விஞ்ஞான நோக்கில் கண்டால் இயற்கையின் இடையறாத சுழற்சியே இந்தத் தாண்டவம் என்பது புலப்படும்.
        உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
       
செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்
       
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
       
இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே.(திருமந்திரம்)

ஆகாயத்திலும் உத்தமர் உள்ளத்திலும் அவர்கள் உய்வுபெறும் வண்ணம் நடனமிடுபவன் அவன்; செம்பொன் நிறமான ஆகாயத்தில் பிரபஞ்சப்போரில் (சக்கரமாகச் சுழன்று வரும் பிறப்பிலும் இறப்பிலும்) ஈடுபட்டுள்ள சீவன்களுக்கு தோன்றாத் துணையாக விளங்கியபடிக் கூத்தாடுகிறான். (மீனாட்சியைதோன்றாத் துணைக்கோர் துணையாகி துவாதசாந்தப் பெருவெளியில்’  விளங்குபவளாக குமரகுருபரர் பிறிதோரிடத்தில் குறிப்பிடுகிறார்). இவ்விதமாகவே அவன்  ஆன்மாக்களைத் தன் திருவடிச் சம்பந்தப் படுத்திக் கலந்து நடமிடுகிறான்.
       
 மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
               
பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
               
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
               
ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே (திருமந்திரம்)

மன்றினுள் நடனமிடும் மாணிக்கக் கூத்தன்; வண்தில்லைக் கூத்தன். உயர்ந்த பெரியோர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடுபவன்; திருச்சடை கொண்ட கூத்தன்; அறிவுப் பேரொளி பொங்க உயிர்கள் அனைத்தும் நன்மை பெறுமாறு சிவானந்தத் தேனை அள்ளிச் சொரிந்தபடி நடமாடும் ஆணிப் பொற்கூத்தனை யாரால் உணர்ந்து அளவிட்டு அறிந்துரைக்க இயலும்?’ என்பார் திருமூல நாயனார்.
ஆகவே, சிவபிரான் சிற்றில் சிதைப்பது என்ற சிறு விளையாட்டை பிரபஞ்சப் பெருநடனத் தத்துவத்தைப் பொதிந்து நமக்கு குமரகுருபரனார் அருளியுள்ளார் என்றே தோன்றுகிறது.
முனைவர் வ.ஜெயா,
பேராசிரியர், துறைத்தலைவர்,
பாரதியார் பல்கலைக்கழகம், கோவை



ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிபஉலா இலக்கியம்




ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமை யான

எனும் தொல்காப்பிய நூற்பா உலாவின் தோற்ற நிலை என்பர். பெருங்காப்பியங்களில் பாட்டுடைத்தலைவன் உலா வருதல் சுருக்கமாகக் கூறப்படும். இதனை மட்டுமே உயிர்நாடியாகக் கொண்டு தெய்வமே உலா வருவதாகவும், அவ்வுலாக் கண்டு உவகை கொண்ட பல திறப் பெண்கள் காமுற்றதாகவும் கலிவெண்பாவில் பாடப்படுவது உலா இலக்கியம். இதனை உலாப்புறம் என்றும் கூறுவர்.

