Friday, 18 October 2013

அடித்தளப்படிப்பு தாள்-1 முதலாண்டு முதற்பருவம் அலகு– 3 தொடர்ச்சி 1

சிறுகதை 2.சாபவிமோசனம் -  புதுமைப்பித்தன்                                                                          

(ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபாடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.)

சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்து போன தசைக் கூட்டத்திலும், வீரியத்தைத் துள்ள வைக்கும் மோகன வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் கனவையெல்லாம் கல்லில் வடித்து வைத்தானோ என்று தோன்றும் அவ்வளவு லாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்தப் புதுமையின் கண்களிலே ஒரு சோகம் - சொல்லில் அடைபடாத சோகம் - பிறந்து, பார்க்கிறவர்களின் வெறும் தசை ஆசையான காமத்தைக் கொன்று அவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அது சிற்பியின் அபூர்வக் கனவு அன்று. சாபத்தின் விளைவு. அவள் தான் அகலிகை.       அந்தக் காட்டுப்பாதையில் கல்லில் அடித்து வைத்த சோகமாக, அவளது சோகத்தைப் பேதமற்ற கண்கொண்டு பார்க்கும் துறவி போன்ற இயற்கையின் மடியிலே கிடக்கிறாள். சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை கொழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும் குந்துகின்றன; பறக்கின்றன. தன் நினைவற்ற தபஸ்பியாக கல்லாக - கிடக்கிறாள்.

            சற்றுத் தூரத்திலே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன். இயற்கை, அவனையும் அபேதமாகத்தான் போஷிக்கிறது.  இன்னும் சற்றுத் தூரத்திலே இந்தத் தம்பதிகளின் குடும்பக் கூடு கம்பமற்று வீழ்ந்ததுபோல, இவர்களுக்கு நிழல் கொடுத்த கூரையும் தம்பம் இற்று வீழ்ந்து பொடியாகிக் காற்றோடு கலந்துவிட்டது. சுவரும் கரைந்தது. மிஞ்சியது திரடுதான். இவர்கள் மனசில் ஏறிய துன்பத்தின் வடுப்போலத் தென்பட்டது அது.            தூரத்திலேயே கங்கையின் சலசலப்பு. அன்னை கங்கை, அவர்களது எல்லையற்ற சோகத்தை அறிவாளோ என்னவோ!     இப்படியாக ஊழி பல கடந்தன, தம்பதிகளுக்கு.            ஒரு நாள்...

            முற்பகல் சூரிய ஒளி சற்றுக் கடுமைதான். என்றாலும் கொடிகளின் பசுமையும் நிழலும், இழைந்து வரும் காற்றும், உலகின் துன்பத்தை மறைக்க முயன்று நம்பிக்கையையும் வலுவையும் தரும் சமய தத்துவம் போல, மிடுக்கு நடை நடந்து, எடுத்த கருமம் முற்றியதால் உண்ட மகிழ்ச்சியை மனசில் அசை போட்டுக் கொண்டு, நடந்து வருகிறான் விசுவாமித்திரன். மாரீசனும் சுவாகுவும் போன இடம் தெரியவில்லை. தாடகை என்ற கிழட்டுக் கொடுமை நசித்துவிட்டது. நிஷ்டையில் ஆழ்ந்தும், எரியோம்பியும் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிம்மதியைத் தரும் சாதனமாகத் தன்னை ஆக்கிக் கொண்டதில் ஒரு திருப்தி.

            அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொள்கிறான். பார்வையில் என்ன பரிவு! இரண்டு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடி வருகின்றன. அவர்கள் வேறு யாருமல்ல ; அவதார சிசுக்களான ராம லக்ஷ்மணர்களே. அரக்கர் நசிவை ஆரம்பித்து வைத்துவிட்டு அதன் பொறுப்புத் தெரியாமல் ஓடிப் பிடித்து வருகிறார்கள்.

            ஓட்டம் புழுதியைக் கிளப்புகிறது. முன்னால் ஓடி வருகிறான் லக்ஷ்மணன் ; துரத்தி வருபவன் ராமன். புழுதிப் படலம் சிலையின் மீது படிகிறது.......என்ன உத்ஸாகமோ என்று உள்ளக் குதூகலிப்புடன் திரும்பிப் பார்க்கிறார் விசுவாமித்திரர். பார்த்தப்படியே நிற்கிறார்.            புழுதிப் படலம் சிலையின் மீது படிகிறது.எப்போதோ ஒரு நாள் நின்று கல்லான இதயம் சிலையுள் துடிக்கிறது. போன போன இடத்தில் நின்று இறுகிப்போன ரத்தம் ஓட ஆரம்பிக்கிறது. கல்லில் ஜீவ உஷ்ணம் பரவி உயிருள்ள தசை கோளமாகிறது. பிரக்ஞை வருகிறது.கண்களை மூடித் திறக்கிறாள் அகலிகை. பிரக்ஞை தெளிகிறது. சாப விமோசனம்! சாப விமோசனம்!

            தெய்வமே! மாசுபட்ட இந்தத் தசைக்கூட்டம் பவித்திரம் அடைந்தது!    தனக்கு மறுபடியும் புதிய வாழ்வைக் கொடுக்க வந்த தெய்வீக புருஷன்? அந்தக் குழந்தையா?அவன் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறாள். ராமன் ஆச்சர்யத்தால் ரிஷியைப் பார்க்கிறான்.

            விசுவாமித்திரருக்குப் புரிந்துவிட்டது. இவள் அகலிகை. அன்று இந்திரனுடைய மாய வேஷத்துக்கு ஏமாறிய பேதை. கணவன் மீதிருந்த அளவுக்குள் அடங்காத பாசத்தின் விளைவாக, தன் உடம்பை, மாய வேஷத்தால் ஏமாறி, மாசுபடுத்திக் கொண்டவள் ; கோதமனின் மனைவி. அவ்வளவையும் ராமனிடம் சொல்லுகிறார். அதோ நிற்கும் புற்று இருக்கிறதே ; அதில், வலை முட்டையில் மோனத்தவங் கிடக்கும் பட்டுப் பூச்சிபோலத் தன்னை மறந்து நிஷ்டையில் ஆழ்ந்து இருக்கிறான். அதோ அவனே எழுந்துவிட்டானே!     நிஷ்டையில் துறந்த கண்கள் சாணை தீட்டிய கத்திபோல் சுருள்கின்றன. உடலிலே, காயகற்பம் செய்ததுபோல் வலு பின்னிப் பாய்கிறது. மிடுக்காக, பெண்ணின் கேவலத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாதவனைப் போலத் தயங்கி வருகிறான்.

            மறுபடியும் இந்தத் துன்ப வலையா? சாப விமோசனத்துக்குப் பிறகு வாழ்வு எப்படி என்பதை மனசு அப்பொழுது நினைக்கவில்லை. இப்பொழுதோ அது பிரம்மாண்டமான மதிளாக அவனது வாழ்வைச் சுற்றியே மண்டலிக்கிறது. அவன் மனம் மிரளுகிறது.       ராமனுடைய கல்வி, தர்மக் கண்கொண்டு பார்த்தது. தெளிவின் ஒளி பூண்டது. ஆனால் அநுபவச் சாணையில் பட்டை பிடிக்காதது ; வாழ்வின் சிக்கலின் ஒவ்வொரு நூலையும் பின்னலோடு பின்னல் ஒடியாமல் பார்த்த வசிஷ்டனுடைய போதனை. ஆனால் சிறுமையை அறியாதது. புது வழியில் துணிந்து போக அறிவுக்குத் தெம்பு கொடுப்பது.உலகத்தின் தன்மை என்ன, இப்படி விபரீதமாக முறுக்கேறி உறுத்தியது! மனசுக்கும் கரணசக்தியின் நிதானத்துக்கும் கட்டுப்பாடமல் நிகழ்ந்த ஒரு காரியத்துக்கா பாத்திரத்தின் மீது தண்டனை? """"அம்மா!"" என்று சொல்லி அவள் காலில் விழுந்து வணங்குகிறான் ராமன்.          இரண்டு ரிஷிகளும், (ஒருவன் துணிச்சலையே அறிவாகக் கொண்டவன் ; மற்றவன் பாசத்தையே தர்மத்தின் அடித்தலமாகக் கொண்டவன்) சிறுவனுடைய நினைவுக்கோணத்தில் எழுந்த கருத்துக்களைக் கண்டு குதூகலிக்கிறார்கள். எவ்வளவு லேசான, அன்பு மயமான, துணிச்சலான உண்மை.

            """"நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்ளுவதுதான் பொருத்தும்"" என்றான் விசுவாமித்திரன் மெதுவாக.       குளுமை பூண்ட காற்றில் அவனது வாதக் கர கரப்பு ரஸபேதம் காட்டுகிறது.  கோதமனும், அவன் பத்தினியும், அந்தத் தம்ப மற்றுத் திரடேறிப் போன மேடும் அவ்விடத்தை விட்டு அகலவில்லை. முன்பு உயிரற்றிருந்த இடத்தில் ஜீவகளை துவள நினைத்தது.

            சாட்டையின் கொடுக்கைப் போலப் போக்கை மாற்றி யமைக்க வந்த சக்திகள் அவ்விடம் விட்டுப் பெயர்ந்துவிட்டன. மிதிலைக்குப் பொழுது சாயும் பொழுதாவது போக வேண்டாமா? மணவினை, இரு கைகளை நீட்டி அழைக்கிறதே.கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப் பேச நாவெழவில்லை. அவளை அன்று விலைமகள் என்று சுட்டது. தன் நாக்கையே பொசுக்க வைத்துவிட்டது போல இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது? என்ன பேசுவது?    """"என்ன வேண்டும்?"" என்றான் கோதமன். அறிவுத் திறம் எல்லாம் அந்த உணர்ச்சிச் சுழிப்பிலே அகன்று பொருளற்ற வார்த்தையை உந்தித் தள்ளியது. """"பசிக்கிறது"" என்றாள் அகலிகை, குழந்தைபோல.      அருகிலிருந்த பழனத்தில் சென்று கனிவர்க்கங்களைச் சேகரித்து வந்தான் கோதமன். அன்று, முதல் முதல் மணவினை நிகழ்ந்த புதிதில் அவனுடைய செயல்களில் துவண்ட ஆசையும் பரிவும் விரல்களின் இயக்கத்தில் தேகத்தில் காட்டின.

            ‘அந்த மணவினை உள்ளப்பிரிவு பிறந்த பின்னர் பூத்திருந்தாலும், ஏமாற்றின் அடிப்படையில்    பிறந்ததுதானே :   பசுவை  வலம்   வந்து   பறித்து     வந்ததுதானே!என்று கோதமனுடைய மனசு, திசைமாறித் தாவித் தன்னையே சுட்டுக்கொண்டது.      அகலிகை பசி தீர்ந்தாள்.         அவர்கள் மனசில் பூர்ணமான கனிவு இருந்தது. ஆனால் இருவரும் இருவிதமான மனக்கோட்டைகளுக்குள் இருந்து தவித்தார்கள்.

            கோதமனுக்குத் தான் ஏற்றவளா என்பதே அகலிகையின் கவலை. அகலிகைக்குத் தான் ஏற்றவனா என்பதே கோதமனின் கவலை.            சாலையோரத்தில் பூத்திருந்த மலர்கள் அவர்களைப் பார்த்துச் சிரித்தன.

2

அகலிகையின் விருப்பப்படி, ஆசைப்படி அயோத்தி வெளி மதில்களுக்குச் சற்று ஒதுங்கி, மனுஷ பரம்பரையின் நெடிபடாத தூரத்தில், சரயூ நதிக்கரையிலே ஒரு குடிசை கட்டிக்கொண்டு தர்ம விசாரம் செய்து கொண்டிருந்தான் கோதமன். இப்பொழுது கோதமனுக்கு அகலிகை மீது பரிபூரண நம்பிக்கை. இந்திரன் மடிமீது அவள் கிடந்தால்கூட அவன் சந்தேகிக்க மாட்டான். அவ்வளவு பரிசுத்தவதியாக நம்பினான் அவன். அவளது சிற்றுதவி இல்லாவிடின் தனது தர்மவிசாரம் தவிடு பொடியாகிவிடும் என்ற நிலை அவனுக்கு ஏற்பட்டது.       அகலிகை அவனை உள்ளத்தினால் அளக்க முடியாத ஓர் அன்பால் தழைக்க வைத்தாள். அவனை நினைத்து விட்டால், அவள் மனமும்  அங்கங்களும் புது மணப் பெண்ணுடையன போலக் கனிந்துவிடும். ஆனால், அவள் மனசில் ஏறிய கல் அகலவில்லை. தன்னைப் பிறர் சந்தேகிக்காத படி, விசேஷமாகக் கூர்ந்து பார்க்கக் கூட, இடங்கொடாதபடி நடக்க விரும்பினாள். அதனால் அவள் நடையில் நிற்பவர்கள் யாருமே இந்திரர்களாத் தென் பட்டார்கள் ; அகலிக்கைக்குப் பயன் நெஞ்சில் உறையேறிவிட்டது. அந்தக் காலத்திருந்த பேச்சும் விளையாட்டும் குடியோடிப் போயின. ஆயிரம் தடைவ மனசுக்குள் திருப்பிச் சொல்லிப் பாடம் பண்ணிக்கொண்டு, அந்த வார்த்தை சரிதானா என்பதை நாலு கோணத்திருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்குக் கூட உள்ளர்த்தம் உண்டோ என்று பதைப்பாள்.

            வாழ்வே அவளுக்கு நரக வேதனையாயிற்று.  அன்று மரீசி வந்தார். முன்னொரு நாள் ததீசி வந்தார். மதங்களும் வாரணாசி செல்லும்போது கோதமனைக் குசலம் விசாரிக்க எட்டிப்பார்த்தார். அவர்கள் மனசில் கனிவும் பரிவும் இருந்த போதிலும், அகலிகையின் உடம்பு குன்றிக் கிடந்தது. மனசும் கூம்பிக் கிடந்தது. அதிதி உபசாரங்கூட வழுவி விடும்போல இருந்தது. ஏறிட்டுச் சாதாரணமாகப் பார்க்கிறவர்களையும் களங்க மற்ற கண்கொண்டு பார்க்கக் கூசியது. குடிசையில் ஒளிந்து கொண்டாள்.

            கோதமனுடைய சித்தாந்தமே இப்பொழுது புது வித விசாரனையில் திரும்பியது. தர்மத்தின் வேலிகள் யாவும் மனமறிந்து செய்பவர்களுக்கே. சுயப் பிரக்ஞை இல்லாமல் வழு ஏற்பட்டு, அதனால் மனுஷ வித்து முழுவதுமே நசிந்துவிடும் என்றாலும், அது பாபம் அல்ல ; மனலயிப்பும், லயப்பிரக்ஞையுடன் கூடிய செயலீடு பாடுமே கறை படுத்துபவை. தனது இடிந்து போன குடிசையில் இருந்து கொண்டு புதிய கோணத்தில் தன் சிந்தனையைத் திருப்பி விட்டான் கோதமன். அவனுடைய மனசில் அகலிகை மாசு அற்றவளாகவே உலாவினாள்; தனக்கே அருகதை இல்லை ; சாபத் தீயை எழுப்பிய கோபமே தன்னை மாசு படுத்திவிட்டது என்று கருதினான்.     சீதையும் ராமனும் உல்லாசமாகச் சமயா சமயங்களில் அந்தத் திசையில் ரதமூர்ந்து வருவார்கள். அவதாரக் குழந்தை, கோதமனின்மனசில் லக்ஷ்ய வாலிபனாக உருவாகித் தோன்றினான். அவனது சிரிப்பும் விளையாட்டுமே தர்மசாஸ்வரத்தின் தூண்டாவிளக்குகளாகச் சாயனம் (வியாக்கியானம்) பண்ணின. அந்த இளம் தம்பதிளின் பந்தந்தான் என்ன? அது கோதமனுக்குத் தனது அந்தக் காலத்து வாழ்பவை ஞாபகப்படுத்தும்.

            அகலிகையின் மனப் பாரத்தை நீக்க வந்த மாடப்புறா சீதை. அவளது பேச்சும் சிரிப்பும், தன் மீதுள்ள கறையைத் தேய்த்துக் கழுவுவனபோல் இருந்தன அகலிகைக்கு. அவள் வந்த போதுதான் அகலிகையின் அதரங்கள் புன்சிரிப்பால் நெளியும். கண்களில் உல்லாசம் உதயவொளி காட்டும்.வசிஷ்டரின் கண் பார்வையிலே வளரும் ராஜ்ய லக்ஷ்யங்கள் அல்லவா? சரயூ நதியின் ஓரத்தில் ஒதுங்கி இரு தனி வேறு உலகங்களில் சஞ்சரிக்கும் ஜீவன்களிடையே பழைய கலகலப்பைத் தழைக்க வைத்து வந்தார்கள்.

            அகலிகைக்கு வெளியே நடமாடி நாலு இடம் போதவற்குப் பிடிப்பற்று இருந்தது. சீதையின் நெருக்கமே அவளது மனச்சுமையை நீக்கிச் சற்றுத் தெம்பை அளித்தது.     பட்டாபிஷேக வைபவத்தின் போது அயோத்திக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருந்தாள். ஆனால் அரண்மணைக்குள் ஏற்பட்ட உணர்ச்சிச் சுழிப்புக்குத்தான் என்ன வலிமை! ஒரே மூச்சில் தசரதன் உயிரை வாங்கி, ராமனைக் காட்டுக்கு விரட்டி, பரதனைக் கண்ணீரும் கம்பலையுமாக நந்திக்கிராமத்தில் குடியேறிவிட்டது.    மனுஷ அளவைகளுக்குள் எல்லாம் அடைபடாத அதீச சக்தி, ஏதோ உன்மத்த வேகத்தில் காயுருட்டிச் சொக்கட்டான் ஆடியது போல், நடந்து முடிந்துவிட்டது.           வசிஷ்டர் தான் என்ன, சர்வ ஜாக்கிரத்தையோடு மனுஷ தர்மத்தின் வெற்றியாக ஒரு ராஜ்யத்தை ஸ்தாபிக்கக் கண்ணில் எண்ணெயூற்றி வளர்த்தார். அவருடைய கணக்குள் யாவும் தவிடுபொடியாகி, நந்திக்கிராமத்தில் நின்றெரியும் மினுக்கு வெளிச்சமாயிற்று.

            அகலிகைக்கோ? அவளது துன்பத்தை அளந்தால் வார்த்தைக்குள் அடைபடாது. அவளுக்குப் புரியவில்லை. நைந்து ஓய்ந்துவிட்டாள். ராமன் காட்டுக்குப் போனான். அவன் தம்பியும் தொடர்ந்தான் ; சீதையும் போய்விட்டாள். முன்பு கற்சிலையாகிக் கிடந்தபோது மனசு இருண்டு கிடந்த மாதிரி ஆகிவிட்டது. ஆனால் மனப் பாரத்தின் பிரக்ஞை மட்டும் தாங்க முடியவில்லை.

            கருக்கலில் கோதமர் ஜபதபங்களை முடித்துக்கொண்டு கரையேறிக் குடிசைக்குள் நுழைந்தார்.       அவர் பாதங்களைக் கழுவதற்காகச் செம்பில் ஜலத்தை ஏந்தி நின்ற அகலிகையின் உதடு அசைந்தது.      """"எனக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை. மிதிலைக்குப் போய்விடுவோமே.""            """"சரி, புறப்படு  ; சதானந்தனையும் பார்த்து வெகு நாட்களாயின"" என்று வெளியே இறங்கினார் கோதமர்.          இருவரும் மிதிலைநோக்கி நடந்தார்கள். இருவர் மனசிலும் பளு குடியேறி அமர்ந்திருந்தது. கோதமர் சற்று நின்றார்.     பின் தொடர்ந்து நடந்துவந்த அகலிகையினுடைய கையை எட்டிப் பிடித்துக்கொண்டார் ; நடந்தார் ; """"பயப்படாதே"" என்றார்.   இருவரும் மிதிலை நோக்கி நடந்தார்கள்.

3

பொழுது புலர்ந்துவிட்டது. கங்கைக் கரைமேல் இருவரும் சென்று கொண்டிருக்கிறார்கள்.     யாரோ ஆற்றுக்குள் நின்று கணீரென்ற குரலில் காயத்திரியைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.ஜபம் முடியுமட்டும் தம்பதிகள் கரையில் எட்டிக் காத்து நின்றார்கள்.     """"சதானந்தா !"" என்று கூப்பிட்டார் கோதமர்.    """"அம்மா... அம்மா..."" என்று உள்ளத்தின் மலர்ச்சியைக் கொட்டிக் காலில் விழுந்து நமஸ்கரித்தார் சதானந்தர்.

            அகலிகை அவனை மனசால் தழுவினாள். குழந்தை சதானந்தன் எவ்வளவு அன்னியனாகி விட்டான். தாடியும் மீசையும் வைத்துக் கொண்டு ரிஷிமாதிரி!கோதமருக்கு மகனது தேஜஸ் மனசைக் குளுமையூட்டியது.            சதானந்தன் இருவரையும் தன் குடிசைக்கு அழைத்துச் சென்றான். சிரம பரிகாரம் செய்து கொள்ளுவதற்கு வசதி செய்து வைத்துவிட்டு, ஜனகனது தத்துவ விசார மண்டபத்துக்குப் புறப்படலானான்.   கோதமரும்    உடன்   வருவதாகப்    புறப்பட்டார்.   மகனுக்கு   அவரை   அழைத்துச்செல்லுவதில் பிரியந்தான். நெடுந்தூரத்துப் பிரயாணமாச்சே என்று ரத்த பந்தத்தின் பரிவால் நினைத்தான். ஊழிகாலம் நிஷ்டையில் கழித்தும் வாடாத தசைக்கூட்டமா, இந்த நடைக்குத் தளர்த்துவிடப் போகிறது? அவனுக்குப் பின் புறப்பட்டார். அவருடைய தத்துவ விசாரணையின் புதிய போக்கை நுகர ஆசைப்பட்டான் மகன்.       மிதிலையின் தெருக்கள் வழியாகச் செல்லும்போது, அயோத்தியில் பிறந்த  மனத்தொய்வும் சோகமும் இங்கும் படர்ந்திருப்பதாகப் புலப்பட்டன கோதமருக்கு. அடங்கிவிட்ட பெருமூச்சு, காற்றினூடே கலந்து இழைந்தது.         ஜனங்கள் போகிறார்கள், வருகிறார்கள் ; காரியங்களைக் கவனிக்கிறார்கள் ; நிஷ்காம்ய சேவை போல எல்லாம் நடக்கிறது ; பிடிப்பு இல்லை ; லயிப்பு இல்லை.           திருமஞ்சனக் குடம் ஏந்திச் செல்லும் அந்த யானையின் நடையில் விறுவிறுப்பு இல்லை ; உடன் செல்லும் அர்ச்சகன் முகத்தில் அருளின் குதுகலிப்பு இல்லை. ருவரும் அரசனுடைய பட்டிமண்டபத்துக்குள் நுழைந்தார்கள். சத்சங்கம் சேனா சமுத்திரமாக நிறைந்திருந்தது. இந்த அங்காடியில் ஆராய்ச்சி எப்படி நுழையும் என்று பிரமித்தார் கோதமர். அவர் நினைத்தது தவறுதான்.ஜனகன் கண்களில் இவர்கள் உடனே தென்பட்டார்கள்.         அவன் ஓடோடியும் வந்து முனிவருக்கு அர்க்கியம் முதலிய உபசாரங்கள் செய்வித்து அழைத்துச் சென்று அவரைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டான்.            ஜனகனுடைய முகத்தில் சோகத்தின் சோபை இருந்தது. ஆனால் அவன் பேச்சில் தழுதழுப்பு இல்லை ; அவனுடைய சித்தம் நிதானம் இழக்கவில்லை என்பதைக் காட்டியது.

            என்னத்தைப் பேசுவது என்று கோதமர் சற்றுத் தயங்கினார்.   """"வசிட்டன் தான் கட்டிய ராஜ்யத்தில் உணர்ச்சிக்கு மதகு அமைக்கவில்லை"" என்றான் ஜனகன், மெதுவாகத் தாடியை நெருடிக்கொண்டு,         ஜனகனின் வாக்கு, வர்மத்தைத் தொட்டுவிட்டது.

            """"உணர்ச்சியின் சுழிப்பிலேதானே உண்மை பிறக்கும்"" என்றார் கோதமர்.       """"துன்பமும் பிறக்கும், உணர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாது போனால், ராஜ்யத்தைக் கட்ட ஆசைப்படும் போது அதற்கும் இடம் போட்டு வைக்க வேண்டும் ; இல்லாவிட்டால் ராஜ்யம் இருக்காது"" என்றான் ஜனகன்.

            """"தங்களதோ?"" என்று சந்தேகத்தை எழுப்பினார் கோதமர்.    """"நான் ஆளவில்லை ; ஆட்சியைப் புரிந்துகொள்ள முயலுகிறேன்"" என்றான் ஜனகன்.       இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.      """"தங்களது தர்ம விசாரணை எந்த மாதிரியிலோ?"" என்று விநயமாகக் கேட்டான் ஜனகன்.            """"இன்னும் ஆரம்பிக்கவே இல்லை ; இனிமேல்தான் புரிந்து கொள்ள முயலவேண்டும்; புதிர்கள் பல புலங்களையெல்லாம் கண்ணியிட்டுக் கட்டுகின்றன"" என்று சொல்லிக்கொண்டே எழுந்தார் கோதமர்.         மறுநாள் முதல் அவர் ஜனகன் மண்டபத்துக்குப் போகவில்லை. புத்தியிலே பல புதிர்கள் ஹிமாசலத்தைப் போல் ஓங்கி நின்றன. தனிமையை விரும்பினான். ஆனால் நாடிச் செல்லவில்லை. அகலிகை மனசு ஒடிந்துவிடக் கூடாதே!மறுநாள் ஜனகன், """"முனீசுவரர் எங்கே?"" என்று ஆவலுடன் கேட்டான்.

            """"அவர் எங்கள் குடிசைக்கு எதிரே நிற்கும் அசோக மரத்தடியில் தான் பொழுதைக் கழிக்கிறார்"" என்றார் சதானந்தர்.      """"இல்லை ; யோசனையில்""       """"""""அலை அடங்கவில்லை"" என்று தனக்குள்ளே மெதுவாகச் சொல்லிக் கொண்டான் ஜனகன். அகலிகைக்கு நீராடுவதில்  அபார மோகம்.   இங்கே  கங்கைக்   கரையருகே நிம்மதி

இருக்கும் என்று தனியாக உதய காலத்திலேயே குடமெடுத்துச் சென்றுவிடுவாள்.    இரண்டொரு நாட்கள் தனியாக, நிம்மதியாகத் தனது மனசின் கொழுந்துகளைத் தன்னிச்சையோடு படரும்படி விட்டு, அதனால் சுமை நீங்கியதாக ஒரு திருப்தியுடன் குளித்து முழுகி விளையாடிவிட்டு நீர்மொண்டு வருவாள். நீடிக்கவில்லை.    குளித்துவிட்டுத் திரும்பிக் குனிந்த நோக்குடன், மனசை இழையவிட்டுக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள்.          எதிரே மெட்டிச் சப்தம் கேட்டது. ரிஷி பத்தினிகள் யாரோ ; அவர்களும் நீராடத்தான் வந்துகொண்டிருந்தார்கள். அவளைக் கண்டதும் பறைச்சியைக் கண்டதுபோல ஓடி விலகி, அவளை விறைத்துப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.       """"அவள்தான் அகலிகை"" என்பது தூரத்தில் கேட்டது. கோதமனுக்கு அன்று அடிவயிற்றில் பற்றிக்கொண்டு பிறந்த சாபத்தீயைவிட அதிகமாகச் சுட்டன அவ்வார்த்தைகள்.

            அவள் மனசு ஒரேயடியாகச் சுடுகாடு மாதிரி வெந்து தகித்தது. சிந்தனை திரிந்தது. """"தெய்வமே : சாப விமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கண்டாலும் கிடையாதா?"" என்று தேம்பினாள்.     யந்திரப் பாவைபோல அன்று கோதமருக்கும் சதானந்தருக்கும் உணவு பரிமாறினாள். மகனும் அன்னியனாகிவிட்டான் ; அன்னியரும் விரோதிகளாகி விட்டார்கள்; இங்கென்ன இருப்பு?’ என்பதே அகலிகையின் மனசு அடித்துக்கொண்ட பல்லவி.            கோதமர் இடையிடையே பிரக்ஞை பெற்றவர்போல் ஒரு கவளத்தை வாயிலிட்டு நினைவில் தோய்ந்திருந்தார்.இவர்களது மன அவசத்தால் ஏற்பட்ட பளு சதானந்தனையும் மூச்சுத் திணற வைத்தது.பளுவைக் குறைப்பதற்காக, """"அத்திரி முனிவர் ஜனகனைப் பார்க்க வந்திருந்தார். அகத்தியரைப் பார்த்துவிட்டு வருகிறார். மேருவுக்குப் பிரயாணம். ராமனும் சீதையும் அகத்தியரைத் தரிசித்தார்களாம். அவர்கள் இருவரையும், ‘நல்ல இடம் பஞ்சவடி. அங்கே தங்குங்கள்என்று அகத்தியர் சொன்னராம். அங்கே இருப்பதாகத்தான் தெரிகிறது"" என்றான் சதானந்தன்.

            """"நாமும் தீர்த்தயாத்திரை செய்தால் என்ன?"" என்று அகலிகை மெதுவாகக் கேட்டாள். """புறப்படுவோமா?"" என்று கைகளை உதறிக்கொண்டு எழுந்தார் கோதமர்.  """இப்பொழுதேயா?"" என்றான் சதானந்தன்.            """"எப்பொழுதானால் என்ன?"" என்று கூறிக்கொண்டே, மூலையிலிருந்த தண்டு கமண்டலங்களை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கினார் கோதமர்.    அகலிகை பின் தொடர்ந்தாள். சதானந்தன் மனம் தகித்தது.

4

பொழுது சாய்ந்து, ரேகை மங்கிவிட்டது. இருவர் சரயூ நதிக்கரையோரமாக அயோத்தியை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்  பதினான்கு வருஷங்கள் ஓடிக் காலவெள்ளத்தில் ஐக்கியமாகிவிட்டன. அவர்கள் பார்க்காத முனிபுங்கவர் இல்லை ; தரிசிக்காத க்ஷேத்திரம் இல்லை. ஆனால் மனநிம்மதி மட்டிலும் அவர்களுக்கு இல்லை.     வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய சிந்தனைக் கோயில்போல, திடமற்றவர்களின் கால்களுக்குள் அடைபடாத கைலயங்கிரியைப் பனிச் சிகரங்களில் மேல் நின்று தரிசித்தார்கள்.       தமது துன்பச் சுமையான நம்பிக்கை வறட்சியை   உருவகப்படுத்தின   பாலையைத் தாண்டினார்கள்.தம் உள்ளம்போலக் கொழுந்துவிட்டுப் புகைமண்டிச் சாம்பலையும் புழுதியையும் கக்கும் எரிமலைகளை வலம்வந்து கடந்தார்கள்.         தமது மனம்போல ஓயாது அலைமோதிக்கொண்டு கிடக்கும் சமுத்திரத்தின் கரையை எட்டிப் பின்னிட்டுத் திரும்பினார்கள்.தம் வாழ்வின் பாதைபோன்ற மேடு பள்ளங்களைக் கடந்து வந்து விட்டார்கள்.

            """"இன்னும் சில தினங்களில் ராமன் திரும்பி விடுவான் ; இனி மேலாவது வாழ்வின் உதயகாலம் பிறக்கும்"" என்ற ஆசைதான் அவர்களை இழுத்து வந்தது.       பதினான்கு வருஷங்களுக்கு முன் தாம் கட்டிய குடிசை இற்றுக் கிடந்த இடத்தை அடைந்தார்கள்.       இரவோடு இரவாக, குடியிருக்க வசதியாகக் கோதமர் அதைச் செப்பனிட்டார். வேலை முடியும் போது உதய வெள்ளி சிரித்தது.          இருவரும் சரயூவில் நீராடித் திரும்பினார்கள்.

            கணவனாருக்குப் பணிவிடை செய்வதில் முனைந்தாள் அகலிகை. இருவரது மனசும் ராமனும் சீதையும் வரும் நாளை முன்னோடி வரவேற்றது. இருந்தாலும் காலக் களத்தின் நியதியை மனசைக் கொண்டு தவிர, மற்றப்படித் தாண்டிவிட முடியுமா? ஒரு நாள் அதிகாலையில் அகலிகை நீராடச் சென்றிருந்தாள். அவளுக்கு முன், யாரோ ஒருத்தி விதவை குளித்து விட்டுத் திரும்பி கொண்டிருந்தாள்; யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை ; ஆனால் எதிரே வந்தவள் அடையாளம் கண்டு கொண்டுவிட்டாள். ஓடோடியும் வந்து அகலிகையின் காலில் சர்வாங்கமும் தரையில் பட விழுந்து நமஸ்கரித்தாள்.  தேவி கைகேயி : தன்னந்தனியாக, பரிசனங்களும் பரிவாரமும் இல்லாமல், துறவியாகிவிட்டாளே!       குடத்தை இறக்கி வைத்துவிட்டு அவளை இரு கைகளாலும் தூக்கி நிறுத்தினாள். அவளுக்குக் கைகேயின் செயல் புரியவில்லை.            """"தர்ம ஆவேசத்திலே பரதன் தன்னுடைய மனசில் எனக்கு இடம் கொடுக்க மறந்துவிட்டான்"" என்றாள் கைகேயி.

            குரலில் கோபம் தெறிக்கவில்லை ; மூர்த்தண்யம் துள்ளவில்லை. தான் நினைத்த கைகேயி வேறு ; பார்த்த கைகேயி வேறு. படர்வதற்குக் கொழுகொம்பற்றுத் தவிக்கும் மனசைத்தான் பார்த்தாள் அகலிகை. இருவரும் தழுவிய கை மாறாமல், சரயூவை நோக்கி நடந்தார்கள். """"பரதனுடைய தர்ம வைராக்கியத்துக்கு யார் காரணம்?"" என்றாள் அகலிகை. அவளுடைய உதட்டின் கோணத்தில் அநுதாபம் கனிந்த புன்சிரிப்பு நெளிந்து மறைந்தது.

            """"குழந்தை வைத்த நெருப்பு ஊரைச் சுட்டு விட்டால் குழந்தையைக் கொன்று விடுவதா?"" என்றாள் கைகேயி.            குழந்தைக்கும் நெருப்புக்கும் இடையில் வேலி போடுவது அவசியந்தான் என்று எண்ணினாள் அகலிகை. """"ஆனால் எரிந்தது எரிந்தது தானே?"" என்று கேட்டாள்.         """"எரிந்த இடத்தைச் சுத்தப்படுத்தாமல் சாம்பலை அப்படியே குவித்து வைத்துக்கொண்டு சுற்றி உட்கார்ந்திருந்தால் மட்டும் போதுமா?"" என்றாள் கைகேயி.   """"சாம்பலை அகற்றுகிறவன் இரண்டொரு நாட்களில் வந்து விடுவானே"" என்றாள் அகலிகை.""""ஆமாம்"" என்றாள் கைகேயி. அவள் குரலில் பரம நிம்மதி தொனித்தது. ராமனை எதிர்பார்த்திருப்பது பரதனல்ல ; கைகேயி.          மறுநாள் அவள் அகலிகையைச் சந்தித்த பொழுது முகம் வெறி சோடியிருந்தது ; மனசு நொடிந்து கிடந்தது.   """"ஒற்றர்களை நாலு திசைகளிலும் விட்டு அனுப்பிப் பார்த்தாகிவிட்டது. ராமனைப்பற்றி ஒரு புலனும் தெரியவில்லை. இன்னும் நாற்பது நாழிகை நேரத்துக்குள் எப்படி வந்துவிடப் போகிறார்கள்? பரதன் பிராயோபவேசம் செய்யப் போகிறானாம். அக்கினி குண்டம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறான்"" என்றாள் கைகேயி.

            பரதன் எரியில் தன்னை அவித்துக் கொள்ளுவது தன்மீது சுமத்தப்பட்ட ராஜ்ய மோகத்துக்குத் தக்க பிராயச்சித்தம் என்று அவள் கருதுவது போல இருந்தது பேச்சு.          சற்று நிதானித்து, """"நானும் எரியில் விழுந்துவிடுவேன் ; ஆனால் தனியாக, அந்தரங்கமாக"" என்றாள் கைகேயி. அவள் மனசு வைராக்கியத்தைத் தெறித்தது.பதினான்கு வருஷங்கள் கழித்து மறுபடியும் அதே உணர்ச்சிக் சுழிப்பு. அயோத்திக்கு ஏற்பட்ட சாபத்தீடு நிங்கவில்லையா?அகலிகையின் மனசு அக்குத்தொக்கு இல்லாமல் ஓடியது. தனது காலின் பாபச் சாயை என்றே சந்தேகித்தாள்.""""வசிட்டரைக் கொண்டவது அவனைத் தடை செய்யக்கூடாதா?"" என்றாள் அகலிகை.""""பரதன் தர்மத்துக்குத்தான் கட்டுப்படுவான் ; வசிட்டருக்குக் கட்டுப்படமாட்டான்"" என்றாள் கைகேயி.""""மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்குச் சத்துரு"" என்று கொதித்தாள் அகலிகை.

            தன்னுடைய கணவர் பேச்சுக்குப் பரதன் ஒருவேளை கட்டுப்படக்கூடாதோ என்ற நைப்பாசை. மறுபடியும் அயோத்தியில் துன்பச் சக்கரம் சுழல ஆரம்பித்துவிடக் கூடாதே என்ற பீதி. கோதமன் இணங்கினான். ஆனால் பேச்சில் பலன் கூடவில்லை. பரதனை உண்டு பலிகொள்ள அக்கினி தேவன் விரும்பவில்லை.அனுமன் வந்தான் ; நெருப்பு அவிந்தது. திசைகளின் சோகம், கரை உடைந்த குதுகல வெறியாயிற்று. தர்மம் தலைசுற்றியாடியது.      வசிட்டனுக்கும் பதினான்கு வருஷங்கள் கழித்த பிறகாவது கனவு பலிக்கும் என்ற மீசை மறைவில் சிரிப்புத் துள்ளாடியது.

            இன்ப வெறியில் அங்கே நமக்கு என்ன வேலை என்று திரும்பிவிட்டான் கோதமன்.  சீதையும் ராமனும் தன்னைப் பார்க்க வருவார்கள் என்று அகலிகை உள்ளம் பூரித்தாள். வரவேற்பு ஆரவாரம் ஒடுங்கியதும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி வந்தார்கள்.          ரதத்தை விட்டு இறங்கிய ராமனது நெற்றியில் அநுபவம் வாய்க்கால் வெட்டியிருந்தது. சீதையின் பொலிவு அநுபவத்தால் பூத்திருந்தது. இருவர் சிரிப்பின் லயமும் மோக்ஷ லாகிரியை ஊட்டியது.

            ராமனை அழைத்துக் கொண்டு கோதமன் வெளியே உலாவச் சென்றுவிட்டான்.        தன் கருப்பையில் கிடந்து வளர்ந்த குழந்தையால் சுரக்கும் ஒரு பரிவுடன் அகலிகை அவளை அழைத்துச் சென்றாள். இருவரும் புன் சிரிப்புடன் உட்கார்ந்திருந்தார்கள். ராவணன் தூக்கிச் சென்றது, துன்பம், மீட்பு எல்லாவற்றையும் துன்பக்கறை படியாமல் சொன்னாள் சீதை. ராமனுடன சேர்ந்து விட்ட பிறகு துன்பத்துக்கு அவளிடம் இடம் ஏது?
            அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்துவிட்டாள். அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?"" என்று கேட்டாள்.          """"அவர் கேட்டார் ; நான் செய்தேன்"" என்றாள் சீதை, அமைதியாக.      """"அவன் கேட்டானா?"" என்று கத்தினாள் அகலிகை ; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது.    அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா?          ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா?       இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.  """"உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?"" என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை.            """"உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?"" என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.         """"நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா ; உள்ளத்தைத் தொடவில்லையானால்? நிற்கட்டும் ; உலகம் எது?"" என்றாள் அகலிகை. வெளியிலே பேச்சுக் குரல் கேட்டது. அவர்கள் திரும்பிவிட்டார்கள்.     சீதை அரண்மனைக்குப் போவதாக வெளியே வந்தாள். அகலிகை வரவில்லை.    ராமன் மனசைச் சுட்டது ; காலில் படிந்த தூசி அவனைச் சுட்டது.   ரதம் உருண்டது ; உருளைகளின் சப்தமும் ஓய்ந்தது.கோதமன் நின்றபடியே யோசனையில் ஆழ்ந்தான். நிலைகாணாது தவிக்கும் திரிசங்கு மண்டலம் அவன் கண்ணில் பட்டது.புதிய யோசனை ஒன்று மனக்குகையில் மின்வெட்டிப் பாய்ந்து மடிந்தது. மனச்சுமையை நீக்கிப் பழைய பந்தத்தை வருவிக்க, குழந்தை ஒன்றை வரித்தால் என்ன? அதன் பசலை விரல்கள் அவள் மனசின் சுமையை இறக்கி விடாவா?            உள்ளே நுழைந்தான்.அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்க வேண்டிய இந்திர நாடகம், மனதிரையில் நடந்து கொண்டிருந்தது.  கோதமன் அவளைத் தழுவினான்.கோதமன் உருவில் வந்த இந்திர வேடமாகப்பட்டது அவளுக்கு. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி! கோமதன் கைக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை.அகலிகை மீண்டும் கல்லானாள்.       மனச் சுமை மடிந்தது.

                             *                     *                    *

கைலயங்கிரியை நாடி ஒற்றை மனித உருவம் பனிப்பாலை வனத்தின் வழியாக விரைந்துக் கொண்டிருந்தது. அதன் குதி காலில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது.   அவன் தான் கோதமன்....... அவன் துறவியானான்.

************************************************************************
Post a Comment