முனைவர். சண்முக செல்வகணபதி
மேனாள் முதல்வர்
அரசுக் கல்லூரி, திருவையாறு
திருவாசகத்தில் நாட்டிய அகப் பாடல்களில் பாடல்கள்
சைவக்திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாக விளங்கும் திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியதாகும். வாதவூரர் என்ற பெயரில் பிறந்த ஊரின் பெயரால் அழைக்கப்பட்டார். மணிமணியான வாசகங்களைக் கூறியமையால் மணிவாசகர் என்றும் பின்பு மாணிக்கவாசகர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் திருவாசகத்தோடு திருச்சிற்றம்பலக் கோவை என்கிற கோவை நுhலொன்றும் பாடியுள்ளார். இந்நுhலும் கோவை என்று கூறப்படுகிறது.திருவாசகம் 51 தலைப்புகளையும் 656 பாடல்களையும் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்பது தலைப்புகளின் கீழ் அமைந்துள்ள 263 பாடல்கள் மகளிர் விளையாட்டின் பெயரால் அழைக்கப்படுகின்றன. 1. திருவெம்பாவை, 2. திருவம்மானை, 3. திருப்பொற்சுண்ணம், 4. திருத்தெள்ளேணம், 5. திருச்சாழல், 6. திருப்பூவல்லி, 7. திருவுந்தியார், 8. திருத்தோணோக்கம், 9. திருப்பொன்னூல், 10. குயில்பத்து இவை அனைத்தும் நாட்டுப்புற நாட்டியப் பாடல்களாக உள்ளன. அடியார்க்கு நல்லார் இளமகளிர் இசையுடன் பாடடியாடும் பல்வரிக் கூத்துக்களாக இவற்றைக் குறிப்பிடுகிறார். அம்மானை, நல்லார் தோள்வீச்சு (தோணோக்கம்) சாழல், உந்தி, அவலிடி (பொற்சுண்ணம்) கொய்யுமுள்ளிப்பூ (பூவல்லி) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.
1.1 பாவை
சங்க இலக்கியங்களில் கூறப்படும் தை நீராடல், தெய்வத்தமிழ் காலத்தில் மார்கழி நீராடலாகி பின்பு பாவை நோன்பாயிற்று. பாவை நோன்பை முன்னிட்டு இளம் கன்னிப் பெண்கள் மார்கழித் திங்களில் விடியல் காலையில் எழுந்து ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்று, ஆற்றில் நீராடி, மணலால் பாவை உருவம் செய்து வழிபடுவர். நாடு நலம் பெற மழைவளம் சுரக்க வேண்டுமென்றும், மன்னவன் கோல்முறை தவறாது ஆட்சி செய்யவேண்டுமென்றும், தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமைய வேண்டுமென்றும் கருதி நோன்பிருப்பர். நோன்பு நாட்களில் நெய்யுண்ணாமல், பாலுண்ணாமல், தங்களை வெகுவாக ஒப்பனை செய்து கொள்ளாமல் இருப்பர். இத்தகைய நோன்பு கார்த்தியாயனி விரதமாகவும் கருதப்பட்டது. இதனை ""அம்பா ஆடல்"" என்பர். ‘அம்பா ஆடலின் ஆய்தொழக் கன்னியர்’ என்று நல்லந்துவனார் குறிப்பிடுவார். ""எம்பாவாய்"" என விளித்துக் கொண்டு ஆடுவர்.
இத்தகைய பாவை நீராடல் பாவை நோன்பாக மலர்ந்த நிலையில் ஆண்டாள் பாடிய திருப்பாவையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையும் வைணவ சைவ நெறிப் பாடல்களாக அமைந்துள. சுமண முனிவர் அவிரோதி நாதர் பாடிய திருவெம்பாவை பாடல்களும் உள. இவற்றை அடியொற்றி பாவைப் பாடல்கள் பல தோன்றின. பெருஞ்சித்திரனாரின் செந்தமிழ்ப்பாவை, கவிஞர் கண்ணதாசனின் தைப்பாவை போன்ற பாவை நுhற்கள் தோன்றின. இவை பாவை விளையாட்டுக்களாகக் கருதப்பட்டன. இவற்றை ஒட்டி பாவை நாட்டியங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இவை மகளிர் ஆடும் நாட்டியப் பாக்களாக உள்ளன. திரை இசையிலும் இதனையொட்டிய நாட்டியப் பாக்கள் தோன்றின.
பாவலரேறு பாலசுந்தரனார் பாவை பாட்டிற்கு இலக்கணம் கூறியுள்ளார்.
ஈரசை மூவசை சீர்பெற் றளவடி
இருநான் கமைந்த வெள்ளடி யாப்பான்
இசையொடு பொருந்திப் பாவை நோன்புகொள்
கன்னியர் நன்னீர் ஆடற் பொருட்டுத்
துயிலெடை யாக இயல்வது பாவை
-தென்னூல் இலக்கியப் படலம் நுhற். எண்.472
ஈரசை மூவசை கொண்ட யாப்பியல் சீர்களைப் பெற்று வரும். நாற்சீர் கொண்ட அளவடியான் வரும். வெள்ளடி யாப்புப் பெற்று வரும். இசைப் பாவாக வரும். பாவை நோன்பிற்குரிய நிலையில் வரும். கன்னியர் நீராடல் பொருட்டு ஒருவரை ஒருவர் துயிலெழுப்பிக் கொண்டு வரும் நிலையில் பாவைப் பாடல் வரும் என்று கூறுகின்றது.
ஆண்டாள் எழுதிய திருப்பாவைப் பாடல்களே முதல் பாவைப் பாடல்களாகும். (முனைவர் சண்முக. செல்வகணபதி, ஒப்பிலக்கிய நோக்கில் தமிழிலக்கியம், ப.65) திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை 20 பாடல்களைக் கொண்டுள்ளது. கண்ணதாசனின் தமிழ்ப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்கான்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய் திருப்பாவை -1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டங்கள்
மாதே வளருதியோ வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின் மேனின் றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆசான் கிடந்தான் என்னே என்னே
ஈதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய் திருப்பாவை -1
திருவம்மானை
அம்மானை மகளிர் விளையாடல்களில் ஒன்றாகும். அம்மானைக்காய் கொண்டு விளையாடும் நாட்டுப்புற விளையாட்டு, வரிப்பாடல் வகையைச் சார்ந்தது. சிலப்பதிகார வாழ்த்துக்காதையில் சோழனைச் சிறப்பித்துப் பாடும் நிலையில் இப்பாடல்கள் உள.
அம்மனை தங்கையிற் கொண்டங் கணியிழையார்
தம்மனையிற் பாடுந் தகையேலோ ரம்மானை சிலம்பு: 28
மகளிர் மூலம் உடனமர்ந்து அம்மானை விளையாடுவர். ஒருத்தி பாட்டுடைத் தலைவன் புகழ்ச் செயலைக் குறித்து வினா எழுப்புவாள். இரண்டாமவள் அவ்வினாவிற்கு விடை தருவாள். மூன்றாமவள் தலைவன் புகழ்ச் செயலைத் தொடர்ந்து பாராட்டுவாள். இம்மூவரும் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடுவர்.
1. வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத் உரவோன்யார் அம்மானை
2. ஓங்கரணங் காத்த உரவோன் உயர்விசும்பில்
நான்கெயில்மூன்றெறிந்து சோழன்காண் அம்மானை
3. சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானைசிலம்பு: 28
இது அம்மானைப் பாட்டாகவும், அம்மானையாட்டமாகவும் அமைந்துள்ளது. அம்மானை ஆடும் போது கண்ணும் கருத்தும் புறம் செல்லாது தலைக்குமேல் சென்று மீளும் காயை நோக்கி இருக்கும்.
திருவாசகத்தில் திருவம்மானை என்கிற பகுதி உள்ளது. இதில் 20 பாடல்கள் உள. இவை ஆனந்தக் களிப்பு என்று கூறப்பட்டுள்ளது.
செங்கண் ணெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனா யறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்
திருவம்மானை-1
சிலம்பு சோழனையும் திருவாசகம் சிவபெருமானையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டுளது. திருவாசகப் பாடல் சிவனது திருவடிப் புகழைப்பாடத் தோழியை அழைக்கும் நிலையில் அமைந்துள்ளது.
அம்மானைப் பாடலின் இலக்கணத்தைப் பாவலரேறு பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அளவடி இருமூன்றாகவும் கொச்சகக்
கலியால் ஒருவர் தொடுக்கும் கருத்தினுக்கு
உள்ளுறை குறிப்பமை செப்பாய் ஒருவர்
அணிநயந் தோன்ற உரைப்பது அம்மானை
- தென்னூல் இலக்கியப் படலம், நுh. எண்: 469
4. திருப்பொற்சுண்ணம்
திருக்கோயிலில் இறைவனது திருமெய் மீது பூசுவதற்கரிய பொன்னிறமான மணப் பொடியினை இடிக்கும் பொழுது பாடும் வரிப்பாடல் திருப்பொற்சுண்ணமாகும். ‘ஆடல் பொற்சுண்ணம் இடித்து நாளும்’ என்று திருவாசகத் திருப்பொற்சுண்ணப் பாடல்களில் இத்தொடர் இடம் பெற்றுள்ளது.
பொன்காண் கட்டளை கடுப்பச் சண்டின்
புன்காய்ச் சுண்ணம்
என்று பொன்னிறச் சுண்ணம் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்படுகிறது.
இவ்வகைப் பாட்டை வள்ளைப்பாட்டு என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. நான்கு வள்ளைப் பாடல்கள் வாழ்த்துக் காதையில் இடம்பெற்றுள. நெல் குத்தும் பாட்டு, உரல்பாட்டு, உலக்கைப் பாட்டு, அம்மானை வள்ளை என்று நாட்டார் வழக்காற்றில் கூறப்படுகிறது. (தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, மூன்றாம்பாகம், ப.467) குறிஞ்சிக் கலியில் மூங்கில் நெல்லை பாறையுரலில் இட்டு யானைத் தந்த உலக்கையால் வள்ளைப்பாட்டு பாடிக் கொண்டு தலையியும் தோழியும் நெல் குத்துவது குறிப்பிடப்பட்டுள்ளது. (5: 1-4)
பாடுகம் வாவாழி தோழி வயக்களிற்றுக்
கோடுலக்கை யாகநற் சேம்பி னிலைசுளகா
வாடுகழை நெல்லை யரையுரலுட் பெரிதிடுவாம்
பாடுகம் வாவாழி தோழி நற்றோழிபா டுற்று
குறிஞ்சிக் கலி (5: 1-4)
திருவாசகத்தில் திருப்பொற்சுண்ணம் என்றும் தலைப்பில் 20 பாடல்கள் உள. மாணிக்கவாசகர் தில்லையில் எழுந்தருளிய பொழுது மகளிர் சுண்ணம் இடிப்பதைப் பார்த்துத் திருப்பொற்சுண்ணம் பாடியுள்ளார். பாடுதலும் ஆடுதலும் சிவானந்தப் பேற்றால் விளைந்த ஒரு பாடலாகக் கருதிப் பாடியுள்ளார்.
முத்தணி கொங்கைக ளாட வாட
மொய்குழல் வண்டின மாட வாடச்
சித்தஞ் சிவனொடு மாட வாடற்
செங்கயற் கண்பணி யாட வாடப்
பித்தெம்பி ரானொடு மாட வாட
பிறவி பிறரொடு மாடவாட
அத்தன் கருணையொ டாட வாட
ஆடற்பொற் கருணையொ டாட வாட திருவா.204
இவ்வகை நிகழ்வை பழநி பெரியநாயகி கோயில் முருகன் வள்ளி, தெய்வயானை திருமண நிகழ்வின் பொழுது நடத்தப் பெற்றது.
4. திருத்தெள்ளேணம்
நாட்டுப்புறநிகழ்வில் முறத்தால் தானியங்களைத் தெள்ளத் தெள்ளப் புடைப்பர். இதனைத் தெள்ளத் தெறுதல் என்பர். பத்தி இலக்கியத்தில் திருத்தெள்ளேணம் என்கிற பாட்டு வகையுள் ஒன்றாயிற்று. ‘பாடித் தெள்ளேணம் கொட்டாமோ’ என்று ஆடலாகவும் பறைக் கொட்டிற்கு ஏற்ப ஆடும் ஆடலாகவும் அமைகிறது. மகளிர் பலர் கூடி, பாடிக் கொண்டு ஆடும் ஆடலாகும்.
திருவாசகத்தில் திருத்தெள்ளேணம் என்கிற பகுதி உளது. இப்பகுதியில் 20 பாடல்கள் உள. 20வது பாடலில் இறைவனது குலத்தைப் பாடி, அவனணிந்திருக்குற கொக்கிறகும், பூவையும் பாடி, ஒரு பாகமாக இருக்கின்ற திரண்ட வளையலையுடைய உமாதேவியின் நலங்களையும் பாடி, இறைவன் நஞ்சுண்ட செயலையும் பாடி, சிற்றம்பலத்தில் ஐந்தொழில் ஆடல் புரியும் சிலம்பாடலையும் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக என்றார்.
குலம்பாடிக் கொக்கிற்கும்பாடிக் கோல்வளையான்
நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாடோறும்
அலம்பார் புனற்றில்லை யம்பலத்தே யாடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ
- திருவாசகம், பா.254
5. திருச்சாழல்
அளவடி நான்காய்த் தரவு கொச்சகம்
வினாவிடை யாக விளைவது சாழல்
- தென்னூல் இலக்கியப் படலம் 476
சாழல் என்பது மகளிர் விளையாட்டுக்களுள் ஒன்றாகும். ஒருத்தி தலைவனின் புகழையும் அழகையும் பற்றி வினவ மற்றொருததி தோள் வீசி நின்று ஆடிக் கொண்டு விடையிறுத்தலை மையமிட்டப் பாடல் வகையாகும். வரிக் கூத்துன் ஒன்று என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.
திருவாசகத்தில் திருச்சாழல் என்கிற பகுதி இடம் பெற்றுள்ளது. இப்பகுதியில் 20 பாடல்கள் உள. திரவாதவூரடிகள் தில்லையில் பாடியது இப்பாடல்களாகும். ஈழநாட்டிலிருந்து வந்திருந்த புத்தரோடு நிகழ்த்திய வாதத்தின் அடிப்படையில் இப்பாடல்கள் அமைந்துள. ஈழமன்னனின் ஊமைப்பெண் விடை கூறிய நிலையில் இப்பாடல்கள் அமைந்துள. தில்லையில் ஆடல் வல்லான் நடனம் ஆடுவது ஏன்? அவன் ஆடவில்லையெனில் இவ்வுலகம் காளிக்கு இறையாகி இருக்கும்.
தேன்புக் தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது வென்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
வான்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ
- திருவாசகம், பா.268
6. திருப்பூவல்லி
பூஞ்சோலையிலே பூங்கொடியிலிருந்து, கொடியிடை இளநங்கையர் கூடிப் பாடிக்கொண்டு பூப்பறித்தல் பூவல்லியாகும். இப்பூக்களைத் தன் தலையிலும் தலைவனும் தலையிலும் சூட்டி மகிழ்தல். இறைவனுக்குச் சூட்டும் நிலையில் அமைகையில் திருப்பூவல்லியாயிற்று. சிலம்பின் உரையில் அடியார்க்கு நல்லார் பல்வரிக் கூத்துக்களுள் ஒன்றாக இதனைக் குறிப்பிடுகிறார். ‘கொய்யு முள்ளிப்பூ’ என்கிறார். பூ வள்ளி என்பது பூவோடு கூடிய கொடி என்பதாகும்.
மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் 20 பாடல்கள் திருப்பூவல்லிப் பாடல்களாக உள்ளன. இதன் 18வது பாடலில் இறைவன் திருவடிக்கண் உள்ள சிலம்புகள் சிலம்புகின்ற ஒலிக்கு இயைய இறைவன் திரு நடனம் செய்கின்ற பேரானந்தத்தைப் பாடிப் பூவல்லி கொய்வோம் என்கிறது.
சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத வாசையதாயடியே னகமகிழத்
தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ் செய்
பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யதோ
7. திருவுந்தியார்
நேரடி முதற்பின் சிந்தடி இரண்டாய்க்
கலித்தா ழிசைபோல் வருந்திரு வுந்தி
- தென்னூல் இலக்கியப் படலம் 476
கைகள் இரண்டையும் மேலே தூக்கி இருமருங்கும் நீட்டி வானத்தில் பறப்பது போல இருகால்களைச் சேர்த்துப் பெருவிரல் நுனியில் நின்று கொண்டு மகளிர் பாடி ஆடும் ஓர் ஆட்ட வகை உந்திப் பறத்தல் என்பர். (செ.வை. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு மூன்றாம் பாகம், ப.194) இது சிலம்பு குறிப்பிடும் வரிக் கூத்துக்களுள் ஒன்றாகும். உந்துதல் என்பது இரு கால்களையும் பூமியின் உதைத்துக் கொண்டு ஆடும் கூத்து.
பெரியாழ்வார் திருமொழியில் (3-9) தலைவன் வெற்றியைத் தலைவி வாயால் புகழ்ந்து, கொண்டு உணர எழுந்து குதித்து ஆடும் குறிப்புளது. திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் திருவுந்தியார் என்கிற பெயரில் சைவ சித்தாந்த சாத்திர நுhல் பாடியுள்ளார். திருவாசகத்தில் திருவுந்தியார் 20 பாடல்கள் உள. முதல் நான்கு பாடல்களில் திரிபுரம் எரித்த வரலாறும், 5-12 பாடல்களில் தக்கன் வேள்வி தகர்த்த வரலாறும், 19வது பாடலில் இராவணனை அடக்கியதும் கூறப்பட்டுள.
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இவ்வா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற
- திருவாசகம், பா.312
8. திருத்தோணோக்கம்
மகிழ்ச்சிப் பெருக்கினால்தம் தோள்கள் பூரித்து மேலோங்க, கைவீசி ஆடும் ஆட்டம் திருத்தோணோக்கமாகும். அடியார்க்கு நல்லார் ‘நல்லார் தம் தோள் வீச்சு’ என்று குறிப்பிடுகிறார். இதனை நோக்குக் கூத்தென்று நோக்குக் கூத்து விநோதக் கூத்துகளுள் ஒன்று என்றும், பாரமும் நுண்மையும் மாயமுடையது நோக்குக் கூத்து என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். தம் மனக் கருத்தை வெளிப்படுத்துவதால், நுட்பமாயுரைப்படுவதாய், வஞ்சனை நிறைந்ததாய் அமையும் என்கிறார். பாரம் என்பது சுமை. சுமையாவது எல்லோரும் மிக எளிதாக ஆடமுடியாத அமைப்பாட்டினை உடையது என்றும் நுண்மையானது நடிப்பின் நுணுக்கத்தால் ஆழமான நகைச்சுவைக் குறிப்பினை உயர வைப்பது. மாயம் என்பது நேரே கருத்தை வெளிப்படுத்தாமல் சூழ்ந்து சுற்றியும் தன்மை என்றும் இம்மூன்றும் உடையது நோக்கு. இது தோள்நோக்கு என்று கூறப்படுகிறது. தன் தோளை நோக்கி ஆடுதல், தம் தோளைத் தட்டி ஆடுதல், தம் தேளைத் தொட்டுக் கைகொட்டி ஆடுதல் எனவும் வரும்.
திருவாசகத்தில் திருத்தோணோக்கம் என்கிற பகுதியில் 14 பாடல்கள் உள. முதல் பாடல் தோள் நோக்கம் ஆடும் குறிக்கோள் உனது சிவந்த திருவடியைக் கூடுவதேயாகும். அடுத்து இறைவனது திருவடிப் பேற்றின் சிறப்புரைக்கும் நிலையில் உள.
பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே யெனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை யம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தாவுன் சேவடி கூடும் வண்ணந் தோணக்கம். பா.313
9. திருப்பொன்னூசல்
வெண்டளை வழாத தரவு கொச்ச கந்தான்
ஆடாமோ ஆடீர்என் றுhசலை வருணித்து
அசைவது போலிசை மேவரும் ஊசல்
தென்னூல், இ.ப.471
வெண்டளை வழுவாமல் தரவு கொச்சக்கலிப்பா யாப்பில் ஆடாமோ ஊசல் என்று விளித்துக் கொண்டு இசையோடு பாடி ஆடும் ஆடல் ஊசல் என்று பாவலரேறு குறிப்பிடுகிறார்.
ஊசல் என்பதன் ஊஞ்சல் என்பர். ஊஞ்சலில் ஆடிக்கொண்டே தலைவனது புகழைப் பாடிக் கொண்டு ஆடுவர். இதனை ஊசல் வரி என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. சேர மன்னனைப் பட்டுடைத் தலைவனாகக் கருதிப் பாடப் பெற்றுளது. திருவாசகத்தில் சிவபெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கருதிக் கொண்டு திருப்பொன்னூசல் அமைந்துளது.
திருப்பொன்னூசலில் ஒன்பது பாடல்கள் உள.
சீரார் பவளங்கால் முத்தங் கயிராக
ஏராரும் பொற்பலகை யேறி இனிதமர்ந்து
நாரா யணனறியா நாண்மலர்த்தாள் நாயடிமேற்
கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா வமுதின் அருட்டா ளினைப் பாடிப்
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ (32)
பொன்னூசல் திருஉத்தரகோச மங்கை தலத்தில் பாடியது பவளமே கால்களாகும். வெண்முத்து மாலையே கயிறாகவும் பொற்பலகை உள்ள ஊஞ்சலில் ஏறி, இனிமையுடன் இருந்து திருமாலும் அறிய முடியாத தாமரை மலரடி கொண்ட இறைவன் புகழ் பாடி ஆடுவோம் என்று அமைந்துள்ளது.
இவ்வொன்பது பதிகங்களும் 163 பாடல்களும் மகளிர் விளையாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளன. இவை நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவை சிலம்பு உரை கூறும் வரிக்கூத்துக்குரியனவாக பெரும்பாலும் உள. இவை தேவபாணிப் பாக்களாக திருவாசகத்தில் இடம் பெற்றுள. இன்றைய செவ்வியல் ஆடரங்குகளிலும் இவை ஆடப்பெறுகின்றன.
10. திருக்கோத்தும்பி
நாலடித் தரவு கொச்சக மிகக்
கோலமுற் றிசைத்தல் கோத்தும்பி யாகும்.
தென்னூல், இ.ப. 473
நாலடியில் அமைவும் தரவு கொச்சகக் கலிப்பாவால் பாடல்கள் அமையும் என்று தென்னூல் குறிப்பிடுகின்றது.
தும்பி என்பது வண்டு, சுரும்பு, தேன், ஞிமிறு என்ற நால்வகையான தேனீக்களில் ஒன்றாகும். கோத்தும்பி என்பது நறுநாற்றம் நோக்குச் செல்லும் உண்டாகும். திருவாசகத்தில் திருக்கோத்தும்பி பாடல்கள் 20 உள. இவை தூதுரைக்கும் பாடல்களான உள. பிரிவாற்றாத தலைவி தலைவனிடம் சென்று தன் நிலையைக் கூறிவரும் நிலையில் வண்டைத் தூது அனுப்பும். குறிப்புத் தோன்றப் பாடப்பெற்றுள்ளது. சிவ போதத்தை ஒரு வண்டாகவும், தமக்குத் தோன்றும் சித்த விகாரத்தைத் தூதுரைக்கும் செய்தியாகவும் கூறப்பட்டுள்ளது. வைணவத்தில் திருமங்கையாழ்வார் பாடிய பெரிய திருமொழியால் 8ஆம் பத்து 4ஆம் திருமெழி முழுவதும் கோத்தும்பி பாடல்களாக உள்ளன. திருமாலின் அவயங்களில் சென்று வாதுமாறு பாடியுள்ளார்.
பூவேறு கோனும் புரந்தானும் பொற்பமைந்த
நாவேறு செவ்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் நாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுhதாய் கோத்தும்பி.
திருவா 215
அகமார்க்க ஏனைய பாடல்கள்
திருவாசகத்தில் உள்ள அன்னைப்பத்து, குயில்பத்து, திருத்தசாங்கம், ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப் பத்து, வாழாப்பத்து, கண்டபத்து, குழைத்த பத்து ஆகியனவும் பக்தி நெறியோடு கூடிய அகமார்க்கம் தழுவிய தேவபாணிப் பாடல்களாக உள்ளன. மதுரை வீதியில் குதிரைச் சேவகனாகச் சென்ற இறைவனது பேரழகில் ஈடுபட்டு அவன் பால் காதல் கொண்ட தலைவி தன் அன்னையை நோக்கிக் கூறும் நிலையில் அன்னைப்பத்து அமைந்துளது. இறைவனைக் காதலித்து ஒருத்தி சோலையில் வாழும் குயிலை நோக்கி எங்கள் இறைவன் என்பால் வரக்கூவுவாயாக எனக்குரையிரந்து பாடும் நிலையில் குயில்பத்து அமைந்துளது. சிவன் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி சிவனுக்குரிய பேர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்பன யாவை என வினவக் கேட்ட கிளி முறையே அவ்வரி அங்கங்கள் இசை என விடைகூறும் முறையில் வினா விடையாக நேரிசை வெண்பாவில் திருத்தசாங்கம் அமைந்துளது.
இவ்வகையில் திருவாசகத்தில்
1. திருவெம்பாவை 20 பாடல்கள்
2. திருவம்மானை 20 பாடல்கள்
3. திருப்பொற்சுண்ணம் 20 பாடல்கள்
4. திருத்தெள்ளேணம் 20 பாடல்கள்
5. திருச்சாழல் 20 பாடல்கள்
6. திருப்பூவல்லி 20 பாடல்கள்
7. திருவுந்தியார் 20 பாடல்கள்
8. திருத்தோணோக்கம் - 14 பாடல்கள்
9. திருப்பொன்னூசல் 9 பாடல்கள்
10. திருக்கோத்தும்பி 20 பாடல்கள்
11. குயில்பத்து 10 பாடல்கள்
12. திருத்தசாங்கம் 10 பாடல்கள்
13. ஆசைப்பத்து 10 பாடல்கள்
14. அதிசயப்பத்து 10 பாடல்கள்
15. புணர்ச்சிப்பத்து 10 பாடல்கள்
16. வாழப்பத்து 10 பாடல்கள்
17. கண்டபத்து 10 பாடல்கள்
18. குழைத்தபத்து 10 பாடல்கள்
----
263 பாடல்கள்
----
No comments:
Post a Comment