.‘குழவி மருங்கினும் கிழவதாகும்’- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முனைவர்
வ.ஜெயா,
பேராசிரியர்,
துறைத்தலைவர்,
பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்று தொல்காப்பியர் பாடாண் திணையைப் பற்றி விளக்கும்போது கூறுகிறார். பாராட்ட வேண்டிய அரசனைக் குழந்தையாகப்
பாவித்துப் பாராட்டும் வழக்கம் தொல்காப்பியர் காலத்திலேயே
இருந்ததை இது காட்டுகிறது. பாடவேண்டிய தலைவனை அல்லது
தெய்வத்தை ஒரு குழந்தையாகப் பாவித்து, ஒரு தாய் பாடுவது போல நூறு பாடல்களால் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பத்துப் பருவங்களில், ஒவ்வொரு பருவத்திலும் பத்துப்பாடல்கள்
இடம் பெறும் இப்பிள்ளைத்தமிழினைப் பிள்ளைக் கவி, பிள்ளைப்பாட்டு என்றும் கூறுவர் இப்பிள்ளைத் தமிழின்
பாட்டுடை நாயகர்கள் கடவுள், ஆசிரியர், வள்ளல், தொண்டர், தலைவர், புலவர் ஆவர்.