சங்க இலக்கியக் கைக்கிளையும் சிற்றிலக்கியக் கைக்கிளையும்
[க.கதிரவன், துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை
& ஆய்வுமையம், அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளா
678104]
கைக்கிளை எனில் ஒருதலைக்காமம் எனவும் ஐந்து விருத்தச்செய்யுளில்
ஒருதலைக் காமத்தைப் பற்றிக் கூறும் சிற்றிலக்கியம் எனவும் ஏழிசையுள் மூன்றாவதாகிய காந்தாரப்
பண் எனவும் மருட்பா எனவும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி விளக்கம் கூறும்.
கை எனில் சிறுமைப்பொருள் முன்னொட்டு எனவும் கிளை
எனில் ஒழுக்கம் எனவும் சொற்பிறப்பு காட்டும். மேலும் தமிழர் திருமணம் நூலிலிருந்து
“கைக்கிளையாவது ஆடவன் பெண்டு ஆகிய
இருவருள்ளும் ஒருவருக்கே காதல் இருப்பது. இது ஒருதலைக் காமம்.
கை என்பது பக்கம். கிளை என்பது நேயம். ஆகவே கைக்கிளை என்பது ஒருதலைக் காதல்”
என ஓர் விளக்கத்தினை எடுத்துக்காட்டாய்க் காட்டும்.
கை என்னும் சொல்லுக்கு அகம் எனப் பொருள்கொண்டு
கைக்கிளை என்னும் சொல்லுக்கு
“அகம் கிளைக்கும் நிலை” எனப் பொருள்கொள்வோரும்
உண்டு.
காமஞ்
சாலா இளமை யோள்வயின்