Thursday, 19 October 2017

தமிழ்த்துறை நோக்கு (vision) இலக்கு (Mission)

  தமிழ்த்துறை

நோக்கு (vision)
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
செம்மொழியாம் தமிழ்மொழியின் பழம்பெருமைகளை மாணாக்கர்களுக்குக் கற்பிப்பதுடன் அவற்றின் வழி சிறந்த சமூகத்தை உருவாக்குவதும் உலகம் முழுவதும் தமிழ்த்துறை மாணவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்பினை அறிமுகப்படுத்துவதும், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு அவற்றிற்கு இணையாக மற்றும் மேலாக தமிழை மேம்படுத்துவதும்  தமிழ்த்துறையின் நோக்கம் ஆகும். தன்னாட்சித் தகுதி பெற்றவுடன் தமிழ்த்துறைப் பாடத்திட்டங்கள் மாணவர்களின் வேலைவாய்ப்பு நோக்கில் மாற்றியமைக்கப்பட்டன. நேர்மையான மற்றும் நீடித்த கடின உழைப்பு மூலம் பெறக்கூடிய நற்பயன்களையும் ஒற்றுமை உணர்வையும் போதிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இலக்கு (Mission)
தமிழியல் கல்வியைப் புதுமைக்கும் உலகமயமாதலுக்கும் ஏற்ப மாற்றி, பல்துறை ஆய்வூக்கமும் செயல்திறனும்,  நோக்கும் கொண்டதாக புதுமை பாதையில் நடைபோடும் வகையில் சிறப்புற அமைப்பதும், கணினி, இணையம் சார்ந்து மாணவர்கள் அறிவைப் பெறவும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழிகாட்டுவதும்.
மொழி, இலக்கியம், கலை முதலான பண்பாட்டு நிகழ்வுகளைக் கண்காட்சி மற்றும்  போட்டிகள் நடத்தி அவற்றை  ஆவணப்படுத்தி எதிர்காலச் சமூகத்திற்கு வழங்குவதும் தேவையான மரபுகளையும் மனித மதிப்புகளைத்  தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும்,  நனி நாகரிகச் சமூகத்தைக் கட்டமைப்பதும், அனைத்துத் தரப்பு மக்களோடும் இயற்கையோடும் தம் உறவை  மேம்படுத்திக் கொள்ள பயிற்சியளிப்பதும் தமிழ்த்துறையின் இலக்காகிறது.

  தமிழ்த்துறையின் சிறப்பம்சங்கள் (silent features)

1879 இல் கல்லூரி துவங்கிய போதே, அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும்,பாகம் -1 தமிழ் கற்பிக்கும்முகமாகத் தமிழ்த்துறையும் மலர்ந்ததுதற்போது இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) முனைவர் பட்ட (Ph.D.,) ஆய்வுகள் த்தப்பட்டு வருகின்றன. மாணாக்கர்களின் தமிழ்மொழி அறிவையும் தமிழ் இலக்கிய அறிவையும் வளர்ப்பதுடன் உலகெல்லாம் விரவியுள்ள தமிழ் இன மக்களின் வாழ்வியலையும் அறிமுகப்படுத்துவது, மாணாக்கர்களின் கற்பனை, படைப்பாற்றல் திறனை மேம்படுத்துதல், தமிழ் இலக்கியங்களின் வழி அறியலாகும் வாழ்வியல் விழுமியங்களை கண்டுணர்ந்து புதிய பல ஆய்வுகளை நிகழ்த்துவது தமிழ்த்துறையின் இலக்காக அமைகின்றது. இலக்கியப் பாடங்கள் வழியே அனைத்துத்துறை மாணவர்களுக்கும் தமிழ் உணர்வை அறிவித்தல், அறிவுறுத்தல், இலக்கியச்சுவையினை அளித்தல் ஆகியவை முறையாக ஊட்டப்பெறுகிறது.
பேராசிரியர் தேவநேயப்பாவாணர், முனைவர் தி.முருகரத்தினம், முனைவர் ஆறுமுகம், முனைவர் உலகுசுப்ரமணியம், முனைவர் பெ.மாது போன்றோர் இத்துறையில் துறைத் தலைவர்களாகப் பணியாற்றிச் சிறப்பித்துள்ளனர். இக்கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றிய முனைவர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இதே துறையில் கல்லூரி முதல்வராகவும், கல்லூரி கல்வி இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
2014 ஆம்ஆண்டு முதல் முனைவர் சீ.குணசேகரன் அவர்கள் துறைத்தலைவராகச் செயலாற்றிவருகிறார்கள். நான்கு இணைப்  பேராசிரியர்களோடும்,  பத்து உதவிப்பேராசிரியர்களோடும் தமிழ்த்துறை இன்றுமிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பேராசிரியர்கள் பன்னிருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள். ஆய்வை முடிக்கும் தருவாயில் இருவர் உள்ளனர்.
மாணவர்கள்  பலர் யுஜிசி தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளனர். பல்கலைக்கழக மற்றும் செம்மொழி படிப்பு உதவித்தொகையினையும் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10 க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட பொதுவாய்மொழித்தேர்வு இத்துறையில் நடைபெற்று வருகிறது.
துறையின் சார்பில் நடத்தப்பெறும் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டங்களில் துறைசார்ந்த பல்வேறுஅறிஞர்பெருமக்கள் பேருரையாற்றிச் சிறப்பித்துள்ளனர்.
பல்வேறு துறைகளில் பயிலும் மாணவியர்க்குத் துறையின் சார்பில் இலக்கியப் போட்டிகள், வினாடி வினாப் போட்டிகள், நாடகம்,கட்டுரைப் போட்டி,  தமிழ்க்கவிஞர் பாடல் ஒப்புவித்தல் போட்டி ஆகியன நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்த்துறையில், ஆண்டுதோறும் பாவாணர் பெயரில் அனைத்து துறை மாணவர்களுக்கும்  தமிழின் தொன்மை, செம்மொழித்தன்மை குறித்த போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.   இக்கல்லூரி மாணவர்கள் பல அரசுப்பணிகளில் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். இத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர்.
இத்துறையில் பயின்ற மாணவர்கள் ஆசிரியர்களாக, கல்லூரிப் பேராசிரியர்களாக, திரைப்படக் கலைஞர்களாக, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக, தனியார் வங்கி பணியாளர்களாகச் சிறந்த விளையாட்டு வீரர்களாக, இதழியல் கலைஞர்களாகக் காவல் துறைப்பணியாளர்களாகச் சமுதாய வளர்ச்சிக்கும் உயர்விற்கும் தங்கள் உழைப்பை நல்கி வருகின்றனர்.


No comments: