புறநானூற்றில் கொங்குநாட்டு வரலாறு
முனைவர்
ப.முத்துசாமி
தமிழ் இணைப்பேராசிரியர், அரசு
கலைக் கல்லூரி, சேலம்
-7
பன்னெடுங்காலத்திற்கு முன்னரே மக்கள் நாகரிகமாக வாழ்ந்த
நிலப்பகுதிகளாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் பகுதிகளில் இந்தியாவில் உள்ள
சிந்து சமவெளிப்பகுதியும் ஒன்றாகும். சிந்து சமவெளி நாகரிகம் ஆரியநாகரிகத்திற்கு
முற்பட்டது; அது
திராவிட நாகரகம்; அது
தமிழ்நாகரிகம் என்பது ஆய்யவாளர்தம் முடிவாகும். தமிழினம் மிகத்தொன்மையான இனம்; அவர்களின் தமிழ்மொழி மிகத்தொன்மையான
மொழி; உலகிற்கே
முதல்மொழி; அதுவே
உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றெல்லாம் ஆய்வறிஞர்கள் உறுதியாக மொழிந்துள்ளனர்.
‘தமிழினமும் அவர் பேச்சுமொழியான தழ்மொழியும் மிக மூத்த இனமும், மிக மூத்த மொழியுமாகும்’ என்பது உண்மையேயாயினும் அதனை
மேலைநாட்டார் முன்வைக்கும் கோட்பாடுகளுக்குட்பட்ட தரவுகளின் அடிப்படையில்
நிறுவுவதில் சிரமங்கள் உள்ளன. மேலைநாட்டார்,
அவர்தம் இனம், அவர்தம்
மொழி சார்ந்த
தரவுகளின் அடிப்படையில் சில கோட்பாடுகளை வகுத்துக்கொண்டுள்ளனர். அவற்றை உலகம்
முழுமைக்குமான பொதுவான கோட்பாடுகளாக முன்வைத்து அவற்றின் அடிப்படையில்
நிறுவவேண்டும் என்பது ஏற்புடையதாக இல்லை.
தமிழரின் இன, மொழித்
தொன்மைக்கும் வரலற்றுச் சிறப்புக்கும அழுத்தமான சான்றுகளாகச் சங்க இலக்கியங்கள்
உள்ளன. தமிழ்மொழி
போன்ற வரலாற்றுப் பெருமையும் செம்மொழித்தகுதியும் வாய்ந்த
மொழிகளின் இலக்கியங்கள் தரும் சான்றுகளை வெறும் ‘இலக்கியச்சான்றுகள்’ என்று இரண்டாந்தரச் சான்றுகளாக ஒதுக்கத்தக்கவை
அல்ல. அவை முதன்மையான வரலாற்றுச் சான்றுகளாக ஏற்கத்தக்கவை ஆகும். தமிழக
வரலாற்றுக்கும் இந்திய வரலாற்றுக்கும் சான்றுகளாக அமையும் பல தகவல்கள் சங்க
இலக்கியங்களில் காணப்படுகின்றன.
புறநானூறும் வரலாறும்
பதிற்றுப்பத்து,
புறநானூறு, ஆற்றுப்படைப்பாடல்கள்
முதலானவை தமிழக வரலாற்றைத் தெளிவுபடுத்துவதற்கான அரிய சான்றுகள் பலவற்றை
வழங்கியுள்ளன. புறப்பாடல்களேயன்றி அகப்பாடல்களிலும் பரணர் முதலான புலவர்
பெருமக்கள் வரலாற்றுக் குறிப்புகளையும் தந்துள்ளனர். புறநானூற்றுப் புலவர்கள்
தரும் கொங்கு நாட்டு வரலாற்றுச் செய்திகளின் பிழிவாக இக்கட்டுரை அமைகிறது.
கொங்குநாடு
தமிழ்நாடு சங்ககாலத்தில் சேர,
சோழ, பாண்டிய
நாடுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றுடன் பல்லவ நாடு,
கொங்குநாடு ஆகியனவும் ஏற்றம் பெற்று விளங்கின. இன்றைய கோவை, நீலகிரி,
திருப்பூர், ஈரோடு, சேலம்,
கரூர், நாமக்கல்
மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியே பண்டைக்காலத்தில் கொங்கு நாடு என்று
அழைக்கப்பட்டது) மூவேந்தர் ஆட்சிக்கு உட்பட்டதாக அவ்வப்போது இருந்து வந்த கொங்கு
நாடு பெரும்பான்மையும் சேரர் ஆட்சிக்குட்பட்டதாகவே இருந்துள்ளது.
கொங்கு நாடு தனி நாடாகவும் தனித்த பண்பாட்டு மரபுகளைத் தன்னிடத்தே கொண்டுள்ள
நாடாகவும் விளங்கியது.""பண்டைக்காலம்
முதற்கொண்டு கொங்கு நாடு ஒரு தனிநாடாகக் கருதப்பெற்று வந்திருக்கிறது.
அவ்விதக் கூற்றுக்கும் பண்டைக்கால முதல் பழைய சங்கச் செய்யுள்கள் ஆதியான பல
ஆதாரங்கள் இருக்கின்றன.
கடைச் சங்கத்துப் புலவர்கள் கொங்கு நாட்டை ஒரு தனிநாடாகவே
எடுத்தாண்டிருக்கின்றனர்""1
என்று
கோவை கிழார்
குறிப்பிட்டுள்ளார்.
பெயர்க்காரணம்
தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்த நிரப்பரப்புக்குக் ‘கொங்கு நாடு’ என்ற பெயர் அமைந்ததற்குப் பல காரணங்கள்
கூறப்பட்டுள்ளது.
இது ஒரு காரணப் பெயர் என்றே அறிஞர்கள் கூறியுள்ளனர்.
‘கொங்கு’ என்ற சொல் ‘தேன்’
என்று பொருள்படும். (கொங்கு தேர்
வாழ்க்கை. குறு.2) மலைகள்
மிகுந்து ‘தேன்’ வளம் மிக்க நாடாகையால் அது ‘கொங்கு நாடு’ எனப்பட்டது.
தலைநகரின் பெயரால் நாட்டின் பெயர் அமைவது மரபாகும். அந்த வகையில் ‘கொங்கூர்’
என்றும் ஊரின் பெயரால் இப்பெயர் வந்திருக்க வாய்ப்புள்ளது.
(தாராபுரம் வட்டத்தில் ‘கொங்கூர்
உள்ளது.
பவானியாற்றின் வடகரையில் கொங்கர் பாளையம் உள்ளது.) அமைந்திருக்கும் நிலவியல்
சூழலில் அமைந்த பெயராகவும் இது இருக்கலாம். சேர சோழ பாண்டிய
நாடுகளின் ‘கங்கில்’ அமைந்திருப்பதால் கங்கு நாடு ழூகொங்கு
நாடு என்ற பெயர் வந்திருக்க வாய்ப்புள்ளது. ) வாழும் குடியினரால் நாட்டின் பெயர்
அமையும்.
‘கொங்கர்’ வாழும் நாடு ஆதலால் கொங்கு நாடு
எனப்பட்டது.
‘ஆகெழு
கொங்கர்’(புறம்.130), ‘குடகொங்கர்’( நற்.10,
பதிற்.22) எனக்
கொங்கர் குறிக்கப்பட்டுள்ளனர்.
கொங்கு நாட்டு எல்லைகள்
இன்றைய கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம்,
கரூர், நாமக்கல்
மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியே பண்டைக்காலத்தில் கொங்கு நாடு என வழங்கப்பட்டது.
நாட்டு எல்லைகளைக் குறிப்பிடும் தனிப்பாடல்களும் கொங்கு மண்டல சதகமும் கொங்கு
நாட்டில் எல்லைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளன.
வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்கு
குடக்கு வெள்ளிப் பொருப்புக்குன்று - கிழக்கு
கழித்தண்டலை சூழும் காவிரிசூழ் நாடா
குழித்தண்டலை யளவும் கொங்கு. (தனிப்பாடல்)
வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்பு வெள்ளிக் குன்று - கிடக்கும்
களத்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்
குளித்தண் டலையாவு கொங்கு.
(கொங்கு மண்டல சதகம்)
மேற்குறித்த வெண்பாக்களும் வேறு சில பாடல்களும் வேணாவுடையாக்
கவுண்டரின் வரலாற்றைக் கூறும் கையெழுத்துப் பிரதி முதலியனவும் கூறும்
குறிப்புகளிலிருந்து கொங்கு நாட்டின் வடக்சொல்லை தலைமலை, பெரும்பாலை ஆகியனவற்றை உள்ளடக்கிய
மலைத்தொடர் என்றும் தெற்கு எல்லை பழநிமலை என்றும் மேற்கு எல்லை வெள்ளிமலை என்றும்
கிழக்கு எல்லை குளித்தலை அல்லது மதுக்கரை என்றும் உறுதிசெய்ய முடிகிறது.
பண்பாட்டுப் பழமை
கொங்கு நாடு மிகச்சிறந்த பண்பாட்டுப் பழமையுடைய நாடாகும்.
இன்றும் கொங்குப் பண்பாடு தமிழகத்தின் பிறபகுதிப் பண்பாடுகளினின்றும் வேறுபட்டதாய்
விளங்குவதை அறியமுடிகிறது.
இறந்தவர்களை மண்பானைகளுக்குள் வைத்து,
அவர்களுக்குப் பிடித்ததும் அவர்கள் பயன்படுத்தியதுமான சில
பொருள்களையும் உடன்வைத்து அடக்கம் செய்யும் முறை மிகத் தொன்மையான பழங்குடிப்
பண்பாடாகும்.
இப்பானைகள் ‘முதுமக்கள்
தாழிகள்’ என
வழங்கப்படுகின்றன.
""""அன்னோற்கவிக்கும் கண்ணகன்தாழி"" என்று இதனைப்
புறநானூறு குறிப்பிட்டுள்ளது.
""""சுடுவோர் இடுவோர்
தொடுகுழி படுப்போர்
தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்"" (மணிமேகலை.)
என்று இறந்தோரை அடக்கம் செய்யும் முறைகளைப் பட்டியலிடும்
மணிமேகலைக் காப்பியத்தில் ‘தாழிகளில்
வைத்து அடக்கம் செய்யப்படுவதும்’ ஒரு
முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழிகள்
கொங்கு நாட்டில் பரவலாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தகைய தாழிகளைப்
புதைத்த இடங்களான மாண்டவர் குழிகள் இன்று பேச்சு வழக்கில் ‘பாண்டவர் குழிகள்’ என்றும் பாண்டியர் குழிகள்’ என்றும் கொங்கு நாட்டில் வழங்கப்பட்டு
வருகின்றன.
""""பாண்டவர் குழிகள் பேரூருக்கு அருகில் இருந்தன.........
மேல் பாகத்தில் பலகைக் கற்களால் மூடப்பட்ட அளைகள் மூன்று இருந்தன.
பலகைக்கல் ஒவ்வொன்றும் 3
அடி அகலமும் 3
அங்குல கனமும் கொண்டிருந்தது. அவ்வறைகளுக்குக் கீழே மண்தாழிகள்
மூன்று இருந்தன.""2
என்று கோவை கிழார் பாண்டவர் குழி பற்றி வருணித்துள்ளார்.
""""மேட்டுப்பாளையம் அருகில் 100
கல்லறைகள் கிடைத்துள்ளன.
தாராபுரத்திலும் இவை காணப்பெறுகின்றன.""3
கொங்கு நாட்டுக் கல்வெட்டாய்வாளரான கா.அரங்கசாமி குறிப்பிடுகிறார்.
நடுகற்கள்
மனிதப் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க பண்பாட்டுக் கூறாக ‘வழிபாடு’
அமைகிறது. வழிபாட்டின் தொன்மையான வடிவமாக ‘நடுகல் வழிபாடு’ உள்ளது.
""""நடுகல்லைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று புறநானூறு
கூறும்""4 கொங்கு நாட்டில்
உள்ள நடுகல் வழிபாட்டின் மூலம் அதன் தொன்மை விளங்குகிறது.
""""கொங்கில் மறைந்த மயிலாபுரிப் பட்டணத்தின் அருகில்
(அந்தியூருக்குக் கிழக்கில்) உள்ள ஊஞ்சவனத்தில் சங்ககால நடுகல் கோயிலைக் காணலாம்.
அத்துடன் தாளவாடிக்கு மேற்கில் சிக்கள்ளியில் சங்ககால, இடைக்கால,
பிற்கால நடுக்கற்களை ஒரே இடத்தில் காணலாம்.
பர்கூர் மலையில் நூற்றுக்கணக்கில் நடுகற்கள் உள்ளன"" 5 என்ற கருத்து கொங்கு நாட்டின்
தொன்மைக்குச் சான்றாக உள்ளது.
மூவேந்தரும் கொங்கு நாடும்
சங்ககாலத்திலிருந்தே கொங்கு நாடு தனிநாடாக விளங்கியதாலும்
அதனையடுத்திருந்த சேர, சோழ, பாண்டிய நாடுகள் பேரரசுகளாக
விளங்கியதாலும் அந்நாடுகளின் தாக்குதல்களுக்குக் கொங்கு நாடு தப்பவில்லை
என்பதையும் அவர்தம் ஆதிக்கம் கொங்கில் இருந்தது என்பதையும் சங்க இலக்கியர்களால்
அறியமுடிகிறது.
சோழ மன்னன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கு நாட்டை
வென்ற செய்தியைக் கோவூர் கிழார் பாடியுள்ளார்.
""""கொங்கு
புறம் பெற்ற கொற்ற வேந்தே"" (புறம்.373)
என்று புறநாநூறு குறிப்பிட்டுள்ளது.
சோழன் கிள்ளிவளவன் கொங்கு நாட்டுக் கருவூர்க் கோட்டையைத்
தீயிட்டுக் கொளுத்திப் பெற்ற வெற்றியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ளார். ‘இமயத்தில் விற்கொடியைப் பொறித்தவன்’ என்று புகழப்பட்ட சேரனை அவன் வென்றதை,
""""இமயஞ்சூட்டிய
ஏம விற்பொறி
மாண்வினை
நெடுந்தேர் வான்வன் தொலைய
வாடா
வஞ்சி வாட்டுநின்
பீடுபெழு
நோன்தாள்""
(புற.39)
என்று பாடியுள்ளார்.
சோழன் கோச்செங்கணான் சேரமான் கணைக்கால் இரும்பொறையைக்
கொங்குநாட்டுக் கழுமத்தில் வென்ற செய்தியைப் பொய்கையரின் பாடலில் அறியமுடிகிறது.
‘கொங்கரை
அட்டகளம்’ (களவழி.14) கவிரிநாடன் கழுமலம் கொண்ட நாள் (களவழி.38) என்றும் பாடியுள்ளார்.
பல்யானைச் செங்கெழுகுட்டுவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றிய
செய்தியை,
""""ஆகெழு
கொங்கர் நாடகப்படுத்த
வேல்கெழு
தானை அவருவரு தோன்றல்"" (பதி. 3 : 2 )
என்று பாலைக்கவுதமனார் குறிப்பிட்டுள்ளார்.
பாண்டியருக்கும் கொங்கருக்குமிடையே பகைமை இருந்துள்ளதையும்
அதன் விளைன போரில் ஒரு முறை கொங்கர் பசும்பூண் பாண்டியனின் படையைத்
தோற்கடித்ததையும் பாண்டியப்படையின் தலைவன் ‘அதியன்’ வீழ்ந்ததற்கு அவர் ஆர்ப்பரித்ததையும்
குறுந்தொகையில் பரணர் குறிப்பிட்டுள்ளது.
""""கூகைக்கோழி
வாகைப்பறந்தலை
பசும்பூட் பாண்டியன் வினைவலதிகன்
களிரொடு பட்ட ஞான்றை
ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே"" (குறுந். 393 )
பசும் நண் பாண்டியன் கொங்கு நாட்டின் மீது போர் தொடுத்துக்
கொங்கரை வென்றதையும் கொங்கு நாட்டைக் கைப்பற்றியதையும்
""""வாடாப்
பூவின் கொங்கர் ஓட்டி
நாடு பல தந்த பசும்பூட் பாண்டியன்"" (அக.253)
அகநானூறு குறிப்பிட்டுள்ளது.
கொங்கு நாட்டுக் குறுநில மன்னர்கள்
கொங்கு நாடு மூவேந்தர் ஆதிக்கத்திலும் பெரும்பாலும் சேரர்
ஆதிக்கத்தின்கீழும் இருந்துள்ளது. கொங்கு நாட்டின்
சிறு சிறு பகுதிகளைக் குறுநில மன்னர்கள் ஆண்டுள்ளனர்.
சங்கப் பாடல்களில் அவர்கள் பற்றிய குறிப்புகள் பல கிடைக்கின்றன.
அதியமான், ஓரி, ஆய்அண்டிரன், குமணன்,
நன்னன், ஈந்தூர்
கிழான், பாட்டங்கொற்றன்
முதலான குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
·
கொங்கு நாட்டின் வடபகுதியில் அமைந்திருந்த தகடூரை ஆண்டவன்
அதியமான் நெடுமான் அஞ்சி ஆவான். கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அவன்
ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்து அழியாப்புகழ் பெற்றவனாவான்.
அதியமானின் வீரம், வெற்றி, கொடைச்சிறப்பு, அருட்குணம், ஆட்சிச் சிறப்பு முதலானவற்றை ஔவையார்
தம் புறநானூற்றுப்பாடல்களில் (புறம். 87-101,
103,104) பதிவு செய்துள்ளார்.
·
கொங்கின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த கொல்லிமலையை ஆண்ட
குறுநில மன்னனும் கடையெழு வள்ளல்களுள் ஒருவனுமாக ஓரி விளங்கினான்.
(புறம். 152, 153, 156) அவன்
வில்லாற்றலைப் புறப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.
""""ஓங்கிருங்
கொல்லிப் பொருநன்
ஓம்பா
ஈகை விறல் வெய்யோன்"" (புறம்.152)
என்று அவன் குறிப்பிடப் பட்டுள்ளான்.
·
கொங்கின் தென் எல்லையாக அமைந்த பழநி மலைப்பகுதியை ஆண்ட குறுநில
மன்னன் ஆய் அண்டிரன் ஆவான். அவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன்.
(புற.129) அவனது
கொடைப் பண்பு புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
""""தீஞ்சுளைப்
பலவின் மாமலைக் கிழவன்
ஆஅய்
அண்டிரன் அடுபோரண்ணல்"" (புறம். 129
)
என்று அவனது ஆற்றல் கூறப்பட்டுள்ளது.
·
குதிரை மலைப்பகுதியை ஆண்ட குமணன் மிகச் சிறந்த வள்ளல் ஆவான்.
‘பழந்தூங்கு
முதிரத்துக்கிழவன் திருந்துவேல் குமணன்’
(புற.159) என்று
புறநானூறு அவனைக் குறிப்பிட்டுள்ளது. 160,
161, 163
·
குதிரை மலைப்பகுதியை ஆண்ட இன்னொரு தலைவன் பிட்டங்கொற்றன்
ஆவான்.
அவன் சேரனின் படைத்தலைவனாக விளங்கிய பெருமைக்குரியவன். ‘பொய்யா வாய்வாள் புனைகடிற்பிட்டன்’ என்றும் ‘திருந்து
வேல் கொற்றன் (புற. 171) என்றும்
அவன் குறிப்பிடப்பட்டுள்ளான். ‘பொருநர்க்கு
உலையா நின் வலன்’ (புறம்.169) என்று அவனது
வீரத்தைப் புறநானூறு குறிப்பிட்டுள்ளது.
·
கொங்கு நாட்டு ‘ஈந்தூர்’ பகுதியை ஆண்டவன் ஈந்தூர்கிழான் ஆவான்.
அவன் ‘பாண்பசிப்பகைவன்’ (புற.180)
என்று போற்றப்பட்டுள்ளான்.
·
கொண்கானப் பகுதியை ஆண்ட குறுநிலமன்னன் கொண்கனங்கிழான்’ அவனைப் பார்த்ததும் பாணர்தம் மண்டை ‘கதிரவனைக் கண்டு நெருஞ்சி பூப்பது போல்
மலரும்’ என்று
மோசிகீரனார் (புற.155, 156) குறிப்பிட்டுள்ளார்.
கொங்கு நாட்டுத் தொல்குடியினர்
தனிநாடாகக் கொங்குநாடு விளங்கியது.
""""பண்டைக்காலத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் இயற்கையோடு இயைந்த
வாழ்வை மேற்கொண்டிருந்தனர். வேட்டையாடித் திரிபவராகவும் ஆநிரை மேய்ப்பவர்களாகவும்
போர் மறவர்களாகவும் தம் வாழ்வை நடத்தி வந்கனர். அத்தகையோரான வேட்டுவர், வேளிர்,
தொங்கர், கோசர், மழவர் போன்ற இனத்தவர் கொங்கு நாட்டில்
வாழ்ந்ததற்குச் சங்க இலக்கியங்கள் சான்றுகளாக உள்ளன""6 அவர்கள் கால வளர்ச்சியில்
சிறு சிறு பகுதிகளை ஆள்பவர்களாகவும் அரச மரபினராகவும் உயர்ந்தனர். அவர்களின் வீரம், வெற்றி,
கொடை முதலான பல செய்திகளையும் சங்கப்பாடல்கள்
பதிவு செய்துள்ளன.
வேட்டுவர்
கொங்கின் மிகப்பழமையான குடிகளில் ‘வேட்டுவர்’ முதன்மையானவராவர். மனித இன
வரலாற்றின்
தொடக்க காலத்
தொழிலாக
வேட்டையே இருந்துள்ளது.
பின்னர் நாகரிக வளர்ச்சியில் மேய்ச்சல், வேளாண்மை எனத் தொழில் மாறுபாடுகள் மனித
சமுதாயத்தில் ஏற்பட்டன. அந்த வளர்ச்சிக் காலத்திலும் வேட்டைத்தொழிலையே தம்
முழுமையான தொழிலாகக் கொண்டிருந்தோர் ‘வேட்டுவர்’ ஆவர். வேட்டுவர் பற்றியும் அவர்களது
வேட்டைத் தொழில் பற்றியும் புறநானூற்றிலும் பிற சங்கப் பாடல்களில் குறிப்புகள்
காணப்படுகின்றன. வேட்டைத் தொழிலை மேற்கொண்டு வாழும் வேட்டுவர் நிலையை,
""""நடுநாள் யாமத்துப்
பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவன்"" ( புறம். 189 )
பற்றிப் புறநானூறு குறிப்பிடுகிறது. வேட்டுவர் எயினர் என்றும்
சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளனர். கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரியின்
வேட்டைத் தொழில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. அவன் வில்லிலிருந்து பாய்ந்த அம்பு
யானையை வீழ்த்தி, புலியைக்
கொன்று, புள்ளிமானைச்
சாய்த்து, காடுப்பன்றியைத்
துளைத்து, அதற்கப்பால்
புற்றினுள் இருந்த உடும்பில் தைத்ததைக்கண்ட பரணர்,
""""வேட்டுவரில்லை
நின்னொப்போர்"" ( புறம். 152
)
என்று பாடியுள்ளார்.கொடைக்கானல் மலை பண்டு ‘கோடை மலை’
என்று வழங்கப் பட்டது. அதனை ஆண்ட ‘கடிய நெடு வேட்டுவன்’ புறநானூற்றில்
""""வெள்வீ வேலிக் கோடைப் பொருநன்"" (புறம். 205 ) என்று
புகழப்பட்டுள்ளான். """"வாள்வாயம்பிற் கோடைப்
பொருநன்"" என்று அகநானூறும் அவனைக் குறிப்பிட்டுள்ளது.
மழவர்கள்
கொங்கு நாட்டையாண்ட பழைய அரச மரபினருள் ஒருவராக ‘மழவர்’
அறியப்படுகின்றனர். """"சங்ககால மக்கள்
இளத்தவருள் ஒரு பிரிவனாகக் கருதப்படும் மழவர்கள் என்பார் தருமபுரி மாவட்டம்
உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்தவராவர். இம்மழவர் இனத்துச் சிற்றரசர்களே சங்ககால
அதியமான் அரசமரபினராவர்.""7
ஔவையார்,
""""நீரக இருக்கை ஆழி
சூட்டிய
தொன்னிலை மரபின் நின் முன்னோர்"" (புறம். 99 )
என்று அதியமானின் முன்னோர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து, """"மழவர்
மேற்குக் கடல் பகுதியில் உள்ள தீவுகளிலிருந்து கொங்கு நாட்டிற்கு
வந்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இத்தீவுகளில் ஆண்டு முழுவதும்
அதிக மழை பெய்வதால் மக்கள் இதனை ‘மழைத்தீவு’ என்று குறிப்பிட்டிருக்கலாம். அதுவே
பின்னர் ‘மழத்தீவு’ என்று ஆகியிருக்கலாம். எனவே
இத்தீவுகளினின்றும் கொங்கில் குடியேறியோர் ‘மழவர்’ என்று அழைக்கப்பட்டனர்""8
""""அமரர்ப் பேணியும்
ஆவுதி யருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்பிவன் தந்தும்"" ( புறம். 99 )
""""அரும்பெறல் அமிழ்தமன்ன
கரும்பிவட் தந்தோன் "" ( புறம். 392
)
என்னும் அடிகளிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கரும்பை
அறிமுகப்படுத்தியவர்களே மழவர்தாம் என்ற செய்தியையும் அறியமுடிகிறது.
மழவர் மிகச்சிறந்த வீரராகவும் பேராற்றல் பெற்றவராகவும்
இருந்தனர். எனவே அவர்கள் கொங்கு நாட்டை ஆண்டதுடன் முடிமன்னர் படைகளிலும்
குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர்.
""""ஒளிறிலங்கு நெடுவேல்
மழவர்"" ( புறம். 88 )
""""எழுமரம் கடுக்கும்
தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை மழவர்"" ( புறம். 90
)
என்று மழவர்தம் வீரத்தைப் புறநானூறு குறிப்பிட்டுள்ளது. மழவர்
அத்தகைய ஆற்றலினராக இருந்ததாலேயே அவர் மரபில் வந்த அதியமானைஔவையார்,
""""எம்முளும் உளனொரு
பொருநன் வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே"" ( புறம். 87
)
என்று போற்றியுள்ளார். அவன் திருக்கோவலூரை
வென்ற செய்தியை,
""""முரண்மிகு கோவலூர்
நூறி நின்
அரணடு திகிரி ஏந்திய தோளே"" ( புறம். 99
)
என்று அவர் வியந்து பாடியுள்ளார்.
கொங்கர்
கொங்கு நாட்டு முதுகுடியினராகக் கொங்கர் சங்கப் பாடல்களால்
அறியப்பட்டுள்ளனர். அம்மக்கள் வாழ்ந்த நாடு என்பதாலேயே அது ‘கொங்கு நாடு’ என வழங்கப்பட்டது. கொங்கர் ‘ஒளிறுவாள் கொங்கர்’ ( குறுந். 393
), ‘ஆகெழு கொங்கர்’
( பதி. 22 ), ‘ஈர்ம்படைக்
கொங்கர்’ ( பதி.
22 ) என்னும்
சங்க இலக்கியத் தொடர்கள் அவர்களைக் குறிப்பிட்டுள்ளன.
வேளிர்
வேளிர் மைசூர் நாட்டின் துவாரசமுத்திரம் எனப்படும்
துவரைப்பதியினின்றும் கொங்கு நாட்டில் குடியேறி நிலைத்த பழமையான குடியினராவர்.
அகத்தியர் தென்னாடு வந்தபோது துவரைப்பதியினின்றும் வேளிரை அழைத்து வந்ததாக
நச்சினார்க்கினியர் தொல்காபியப் பாயிர உரையில் தெரிவித்துள்ளார். """"அவர்
துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணலின் வழிக்கண் அரசர் பதினெண்மரையும்
பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு
போந்து காடு கெடுத்து நாடாக்கி ..."" என்று குறிப்பிட்டுள்ளார். பாரி
மகளிரை மணந்து கொள்ள இருங்கோவேள் மறுத்ததால் அவனைக் கபிலர் கடிந்து கூறிய செய்தி
புறநானூற்றில் கிடைக்கிறது.
""""நும்போல் அறிவின்
நுமருள் ஒருவன்
புகழ்ந்த
செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே"" ( புறம். 202 )
‘அரையம்’ என்னும் நகரம் அழிந்ததாக அவர் அவனைக்
கண்டித்துள்ளார். வேள்பாரி
( புறம். 110 ), ‘மாவேள்
எவ்வி’ ( புறம்.
24 ) முதலான
வேளிர்குல மன்னர்களைப் புறநானூறு குறிப்பிடுகிறது.
கொங்கு நாட்டுப்புலவர்கள்
புறநானூறு, சங்ககாலக்
கொங்குநாட்டுப்புலவர் பலரை அறியத் துணைசெய்கிறது. கூடலூர் கிழார் ஐங்குறு நூற்றைத்
தொகுத்தவராவார். அவர் கொங்கு நாட்டின் மேற்கெல்லையான நீலமலையின் கூடலூரைச்
சேர்ந்தவராவார். அவர் புறநானூற்றில் 229
ஆம் பாடல் உட்பட நான்கு சங்கப்பாடல்களைப் பாடியுள்ளார். நீல மலையில் அமைந்துள்ள
குன்னூர் பண்டைக்காலத்தில் ‘குன்றூர்’ என்று வழங்கப்பட்டது. புறநானூற்றில் 166 ஆம் பாடலைப்பாடிய குன்றூர் மகனார்
கண்ணத்தனார் அவ்வூரினராவார். அவர் சங்கப்பாடல்களில் இரண்டினைப் பாடியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பண்டைக்காலத்தில் ‘தகடூர் நாடு’ எனப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த
பொன்முடியில் வாழ்ந்தவர் ‘பொன்முடியார்’ ஆவார். அவர் பாடியனவாகப் புறநானூற்றில்
மூன்று பாடல்கள் ( புறம். 166, 167, 214 ) உள்ளன.
ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்திலுள்ள ‘பெருந்தலையூர்’ என்னும் ஊரினர் பெருந்தலைச்சாத்தனார்
ஆவார். அவர் பாடியனவாகப் புறநானூற்றில் ஆறு பாடல்கள் (புறம். 151, 164, 165, 205, 209, 294 ) உட்பட
மொத்தம் ஒன்பது பாடல்களைப்பாடியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆலந்தூர்
என்னும் ஊரினர் ஆலந்துர் கிழார் ஆவார். அவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் (
புறம். 34, 36, 69, 225, 324 ) உட்பட
மொத்தம் ஏழு பாடல்களைப் பாடியுள்ளார். குடவாயிற் கீரத்தனார் பல்லடம் பகுதியைச்
சேர்ந்த ‘கொடுவாய்’ என்னும் ஊரினராக இருக்கலாம் என்று
ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் கொங்கு வேளாளர் மரபில் உள்ள ‘கீரங்கூட்டம்’ என்னும் குலத்தனராகக் கருதப்படுகிறார்.
அவர் பாடியனவாக புறநானூற்றில் 242
ஆம் பாடல் உட்பட மொத்தம் 14
பாடல்கள் பாடியுள்ளார்.
சான்றெண் விளக்கம்
1.
கோவை கிழார், கொங்கு
நாட்டு வரலாறு, ப.7. 2.
மேலது, ப.39.
3.
கா.அரங்கசாமி, (தொ.ஆ.), கொங்குக் கட்டுரை மணிகள், ப.7. 4.
கா.அரங்கசாமி, தமிழ்க்கல்வெட்டுகளில்
அறவியல் சிந்தனைகள் (முனைவர் பட்ட ஆய்வேடு),
ப. 59.
5.
கா.அரங்கசாமி, கொங்குக்
கல்வெட்டுகளின் தனிச்சிறப்புகள், கொங்கு
நாட்டியல், ப.
55.
6.
ப.முத்துசாமி, கொங்கு
நாட்டுப் பழங்குடிகள், கொங்கு
நாட்டியல், ப.
12. 7.
வீ.ராமமூர்த்தி (வீயாரெம்),
கொங்கு நாட்டுக் கவுண்டர்கள்,
ப.15.
8.
மேலது, ப.17.
No comments:
Post a Comment