சங்க இலக்கியக் கைக்கிளையும் சிற்றிலக்கியக் கைக்கிளையும்
[க.கதிரவன், துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை
& ஆய்வுமையம், அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளா
678104]
கைக்கிளை எனில் ஒருதலைக்காமம் எனவும் ஐந்து விருத்தச்செய்யுளில்
ஒருதலைக் காமத்தைப் பற்றிக் கூறும் சிற்றிலக்கியம் எனவும் ஏழிசையுள் மூன்றாவதாகிய காந்தாரப்
பண் எனவும் மருட்பா எனவும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி விளக்கம் கூறும்.
கை எனில் சிறுமைப்பொருள் முன்னொட்டு எனவும் கிளை
எனில் ஒழுக்கம் எனவும் சொற்பிறப்பு காட்டும். மேலும் தமிழர் திருமணம் நூலிலிருந்து
“கைக்கிளையாவது ஆடவன் பெண்டு ஆகிய
இருவருள்ளும் ஒருவருக்கே காதல் இருப்பது. இது ஒருதலைக் காமம்.
கை என்பது பக்கம். கிளை என்பது நேயம். ஆகவே கைக்கிளை என்பது ஒருதலைக் காதல்”
என ஓர் விளக்கத்தினை எடுத்துக்காட்டாய்க் காட்டும்.
கை என்னும் சொல்லுக்கு அகம் எனப் பொருள்கொண்டு
கைக்கிளை என்னும் சொல்லுக்கு
“அகம் கிளைக்கும் நிலை” எனப் பொருள்கொள்வோரும்
உண்டு.
காமஞ்
சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை
யெய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.
மேல் நடுவணைந்திணைக்குரிய பொருண்மையெல்லாம் கூறினார். இது கைக்கிளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
என்னும் தொல்காப்பிய
அகத்திணையியல் நூற்பா கைக்கிளையினை வரையறை செய்கிறது.
இந்நூற்பாவின்
பொருள் “காமம் அமையாத இளையாள்மாட்டு, ஏமம் அமையாத இடும்பை எய்தி, புகழ்தலும் பழித்தலுமாகிய இரு திறத்தால், தனக்கும் அவட்கும் ஒத்தன புணர்த்து, சொல்எதிர்பெறானாய்த்தானே சொல்லி இன்புறுதல், பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு”
புல்லித்தோன்றும் கைக்கிளை என்று கூறியதனால் புல்லாமற்
தோன்றும் கைக்கிளையும் உண்டு என்று உரையாசிரியர் மொழிவர்.
புல்லித்தோன்றும் கைக்கிளை - காமஞ்சாலா தலைமகள் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி.
புல்லாமற் தோன்றும் கைக்கிளை - காமஞ்சான்ற தலைமகள் மாட்டு நிகழும்
மனநிகழ்ச்சி.
இந்த நூற்பாவினை நுணுகிக்காணும்போது
சில எதிர்மைகளைக் காணமுடிகிறது.
Ø காமஞ்சாலா இளமையோள் காமஞ்சான்ற இளமையோள்
Ø ஏமஞ் சாலா இடும்பை ஏமஞ் சான்ற உவகை
Ø தன்னொடு தருக்கிய புணர்த்து அவளொடு தருக்கிய புணர்த்து
Ø சொல்எதிர்பெறாஅன் சொல்லி இன்புறல் சொல்எதிர்பெற்றான் சொல்லி இன்புறல்
Ø புல்லித்தோன்றும் கைக்கிளை புல்லாது தோன்றும் கைக்கிளை
காமஞ்சாலா இளமையோள் என்னும் தொடருக்கு காமத்தினை
அறியா இயல்புடைய சிறிய வயதுடையவள் என்னும் பொருள் கொள்ளும் உரையாசிரியர்கள் கைக்கிளை
என்பது சிறுமி மீது கொள்ளும் காதல் என்று பொருள் கொள்ளுகின்றனர். எனில் இது பொருந்தாக் காமம் என
ஆகி பெருந்திணைபாற்படுமேயன்றி கைக்கிளையாகாது.
வ.சுப.மாணிக்கம் தம்
தமிழ்க்காதல் நூலில்
“‘காமஞ் சாலா இளமையோள்’ என்ற தொடரைக் கொண்டு இருவகைக் கருத்துரைக்க இடமுண்டு. ஓர் இளைஞன் பெண்ணொருத்தியைக் கண்டு காமவுணர்வு கொண்டான். இவன் இங்ஙனம் ஆனானேயன்றி அவளிடத்து யாதொரு குறிப்பும்
தோன்றவில்லை. அதனால் இவள் காமத்திற்குரிய பருவம் நிரம்பாத பெண் என்று அறிந்துகொண்டான் என்பது ஒரு பொருள். குமரி எனக் கருதிக் காதலைத் தொடுத்தான் எனவும், ஒத்தோ மறுத்தோ யாதொரு காதற் சிந்தனையும் அவளிடத்துப் பிறவாமையின், இவள் மலராத முகை என்று தன் காதல் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டான் எனவும் இதனால் அறியப்படும். மற்றொரு பொருள், ஆளாகாத
பெதும்பை என்று தெரிந்தே ஒருத்தியை ஒருவன் காதலித்தான். அவள்பால் காதலரும்பு தோன்றாமையின், தன் உணர்வைத் தடுத்துக்கொண்டான் என்பது. இதுவே எல்லாரும் கருதி எழுதிவரும்
பொருள்.”
என்று பொருள் விளக்குகிறார்.
இவ்விரு
பொருளன்றியும் காமஞ்சாலா இளமையோள் என்னும் தொடருக்கு, “தன்மீது விருப்பம் கொள்ளா இளம்பெண்”
என்று பொருள்கொள்ளும்போது “அன்பின் ஐந்திணைக்கு
முன்னெடுக்கும் ஒருதலைக்காதல்” என கைக்கிளை உயர்பொருள் பெறும்.
கைக்கிளையை
வரையறுக்க முனையும் நாற்கவிராச நம்பி, உரையாசிரியர்கள் வழிநின்று சிந்தித்து பெருந்திணைக்கண் செல்லாது
கைக்கிளைக்கண் கொணருமுகத்தான் “காமஞ்சாலா இளமையோள்” என்னும் தொடரை “காமஞ்சான்ற இளமையோள்” என மாற்றிவைக்கிறார். தன்மீது காதல் கொண்ட பெண்ணின் குறிப்பறியாது
நிற்கும் தலைமகன் குறிப்பறியும் வரை அவளை அணுகாது நின்று தன் நெஞ்சொடு கூறல் கைக்கிளை
என்று பொருள்வரைகிறார்.
அதுவே
காமம்
சான்ற இளமையோள் வயின்
குறிப்பறி
காறும் குறுகாது நின்று
குறிப்படு
நெஞ்சொடு கூற லாகும். (நம்பியகப்பொருள்)
மேலும், தொல்காப்பியர் தன்னொடும் அவளொடும்
தருக்கிய புணர்த்து என தலைவன் தன் நெஞ்சோடும் தலைவியோடும் வாதிடல் கைக்கிளை என உரைப்பதனை
நம்பியகப்பொருளாசிரியர் தன்னொடு தருக்கல் எனச் சுருக்குகிறார். தருக்குதல் என்னும் சொல்லுக்கு பெருக்குதல் என்றும் ஒப்பிடுதல் என்றும் பொருள்
கொள்கின்றனர் உரையாசிரியர்.
தருக்குதல், தருக்கல் என்னும் சொற்கள் சொல்லாடுதல் என்னும் பொருண்மையும் உடையன.
தலைவன் தன் நெஞ்சொடு அவளுக்காக கிளத்தலும் தன் தலைவியோடு தம்மிருவர்
காதலுக்காகக் கிளத்தலும் எனப் பொருள் கொள்ளும்போது கைக்கிளைப் பொருளோடு இன்னும் நெருங்க
இயலும்.
தன்
மனத்துக்கினிய பெண்ணைக் கண்ட ஆடவன் இவள் யாரெனத் தன்னோடு தருக்கலில் ஈடுபடுகிறான். தனது காதலை ஏற்குமாறு தன் தலைவியிடம்
தருக்கலில் ஈடுபடுகிறான். தலைவியாயின் தன்னொடு தருக்கல் மேற்கொள்கிறாள்.
தன் தலைவனிடம் தருக்கலில் ஈடுபட மனம் துணியவில்லை. அல்லது சமூக கட்டுப்பாடுகள் தடுக்கின்றன. இந்நிலையில்
தனக்கும் தன் தலைவனுக்கும் இடையில் ஒரு வாயிலைத் தேடுகிறாள். இதுவே பின்னர் தூது வகைமை தோன்றக் காரணமாகிறது.
தன்னொடு
தருக்குகிற பொழுது தலைவியின் குறிப்பினை அவள் அசைவுகள் வழிப் பெற்றுவிட்டாலோ அவளொடு
தருக்குகிற பொழுது தலைவியின் குறிப்பினை அவள் சொற்கள் வழிப்பெற்றுவிட்டாலோ கைக்கிளை
மறைந்து களவு தோன்றிவிடும் எனக் கருதும் தொல்காப்பியர் “சொல்லெதிர்பெறாஅன் சொல்லி இன்புறுதல்
கைக்கிளை” என்கிறார். இக்கைக்கிளை சிறிதுநேரமே
தோன்றும் தன்மையுடையது என்பதனால் “புல்லித் தோன்றும் கைக்கிளை”
என்கிறார்.
தலைவி
தன் காதல் உரையாது அவள் குறிப்பினைக் கொண்டு காதலறிதல் எங்கனம் சொல்லெதிர்பெறலுக்கு
ஒப்பாகும் என வினவின் வள்ளுவன் பதிலிறுப்பான்.
கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல என்று.
காமஞ்
சாலா எனத்தொடங்கும் நூற்பாவுக்கு நேரெதிர் நூற்பா ஒன்றும் தொல்காப்பியர் தருகிறார்.
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.
கைக்கிளையில்
தொடங்கும் அகவாழ்வு நிறைவுபெறும் இடம் இது. காமம் சான்ற என்பதற்கு காமம் முற்றுப்பெற்றுவிட்ட என்னும் பொருள்
கொள்ளுதல் நன்றன்று. காமம் தன் உச்சமெய்திய நிறைவெய்திய என்று
பொருள் கொள்ளுதல் சிறப்பு. காமம் என்னும் சொல்லுக்கு காதல் என்பதே
பொருள். இன்றும் மலையாளத்தில் இச்சொல் காதல் என்னும் பொருளிலேயே
வழங்குகிறது. காமுகன் என்னும் சொல் மலையாளத்தில் காதலன் என்றே
பொருள் தருகிறது. காதல் தன் நிறைவினை எய்தியிருக்கும் உச்சத்தில்
இருக்கும் முதுமைப் பருவத்தில் தம் காதலுக்குக் காப்பாய் விளங்கும் தம் வாரிசுளோடும்
உற்றார் உறவினரோடும் இல்லறவாழ்வின் நல்லறம் புரிந்து வாழ்தல்தாம் தலைவனுக்கும் தலைவிக்கும்
வாழ்வின் பயனாக விளங்கும் என்கிறார் தொல்காப்பியர்.
தன்
மீது காதல் கொண்டிராத ஆனால் தன் மனத்துக்கு இனிமையான பெண்ணொருத்தியைக் காணும் தலைமகன்
அவளை அணுகித் தன் காதலைத் தெரிவித்து தன்னொடு வாழ்தலின் நலன் பல விரித்து அவளைத் தன்னைக் காதலிக்குமாறு செய்யும் கன்னி முயற்சியே கைக்கிளை எனக் கொளல்
வேண்டும். அவள் அவனைக் காதலிக்க ஒப்புதல் தெரிவித்துவிட்டால்
அது கைக்கிளை என்னும் நிலையைத் தாண்டி காதல் என்னும் நிலைக்கு உயர்ந்துவிடும்.
மேற்சுட்டும்
விளக்கத்தில் ஆண்பாலைப் பெண்பாலாகவும் பெண்பாலை ஆண்பாலாகவும் மாற்றும்பொழுது அது கைக்கிளைத்
தன்மைத்தே. அன்றி பெருந்திணையாகாது.
ஒரு விவரிப்பு வசதிக்காக இங்கு ஆண்பாலிலேயே தொடரப்படுகிறதே அன்றியும்
இது இருபாலுக்கும் பொதுவே.
கைக்கிளையின் வகைகளாக நான்கினை
நம்பியகப்பொருள் குறிப்பிடுகிறது.
காட்சி
ஐயம் துணிவு குறிப்பறிவு என
மாட்சி
நான்கு வகைத்தே கைக்கிளை (நம்பியகப்பொருள்)
தலைவன்
தன் மனத்துக்கு இனியாளைக் காணுதல் காட்சி. இவள் மானுடப்பெண்தானோ என ஐயுறுதல் ஐயம். இவள் தன்னோடு வாழத் தகுந்த மானுடப்பெண்தான் எனச் சிலபல காரணங்களால் தெளிதல்
துணிவு. அவளுக்கும் தன் மீது விருப்புண்டு என அறிதல் குறிப்பறிவு.
இந்நான்கு நிலைகளும் கைக்கிளையின் நான்கு நிலைகள் என நம்பியகப்பொருள்
குறிக்கிறது.
ஆனால்
தொல்காப்பியர் நான்காம் நிலையான குறிப்பறிவை ஏற்றுக்கொள்ளவில்லே என்றே தோன்றுகிறது. சொல்லெதிர்பெறாஅன் சொல்லி இன்புறுதல்
வரை மட்டுமே அவர் கைக்கிளை எனக்கொள்கிறார். குறிப்பறிவு தோன்றிய
உடன் கைக்கிளை மாறி காதல் வந்துவிடுகிறது என்பது அவர் கட்சி.
கைக்கிளையின் சிறுமையும் பெருமையும்
கைக்கிளை என்னும் வகைமை சிறுமையுடைத்து.
கைக்கிளையும் பெருந்திணையும் அகத்திணைகளல்ல என்னும் கருத்து பிற்கால
இலக்கணத்தார்க்குத் தோன்றியது. ஆகையினால் கைக்கிளையும் பெருந்திணையும்
அகத்திணையன்று அகப்புறம் என்று தனிவகை செய்யத் துணிந்தனர்.
மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் இதனைத் திறம்பட மறுத்து கைக்கிளையும் பெருந்திணையும்
அகத்திணைகளே எனத் தொல்காப்பியரின் கருத்தை நிறுவுவார்.
கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை யென்ப (தொல்.946)
என்னும் தொல்காப்பிய நூற்பாவினை எடுத்துக்காட்டும் அவர்
குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை என்னும்
ஐந்தையும் இணைத்துச் சொல்ல ஐந்திணை என்னும் சொல்லையும் அவற்றொடு கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றையும் இணைத்துச்சொல்ல அகத்திணை என்னும் சொல்லையும் தொல்காப்பியர்
தனித்தனியே பயன்படுத்துதலையும் எடுத்துரைக்கிறார்.
புறத்தினை மருங்கிற் பொருந்தி
னல்லது
அகத்திணை மருங்கின்
அளவுத லிலவே. (தொல்.1000)
அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர்
புறத்திணை யிலக்கணம்
திறப்படக் கிளப்பின் (தொல். 1001)
என வரும் இடங்களை
எடுத்துக்காட்டுகிறார்.
“அகத்திணையுள் ஐந்திணை பாடல் சான்ற புகழ்த்திணை, பல்துறையுடைய திணை. ஆதலின் ஐந்திணைக்குச் சிறந்த தனித்தன்மையுண்டு; மிக்க பொதுத் தன்மையுண்டு. ஐந்திணை போலக் கைக்கிளை பெருந்திணைகள் சிறப்பில்லை, பாடல் பெறவில்லை என்றாலும், அவையும் அகத்திணையின் உட்பிரிவுகள் அல்லவா? அகத்திணைக்கு ஒரு நற்பண்பு உண்டெனின், அப்பொதுப் பண்பு அவ்விரு உட்பிரிவுகளுக்கும் இருக்கத்தானே வேண்டும்? ஐந்திணை நல்ல திணையாயின்’ அதனொடு வைத்து எண்ணப்படும் கைக்கிளை பெருந்திணைகளும் நல்லனவாகத்தானே இருத்தல் வேண்டும்? இம்முறையான் ஆராயின், இவ்விருதிணைகளின் தூய்மையும் மேன்மையும் வெளிப்படும்.”
என்று கூறும் அவர்
கைக்கிளையும் பெருந்திணையும் இழிந்தவையோ ஒதுக்கப்படவேண்டியவையோ அன்று என விளக்க
“உணவின் வகைகள் சோறும் கறியும் துவையலுமெல்லாம். சோறு உணவினுட் சிறந்ததுதான் என்பதற்காகச் சோறே உணவாகி விடுமா? ஏனைக்கறியும்
துவையலும் நஞ்சாகிப் போமா?”
என்னும் வினாவினை
எழுப்புகிறார்.
சங்க இலக்கியக் கைக்கிளை
சங்க இலக்கியத்தில் கைக்கிளைப் பாடல்கள் அக இலக்கியத்தில்
நான்கே உள. அவை நான்கும்
கலித்தொகைக் கண்ணே உள.
கலித்தொகை குறிஞ்சிக்கலி,
முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தல்கலி, பாலைக்கலி எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளதே தவிர
கைக்கிளைக்கலி, பெருந்திணைக்கலி எனப் பாகுபடுத்தப்படவில்லை.
"ஊர்க்கால் நிவந்த பொதும்பருள்
நீர்க்கால்
கொழுநிழல் ஞாழல் முதிரிணர் கொண்டு
கழும முடித்துக் கண்கூடு கூழை
சுவல்மிசைத் தாதொடு தாழ அகல்மதி
தீங்கதிர் விட்டது போலமுக னமர்ந்து
ஈங்கே
வருவாள் இவள்யார்கொல் ஆங்கேஓர்
வல்லவன்
தைஇய பாவைகொல் நல்லார்
உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால்
வேண்டுருவம் கொண்டதோர் கூற்றம்கொல் ஆண்டார்
கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற்
பல்கலைச் சில்பூங் கலிங்கத்தள் ஈங்கிதோர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்;
இவளைச்
சொல்லாடிக் காண்பென் தகைத்து;
நல்லாய்
கேள்,
ஆய்தூவி
அனமென அணிமயிற் பெடையெனத்
தூதுணம்
புறவெனத் துதைந்தநின் எழில்நலம்
மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ?
நுணங்கமைத் திரள்என நுண்இழை யணையென
முழங்குநீர்ப் புணையென அமைந்தநின் தடமென்றோள்
வணங்கிறை வாலெயிற் றந்நல்லாய் நிற்கண்டார்க்கு
அணங்காகு மென்பதை அறிதியோ அறியாயோ?
முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப்
பெயல்துளி முகிழெனப் பெருத்தநின் இளமுலை
மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டார்
உயிர்வாங்கு மென்பதை உணர்தியோ வுணராயோ ?
என ஆங்கு,
பேதுற்றாய் போலப் பிறரெவ்வம் நீயறியாய்
யாதொன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேளினி
நீயுந்
தவறிலை நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட
நுமருந் தவறிலர்
நிறையழி
கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
பறையறைந் தல்லது செல்லற்க என்னா
இறையே
தவறுடை யான். "
(கலித். குறிஞ்சி -
20) (53)
இப்பாடல்
காமஞ்சாலா இளமையோள் வயின் ஏமஞ்சாலா இடும்பை எய்தி தன்னினும் அவளினும் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர்பெறாஅன் சொல்லி இன்புற்றது ஆதலின் தொல்காப்பிய வகைப்பாட்டுப்படி கைக்கிளையாயிற்று.
வேய் எனத் திரண்ட
தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்,
மா வென்ற
மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி
ஆய் சிலம்பு
அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப,
கொடி என, மின் என, அணங்கு
என, யாது ஒன்றும்
5 தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட,
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்! கேள், இனி:
பூந் தண் தார், புலர்
சாந்தின்,
தென்னவன் உயர் கூடல்,
தேம் பாய அவிழ்
நீலத்து அலர் வென்ற அமர் உண்கண்,
10 ஏந்து
கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்,
சேந்து
நீ இனையையால்; ஒத்ததோ? சின்மொழி!
பொழி பெயல்
வண்மையான் அசோகம் தண் காவினுள்,
கழி கவின்
இள மாவின் தளிர் அன்னாய்! அதன், தலை,
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த
15 கணையினும், நோய் செய்தல்
கடப்பு அன்றோ? கனங்குழாய்!
வகை அமை தண் தாரான்
கோடு உயர் பொருப்பின்மேல்,
தகை இணர் இள வேங்கை
மலர் அன்ன சுணங்கினாய்!
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
கதவவால்
தக்கதோ?
காழ் கொண்ட இள முலை
20 என ஆங்கு,
இனையன
கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி,
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்,
மனை ஆங்குப்
பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே
இதுவும்
தொல்காப்பியர் வகுத்த கைக்கிளையே. 57
தலைவன்
கூற்று
வார் உறு வணர் ஐம்பால், வணங்கு
இறை நெடு மென் தோள்,
பேர் எழில்
மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின்,
கார் எதிர்
தளிர் மேனி, கவின் பெறு சுடர் நுதல்,
கூர் எயிற்று
முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய்!
5 நேர் சிலம்பு
அரி ஆர்ப்ப, நிரை தொடிக் கை வீசினை,
ஆர் உயிர்
வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்:
உளனா, என் உயிரை
உண்டு, உயவு நோய் கைம்மிக,
இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
களைநர்
இல் நோய் செய்யும் கவின் அறிந்து, அணிந்து, தம்
10 வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
நடை மெலிந்து, அயர்வு உறீஇ, நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து, அணிந்து, தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
15 அல்லல்
கூர்ந்து அழிவுற, அணங்காகி அடரும் நோய்
சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும்,
ஒல்லையே
உயிர் வௌவும் உரு அறிந்து, அணிந்து, தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
என ஆங்கு
20 ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை; யான்; மற்று இந் நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்!
மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி,
நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே
இந்தப்பாடலும் சொல்லெதிர்
பெறாஅன் தலைவன் கூற்றே ஆயினும் இப்பாடலில் மடலேறுவேன் என மிரட்டுவதால் பெருந்திணைக்கூறும்
பெற்றுள்ளது.
வினை வலபாங்கின் தலைவன் கூற்று
கார் ஆரப் பெய்த
கடி கொள் வியன் புலத்துப்
பேராது
சென்று,
பெரும் பதவப் புல் மாந்தி,
நீர் ஆர் நிழல குடம்சுட்டு இனத்துள்ளும்,
போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இளம் பாண்டில்
5 தேர் ஊர, செம்மாந்தது போல், மதைஇனள்
பேர் ஊரும்
சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்,
மோரோடு
வந்தாள் தகை கண்டை; யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு
பண்ணித்
தமர் தந்து, ஒரு புறம் தைஇய
10 கண்ணி
எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல்
புண் இல்லார்
புண்ணாக நோக்கும்; முழு மெய்யும்
கண்ணளோ? ஆயர் மகள்
இவள்தான் திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள் வீசி,
வரிக்
கூழ வட்டி தழீஇ, அரிக் குழை
15 ஆடல் தகையள்; கழுத்தினும் வாலிது
நுண்ணிதாத் தோன்றும், நுசுப்பு
இடை தெரியா
ஏஎர் இருவரும் தத்தம்
உடை வனப்பு
எல்லாம் இவட்கு ஈத்தார்கொல்லோ?
படை இடுவான்மன் கண்டீர், காமன் மடை அடும்
20 பாலொடு
கோட்டம் புகின்
இவள் தான், வருந்த
நோய் செய்து இறப்பின் அல்லால், மருந்து அல்லள்
'யார்க்கும் அணங்காதல் சான்றாள்' என்று, ஊர்ப் பெண்டிர்,
'மாங்காய் நறுங் காடி கூட்டுவேம்; யாங்கும்
எழு நின் கிளையொடு போக' என்று தத்தம்
25 கொழுநரைப் போகாமல் காத்து, முழு நாளும்,
வாயில் அடைப்ப, வரும்
வினை வல பாங்கின் தலைவியைக் கண்ட வினை வல பாங்கின் தலைவன் 'காமம் சாலா இளமையோள் வயின்,ஏமம் சாலா இடும்பை எய்தி', கூறியது 109
புறநானூற்றில் கைக்கிளை;
சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை பெருங்கோழிநாய்கன்
மகள் நக்கண்ணையார் கைக்கிளைப் பாடல்களைப் பிற்கால இலக்கண ஆசிரியர்களைப் போல புறமெனக்
கருதி புறத்திணையில் சேர்த்துள்ளனர்.
"அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென்
தொடியகழித்
திடுதல் யான் யாயஞ்சுவலே
அடுதோண்
முயங்க லவை நாணுவலே
என்போற்
பெருவிதுப்புறுக வென்றும்
ஒருபாற்
படாஅ தாகி
இருபாற்
பட்டவிம் மையலூரே" (புறம்.
83)
"என்னை புற்கையுண்டும் பெருந்தோ ளன்னே
யாமே
புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே
போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே
கல்லென்
பேரூர் விழவுடை யாங்கண்
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்
குமணர்
வெரூஉந் துறையன் னன்னே" (புறம், 84)
திருக்குறளில் கைக்கிளை:
திருக்குறள் காமத்துப்பாலில்
முதல் அதிகாரத்தில் கைக்கிளைப் பாங்கினதாகிய குறள்கள் இடம்பெறுகின்றன.
அணங்குகொல்
ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல்
மாலுமென் நெஞ்சு
என்னும் குறள் காட்சி
என்னும் கைக்கிளைக்கூற்றுக்குச் சான்று பகரும்.
பக்தி இலக்கியத்தில் கைக்கிளை
தேவாரத்தில்
திருநாவுக்கரசர் தன்னைப் பெண்ணாக்கி சிவனை நினைந்து பாடும் முன்னை அவனிருக்கும் நாம
ம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் என்னும் பாடல் கைக்கிளைக்கூறினதே.
நாலாயிரத்திவ்யப்
பிரபந்தத்தில் ஆண்டாளின் பாடல்கள் கைக்கிளைத் திறத்தனவே. காமஞ்சாலா தலைவன் மீது காதல்கொண்டு
ஏமஞ்சாலா இடும்பை எய்திய தலைவி கூற்றே நாச்சியார் திருமொழி. சொல்லெதிர்பெறாஅள்
சொல்லி இன்புறல் அங்கு நிறைந்து காணப்படுகிறது.
கைக்கிளை தனிவகைச் சிற்றிலக்கியம்
சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாக கைக்கிளை குறிப்பிடப்படுகிறது.
ஒருதலைக்காமத்தை இருபத்தைந்து விருத்தப்பாக்களால்
பாடுவது கைக்கிளை எனப்படும் என வெண்பாப்பாட்டியல் உரைக்கிறது.
. .
.ஏய்ந்த
ஒருதலைக்
காம முரைப்பவையை யைந்தாய்
வரு
விருத்தங் கைக்கிளையா மன் (வெண். பாட். செய். 15)
ஆனால்
இலக்கணவிளக்கப்பாட்டியலும் முத்துவீரியமும் ஒருதலைக்காமத்தை ஐந்து விருத்தங்களாலே பாடுவது
கைக்கிளை என உரைக்கின்றன.
ஒருதலைக்
காம மோ ரைந்து விருத்தங்
கருத
வுரைத்தல் கைக்கிளை யாகும். (இல.விள.பாட். 67)
ஐந்து
விருத்தத் தாலே யொருதலைக்
காமத்
தைக்கூ றுவது கைக்கிளை (முத். வீரி
: 148)
பிறசிற்றிலக்கியங்களில் கைக்கிளை
கைக்கிளை தனிவகைச்
சிற்றிலக்கியமாய்ச் சிறப்புறவில்லை எனலாம். ஆனால் கைக்கிளை பிற
சிற்றிலக்கியங்களில் ஒரு பகுதியாய், உறுப்பாய் இடம்பெறுதலையும்
கைக்கிளைக்கூறு வேறுவடிவம் தாங்கித் தனிச் சிற்றிலக்கியமாய் வளர்ந்து நிற்பதையும் காணமுடிகிறது.
அவ்வகையில் குறவஞ்சியில்
ஒரு பகுதியாய் அமையும் கைக்கிளை, கலம்பகத்தில் ஓர் உறுப்பாய்
அமைகிறது எனலாம். கலம்பகமாலை, பன்மணிமாலை
ஆகிய சிற்றிலக்கியங்களிலும் கைக்கிளை ஓர் உறுப்பாக அமைகிறது.
உலா, தூது போன்ற சிற்றிலக்கியங்களில் கைக்கிளை பெருமளவு இடத்தினைத்
தனதாக்கிக்கொண்டிருக்கிறது எனலாம்.
கலம்பகத்தில் கைக்கிளை
கலம்பகத்தின் உறுப்புக்களாக புயம், புயவகுப்பு, அம்மானை, ஊசல் போலும் 18 குறிப்பிடப்படுகின்றன.
அவற்றுள் கைக்கிளையும் ஒன்றாகும்.
சான்றாக கச்சிக்கலம்பகத்தில்
இடம்பெறும் கைக்கிளை உறுப்புச் செய்யுளைக் காணலாம்.
பொங்கும் அருணயனப் பூவின் இதழ்குவியும்
இங்கு மலர்க்கோதை
இதழ்வாடு - மங்குறவழ்
மாடக் கச்சியில் வாழுமெம் பெருமான்
குறையா வளக்கழுக் குன்றில்
உறைவா
ளிவள்பூ வுதித்ததூ யவளே.(24)
கச்சிக்கலம்பகம்
கலம்பகத்தின் உறுப்புகள்
இரண்டு குறைவுபடப் பாடப்படும் கலம்பகமாலை எனும் சிற்றிலக்கியத்திலும் மூன்று குறைவுபடப்
பாடப்படும் பன்மணிமாலை என்னும் சிற்றிலக்கியத்திலும் கைக்கிளை தவறாது இடம்பெறுகிறது.
கோவையில் கைக்கிளை
அகப்பொருள் துறைகளுக்குரிய எடுத்துக்காட்டுப் பாடல்களைக்
கோர்த்தமையும் கோவை என்னும் சிற்றிலக்கிய வகையுள்ளும் கைக்கிளைப் பாடல்கள் அமைகின்றன.
சான்றாய், தஞ்சைவாணன் கோவையில் அமையும் காட்சி, ஐயம், துணிவு, தெளிதல் என்னும்
நால்வகை கைக்கிளைநிலைகளுக்கும் உரிய பாடல்களைக் காண்க.
காட்சி
புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமல மலர்ந்தொரு
கற்பகத்தின்
அயலே பசும்பொற் கொடிநின்ற தால்வெள்ளை அன்னஞ்செந்நெல்
வயலே தடம்பொய்கை
சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே.
ஐயம்
பாரணங் கோதிருப் பாற்கடல் ஈன்றபங் கேருகத்தின்
ஓரணங் கோவெற் புறையணங் கோஉயர் பாவலர்க்கு
வாரணங் கோடி தருந்தஞ்சை வாணன்தென் மாறைவையை
நீரணங் கோநெஞ்ச மேதினி யேஇங்கு நின்றவரே.
துணிவு
மையார் குவளை வயல்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போல்
நையா தொழிமதி நன்னெஞ்ச மேஇனி நம்மினுந்தன்
நெய்யார் கருங்குழற் செம்மலர் வாடின நீலஉண்கண்
கையால் அழைப்பன போலிமை யாநிற்கங் காரிகைக்கே.
குறிப்பறிதல்
மண்ணிற் சிறந்த புகழ்த்தஞ்சை வாணன் மலையவெற்பில்
பெண்ணிற் சிறந்தஇப் பேதைதன் பார்வை பெருவினையேன்-
எண்ணிற் சிறந்த இருந்துயர்
நோய்தனக் கின்மருந்தாய்க்
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை
யாவதுங் காட்டியதே.
தலைவியின் கண் உடன்பாடு காட்டிவிட்டது எனில் நம்பியகப்பொருள்படி இது கைக்கிளை. தொல்காப்பியர்படி இது களவுக்காதல்.
உலாவில் கைக்கிளை
உலாவில் எழுபருவப்பெண்ணும் உலாவரும் பாட்டுடைத்தலைவனைக்
கொண்டு காதல் கொள்வதாய் அமைக்கப்படுகிறது. பாட்டுடைத்தலைவனின் குறிப்பினை அறிய முயலும் அவனைத் தன்வயப்படுத்த
முயலும் தலைவியரின் ஒருதலைக்காதலை விதந்தோதுகிறது இச்சிற்றிலக்கியம். மடந்தை, பேரிளம்பெண் ஆகியோரின் ஒருதலைக்காதலை பெருந்திணையின்பாற்படும்
எனச் சிலரும் பெண் கொள்ளும் காதலாதலால் உலாக்காதல் முழுவதும் பெருந்திணையின் பாற்படும்
எனச் சிலரும் உரைப்பர்.
குறவஞ்சியில் கைக்கிளை
குறவஞ்சி இலக்கியத்தின் முதல் பகுதியாக அமையும்
தலைவன் உலா வருதல், தலைவி அவனைக்கண்டு காதல் கொள்ளுதல் ஆகியன கைக்கிளைப் பாங்கின. இங்கும் ஐயம், தெளிதல் ஆகிய கைக்கிளைக்கூறுகள் அரங்கேறுகின்றன.
திருக்குற்றாலக் குறவஞ்சியில் தோழியருடன் பந்தடித்துக்கொண்டிருக்கும்
வசந்தவல்லி, உலா வரும் ஈசனைக் கண்டு ஐயுற்றுத் தெளிந்து காதல்
கொள்ளும் கைக்கிளைப் பாட்டினைச் சான்றாக காட்டலாம்.
இந்தச் சித்த ராரோ வெகு
விந்தைக் காரராக விடையி லேறி வந்தார் (இந்த)
சரணங்கள்
(1) நாகம்
புயத்திற் கட்டி நஞ்சு கழுத்திற்கட்டிக்
காக மணுகாம லெங்குங் காடு கட்டிப்
பாகந் தனிலொரு பெண் பச்சைக் கிளிபோல் வைத்து
மோகம் பெற வொருபெண் முடியில் வைத்தார். (இந்த)
(2) மெய்யிற் சிவப்பழகும் கையில் மழுவழகும்
மையார் விழியார் கண்டால் மயங்காரோ
செய்ய சடையின் மேலே திங்கட் கொழுந்திருக்கப்
பையை விரிக்கு தம்மா பாம்பு சும்மா. (இந்த)
(3) அருட்கண் பார்வை யாலென் னங்கம் தங்கமாக
உருக்கிப் போட்டார் கண்ட உடனேதான்
பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற் றாலர் போலே
இருக்கு திவர்செய் மாயம் ஒருக்காலே (இந்த)
தூதில் கைக்கிளை
தூது அகத்தூது, புறத்தூது என இருவகைப்படும்.
அகத்தூதும் ஒருதலைக் காதலை எடுத்துரைத்து மாலை
வாங்கிவரச்சொல்லும் கைக்கிளைத்தூது, களவிடைப் பிரிந்த காதலரைத் தன்நினைவூட்டி வரைவுகடாவ அழைத்துவரச்செய்யும்
களவுத்தூது, கற்புக்காலத்தே பொருள்வயிற்பிரிந்த தலைமகனைத் தன்நினைவூட்டி
அழைத்துவரச்செய்யும் கற்புத்தூது என தூது மூவகைப்படும்.
காம மிக்க கழிபடர்கிளவி பெருந்திணைக்குரியது என
தூதினைப் பெருந்திணைக்கண் சேர்க்க முயல்வர். ஆனால் தனது ஒருதலைக்காதலை எண்ணி வாடும் தலைவன்/தலைவி எங்கனமேனும் தலைவியிடம்/தலைவனிடம் எடுத்துச்செல்ல
முனைந்து அதற்கெனத் தூதினை நாடி தன் தலைவியின்/தலைவனின் ஒப்புதலைப்
பெற முனைதல் கைக்கிளைப்பாங்கினது எனக்கொள்ளலே தகும்.
அவ்வகையில் தமிழ்விடுதூது, அழகர் கிள்ளைவிடுதூது முதலியன
கைக்கிளைத்தூது என வகைப்படுத்தலாம்.
நிறைவாக,
தொல்காப்பியருக்கும் பிற்கால
இலக்கண ஆசிரியர்களுக்கும் கைக்கிளை குறித்து கருத்து வேறுபாடுகள் உள,
பிற்கால இலக்கண ஆசிரியர்களின்
கருத்தினை ஒட்டியே கைக்கிளைப்பாடல்கள் புறநானூற்றில் இடம்பெறுகின்றன.
கைக்கிளை
குறிப்பு என்னும் குறுநிலையோடு ஒதுக்கப்படாமல், சிற்றிலக்கியங்களின் உறுப்புக்களாகவும் பகுதியாகவும் சிற்றிலக்கிய
வகையாகவும் வளர்ந்து நிற்கிறது எனலாம். அன்பின் ஐந்திணைபோலும்
கைக்கிளையும் பெருந்திணையும் ஒத்த மதிப்பு தரப்பெறுமாயின் பெருந்திணைக்கு ஒரு முதியோர்
காதல் தோன்றியமை போல கைக்கிளைக்கும் நற்பேறமையும்.
No comments:
Post a Comment