உலா இலக்கிய வகையின் இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம ஆகிய பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. இந்தப் பாட்டியல் நூல்கள் கூறும் விளக்கங்களின் அடிப்படையில் உலா இலக்கியம் பற்றிய விளக்கங்களைக் காண்போம்.
இருநிலைகள்
உலா இலக்கியம் இரு நிலைகளாகப் பாகுபடுத்தப்படும்.
1) முன் எழு நிலை 2) பின் எழு நிலை
உலா இலக்கியப் பாடுபொருள் நீண்டு செல்லும் இயல்பு உடையது. எனவே, இந்த இரு நிலைகளாகப் பகுத்துப் பார்க்கலாம் என்று பன்னிரு பாட்டியல் கூறுகின்றது.
முதல் நிலை அல்லது முன் எழு நிலை என்ற முதல் பகுதியில்; பாட்டுடைத் தலைவனுடைய குடிப்பெருமை, அவன் நீதி செய்யும் முறை, அவனுடைய மரபு, அவன் பிறருக்குக் கொடை வழங்கும் தன்மை, உலாச் செல்வதற்காக விடியல் காலையில் எழுந்து நீராடல், அணிகலன்களை அணிதல், அவனை நகர மக்கள் வரவேற்றல், பாட்டுடைத் தலைவன் நகர வீதிகளில் (தெருக்களில்) உலா வருதல் என்பன இடம்பெறும்.
பின் எழுநிலை என்ற இரண்டாவது பகுதியில், பாட்டுடைத் தலைவன் உலா வரும்போது ஏழு வகையான பருவ நிலைகளில் உள்ள பெண்கள் அவனைக் கண்டு காதல் கொண்டு மயங்குதல் கூறப்படும்.
2.4.2 பாட்டுடைத் தலைவன்
பாட்டியல் நூல்கள் கூறும் விளக்கங்கள் மூலம்
1)
மன்னர்கள்
2)
கடவுளர்கள்
3)
சான்றோர்கள் (மக்களில் சிறந்தவர்கள்)
4)
குழந்தைப் பருவம் உடைய தலைமகன் அல்லது இளமைப் பருவம் உடைய தலைமகன்
ஆகியோருள் ஒருவர் உலா வரும் பாட்டுடைத் தலைவராக அமையலாம் என்பது தெரியவருகின்றது.

ஏழு பருவப் பெண்கள்
பாட்டுடைத் தலைவன் உலா வரும்போது அவனை ஏழு பருவப் பெண்களும் கண்டு காதல் கொள்வதாகப் பாடப்படும். ஏழு பருவப் பெண்களும் அவர்களுடைய வயதும் பின்வருமாறு அமையும்.


வயது
பேதைப் பருவப் பெண்
5
பெதும்பைப் பருவப் பெண்
7
மங்கைப் பருவப் பெண்
11
மடந்தைப் பருவப் பெண்
13
அரிவைப் பருவப் பெண்
19
தெரிவைப் பருவப் பெண்
25
பேரிளம் பெண்
31

உலா வரும் வாகனம் (ஊர்தி)
உலா வரும் பாட்டுடைத் தலைவன் ஏறி வரும் வாகனமும் பாட்டியல் நூல்களில் சுட்டப்படுகின்றன.
பாட்டுடைத் தலைவன் யானை, குதிரை, தேர், சிவிகை (பல்லக்கு) ஆகிய ஏதேனும் ஓர் ஊர்தியில் ஏறி உலா வருவான்.
மற்ற இலக்கிய வகைகளைப் போலவே உலா இலக்கிய வகையின் தோற்றத்திற்குரிய கருக்கள் இலக்கண நூல்களிலும் இலக்கிய நூல்களிலும் காணப்படுகின்றன.

தொல்காப்பியத்தில்
தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை இயல் 83-ஆம் நூற்பாவாகிய,
ஊரொடு தோற்றமும் உரித்துஎன மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான
என்பதே உலா இலக்கிய வகையின் இலக்கணம் - கரு என்பர். பாடாண் திணையில் (பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது பாடாண் திணை) ஊரில் உள்ள பெண்கள் தலைவனிடம் காதல் கொண்டதாகப் பாடப்படும் பொருண்மையும் அடங்கும் என்பது தொல்காப்பிய நூற்பா மூலம் தெரியவருகின்றது. இதுவே, கருவாக அமைந்து பிற்காலத்தில் உலா இலக்கிய வகையாக மாறியது என்று எண்ணலாம்.
சிலப்பதிகாரத்தில்
சிலப்பதிகாரத்தில் உலா பற்றிய செய்தி இடம்பெறக் காணலாம். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்வதற்குரிய கல்லைக் கொண்டு வருவதற்காக வட நாடு செல்கின்றான். அங்கு, கனகன், விசயன் ஆகிய மன்னர்களுடன் போரிட்டு வெற்றி பெறுகின்றான். பின் தன் நாடு திரும்புகின்றான். அப்போது அவனுடன் அரசு அதிகாரிகள் பலர் வருகின்றனர். யானையின் மீது ஏறி வருகின்றான். மக்கள் எல்லோரும் அவனை வாழ்த்துகின்றனர். இந்த இடத்தில் உலா இலக்கிய வகையின் கூறு இடம் பெறக் காணலாம்.
பக்தி இலக்கியத்தில்
காரைக்கால் அம்மையார், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், கருவூர்த்தேவர் முதலியோர் இயற்றியுள்ள திருப்பாடல்களில் உலா பற்றிய செய்தி இடம்பெறக் காணலாம். இவர்கள் தெருக்களில் இறைவன் உலா வருவதாகக் காட்டுகின்றனர். சான்றாக,
தேர்கொள் வீதி விழவுஆர் திருப்புன்கூர் (சம்பந்தர், 289)

(
விழவு = திருவிழா)
என்ற அடியின் மூலம் இறைவன் தேரில் உலா வரும் செய்தியை அறிய முடிகின்றது.
இவ்வாறு, இலக்கணத்திலும் இலக்கியங்களிலும் காணப்படும் செய்திகளைக் கருவாகக் கொண்டு, உலா என்ற தனியான ஓர் இலக்கியம் தோன்றியது எனலாம்.
 ஆதி உலா, தெய்வீக உலா எனச் சிறப்பிக்கப்பெறும் சேரமான் பெருமாள் நாயனார் செய்த திருக்கைலாய ஞான உலாவே முதல் உலாவாகும். இறைவன் பெருமை பேசும் உலா என்ற முறையில் தெய்வீக உலா எனச் சிறப்பிக்கப்படுகிறது. சிறந்த ஓசை நயமும் கருத்தாழமும் கொண்ட இவ்வுலா பன்னிரு திருமுறைகளில் பதினொராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இதன் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு. சிவபெருமானின் பெருமையும் இறைவியின் அழகும் வீதிகளின் சிறப்பும் அழகிய வர்ணனைகளோடு அமைந்து கற்போரை மகிழ்விக்கிறது. 12ஆம் நூற்றாண்டில் உலாப்பாடுவதில் வல்லவரான ஒட்டக்கூத்தரால் மூவருலா இயற்றப்பட்டது. விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன், இராசராச சோழன் ஆகிய மூன்று சோழ மன்னர்களையும் தலைவர்களாகக் கொண்டு தனித்தனியாகப் பாடப்பெற்ற உலா நூல்கள் மூன்றையும் இணைத்து மூவருலா என்பர். இம்மூன்று மன்னர்கள் காலத்திலும் வாழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். தமிழக வரலாற்றை அறிய இந்நூல் பெரிதும் பயன்படுகின்றது. விசயாலய சோழனுக்கு 96 விழுப்புண்கள் ஏற்பட்ட செய்தியும் முதலாம் இராசராசனின் வெற்றியும், கங்கையும் கடாரமும் கொண்ட முதலாம் இராசேந்திரனின் வெற்றியும் பற்றி ஒட்டக்கூத்தர் தன் உலா நூல்களில் குறிப்பிட்டுள்ளார். விக்கிரம சோழன் உலாவைப் பாடியவர் ஒட்டக்கூத்தர். இவர் சோழ நாட்டில் மலரிஎன்ற ஊரில் செங்குந்த மரபில் தோன்றியவர். இவர் விக்கிரம சோழன் அவைக்களப் புலவராக இருந்தவர். பின்பு அவன் மைந்தன் குலோத்துங்கனுக்குத் தமிழ்க் கல்வி பயிற்றும் குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர். பின்னர் அக்குலோத்துங்கன் மைந்தன் இரண்டாம் இராசராசனுக்கும் அவைக்களப் புலவராக இருந்துள்ளார். அவைக்களப் புலவர்களுள் சிறப்பு வாய்ந்த தலைமைப்புலவராக விளங்கியுள்ளார். கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, காளக்கவி, கௌடப் புலவர் என்பன ஒட்டக்கூத்தரின் பட்டப்பெயர்களாம்.

ஒட்டக்கூத்தர் பெற்ற பரிசுகள் பல, சோழமன்னர்களுள் ஒருவன் அரிசிலாற்றங்கரைக்கண் ஓர் ஊரைப் பரிசிலாக அளித்தனன். அது கூத்தனூர் என்று பேர் பெற்று இன்றளவும் உள்ளது. இராசராச சோழன் உலாவைப் பாடி அரங்கேற்றிய பொழுது இரண்டாம் இராசராசன் ஒவ்வொரு கண்ணிக்கும் ஓராயிரம் பொன் பரிசில் வழங்கினான் எனத் தெரிகிறது.

ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட வேறு நூல்கள் அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டியெழுபது, காங்கேயன் நாலாயிரக்கோவை, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி என்பன. ஒட்டக்கூத்தர் இயற்றிய மூன்று உலா நூல்களும் மூவருலா என்று அழைக்கப்படுகிறது. அவற்றுள் முன் நிற்பது விக்கிரம சோழன் உலா. அடுத்தது குலோத்துங்க சோழன் உலா. மூன்றாவது இராசராச சோழன் உலா. இம்மூன்று மன்னர்களும் அரசு புரிந்த காலமே ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலமாகும். விக்கிரமசோழன் கி.பி. 1118 முதலும், இரண்டாம் இராசராசசோழன் 1146 முதலும் ஆட்சி புரிந்துள்ளனர். எனவே 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரையும் வாழ்ந்தவர் ஒட்டக்கூத்தர் என அறியலாம்.

உலா இலக்கியத்தின் அமைப்பினை நோக்குவோம்.

தசாங்கம் எனப்படுவன, பாட்டுடைத் தலைவனது மலை ஆறு நாடு நகர் யானை குதிரை மாலை முரசு கொடி செங்கோல் என்னும் பத்து உறுப்புகள். இவற்றைப் புகழ்ந்துபாடுதல் உலா இலக்கிய மரபு. திருவானைக்கா உலாவில் தலைவனின் தசாங்கம் கூறப்படவில்லை.
பாட்டுடைத் தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வீதிக்கு வருதல் என்னும் பகுதிகள் உலாநூலின் முதற்பகுதியில் இடம்பெறும். இவை முன்னிலை எனப்படும்.எழுபருவ மாதரும் குழுமி நின்றும், தனித்தனியாக நின்றும், காதல் வயப்பட்டுக் கூறுவன பின்னிலை எனப்படும்.

சிற்றில், பாவை, கழங்கு, அம்மானை, ஊசல், கிளி, யாழ், புனலாட்டு, பொழில் விளையாட்டு முதலியன ஏழுவகைப் பருவமகளிர்க்கும் உரிய விளையாட்டுகளாகப் பன்னிருபடலத்தில் (137) கூறப்பட்டுள்ளன. உலாக்காண வருங்கால், இன்னின்னார் இன்னின்ன விளையாட்டை மேற் கொண்டிருந்தனர் என்று அவரவர் பருவத்திற்கேற்றவாறு அமைத்துப்பாடுதல் வேண்டும்.
உலகியல் ஒன்றும் அறியாத பேதைப்பருவத்தையும், அறிவறிந்த மங்கை முதலிய பருவங் களையும் பாடுதல் எளிது. அறிவும் அறியாமையும் கலந்த பெதும்பைப் பருவத்தின் இயல்புகளைப் பாடுதல் அரிது. பேசும் உலாவில் பெதும்பை புலி என்று பெதும்பைப் பருவத்தாள் செயல்களைப் பாடுவதன் அருமையைக் குறிப்பிடுவார்கள்.

கடவுளர் எழுந்தருளிவரும் நாளில், ஏழுபருவ மாதரும் முறையே கண்டு காமுற்றதாகக் கூறுதலே எல்லா உலாக்களிலும் காணப்படும் செய்தி. மாறாக, மதுரைச் சொக்கநாதர் உலாவில் மட்டும், மதுரையில் ஏழுநாள் விழா நடைபெற்றது என்றும், அந்த ஏழு நாளிலும் அழகியசொக்கநாதர் வெவ்வேறு ஊர்திகளில் ஏறி உலாப்போந்தார் என்றும், ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பருவப்பெண் மட்டும் காதல்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலா நூல்களில் இறைவனது பெருமை மிகச் சிறப்பானமுறையில் சொல்லப்படும். சான்றாக, திருக்கயிலாய ஞான உலாவில்,

பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்
ஆழாதே ஆழ்ந்தான் அகலாது அகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் (சிவபிரான்)
என்று வருணிப்பது சிறப்பாக அமைகிறது.
மேலும் உலா நூல்களில் பலவித வரலாற்றுச செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன.
சான்றாகத்
திருக்காளத்திநாதர் உலாவில்,
மதிவிக்ரமச் சோழன் வண் குலோத்துங்கன்
துதிபெற்ற ராசேந்த்ர சோழன் கதிபெற்ற
செம்மையர்களாகத் திருப்பணிகளாற் பணியும்
மும்முடிச் சோழபுர மூர்த்தியான்
என்னும் பகுதியில், விக்கிரமசோழன், குலோத்துங்கசோழன், ராசேந்திரசோழன் ஆகியவர்கள்
மும்முடிச்சோழபுரக் கோயிலுக்குத் திருப்பணி செய்தனர் என்னும் செய்தி வருகிறது. திருப் பூவணநாதர் உலாவில் (இறைவன்)
மன்போசன் முத்துவடுக நாதேந்த்ரன் அருள்
பொன்போலும் ஆடை புனைந்தருளி
என வரும்பகுதியால், முத்துவடுகநாதன் இறைவனுக்கு விலையுயர்ந்த ஆடை அளித்த செய்தி தெரிகிறது.

புராணக்கதைகள் இறைவனைப் பற்றிய நூல்களில் இடம்பெறுவதில் வியப்பில்லை. திருவானைக்கா வுலாவில், சிவபெருமான் சித்தராக எழுந்தருளி, திருநீற்றையே கூலியாகக் கொடுத்தார் என்ற செய்தி கூறப்படுகிறது. திருவானைக்கா கோவிலின் வெளிமதில் திருநீற்று மதில் என்று அழைக்கப்படுகிறது.

எல்லா உலாநூல்களிலும் பெரும்பகுதியாக இடம்பெறுவது ஏழு பருவப் பெண்களின் வருணனை. அதிலும் பெண்களின் கண்ணையும், மார்பையும் வைத்தே அவர்களை வருணிக்கும் போக்கு மிகுதியாகக் காணப்படுகிறது. தங்கள் தங்கள் கற்பனைத் திறனுக்கேற்பப் புலவர்கள் ஏழு பருவப் பெண்களின் வருணிப்பிலும், அவர்கள்தம் விளையாட்டு வருணிப்பிலும் கவனத்தைச் செலுத்தியுள்ளனர். சான்றாகச் சிலபகுதிகளைக் காணலாம்.

பேதைப் பருவத்தாள் தெருவிற் சென்று சிற்றில் இழைத்துச் சிறுசோறு ஆக்கி விளையாடும் சிறுமி. இவள் பொய்வாழ்வு அடைந்தோர் புலன்கள்போல் ஒன்றோடொன்று ஒவ்வாது அலைகின்ற ஓதியாள்என்றும், “உலக மயக்கம் ஒழிந்தோர் மனம்போல் கலகம் சிறிதறியாக் கண்ணாள்என்றும் மதுரைச்சொக்கநாதர் உலா வருணிக்கிறது. இதே பேதைப் பெண்ணைத், “தாயிற் சிறந்தபிரான் அல்லாத தெய்வங்கள் போலே இறந்து பிறக்கும் எயிற்றாள்என்று திருவானைக்கா உலா வருணிப்பதும் ரசமாக உள்ளது.

பெதும்பையினை, “வேட்டவர்தம் புந்திகவர் வஞ்சனையும் பொய்யும் கொலையும் இடம் வந்துவந்து பார்க்கும் மதர்விழியாள்என ஏகாம்பரநாதர் உலா வருணிப்பதும் சுவையானது.
மங்கைப் பருவத்தாளை, “வாட்கைக் குமரருக்கு மையற்பிணி கொடுத்து மீட்கத் தெரியும் விழியினாள்என்று திருப்பூவண நாதர் உலா வருணிப்பது, பிணியும் அதற்கு மருந்தும் ஆயிழையே (பிணிக்கு மருந்து பிறமன் ஆயிழைத் தன்நோய்க்குத் தானே மருந்து) என்று திருக்குறள் கூறுவனை நினைவுபடுத்துகிறது.
மடந்தை செங்கோல் ஒழித்தெவர்க்கும் தீங்குபுரிவேந்தர் வெங்கோலினும் கொடிய வேற்கண் ணாள்என்கிறது மதுரைச்சொக்கநாதர் உலா.

அரிவை-தெரிவைப் பருவப் பெண்களைக், காமப்பயிற்சி மிக்குள்ளவர்களாக வருணிப்பதும் மரபு. திருப்பூவண நாதர் உலாவில், பேதை, தன்னகத்தில் சிற்றில் இழைத்துச் சிறுசோறு அட்டு அயர்கிறாள் என்றும், பெதும்பைப் பருவத்தாள் தான் வளர்த்த முல்லைக்கொடி அரும்பு எடுக்கக் கண்டு அதற்காகப் போதவிழ் புதுவிழா கொண்டாடுவதாகவும் வருகிறது. மங்கைப் பருவத்தாள் சித்திரமண்டபத்தில், சேடியரோடு அம்மானை ஆடிக்கொண்டிருந்ததாக வும், மடந்தை நிலாமுற்றத்தில் இருந்து விறலி பாடிய திருத்தலப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அரிவை, ஓங்கிய செய்குன்றிலிருந்து தோழியைத் தூது அனுப்ப விரும்பியிருந்ததாகவும், தெரிவை, மணமிக்க பூஞ்சோலையிலிருந்து ஓவியப் புலவன் வரைந்த பொன்னனையாளின் படங்களைக் கண்டு விரகவேதனை கொண்டதாகவும், பேரிளம்பெண் ஓங்குமணிமாடத்துள் ஒப்பற்ற அரியணையிலிருந்து முதற்பருவப் பெண்டிர்க்கு மோகநூலைக் கற்பிப்பதாகவும் கூறுகிறது.

உலா நூல்களின் பிற இயல்புகளாக நாம் கூறத்தக்கவை, அவற்றின் மிதமிஞ்சிய கற்பனை, அதன் விளைவாக எழும் பல்வேறு அணிகளும் வருணனைகளும். உலா இலக்கியத்தின் முன்னிலை, பின்னிலைக் கூறுகள் யாவற்றிற்கும் பொதுவாயினும், அந்த அந்த உலாப்பிரபந்தத்தின் நூலாசிரியரின் புலமைத்திறனுக்கு ஏற்றபடி கருத்துகளும் நடையும் கற்பனைகளும் காலப்போக்கில் உண்டான மாறுபாடுகளும் காணப்படும்.

தலசம்பந்தமான உலாக்களில் தலசம்பந்தமான செய்திகளும் தலப்பெருமையும் புராணக் கதைகளும் வரலாற்றுக் குறிப்புகளும் காணப்படுகின்றன. தெய்வத்தின்மீது இயற்றப்படும் உலாக்களில் பக்திச் சுவையும் ததும்பிநிற்கிறது. கவிஞர்கள் தத்தம் கல்வியறிவின் ஆழத்திற் கேற்ப யமகம், திரிபு, சிலேடை, மடக்கு, முரண், எண்ணணி முதலியவைகளை அமைத்துச் சொற்சுவையும் பொருட்சுவையும் ததும்பப் பாடியுள்ளனர் ஆதலின் அமைப்பு முறை ஒன்றாயினும் ஒவ்வொரு உலாவும் ஒவ்வொரு வகையிற் சிறந்து இன்பம் பயப்பதாகும்.

No comments: