Sunday 17 June 2018

2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்



அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7
தமிழ்த்துறை 2017-2018
பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்

அலகு -1
சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.1.வழக்குரை காதை
[கோப்பெருந்தேவி தீக்கனாப் பல கண்டு அவற்றை அரியணை மீதிருந்த தன் கணவனிடம் கூறிக்கொண்டிருந்தாள். அப்பொழுது பெருஞ் சீற்றத்துடன் வாயிலை யடைந்த கண்ணகி தன் வரவை வாயில் காப்போனால் அரசனுக்கு அறிவித்துச் சென்று முன்னின்று, அவன் கேட்பத் தன் ஊர், பெயர் முதலியவற்றையும், தன் கணவனை அவன் ஆராயாது கொன்ற கொடுங்கோன்மையையும் அஞ்சாது இடித்துரையால் எடுத்தியம்பி, தன் கணவன் கள்வனல்ல னென்று தெரிவித்தற்பொருட்டுத், தன் சிலம்பினுள் உள்ள பரல் மாணிக்கம் என்றாள் ; அரசன் தன் தேவி சிலம்பின் பரல் முத் தென்று கூறி, கோவலனிடமிருந்து கொண்ட சிலம்பை வருவித்து வைக்க, கண்ணகி அதனை உடைத்தாள் ; உடைக்க, அதிலுள்ள மாணிக்கப் பரல் அரசன்முன் தெறித்தது ; அது கண்ட நெடுஞ் செழியன் நடுநடுங்கி, 'இழிந்த பொற்கொல்லன் சொற் கேட்ட கொடுங்கோன்மையையுடைய யானோ அரசன்! யானே கள்வன் ; தென்புலம் காவல் என் முதற் பிழைத்தது ; இன்றே கெடுக என் ஆயுள்' எனக் கூறித் துயருற்று மயங்கித் தான் அமர்ந்த அரசு கட்டிலில் வீழ்ந்து துஞ்சினான் ; அது கண்ட அரசன் மனைவி கணவனை இழத்தலாகிய கொடுந் துன்பத்தை எண்ணி வருந்தி, அவன் இணையடிகளைத் தொழுது தானும் விழ்ந்தனள்.]


பாண்டிமாதேவியின் தீக்கனா 

ஆங்கு,
குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்
கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா!
திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,
கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா!                           5
விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும்
கடுங் கதிர் மீன்: இவை காண்பென்-காண், எல்லா!

ஆங்கு - அங்ஙனம் அவள் வாயில்முன் சென்றகாலை ; பெருந்தேவி தன் கனவினிலை யுரைத்தலைக் கூறுகின்றார்.  குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் கடைமணியின் குரல் காண்பென் காண் எல்லா - தோழீ நம் மன்னனது வெண் கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழ வாயிலிடத்து நிலைபெற்று அசையும் மணியின் ஓசையை யான் கனவிலே காண்பேன் ; ஒடு : எண்ணொடு. வீழ என்னுமெச்சம் இது நிகழாநிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருட்டு. கடை - வாயிற்கடை. காண் - அசை. பின்வருவனவும் இன்ன. திசை இரு நான்கும் அதிர்ந்திடும் - எண் திசையும் அதிர்ச்சியுறும் ; அதனைக் காண்பேன், அன்றிக் கதிரை இருள் விழுங்கக் காண்பென் காண் எல்லா - தோழீ அதுவேயு மன்றி ஞாயிற்றினை இருளானது
விழுங்க அதனை யான் காண்பேன் கேட்டிற்குக் கருப்பம்.

"
கோப்பெருந்தேவி தான் கண்ட கனவை 
அரசவையில் இருந்த மன்னனுக்கு உரைத்தல்"
10
கருப்பம
செங்கோலும், வெண்குடையும்,
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்;
நம் கோன்-தன் கொற்ற வாயில்
மணி நடுங்க, நடுங்கும் உள்ளம்;
இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
வருவது ஓர் துன்பம் உண்டு;
மன்னவற்கு யாம் உரைத்தும்என-

உரை
 
செங்கோலும் வெண் குடையும் செறி நிலத்து மறிந்து வீழ்தரும் - அரசனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் அணுச் செறிந்த நிலத்தின்கண் மடங்கி வீழும், நங்கோன் தன் கொற்ற வாயில் மணி நடுங்க நடுங்கும் உள்ளம் - நம் மன்னனது வெற்றி தரும் வாயிலின்கண் கட்டிய மணி என்னுள்ளம் நடுக்குறும் வண்ணம் அசையும், இரவு வில்லிடும் - இராக்காலமானது வான வில்லைத் தோற்றுவிக்கும், பகல் மீன் விழும் - பகற் காலத்து விண்மீன்கள் எரிந்து கீழே விழும், இரு நான்கு திசையும் அதிர்ந்திடும் - எட்டுத் திக்கும் அதிரும், வருவது ஓர் துன்பம் உண்டு - ஆகலான் வரக்கடவதாகிய துன்பம் ஒன்றுளது, மன்னவற்கு யாம் உரைத்தும் என - யாம் அரசனுக்கு இச் செய்தியைக் கூறுதும் என்று கூற ;


20
ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;
கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,
கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,
வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,
மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,
கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,
கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்:
கூனும், குறளும், ஊமும், கூடிய
குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;
நரை விரைஇய நறுங் கூந்தலர்,
உரை விரைஇய பலர் வாழ்த்திட
ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி! வாழ்கஎன,
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்த;
கோப்பெருந்தேவி சென்று தன்
தீக் கனாத் திறம் உரைப்ப-
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே- இப்பால்,
உரை
ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர் அவிர்ந்து விளங்கும் அணி இழையினர் - ஒளியிட்டு விளங்குகின்ற அழகிய கலன்களை அணிந்தவர்களாய்க் கண்ணாடியையும் அணிகலன்களையும் ஏந்தினராய், கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர் - புதிய நூலாடை யையும் பட்டாடையையும் தாங்கினராய், கொழுந்திரையலின் செப்பு ஏந்தினர் - கொழுவிய வெள்ளிலைச் செப்பினை ஏந்தினராய், வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் மான் மதத்தின் சாந்து ஏந்தினர் - பல்வகை நிறங்களையும் பொற்பொடி முதலிய பொடிகளையும் கத்தூரிக் குழம்பினையும் சுமந்தனராய், கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் - தொடையினையும் மாலையினையும் கவரியினையும் அகிற்புகையினையும் தாங்கினராய், கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர - கூனராயும் குறளராயும் ஊமராயுங் குழுமிய குற்றேவல் மகளிர் நெருங்கிப் புடைசூழ ;

நரை விரைஇய நறுங் கூந்தலர் உரை விரைஇய பலர் வாழ்த்திட ஈண்டு நீர் வையங் காக்கும் பாண்டியன் பெருந்தேவி வாழ்கென - நரை கலந்த நல்ல கூந்தலையுடைய முதுமகளிர்
   
பலர் கடல் சூழ்ந்த இவ் வுலகத்தினைப் புரக்கும் பாண்டிய னுடைய பெருந்தேவி நீடு வாழ்கவெனச் சொல்லிப் புகழ் கலந்த மொழிகளான் வாழ்த்தவும், ஆயமும் காவலும் சென்று அடியீடு பரசி ஏத்த - சேவிக்குந் தோழியரும் காவல் மகளிரும் பின் சென்று அடியிடுந்தோறும் புகழ்ந்து போற்றவும், கோப்பெருந்தேவி சென்று தன் தீக்கனாத் திறம் உரைப்ப - பாண்டியன் பெருந்தேவி அரசனிடத்துச் சென்று தான் கண்ட தீய கனாவின் தன்மையை எடுத்துச் சொல்ல ;

   
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன் திரு வீழ் மார்பின் தென்னர் கோவே - திருமகள் விரும்பும் மார்பினை யுடைய பாண்டியர் தலைவனான நெடுஞ்செழியன் சிங்கஞ் சுமந்த தவிசின்மீது அமர்ந்திருந்தான்.


"
கண்ணகி வாயிலோனுக்கு அறிவித்தல்"

25
வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!என-

உரை
"
இப் பால் - இங்ஙனமுரைத்து நின்றதற் பின்னர் ; வாயிலோயே வாயிலோயே அறிவு அறைபோகிய பொறி யறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே - அறிவு கீழற்றுப் போகிய அற நினைவு அற்ற உள்ளத்தினையுடைய அரச நீதியற்ற வறியோனது கோயில் வாயில் காப்போய், இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள்-தன் கணவனை இழந்தாளொருத்தி பரலினையுடைய இரண்டு சிலம்பினுள் ஒன்றனை ஏந்திய கையினையுடையளாய், கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே என - நம் கோயில் வாயி லிடத்தாள் என்று அவ்வரசற்கு அறிவிப்பாய் என்று கண்ணகி கூற ;

கண்ணகி வந்ததை வாயிலோன் மன்னனுக்குத் தெரிவித்தல்"

30
வாயிலோன், ‘வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி!
தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!
செழிய, வாழி! தென்னவ, வாழி!
பழியொடு படராப் பஞ்சவ, வாழி!
அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளேஎன-

உரை

வாயிலோன் - வாயில்காப்போன், வாழி எம் கொற்கை வேந்தே வாழி - எமது கொற்கை நகரத்து,  அரசே வாழ்வாயாக, தென்னம் பொருப்பின் தலைவ வாழி - தெற்கின் கட் பொதியின் மலையையுடைய தலைவனே வாழி, செழிய வாழி - செழியனே வாழி, தென்னவ வாழி - பாண்டியனே வாழி, பழி யொடு படராப் பஞ்சவ வாழி - மறநெறிக்கண் செல்லாத பஞ்சவனே நீ வாழ்வாயாக, அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந்துணி - வெட்டுவாயினின்றும் செறிந்தெழுந்து ஒழுகும் குருதி நீங்காத பசிய துண்டமாகிய, பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை அல்லள் - பிடரொடு கூடிய மயிடன் தலையாகிய பீடத்தின்கண் ஏறி நின்ற இளங்கொடியாகிய வென்றி தரும் வேலினைப் பெரிய கையின் கண் தாங்கிய கொற்றவையும் அல்லள், அறுவர்க்கு இளைய நங்கை - கன்னியர் எழுவருள் இளையாளாகிய பிடாரியும் , இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நட்ட மாடச் செய்த பத்திரகாளியும், சூர் உடைக் கானகம் உகந்த காளி - அச்சம் விளைக்கும் காட்டினிடத்தைத் தனக்கு இடமாக விரும்பிய காளியும், தாருகன் பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் - தாருகனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் ஆகிய அவர்களும் அல்லள், செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் - தன் உள்ளத்துக் கறுவுகொண்டாள் போலவும் மிக்க சினமுற்றாள் போலவும், பொன் தொழிற் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் - தொழிற் றிறம் அமைந்த ஓர் பொற் சிலம்பினை ஏந்திய கையினையுடையளாய், கணவனை யிழந்தாள் கடையகத்தாளே கணவனை யிழந்தாள் கடையகத்தாளே என - தன் கணவனை யிழந்தவள் வாயிலின் முன்னிடத்தாள் என்று கூற ;
     
மன்னனை வணங்கும் ஒவ்வொரு முறையுங் கூறலின் வாழ்த்துப் பலவாயின. முதற்கண் வாழி முன்னிலையசையுமாம். படர்தல் என வந்தமையான் பழிநெறி என உரைக்கப்பட்டது. அடங்காத துணி, துணியாகிய தலைப்பீடம் என்க. மடக்கொடியாகிய கொற்றவை. எண்ணும்மையும் அல்லள் என்னும் வினையும் நங்கை முதலியவற்றோடும் கூட்டுக.

       (
செற்றம் - கறுவு ; செயிர்ப்பு - வெகுளி ; 1"செற்றன் றாயினும் செயிர்த்தன் றாயினும்" என்றார் பிறரும். கண்ணகி கூறியதனைக் கொண்டு 'கணவனை யிழந்தா'ளெனக் கூறினான் வாயிலோன். கொற்றவை முதலியோர் போல்வளாயினும் அவர்களல்லள் என்றமையின் இஃது உண்மையுவமை என்னும் அணியாகும். கடிய தோற்றம் பற்றிக் கொற்றவை முதலியவாகக் கருதினான்.)

"
மன்னவன் கட்டளைப்படி கண்ணகி அவையை அணுகுதல்"

 ‘
வருக, மற்று அவள் தருக, ஈங்குஎன-
வாயில் வந்து, கோயில் காட்ட,
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-
நீர் வார் கண்ணை, எம் முன் வந்தோய்!
யாரையோ, நீ? மடக்கொடியோய்!என
உரை
 
வருக மற்று அவள் தருக ஈங்கு என-அத் தகையாள் வருவா ளாகவெனச் சொல்லி அவளை இவ்விடத்து அழைத்து வருவாய் என்று வாயிலோனிடத்து அரசன் கூற ;
 
வாயில் வந்து கோயில் காட்ட-வாயிலோன் கண்ணகியிடம் வந்து அவளை அழைத்துச் சென்று கோயிற்கண் மன்னனைக் காட்ட, கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி - கோயிற்கண் அரசனை அணுகிச் சென்று நின்றவிடத்து, நீர் வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடியோய் என - அரசன், நீரொழுகும் கண்களையுடையையாய் எம் முன்னர் வந்து நின்றோய் இளங்கொடி போல்வாய் நீ யார் என்று கேட்ப ;
 

"
கண்ணகியின் மறுமொழி"

60
தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரேஎன- பெண் அணங்கே!

உரை
     
தேரா மன்னா செப்புவது உடையேன் - மன்னர்க்குரிய ஆராய்ச்சி யில்லாத மன்னவனே நின்னிடத்துச் சொல்லத் தகுவது ஒன்றுடையேன் யான் ; அறிவறை போகியோன் ஆகலான் 'தேரா மன்னா' என்றாள். எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்உறு புன்கண் தீரித்தோன் - இகழ்தலற்ற சிறப்பினை யுடைய தேவர்களும் இறும்பூது எய்தப் புறாவொன்று உற்ற மிக்க துன்பத்தினைப் போக்கியோனும், அன்றியும் - அவனன்றியும், வாயிற் கடைமணி நடு நா நடுங்க-கடைவாயிலினிடத்துக் கட்டிய மணியின் நடுவிலுள்ள நா அசைய, ஆவின் கடைமணி உகு நீர் நெஞ்சு சுட - பசுவொன்றின் கண்மணிக் கடையினின்றும் ஒழுகும் நீர் தன்னுடைய உள்ளத்தை வெதுப்பலானே, தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் - தானே தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தேர்க்காலிலிட்டுக்கொன்றோனும் ஆகிய இவரது, பெரும் பெயர்ப் புகார் என் பதியே - மிக்க புகழினையுடைய புகார் நகரமே யான் பிறந்த வூர்,

       
அவ் வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி - அவ் வூரின்கண் பழிப்பில்லாத சிறப்பினை யுடைய புகழ் யாங்கணும் சென்று விளங்கிய பெருங்குடிக்கண் மாசத்துவான் என்னும் வணிகனுடைய புதல்வனாகத் தோன்றி, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ் கழல் மன்னா நின் னகர்ப் புகுந்து - வீரக் கழலணிந்த மன்னனே பொருளீட்டி வாழ்க்கை நடத்தலை விரும்பி முன்னைத் தீவினை செலுத்தலானே நினது மதுரை நகரத்தின்கண் புக்கு, இங்கு என் காற்சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி - இந் நகரிடத்தே என்னுடைய காலின்கண் அணிந்த சிலம்பொன்றனை விற்றல் காரணமாக நின்னிடத்துக் கொலை யுண்ட கோவலன் என்பானுடைய மனைவியாவேன், கண்ணகி என்பது என் பெயரே என - என் பெயர் கண்ணகி எனப்படும் என்று கூற ;
   
(
புள் - புறா. பருந்தொன்றினால் துரத்தப்பட்டுத் தன்னை வந்தடைந்த புறாவினைக் காத்து, அதன்பொருட்டுத் தன் ஊனை அப் பருந்திற்களித்தான் சிபி. இதனைக் 1"கொடுஞ்சிறைக், கூருகிர்ப் பருந்தி னேறு குறித்தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின், தபுதி யஞ்சிச் சீரை புக்க, வரையா ஈகை யுரவோன் மருக" என்பதனா னுணர்க. தன் புதல்வனை ஆழியின் மடித்தோன் மனுச்சோழன். இதனை, 2"சாலமறைத்தோம்பி............முறைமைக்கு மூப்பிளமையில்" என வருஞ் செய்யுளானறிக. ஆழி - தேர்க்கால். பெரும் பெயர் - மிக்க புகழ். பெருங்குடி என்பது வணிகர் பிரிவு மூன்றனுள் ஒன்று. மகனை - ஐ, இடைச்சொல். சூழ்கழன் மன்னா என்றது கழற்சூழ்வு நின்மாட்டமைந்ததன்றி அறிவுச் சூழ்வு அமைந்திலது என்பதனைப் புலப்படுத்தி நின்றது. பெரும்பெயர்ப் புகார் என் பதி என்றது நின் பதியிற்போற் கொடுமை சிறிதும் நிகழாத பதி என்றவாறு. பாண்டியனது முறை வழுவை வலியுறுத்த நின்பதி எனவும், நின்பால் எனவும் கூறினாள்.)
 
"
மன்னவன் உரைத்த விடை"
65
கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம்-காண்என- ஒள்-இழை,

உரை
 
பெண்ணணங்கே - அணங்குபோலும் பெண்ணே, கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண் என - கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்பட்டதன்று மேலும் அதுவே அரச நீதியுமாகும் என்று அரசன் கண்ணகியிடம் கூற ;
   
"
கண்ணகி தன் சிலம்பின் தன்மையை அறிவித்தல்"

 ‘
நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியேஎன-
தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி;
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;
தருகஎனத் தந்து, தான் முன் வைப்ப-

உரை
 
ஒள்ளிழை - ஒள்ளிய இழையினையுடையாளாகிய கண்ணகி அவனை நோக்கி, நல் திறம் படராக் கொற்கை வேந்தே - அறநெறியிற் செல்லாத கொற்கை நகரத்து அரசனே, என் காற் பொற் சிலம்பு மணியுடை அரியே என - என் காற்கு அணியாம் பொன்னாலாய சிலம்பினுடைய பரல் மாணிக்கமே என்று கூற, "மன்னவன் தனது தேவியின் சிலம்பில் உள்ள அரி முத்து எனக் கூறி,  காவலர் கொணர்ந்த சிலம்பைக் கண்ணகியின் முன் வைத்தல்"

"
கண்ணகி சிலம்பை உடைக்க, மன்னவன் முகத்தில் மணி தெறித்தல்"

 
கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,
"
மன்னவன் உண்மை உணர்ந்து, உயிர் துறத்தல்"


75
தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யனோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்
தே மொழி உரைத்தது செவ்வை நன்மொழி - இக் கண்ணகி கூறியது செவ்விதாய நல்ல மொழியே யாகும், யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே என - எம்முடைச் சிலம்பினது பரல் முத்தே எனத் தம்முட் கருதி, தருகெனத் தந்து தான் முன் வைப்ப-அச் சிலம்பினைக் கொண்டு வருகவென ஏவலரிடைக் கூறி வருவித்துத் தானே அதனைக் கண்ணகியின் முன்பு வைத்த னனாக, கண்ணகி அணி மணிக் காற்சிலம்பு உடைப்ப - கண்ணகி தான் அணியும் அழகிய அச் சிலம்பினை உடைத்த காலை, மன்னவன் வாய் முதல் தெறித்தது மணியே - அதனினின்றும் எழுந்த மாணிக்கப் பரல் பாண்டியனது முகத்திடத்துத் தெறித்து வீழ்ந்தது ;

      (
தேமொழி - தேன் போலும் மொழியினையுடையாள் ; அன் மொழித்தொகை. செவ்வைமொழி - நீதிமொழி. சிலம்புடை அரி முத்தென்க. தருகென வென்றது முன்னர்க் கோவல னிடத்துப் பெற்ற சிலம்பினைக் கொண்டு வருக என்று கூறி என்றவாறு. முன் வைப்ப - கண்ணகி முன் அரசன் வைக்க. வாய் - முகம். முதல், ஏழனுருபு.)

மணி கண்டு - அங்ஙனந் தெறித்த மாணிக்கப் பரலைப் பார்த்து, தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் - தாழ்வுற்ற குடையனாய்ச் சோர்வுற்ற செங்கோலனாய், பொன் செய் கொல்லன்தன் சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் - பொற்றொழில் செய்யும் கொல்லனுடைய பொய்யுரை கேட்டு முறை பிழைத்த யான் ஓர் அரசனாவேனோ, ஆகேன், கள்வனென்று யான் துணிந்த அக் கோவலன் கள்வனல்லன் யானே கள்வன் , மன்பதை காக்கும் தென்புலங் காவல் என் முதற் பிழைத்தது - மக்கட் கூட்டத்தினைப் புரக்கின்ற பாண்டி நாட்டு ஆட்சி என்னை முதலாகக் கொண்டு தவறுற்றது, கெடுக என் ஆயுள் என மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே - என் வாழ்நாள் அழிவுறுவதாகவெனச் சொல்லி அரசன் மயக்கமுற்று வீழ்ந்தான் ;
     
அமைச்சரொடு சூழ்ந்து அவர் கூறியது நோக்கி முறைசெயற் குரியான் கொல்லன் சொற்கேட்டுக் கொடுமை செய்தான் ஆகலான் "யானோ அரசன்" எனவும், கோவலன் சிலம்பினைத் தம்முடையதாகக் கொண்டமையான் "யானே கள்வன்" எனவும் கூறினான் ; முன்னர், 1தேரா மன்னா' என்றதும், 2"என் காற் சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டாற் கொன்றாரே" என்றதும் இக் கருத்தினை வலியுறுத்துவனவே. தமக்கு முன்னர் இந் நில மாண்ட தம் முன்னோர் இங்ஙனம் கோல் கோடிற்றிலர் ஆகலானும், இவ்வாறு தான் கோல் கோடிய குற்றம் தன் வழி வருவார்க்கும் எய்தும் ஆகலானும் "தென் புலங் காவல் என்முதற் பிழைத்தது" என்றான். தென் புலங் காவலர் கோல் கோடாமையைக் கட்டுரை காதைக்கண் மதுரைமா தெய்வம் உரைத்தது கொண்டு உணர்க. வீழ்ந்தான் - துஞ்சினான்.

"
கோப்பெருந்தேவியும் உடன் மாய்தல்"


80
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.
உரை
   
தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கி - பாண்டியனுடைய மனைவி கோப்பெருத்தேவி உள்ளங் குலைந்து உடல் நடுக்குற்று, கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்லென்று - தாய் தந்தை முதலாயினோரை இழந்தவர்க்கு அம் முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் கூடும் ; ஆயின் கணவனை இழந்த மகளிர்க்கு அங்ஙனஞ் சொல்லிக் காட்டலாவ தொன்றில்லை என்று கருதி, இணையடி தொழுது

   
வீழ்ந்தனளே மடமொழி - அவள் தன் கணவனுடைய இரண்டு அடிகளையும் தொட்டு வணங்கி நிலத்து வீழ்ந்தாள் என்க.

     
கோப்பெருந்தேவி - பெயர். குலைந்தனள் - முற்றெச்சம். வீழ்ந்தனள் - துஞ்சினாள். குலைந்து நடுங்கி இல்லென்று தொழுது வீழ்ந்தனள் என்க. கோப்பெருந்தேவி, மடமொழி தொழுது வீழ்ந்தனள் என மாறுக.
 

வெண்பா
 
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்என்னும்,
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே-பொல்லா
வடுவினையே செய்த வய வேந்தன் தேவி!
கடு வினையேன் செய்வதூஉம் காண்.

அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம் ஆம் என்னும் - பாவச் செயல்களைச் செய்தவர்களுக்கு அறக்கடவுளே யமனாக இருந்து ஒறுக்கும் என்கின்ற, பல்லவையோர் சொல்லும் பழுது அன்றே - பல அறிஞர்களின் கூற்றும் பயனிலதன்று, பொல்லா வடுவினையே செய்த வய வேந்தன் தேவி - கொடிய தீங்கினைச் செய்த வெற்றியினையுடைய பாண்டியனுடைய மனைவியே, கடுவினையேன் செய்வதூஉம் காண் - கொடுவினையை உடையேனாகிய யான் இழைக்கும் மறச் செயல்களையும் நீ காண்பாய்.

காவி உகு நீரும், கையில் தனிச் சிலம்பும்,
ஆவி குடிபோன அவ் வடிவும், பாவியேன்!
காடு எல்லாம் சூழ்ந்த கருங் குழலும்-கண்டு, அஞ்சி,
கூடலான் கூடு ஆயினான்.

காவி உகு நீரும் - கண்ணகியின் நீல மலர் போன்ற விழி பொழியும் நீரையும், கையில் தனிச் சிலம்பும் - அவள் கையில் உள்ள ஒற்றைச் சிலம்பினையும், ஆவி குடிபோன அவ் வடிவும் - உயிர் நீங்கினால் ஒத்த அவள் வடிவினையும், காடு எல்லாம் சூழ்ந்த கருங்குழலும் - காடுபோல் விரிந்து உடல் முழுதுஞ் சூழ்ந்த கரிய கூந்தலையும், கூடலான் கண்டு அஞ்சிக் கூடு ஆயினான் - கூடற்பதிக்கரசனாகிய பாண்டியன் கண்டு அஞ்சி வெற்றுடம்பாயினான், பாவியேன் - பாவியாகிய யான் இதனைக் காண்பேனாயினேன்.

மெய்யில் பொடியும், விரித்த கருங் குழலும்,
கையில் தனிச் சிலம்பும், கண்ணீரும், வையைக் கோன்
கண்டளவே தோற்றான்; அக் காரிகை-தன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான், உயிர்.

மெய்யிற் பொடியும் - கண்ணகியின் உடம்பிற் படிந்த புழுதியையும், விரித்த கருங்குழலும் - விரிக்கப்பட்ட கரிய கூந்தலையும், கையில் தனிச்சிலம்பும் - கையிலுள்ள ஒற்றைச் சிலம்பினையும், கண்ணீரும் - கண்ணீரையும், வையைக்கோன் - வையைக்கிறைவனாகிய பாண்டியன், கண்டவளே தோற்றான் - பார்த்த வளவிலே வழக்கிலே தோல்வியுற்றான், அக் காரிகை தன் சொல் செவியில் உண்டளவே - அந் நங்கையின் சொல்லினைச் செவியில் உட்கொண்டவளவிலே, தோற்றான் உயிர் - உயிரை இழந்தான்.


No comments: