Friday 18 October 2013

அடித்தளப்படிப்பு தமிழ்த் தாள்-1 முதற்பருவம் அலகு1


  


பட்ட வகுப்புகலையியல், அறிவியல், வணிகவியல் முதலாமாண்டு

முதல் பருவம்  பகுதி 1தமிழ் செய்யுள் திரட்டு

(20132014 கல்வியாண்டு முதல் நடைமுறைக்குரியது)

தாள் ஐ     கவிதையும் சிறுகதையும்    
                            

அலகு 1 புதுக்கவிதைகள்

அ. ஒரு கோயில் உண்டியல் குமுறுகிறது     சிற்பி பாலசுப்பிரமணியம்

            கொங்குநாட்டின் தங்கச் சிற்றூரில் கருவாகிப் பொள்ளாச்சியில் கவிதைக் குஞ்சாகப் பரிணமித்து வானத்திலே பாடிப் பறந்து, பாரதியின் பாசப் பிணைப்பிலே தவழும் குயிலிது.         புல்லாயினும், பூவாயினும், பூனையேயாயினும் அதனுள் மனிதத்தைக் கொண்டு வந்து நிறுத்தி எடையிட்டுக் காட்டும் நியாயத்தராசு இது. அடுப்பங்கரைப் பூனைகளைப் பாப்பாக்களுக்காகப் பாடிய பாவலர்கள் கூட்டத்தில் ஆதிக்க வெறி கொண்ட ஆணவ, மனிதப் பூனைகளை அல்லவா இனம் காட்டுகிறார் சிற்பி.        தாயின் மணிக்கொடியை மட்டுமே பிறர் காண, இவர் அக்கொடியின் ஓட்டைகளையும், கிழிசல்களையும், அவல நிலையையும் பார்த்து வெதும்புகிறார்.       இமயம் முதல் குமரிவரை ஒன்றே தேசம், இந்தியத் தாயை வணங்குவோம் என்று கழுத்து நரம்பு புடைக்க நாம் கத்தும்போது அத்தாயின் """"கற்பினை"" விலைபேசும் """"நாற்காலிக்காரர்""களை ஆவேசமாக அடையாளம் காட்டுகிறார்.இந்தியத் தலைவர்களின் மயான சத்தியங்களால் இணையற்ற இந்தியா கனவாகிப் போக, கள்ளச் சந்தையில் அதிசயச் சித்தர்களின் ஆரவாரப் பேச்சால், மனிதம் நாளும் கொல்லப்படுவதைப் பார்த்தும் சீறத் தெரியாத பாம்புகளாக இருக்கும் மக்களுக்குக் கண்ணீர்த் துளிகளோடு கசப்புமாத்திரைகளைத் தருகிறார். அரசியலில், ஆலையங்களில் மலிந்திருக்கும் ஊழலைச் சாடுகின்றார் கவிஞர்.

எனது வாய்

பேசுவதற்கா அல்ல.

இரவும் பகலும்

எந்த நேரமும்

உண்டு பெருக்கவே

திறந்தது என்வாய்!

ஆனால் நான் பேசும்போது

நாணயமே பேசுகிறது.............

கோபுரம் இல்லாத

கோயில்கள் கூட உண்டு.

உண்டியல் இல்லாக் கோயிலை

இனிமேல் தான்

கண்டு பிடிக்க வேண்டும்!

எனக்குக்

கைகள் இல்லை யென்றாலும்

அன்பர்கள் உபயமாய்க்

கிடைக்கிறது காணிக் """"கை""

விக்கிரகங்கள் இருக்குமிடத்தை

கருப்பக் கிரகம் என்று

தவறாகக் கூறுகிறார்கள்

வ""""சூல்"" கொண்டு

அடிக்கடி கர்ப்பிணி ஆவதால்

நானே கோயிலின்

மெய்யான கருப்பக் கிரகம்!

இதனால் தானோ என்னவோ

எங்களுக்குப் பிரசவம் பார்ப்பதில்

ஆசை பலருக்கு...............

சிலர் ஆயுதக் கேசாகவும்

ஆக்கி விடுகிறார்கள்!

பெருமையாகச்

சொல்லக் கூடாதுதான்

ஆனாலும்

தெய்வச் சந்நிதியைவிட

என் நிதிக்கு

மகத்துவம் அதிகம்.

திருப்பதி என்றதும்

பெருமாளுக்கு முன்னே

பெரிய பெருமானாக

எல்லோரும் நினைப்பது

என்னைத்தான்!.......

எத்தனையோ

வெறும் ஆளையெல்லாம்

நான் தானே

பெருமான் ஆக்குகிறேன்?

மனித வாழ்வில்

துயரம் நிறையும் போதெல்லாம்

என்வயிறு நிறைகிறது.

பசுவின்மடி கனக்கும் போது

கன்றுகளுக்குப்

பால் அபிசேகம்!

நெஞ்சில் துயர்

கனக்கும் போது

எனக்குப்

பண அபிசேகம்!

குலுக்குவதும் தளுக்குவதும்

என் வழக்கமல்ல.

ஆனால்

இந்தத் தேசத்தின்

அரசியல் புள்ளிகள் பலர்

உண்டியல் குலுக்கியே

நாட்டை

உண்டு இல்லையென்று

ஆக்கித் தீர்த்தார்கள்!

குலுக்கப் படாத

உண்டியல்கள் சிலவும்

இருக்கின்றன.

கோயில் வாசல்களிலல்ல.........

அலுவலக மேசைகளில்

அதிகாரி கண்சமிக்ஞையில்

கல்லூரி அனுமதியில்

காண்டாக்ட் திரைமறைவில்

சட்டப் புத்தகச்சரிவில்

நட்ட நடுத் தெருவில்............

பட்டப் பகலில்............

என் வாரிசுகள்

என்னை மிஞ்சிவிட்டார்கள்

நானாவது என்றும் இருக்கும்

ஆண்டவன் பெயரால்

வாங்கித் தொலைக்கிறேன்

இவர்கள்

அன்று இருக்கும்

ஆளுபவன் பெயரால்

அஞ்சாமல் வாங்குகிறார்கள்

அது மட்டுமா?

வாங்கியதில் கொஞ்சம்

என்வாயிலும் வீசிக்

கடவுளைச் சும்மா

கிட என்கிறார்களே!

------------------------------

ஆ. கருவறையிலிருந்து ஒரு குரல்                                                                                                           - ஈரோடு தமிழன்பன்

            மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதைக்குப் பயணித்த கவிஞர்களில் இவரும் ஒருவர். சொல்வளம் இவரது செல்வ வளமாகும். """"தீவுகள் கரையேறுகின்றது"" """"தோணி வருகிறது"" """"தமிழன்பன் கவிதைகள்"" """"சிலிர்ப்புகள்"" """"நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்"" என ஏராளமான கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். ஒரு கம்பீரமான தொனி இவரது கவிதைகளின் பின்னணியில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

            இந்த உலகில் மனித வாழ்க்கையில் இருளை ஏற்படுத்திய காரணங்களைக் கருக்கும் தீப்பந்தமாகவும் இருளை விரட்டி வழி காட்டும் - புதிய உலகைப் புலப்படுத்தும் தீபமாகவும் அமையும் இவரது பாட்டின் வரிகள் வெப்பச் சீற்றமும் ஒளியின் வீச்சுமாக மாறி மாறிக் காட்சி தருகின்றன. உறங்கிக் கிடந்த உள்ளங்களில் ஊக்கத்தை விதைக்கவும், நலிந்து கிடக்கும் நெஞ்சுகளில் நம்பிக்கைப் புனல் வார்க்கவும், ஊர் சுற்றிப் பேர் பெற்று வந்த கவிஞரின் """"ஊர் சுற்றி வந்த ஓசை"" என்னும் கவிதைத் தொகுப்பு நூல் அமைகின்றது.

கருவுற்றிருந்த அந்தப்

பாறையோடு

காது வைத்துக் கேட்டேன்..........

வெளிவரத்

துடிக்கிறதோ

ஒரு சிலை?

                                  

தெய்வமாக

வேண்டாம்

அருங்காட்கியகங்களில்

வரலாற்றுச்

சான்றாய் வந்தமரக் கூடாதா?........’ என்றேன்.

""""வரலாறு,

எமைப் படைத்த

கரங்களை எங்கே மதித்தது?

படைக்க வைத்த

மன்னர்களின்

ஓட்டை வெண் கொற்றக்

குடைகளுக்கு

ஓட்டுப் போடுவதே அதற்குவேலை.""

தலைவர்களில்

எவருடைய சிலைதானோ நீ?’

என்றேன்

""""தண்டிக்கப்பட்ட

பாறையென்று

தப்புக் கணக்குப் போட்டு விட்டாய்!

கல்லின் ஆன்மா

களங்கப் படுவது

உங்கள்

தலைவர் பலருக்குச்

சிலையாய்

உருவாகும் போதுதான்""

பின்

 என்ன சிலையென்று

 என்னிடம் சொல்லக் கூடாதா?’

நலன்கள்

நடந்து போகும் - அவர்வீட்டுப்

பாதைக்குச்

சரளை ஒன்றாய்ப் பயன்படுவதுதான்

அவர்கள்

சிரிப்பொலியை, கவலையில்லா

உரையாடலைக்

கேட்பதற்கு

அவர்கள் வீட்டுச்

சுவருள் காதாகி - அதற்குள் நான்

வாழ்வதுதான்.

இன்றேல்

இப்போதே இந்தப் பாறையை

உடைத்துத் தகர்த்து விட்டு

வெளியேறி விடுவேன் நான்"" என்றது

வெப்பம்

தாங்காது

வெடுக்கென்று என் செவியை

விலக்கிக் கொண்டேன்.

என்

விழிமுன் - அந்தப்

பாறையே ஒரு

புத்தகமானது........

காற்று வந்து பக்கங்களைப்

புரட்டியது.   

         

           ----------------------------------------

இ. தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி                                                          - மு. மேத்தா

புதுக்கவிதை, வரலாற்று நாவல் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர். """"கண்ணீர்ப் பூக்கள்"" முதலிய பல கவிதைத் தொகுப்புகள் தந்தவர். வானம்பாடி இயக்கத்தில் முன்னணியில் இருந்து சாதனைகள் புரிந்தவர்.

            பாவேந்தர் விருது போன்ற பல இலக்கியப் பரிசுகள் பெற்ற பெருமை இவருக்கு உண்டு. திரைப்படத் துறையிலும் ஈடுபாடு கொண்ட இவரின் அண்மைக் காலப் படைப்பு """"நாயகம் ஒரு காவியம்"".            இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட காந்தியின் எண்ணங்களுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்பட்ட அவலத்தை எடுத்துரைக்கின்றது இக்கவிதை.

உன்னுடைய படங்கள்

ஊர்வலம் போகின்றன.....

நீயேன்

தலைகுனிந்தபடி

நடுத்தெருவில்

நிற்கிறாய்?

வெளுத்துப் போய்விட்ட

தேசப் படத்துக்குப்

புதுச்சாயம் பூசும்

புண்ணிய தினத்தில்

புத்திர தேசத்துக்காக நீ

புலம்புவது

என் காதில் விழுகிறது!

எங்கள்  தேசப் பிதாவே!

அமைதி கொலுவிருக்கும்

உன் சிலைகளைப்

பார்க்கும் போதெல்லாம்

நான்

அழுது விடுகிறேன்!

கண்ணீரின்

வெப்பத்தால்

என் கவிதை

முழுமை பெறாமலே

முடிந்து விடுகிறது........

தேசப் படத்திலுள்ள

கோடுகள்

விடுதலைக்குப் போராடிய

வீரத் தியாகிகளின

விலா எலும்புக் கூடுகள்

அழிக்க முடியாத

கல்லெறி படாத

அந்த நினைவுச் சின்னத்தின்

மூலமே

அவர்களுக்கு நாங்கள்

அஞ்சலி செலுத்தி விடுகிறோம்!

கண்ணீர் கடலில்

கலங்கள் மூழ்கிய பிறகு

அடைக்கலம் தேடிய

ஆபுத்திரனே!

அமுதசுரபியைத்தான்

நீ தந்து சென்றாய்..........

இப்போது,

எங்கள் கைகளில் இருப்பதோ

பிச்சைப் பாத்திரம்!

இந்த

மாற்றத்தை நிகழ்த்திய

மந்திரவாதிகள் யார்?

நிழலுக்குள் மறைந்திருக்கும்

நிழலை

யார் அம்பலப்படுத்துவது?

சரித்திர மாளிகையில்

அஹிம்சைப் பேரொளியில்

பகத்சிங்குகள்

மறைக்கப்பட்டதால்தானா

சுதந்திர மாளிகையை

எலிகள்

சுரண்டுகின்றன?

மயிலுக்குப் போர்வை தந்தவனின்

மரபிலே வந்தவர்கள்

எங்கள் மேனியில் கிடக்கும்

கந்தல் சட்டையையும்

கழற்றிக் கொண்டு போகிறார்கள்!

ஆடுகளை

உனக்காக வளர்த்தோம்

நாளடைவில் நாங்களே

மந்தை ஆடுகளாய்

மாறிப் போனோம்!

எங்கள்

வயிற்றைப் புறக்கணித்துவிட்டுக்

காம்புகளை நேசிக்கிறார்கள்........

எங்களுக்குத்

தீவனம் கிடைக்காவிட்டாலும்

மேய்ப்பவர்களுக்கு மட்டும்

எப்படியோ

இனாம் கிடைத்து விடுகிறது.........

கண்ணீரின் வெப்பத்தால்

என் கவிதை

முழுமை பெறாமலே
முடிந்து விடுகிறது.........
சட்டக் கட்டிடங்களில்
ஓட்டைகள் விழுந்துவிட்டன
வயதாகிப் போனதால்
தர்ம ஸ்தூபிகள்
தள்ளாடுகின்றன
எங்கள் வாழ்க்கை
இருட்டோடு
இல்லறம் நடத்துகிறது!
பாவத்தைத்
தனித்தனியே செய்துவிட்டு
மொத்தமாகத் தீர்த்துக் கொள்ளப்
போதுமான அளவு
புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதால்
எங்கள்
பாரத புத்திரர்கள்
தூசு படாமல்
தூய்மையாகவே இருக்கிறார்கள்!
ராஜதானியில்
மலர்க்கிரீடங்கள்
சூட்டப்படும்போது
சேரிக் குழந்தைகளின்
சின்ன விழிச்செடியில்
உப்பு மலர்கள்
உதிர்ந்து விழுகின்றன..........
நீ கண்டுபிடித்த
சுதேசிய ஆயுதமாம்
கைராட்டையைச் சுற்றிய சிலர்
தற்போது
தங்கநூல் நூற்கிறார்களாம்........
எங்களுக்கோ
வெள்ளியும் தங்கமும்
விழாக்களின் பெயரில்தான்
வருகின்றன!
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்
இந்த நாட்டு மக்கள்
உன்னை
அப்படியே பின்பற்றுகிறார்கள்
அரைகுறையாகத்தான்
உடுத்துகிறார்கள்!

தேசம் போகிற

போக்கைப் பார்த்தால்

பிறந்தநாள் உடையே

எங்கள்
தேசிய உடையாகிவிடும் போல்
இருக்கிறது,
எங்கள் தலைவர்கள்
வறுமையை எப்படியாவது
வெளியேற்றிவிட வேண்டுமென்றுதான்
மேடையில்மைக்கின் முன்னால்
பேச்சுத் தவம் செய்கிறார்கள்!
இருபத்தைந் தாண்டுகளில்தேசத்தில்
மாற்றமே நிகழவில்லையென்று
யார் சொன்னது?
கண்ணீர்க் கடலில்
கலங்கள் மூழ்கிய பிறகு
அடைக்கலம் தேடிய
ஆபுத்திரனே!
அமுத சுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்........
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம்!
அணைக்கட்டுகளில்
திறக்கப்படும் தண்ணீர்
பள்ளங்களை ஏமாற்றிவிட்டு
மேட்டை நோக்கியேபாய்கிறது.
 சேரிகளில் மட்டுமே நீ
யாத்திரை செய்வாய்
என்பதைத்
தெரிந்து கொண்டதால்
உன்னை நேசித்தவர்கள்
சேரியாக மாற்றிவிட்டார்கள்!இந்த
மாற்றங்களை நிகழ்த்திய
மந்திரவாதிகளின்
கழுத்துக்கு
நாங்கள் மாலை சூட்டுகிறோம்!

----------------------------

உன்னுடைய படங்கள்
ஊர்வலம் போகின்றன.......
நீயேன் தலைகுனிந்தபடி
நடுத்தெருவில் நிற்கிறாய்!
புத்திரதேசத்துக்காக நீ
புலம்புவதுஎன்காதில் விழுகிறது.
அமைதி கொலுவிருக்கும்உன்சிலைகளைப்
பார்க்கும் போதெல்லாம் நான்அழுதுவிடுகிறேன்.
கண்ணீரின் வெப்பத்தால்என் கவிதை
முழுமை பெறாமலே
முடிந்து விடுகிறது.......
  ஈ.நிலவின் எதிரொலி         -சு. வில்வரெத்தினம்

            வேலாயுதர் சுப்பிரமணியம். வில்வரெத்தினம் 1950 இல் ஈழத்துப்புங்குடு தீவில் பிறந்தார். இவரது முதல்  படைப்பு 1970 ல் மல்லிகைஇதழில் வெளிவந்தது. அகங்களும் முகங்களும்’ (1985), ‘காலத்துயர்’ (1995), காற்றுவழி கிராமம், நெற்றி மண் ஆகியன இவர் வெளியிட்டுள்ள கவிதைத்தொகுப்புகளாகும்.

            ஈண்டுப் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள நிலவின் எதிரொலிஎன்ற கவிதை """"வேற்றாகி நின்ற வெளி"" என்ற ஈழத்துக் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

பறம்பு மலை
பாரி மறைந்து
பரிதியும் மறைந்த இருளில்
அகதிகளாயினர்
அங்கவையும் சங்கவையும்
வென்றெறி முரசம் வீழ்ந்த கையோடு
குன்றிலேதொய்ந்த முகநிலவின் சோகம்
படர்கின்ற ஒற்றையடிப் பாதையினூடே
பாரி மகளிர் நடந்தனர்
மலையின் இறங்கிப் பெயர்ந்து
தானும் தளர்நடை நடந்தது நிலவும்
தள்ளாத வயதின் கபிலர் துணைபோல
நடந்து, இளைத்து, தேய்ந்து
நரைவிழுந்து போனது
வெண்ணிலவும்தான்
கபிலரும்தான்
பாரிமகளிரும்தாம்
பறம்பு மலை வாழ்வும்தான்.
வாழ்விளைத்த மகளிரை
ஔவையிடம்
பவ்வியமாகக் கையளித்துவிட்டுக்
கபிலர் மறைந்தார்
பயணம் தொடர்ந்தது.
கூழ்குடித்த சேரியெல்லாம் ஔவையோடு
கூடவே நடந்தனர் பாரிமகளிர்
நின்று நிதானித்து
நிலவும் நடந்தது.
அதியமான் கொடுத்த நெல்லிக்கனியீந்த
ஆயுட்காலம் முடிவிற்கு வந்ததோ
ஔவை அவசரப்பட்டுவிட்டாள்.
தன்னைப்போல் தமிழ்செய்த மகளிரைப்
பறம்பு மலை வாழ்வை அழித்தவர்க்கே
தாரை வார்த்துக் கொடுத்தாள்
காலந்தாழ்த்திய திறைப்பொருளாகக்
கூழோ கஞ்சியோ வார்த்தவர்
குடியில் கொடுத்திருந்தாலும்
பாரியின் ஆன்மா பரவசப்பட்டிருக்கும்.
பாவம் அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவின்
பறம்பு மலைக்குன்றும்,
வென்றெறி முரசும்,
அந்தப்புரத்து அடிமைகளாகிவிட்ட
அங்கவையும் சங்கவையும்
இரங்கி அழுதவையெல்லாம்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவிலும்
எதிரொலிக்கின்றனவே.
     உ. அறுவடைக்காலம்                                                                        - இளம்பிறை

            இயற்பெயர் க. பஞ்சவர்ணம். 88 லிருந்து எழுதிவருகிறார். இளவேனில் பாடல்கள், மவுனக்கூடு ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது அனைத்துக் கவிதைகளும் நிசப்தம்என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவரது அறுவடைக்காலம்என்னும் இக்கவிதையில் ஏழைகளின் அவலநிலையை எடுத்துரைத்துள்ளார்.

அல்லுபகல் உழைப்பவள...
அடிக்க கைய நீட்டாதய்யா...
சீக்கிரமா சமச்சித்தாரேன்
சிடுசிடுன்னு பேசாதய்யா...
கழுத்தக்கட்டி தூங்குகிற
கண்மணிக்கு ஆதரவா...
துணிமூட்டத் தலயணய...
துணையாக சேத்துவச்சி
உங்களுக்கு முன்னெழுந்து...
உழைப்பவள  வையாதய்யா...
கஞ்சி கொஞ்சம் ஊத்திகிட்டு...
கதிரறுக்கப் போகும் போது
கோழிகூட கூவுதில்ல
கொடும­ய நான் என்ன சொல்ல
கொட்டுகிற பனியில
குனிஞ்சு அறுக்கயில
அடிவயிறும் நடுங்குதய்யா...
ஆரிடத்தில் இதைச் சொல்ல...
புள்ளகுட்டி போதுமுன்னு
பண்ணிகிட்ட ஆபரேசன் - கதுர
அள்ளிப் போட்டு தூக்கயில
முள்ளுபோல குத்துதய்யா...
மூச்சுவிடத் திணறுதய்யா...
காலையில போகயில
கஞ்சிதண்ணி குடிச்சானோ...
பள்ளிக்கூடம் போன மகன்
பத்திரமா இருப்பானோ.
கண்ணான அவன எண்ணி
கண்ணும் தண்ணி வடிக்குதய்யா..
களத்துல கட்டுடைத் துடச்சி...
கச்சிதமா நெல் உதிர்த்து...
காத்துவரும் நேரம்பாத்து...
தூத்தி முடிக்குமுன்னே...
கண்ணுல விழுந்த தூச
நின்னெடுக்க நேரமேது அட
ஒன்னுக்கு இருக்கக்கூட

ஒழியுதில்ல நேரமய்யா...

கொட்டி குமிஞ்ச நெல்லில்
கொடுத்த கூலி வாங்கிகிட்டு
குறுகலான வரப்புவழி...
கூலிநெல்லத் தூக்கிகிட்டு
எட்டி அடிவச்சும்...
எட்டுமணி ஆச்சுதய்யா...
பச்சவெறகு பத்த நேரமாகுதய்யா...
கண்ணு கலங்குதய்யா...
கைநீட்ட நியாயமுண்டா?
உழைச்சதால உனக்குமட்டும்
உடம்புவலி தாங்கலேனு
ஊத்திகிட்டு சாராயத்த...
அல்லுபகல் உழைப்பவள...
அடிக்க கைய நீட்டாதய்யா...
சீக்கரமா சமச்சித்தாரேன்
சிடுசிடுன்னு பேசாதய்யா.

----------
ஊ. ஹைகூ கவிதைகள்    தமிழ்க் கவிதை இலக்கியத்தில், பரிசோதனை வடிவமாக உருவெடுத்த புதுக்கவிதையை அடுத்துத் தோன்றிய கவிதை வடிவம் ஹைக்கூ (ழஹஐமுரு) ஆகும். மானுட வாழ்வின் செயல்பாடுகளை, அறிவுக்கண் கொண்டு நோக்காமல் உணர்வுகளை மையமிட்டும், இயற்கையின் சீரான செயல்பாடுகளை உள்ளடக்கியும் அணுகும் ஜப்பானின் ஜென் புத்தக் கோட்பாடுகளே, ஹைக்கூ கவிதைகளின் அடிநாதம் ஆகும். இந்த தலைப்பில் பல கவிகளின் கவிதைத் தொகுப்பில் இருந்து பெறப்பட்ட சில ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

1. பசிக்கு ஜனநாயகப் பயிர்
  விதை நடும் இடங்களிலும்      கொடிமரங்கள்.                                                       (தமிழன்பன் - சூரியப்பிறைகள்)

2. புதிய ஆட்சி
   புதிய தேர்தல்                             வெங்காயம்.  (அசோக்குமார் - இன்னும் மக்கள்)                                                       

3. மணமகளின் அங்கக்குறை
    நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதே
 தங்கம்.                                                                    (முரளிதரன் - கூடைக்குள் தேசம்)

4. உடையெல்லாம் கிழிசல்
    உள்ளமெல்லாம் புகைச்சல்
    ஊருக்குத் துணிநெய்கிறான்.  (அமுதபாரதி ஐக்கூ அந்தாதி)

5. குப்பைத்தொட்டிலில்
   நாய்களின் போராட்டம் இயலாமையுடன்
   மனிதக்கூட்டம்.                                (பரிமளமுத்து இலையுதிர் காலம் நிரந்தரமல்ல)

6. எங்கும் பார்த்தீனியச் செடிகள்
   வெட்டி வெட்டிப் பார்த்தேன்
   கைகளெல்லாம் கொப்புளங்கள்.       (பரிமளமுத்து இலையுதிர் காலம் நிரந்தரமல்ல)

7. விரல் நுனியல் மட்டுமா?
   முகத்திலும் கரி
   தேர்தல்.                                            (புதுவை சீனு தமிழ்மணி கரந்தடி)

8. நான்கு நாள் பட்டினி
இறந்த பின் போடுகிறார்
வாய்க்கரிசி.                                        (முத்துராமலிங்க ஆண்டவர், இன்னும் மக்கள்)

9. பேசாமல் உறங்கும்
   பேனாவுக்குள் மை ; விழித்தால்
  புறப்படும் பீரங்கி.                               (அமுதபாரதி காற்றின் கைகள்)

10. பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
    முத்தமிட்டுச் சொன்னது பூமி
    ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ. (தமிழன்பன் - சூரியப்பிறைகள்)
11. விண்முட்டி வளர்வதற்கு
   வெந்துதான் தீர வேணும்
   சூளை நெருப்பில் செங்கல்.              (அமுதபாரதி ஐக்கூ அந்தாதி)

-----------------------------------------------


No comments: