புறநானூற்றில் நிதி மேலாண்மை
அ.அறிவுநம்பி,   புலமுதன்மையர்,
புதுவைப்பல்கலக்கழகம்,         பாண்டிச்சேரி.
               
தமிழ் இலக்கியப்
பரப்பு அகன்றது. அப்பனுவல்களின் உள்ளடக்கங்களும் அளப்பரியன. நயமான இலக்கியப் பகுதிகட்டு
அப்பால் மொழி வரலாறு, கலை,
பண்பாடு, இடவரலாறு, அரசு,
பொருளியல், பழக்கவழக்கம், நம்பிக்கைகள் போன்ற பல்வேறு கூறுகளையும்
பழந்தமிழ் இலக்கியங்களில் காணலாம். சங்க இலக்கியங்களில் ஒன்றான படைப்பாகும்.
அரசியல் வாழ்க்கை, சமூக வாழ்க்கை, மக்களின் வாழ்வியல் போன்ற செய்திகளைப் புறநானூறு எடுத்துரைக்கும். புறநானூறு
பேசும் நிதி பற்றிய புறநானூறு எடுத்துரைக்கும். புறநானூறு பேசும் நிதிபற்றிய
செய்திகளை இந்த எழுத்துரை முன் வைக்கின்றது. அவ்வளவே.
அரசும் நிதியாதாரமும்
               
சங்க கால
அரசர்களின் பொருளியல் செய்திகள் பற்பல. மன்னனை உயிரென மக்கள் எண்ணியதும், அதனை மன்னர்கள் உணர்ந்து செங்கோல் கொண்டதும் வரலாறு. அரசாட்சி வளமுற நிகழப்
பொருள் வளம் தேவை. இதற்காக நாடாண்ட மன்னர்கள் நிலவரி, சுங்கவரி போன்ற வரிகளின் மூலம் கருவூலத்தைச் செழிப்புள்ளதாக ஆக்கினர்.
சங்கப்பாக்கள், அவற்றின் உரைகள் புலப்படுத்தும் செய்தி
வருமாறு : மன்னர்கள் மக்களிடம் பெற்ற பொருளுக்கு வரி, இறை, புரவு என்ற பெயர்கள் இருந்தன.    சான்றாக ஏற்றுமதிப் பண்டங்களுக்கும்
இறக்குமதிப்பொருட்களுக்கும் விதிக்கப் பெற்ற வரியான ‘உல்கு’ என்ற பெயருடைய வரி சுட்டத்தக்கது. இன்றைய
சுங்கம் (ஊருளுகூடீஆளு) என்பதன் பண்டைப் பெயரிது எனல் பிழையில்லை. சோழநாட்டில்
சுங்கச் சாவடிகள் பல இருந்ததையும்,
மதிப்பீட்டிற்குப்
பின் சுங்கவரி தீட்டப்பெற்றதையும் பட்டினப்பாலை போன்ற ஏனைய நூல்களும் நுவலும்.
புறநானூறு ‘படுவது’
என்ற
கலைச்சொல்லால் வரிச்சேகரிப்பை வரையும். மக்களின் பொருளில் நிலையறிந்து அதற்கேற்ப ‘வரிவசூல்’ நடந்தது. வரம்வு மீறி வரியிட்டால்
அம்மன்னன்,    
""""குடி புரவு இரக்கும் கூதிலாண்மைச் சிறியோன்""
(புறம் 75)  என இகழப் பெற்றான். இப்படி ஏளனவரிகளை
உதிர்த்தவனாகச் சோழன் நலங்கிள்ளி காணப்பெறுவது குறிக்கத்தக்கது.
வரிவிதிப்பும் இடிக்குநர் கடமையும்
               
தேவை கருதியோ, உடனுறைவோர் அறவுரைக்கிணங்கவோ மன்னன் எல்லைகடந்து மிகுவரி தீட்டியதும் உண்டு.
நிதி பெருக்கப் பலவழிகள் உள. மக்களைக் கசக்கிப்பிழியும் வரிமுறைமை கொடியதென்று
உணரவைக்க இடிக்குநர் பலர் இருந்தனர். அவருள் புலவர்களும் இருந்தனர். பாண்டியன்
அறிவுடைநம்பி இயல்புக்கப்பால் கூடுதலாக வரிவிதிக்க நேர்ந்தது. வாட்டமுற்றனர்
மக்கள். 184ஆம் புறநானூறு கூடுதற்செய்திளைச்
செதுக்கும். அறிவுறுத்த அரசனை அணுகியவர் புலவர் பிசிராந்தையார்.
                               
""""காய்நெல்லறுத்துக் கவளங் கொளினே                                   மாநிரை வில்லதும் பன்னாட்காகும்                                           நூறுசெறுவாயினும் தமித்துப் புக்குணினே                                வாய் புகுவதனினும் கால்பெரிது
கெடுக்கும்""
என்ற வரிகளின் வழி யானைக்குக் கவளந்தந்து
உண்பிப்பதால் பல நாளுக்கு உணவு அளிக்கமுடியும். யானையையே கழனியில் இறங்கவிட்டால்
அதன் கால்பட்டழியும் உணவுப் பொருட்களே மிகுதி. இப்பொருளை எடுத்துக்காட்டி, அரசன் நெறிப்படி வரிதீட்டின் பொருளிலும்,
மக்கள்
வாழ்வியலும் செப்பமுறும். மாறாக, அன்புக்கு எதிராக வலுக்கட்டாயமாக
மிகுபொருளை வரியென்ற பெயரால் பெற்றால்
                               
""""யானைபுக்க புலம்போலத்                                               தானும் உண்ணான்; உலகமும் கெடுமே"" (புறம் 184)
என விவரிப்பாற் பிசிராந்தையார். தெளிவான வரிக்கொள்கையும்
பொருளாதாரமும் இப்பாடலில் உறைந்துள்ளன. 
வருவாய்
மிகத்தேவைதான் ஓர் அரசுக்கு. ஆனால் மக்களை உறிஞ்சும் பணி மிகவும் கொடிதானது.
மற்றொரு புறநானூற்றுப்பாடல் சரியான மதிப்பீடின்றி,
நெறிகடந்து
விதிக்கப்பெற்ற வரிகளைப் போலவே, இயலாதார் மீது கடுமைகாட்டுவதும் தவறெனச்
சாற்றுகிறது. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வெள்ளைக்குடி நாகனார் என்பார்
வைக்கும் வேண்டுகோளே 35 ஆம் புறப்பாட்டு. விளைநிலங்களுக்கு
விதிக்கப்பெற்ற செய்கடனைத் தள்ளுபடி செய்து,
குடிமக்களுக்குப்
பொருளாதார விடுதலை வழங்கவேண்டும் என்பதே இப்பாட்டின் மையக்கரு. அவ்வாறு செய்த
அரசனை குடிபுரந்தருளிய கோ எனப் புகழுவர். பொருளீட்டும் திட்டம் பற்றி ஒரு குறளும்
குறிப்பிடும்.
                               
""""அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்                          புல்லார் புரள விடல்"" (குறள்
755)
என்பது அக்குறட்பா.
அரசின் கடமையும் அறவழியும்
               
அரசு இயங்க
நிதியம் தேவை. வரிவிதிப்பு உட்படப் பல்வகை வழிகளில் திபெருக்குதல் இன்றியமையாதது.
அவ்வாறு ஈட்டிய பொருள் பற்றியும் குறள் பேசும்,     
""""இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த   வகுத்தலும் வல்ல தரசு"" (குறள்
385)என்ற பா புகழ்பெற்ற பா. பொருள்
மிகுவிக்கும் வழிகளைக் கண்டறிவது இயற்றல். அவ்வழிகள் வழி செல்வத்தை அடைதல் ஈட்டல்.
அப்பொருறை அறத்திற்கு, பொருளாதாரத்துக்கு, இன்பப் பகுதிக்கு என வகுத்துச் செலவிடுதல் வகுத்தலாம்.               
இங்ஙனம் நாட்டை
வழிநடத்தும் அரசு எங்ஙனம் இருத்தல் வேட்டுமெனவும் புறநானூறு புகலும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை,
காலாட்படை ஆகிய  நாற்படைகளையும் வலுவாகப் பெற்ற மன்னனை
விடவும் அறநெறிதழுவியவனே முதன்மையானவன் என்பது 55 ஆம் புறப்பாட்டு.
                               
""""நான்குடன் மாண்டதாயினும் மாண்ட                                    அறநெறி முதற்றே அரசின்
கொற்றம்""
எனவே பொருளீட்டலிலும் அறம் இழைந்து
வருவதையே பண்டைய ஆட்சி கொண்டிருந்தது.
               
‘மன்னன் எவ்வழி
மக்கள் அவ்வழி’ என்பது முத்திரைத் தொடர். பொருளீட்டலையே
நோக்கமாகக் கொண்டவர்கள் வணிகர்கள். அவர்களின் நிதிநிலைமையையும் அறத்தின் அளவுகோல்
கொண்டே மதித்துள்ளனர். அப்பாதையில் உலாவரும் வணிகர்களைப் பழந்தமிழ்ப் பனுவல்கள் ‘தாழ்விலாச் செல்வர்’ எனப் போற்றும்.                
புலவர்களின்
ஈட்டுதல் முறைமையும் கருதத்தக்கது. வசதி நிறைந்த வளமான வாழ்விற்காகத் தம்
நிதியமைப்பைப் பெருக்கிக் கொள்ளாக புலவர்களின் பெருமையைப் புறநானூறு
பரிமாறுகின்றது. வறுமையில் வாடியவர் பெருஞ்சித்தரனார். அவரால் நாடப்பெற்ற மன்னன்
குமணன். பாடியபிறது கிடைத்தது பெரும்பொருள். வைப்பு நிதியாக அதனைப் பதிவதும்
அதன்வழி மிகுபொருள் பெறவும் வாய்ப்பிருந்தது புலவருக்கு. ஆனால் நிறைந்த பொருளுடன்
வந்த அவர் தன் மனைவியிடம் ‘கேட்டார்க்கும் கேளாதார்க்கும்
தரம்படுத்துக் காணாமல் கொடையாகக்கொடு"" என்றதாகப் புறநானூறு புனையும்.
பாடல்எண் 163. வளமான பொருளை ஈட்டிப் பதுக்காமல்
பகிர்ந்தளிக்கும் இம்முறைமை பாராட்டுக்குரியது.      
""""இன்னோர்க் கென்னாது என்னொடுஞ் சூழாது  வல்லாங்கு வாழ்துமென்னாது நீயும் எல்லோருக்கும்
கொடுமதி மனைகிழவோயே""என்ற வரிகள் போற்றுவதற்குரியவை. இப்படி,
மன்னரும்
மக்களும் பொருளீட்டும் பணியில் நின்றனர். அறவழியில் நிறைத்தனர்.அ.அறிவுநம்பி,   புலமுதன்மையர்,
புதுவைப்பல்கலக்கழகம்,         பாண்டிச்சேரி.
புறநானூற்றில் நீதி
               
பழந்தமிழற்
ஆட்சியைப் படம்பிடித்துக் காட்டுபவை சங்க இலக்கியப் புறப்பாடல்கள். பதிற்றுப்பத்து, மதுரைக்காஞ்சி, புறநானூறு போன்றவை எடுத்துரைக்கும்
அரசியற்செய்திகள் பற்பல. மன்னனின் ஆட்சிபற்றிய மதிப்பீட்டை உணர அவனது கொடையும்
வீரமும் கணக்கிலெடுக்கப் பெற்றதைப் போலவே அவனது அறச்சார்பான நீதி வழங்கலும்
நோக்கப்பெற்றது. மன்னன் வயது குறைந்தவனாயிருந்தாலும் அறமன்ற நடுவுநிலைமை
அறிந்தோனாக இருந்துள்ளான். வழக்குத் தொடரவந்த இரண்டு எள்ளி நகையாடியபோது வயதானவராக
ஒப்பனை செய்துகொண்டு கரிகாற் பெருவளத்தான் சரியான,
முறையான
தீர்ப்பளித்தாக வரும் புனைவுகளும் உண்டு. இவையாவும் புறநானூற்றுக் கால நீதிமாண்பை
எடுத்துரைப்பன. அந்நூல் முன்நிறுத்தும் அறங்கூறும் முறைமைகள் இவ்வெழுத்தில்
அடுக்கப்பெறுகின்றன. அவ்வளவே.
நீதிக்கு முன்னுரிமை
               
படைபலம்
பொருந்தி நிற்பதை மன்னர்கள் விழைந்தனர். எனினும் அதனைவிட அறத்தைக் காப்பதிலேயே
கவனங்காட்டினர். இதனைப் புறநானூற்றின் 55 ஆம் பாடல்,
                               
""""கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்                               நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய
புகல் மறவரும் என                 நான்குடன் மாண்டதாயினும் மாண்ட                                     அறநெறி முதற்றே அரசின் கொற்றம்""
எனப்பாடும். நீதி வழங்குதலில் மன்னர்கள்
தன்னிச்சையாக முடிவெடுப்பது இல்லை. எண்பேராயம்,
ஐம்பெருங்குழு
போன்ற அமைப்புகள் வழி பலரும் கலந்துரையாடிய பிறகே உரிய தீர்ப்புகள் வழங்கப்பெற்றன.
                               
""""அறம் அறக்கண்ட நெறிமாண் அவையத்து,                                                                 
               
முறைநற்கு
அறியுநர் முன்னூறப் புகழ்ந்த"" (புறம் 226)
என்ற வரிகள் குறிக்கத்தக்கன. மன்னனைப்
புகழுங்கால்,
                               
""""வலியர் என மீக்கூறலன்;
                                                                                                                          
மெலியர் என
மீக்கூறலன்                                              பிறரைத்தான் இரப்பு அறியலன்""
(புறம் 239)
போன்ற   வரிகளும்    கருதத்தக்கன.   மன்னனின்   கையில்  வீற்றிருப்பது செங்கோலா 
கடுங்கோலா என்பதை எடுத்துரைக்கும்
அளவுகோலே நீதிவழங்கு முறையெனப் புறப்பாடல்கள் புகலும்.
புறப்பாடல்கள் காட்டும் நீதிமுறைமை
               
அறங்கூறும் அவை
பற்றிய செய்திகளைக் குறுந்தொகை போன்ற அகப்பாட்டுகளும் பதிவு செய்துள்ளன (குறுந் 276). மதுரைக்காஞ்சியின் 489 ஆம் பாடல் ‘அறங்கூறவையம்’ எனப் பாடும். தன்னைப் பற்றிய பாடலொன்றில்
பிசிராந்தையார், மன்னனைக் குறிக்கும் போது,
                               
""""அல்லலை செய்யான் ;
காக்கும்""
(புறம் 191)
என மொழிகுவார். அவ்வாறாக மக்களால் நல்ல
ஆட்சியாளன் எனப் புகழப்படாயை மன்னர்கள் விழையவில்லை. அதனாலேதான் வஞ்சினம் கூறவந்த
அரசன் பூதப்பாண்டியன் பின்வருமாறு கூறக்காணலாம்.                               
""""அடின்நிலை திரியா சார்பின் சுவையத்து                                 திறனில் ஒருவனை நாட்டி முறைதிரிந்து                                மெலிகோல் செய்தேன் ஆகுக""
(புறம் 71)அவ்வாறு முறைசெய்து காப்பாற்றும் அரசனைப்
புலவர்கள் ஏத்தினர். அவ்வாறு புகழப்பெற்ற பாடல்கள் பல. இவண் ஒரு பதச்சோறும்                              
""""அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து  முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு  உறை வேண்டு பொழுதில் பெயல்
பெற்றாரே"" (புறம் 35)வெள்ளைக்குடி நாகனார் என்ற பெயருடையப்
புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கண்டு
""""அறக்கடவுளை வந்து ஆட்சி செய்வது போன்று செங்கோன்மை
செலுத்துபவன் நீ"" எனப் பாராட்டுவது கணக்கிலெடுக்கப் பெற வேண்டிய ஒன்று.     சமன்செய்து சீர் தூக்கும் கோலாக நின்னு
நடுவுநிலையை எண்ணுபவனே அரசன் என்பதைப் புறப்பாடல்கள் தெளிவுறுத்தும்.
மருதனிளநாகனார் என்பார்,     
""""அதனால் நமரெனக்கோல் கோடாது                                      பிறரெனக் குணங் கொல்லாது   நீ நீடு வாழிய"" என  55 ஆம் புறப்பாட்டில் பாண்டியன்
இளவந்திகைப்பள்ளித் துஞ்கிய நன்மாறனுக்கு எடுத்துரைப்பர்.நீதியின் வலிமையை
உணர்த்துதல்                             புறப்பாடல்களின்       பெரிய    பங்களிப்பாகப்    புலவர்களின்    அறவுரைகளைக் குறிக்கலாம். போரைத்
தடுக்கவும் உதவியவர்கள் அப்புலவர்கள். சிறையில் வாடிய மன்னனை விடுவித்த
புலவர்களும் காணப்படுகின்றனர். மன்னன் எங்ஙனம் நீதி வழங்க வேண்டும் எனக் கருங்கை
ஒள்வாட் பெரும் பெயர் வழுதிக்கு ஒரு புலவர் எடுத்துரைக்கிறார்.
                               
""""கருங்கை ஒள்வாட் பெரும் பெயர் வழுதி                                நிலம் பெயரினும் நின்சொல்
பெயரால்"" (புறம் 3)
என்பன அவ்வரிகள். பாடியவர் இரும்பிடர்த்
தலையார்.   அரசன் என்பான் அறநூலறிவு பெற்றிருக்க
வேண்டும். அத்துடன் முன்னோரின் முறைமைகளையும் கருத வேண்டும். இதனைப் புறப்பாடல்கள்
அடர்த்தியாகப் பேசுகின்றன. """"அரசர்களே மக்களிடை உண்டாகும்
எல்லா வழக்குகளையும் கேட்டு நீதி வழங்கப்போதுமான காலத்தைப் பெறமாட்டார். ஆதலின்
அறத்தவைகளும் தொழிற்பட்டு வந்தன. அவ்வகையில் அறநூல் வல்லார் குழு விளங்கிற்று. இக்குழுவினர்
ஞெமன் கோலன்ன நடுநிலைமை பெற்றுச் சிறந்தனர். இவ்வவை
""""அறமறக் கண்ட நெறிமாண் அவையம்"" என்று
பேசப்படுகின்றது. ‘அறம் துஞ்சு உறந்தைப் பொருநன்’  ‘மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து  அறம் நின்று நிலையிற்றாகலின்’என்பனவற்றால் உறையூரில் சோழர் அறத்தவை இருந்தது புலனாகும்""
(வித்துவான் மு.இராசாக்கண்ணனார்,
""""புறநானூறும் மன்னர்களும்"" புறநானூற்றுச்
சொற்பொழிவுகள், பக் - 63-64
(1944)) என்ற குறிப்புரை
நீதியின் மாண்பறிந்த பழந்தமிழகத்தைச் சுட்டும்.அன்றாடம் அறப்பணி செய்தலை நாளோலக்கக்
கடமைகள் என்றனர். வரிகள் முறையின்றித் தீட்டப்பெற்றால் புலவர்கள் மன்னரை
இடித்துரைப்பர். அப்போது மன்னர்கள் இயல்புணர்ந்து தம்மைத் திருத்திக் கொண்டனர்.
உரிய நீதி மக்களைச் சென்றடைந்தது.    
இவ்வாறான பல
செய்திகளைப் புறநானூறு பகரும். ஆட்சியின் திறனையுணர்த்த நீதிவழங்கல் முறைமையே
மதிப்பிடப் பெற்றுள்ளது. செங்கோல் ஏந்திய அரசு என்றவாறான புகழுரைக்கு அடித்தளமாக
அறங்கூறும் பாங்கே கருதப்பட்டது என்பதைப் புறநானூற்றின் பாடலடிகள்
எடுத்துரைக்கின்றன. 
 
 
 
No comments:
Post a Comment