Sunday, 17 June 2018

2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்2



.மணிமேகலை
தமிழ்க் காப்பியங்களின் தலைப்புக்களே பல சிந்தனை உணர்வுகளை எழுப்புகின்றன. சிலப்பதிகாரம் கண்ணகி, பாண்டிமாதேவி ஆகிய இருவரின் சிலம்பை மையமாகக் கொண்டு அமைகின்றது. சீவக சிந்தாமணி  காப்பியத் தலைவன் சீவகன் பெயரைத் தாங்கி நிற்கிறது. சூளாமணி  அணிகலன் பெயரைக் கொண்டு அமைகின்றது. மேலை நாட்டுக் காப்பியங்களும், வடமொழிக் காப்பியங்களும் ஆண் பாத்திரங்களையே முதன்மைப்படுத்தி அமையத் தமிழில்தான் பெண் பாத்திரங்களை முதன்மைப்படுத்திப் பல காவியங்கள் எழுந்துள்ளன. அவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒரு காப்பியப் படைப்பே மணிமேகலை.

தலைப்பு
காப்பியத் தலைவி மணிமேகலை பெயரால் இக்காப்பியத் தலைப்பு அமைகின்றது. இந்த மணிமேகலை என்ற பெயர் கோவலனின் குல தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயர் என்பது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது. பொது நிலையில் மணிமேகலை என்பது ஒருவகை அணிகலன் ஆகும். மகளிர் தம் இடையில் அணியும் நகை மேகலை. இது மணியால் (மாணிக்கம்) செய்யப்பட்டதால் மணிமேகலை எனப்படும்.
இந்தப் பெருங்காப்பியத்தின் தலைப்பு, இதன் கதைத் தலைவியான மணிமேகலையின் பெயரால் அமைந்துள்ளது. மேலும், ஒரு சிறப்பாக, முந்திய காப்பியத் தலைப்பு சிலம்பின் பெயரால் அமைந்துள்ளது போன்றே, மகளிர் அணியாகிய மணிமேகலையின் பெயராலும் அமைந்துள்ளது இக்காப்பியம்.

 மலர்வனம் புக்க காதை

வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
வெந் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
மாதர் செங் கண் வரி வனப்பு அழித்து
புலம்பு நீர் உருட்டிப் பொதி அவிழ் நறு மலர்
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட
03-010
மாதவி மணிமேகலை முகம் நோக்கி
தாமரை தண் மதி சேர்ந்தது போல
காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி
'
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர் மலர் நீயே கொணர்வாய்' என்றலும்
மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும்
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
'
குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேகலை தன் மதி முகம் தன்னுள்
03-020
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?
ஆங்கனம் அன்றியும் அணி இழை! கேளாய்
ஈங்கு இந் நகரத்து யான் வரும் காரணம்
பாராவாரப் பல் வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்
03-030
ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
ஆராமத்திடை அலர் கொய்வேன் தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
பெரு விழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில்
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி
03-040
நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
பல் மலர் அடுக்கிய நல் மரப் பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகின்
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள்
மண்ணவர் விழையார் வானவர் அல்லது
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்
03-050
"கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்" என்று
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
யாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார்
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
03-060
பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
தூ நிற மா மணிச் சுடர் ஒளி விரிந்த
தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின்
அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்
03-070
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின்
"
ஈங்கு இதன் காரணம் என்னை?" என்றியேல்
"
சிந்தை இன்றியும் செய் வினை உறும்" எனும்
வெந் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
"
செய் வினை, சிந்தை இன்று எனின் யாவதும்
எய்தாது" என்போர்க்கு ஏது ஆகவும்
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அது தான்
அவ் வனம் அல்லது அணி இழை! நின் மகள்
03-080
செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள்
'
மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய்! யானும் போவல்' என்று
அணிப் பூங் கொம்பர் அவளொடும் கூடி
மணித் தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன்
நாணமும் உடையும் நன்கணம் நீத்து
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின்
03-090
மண்ணா மேனியன் வருவோன் தன்னை
'
வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன்
எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோ
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே!
உண்டு தௌிந்து இவ் யோகத்து உறு பயன்
03-100
கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் என
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
'
உண்ம்' என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப்
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்
03-110
தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
சுரியல் தாடி மருள் படு பூங் குழல்
பவளச் செவ் வாய் தவள வாள் நகை
ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டு
கருங் கொடிப் புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலை
03-120
அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்
மை அறு படிவத்து வானவர் முதலா
எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
03-130
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில்
பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி
மயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ்
பொலம் பிறைச் சென்னி நலம் பெறத் தாழ
செவ் வாய்க் குதலை மெய் பெறா மழலை
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்று உடைப் பூந் துகில்
தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர
03-140
தளர் நடை தாங்காக் கிளர் பூண் புதல்வரை
பொலந் தேர் மீமிசைப் புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
'
ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள்
காண்மினோ' என கண்டு நிற்குநரும்
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி
'
அணி அமை தோற்றத்து அருந் தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்
03-150
மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல'
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
செந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
03-160
திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை என்
03-171
 3.2.1 மலர்வனத்தில் மணிமேகலை
காப்பியத் தலைவி மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள்; கோவலன் கொலையுண்டதை அறிந்த மாதவி தன் அக வாழ்வைத் துறந்து, அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறங்கேட்டுத் தெளிந்து பௌத்தத் துறவியாகிறாள். தன்மகள் மணிமேகலையையும் துறவி ஆக்குகிறாள். அப்போது புகார் நகரில் இந்திர விழா தொடங்கியது. முறைப்படி மாதவியும் மணிமேகலையும் ஆடல் பாடல்களில் கலந்து கொள்ள வேண்டும். கலை வாழ்க்கையைத் துறந்ததனால் இருவரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சினமுற்ற மாதவியின் தாய் சித்திராபதி, வயந்தமாலை என்பவளை அனுப்பி மாதவியை விழாவில் ஆட வருமாறு அழைக்கிறாள். மாதவியோ,
மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்

                     
(ஊர் அலர் உரைத்த காதை: 55-57)
என்று கூறி மறுத்து விடுகிறாள்.
மணிமேகலையைக் கற்பரசி கண்ணகியின் மகள் என்றும், அவள் தீய தொழிலில் ஈடுபட மாட்டாள் என்றும் அறிவிக்கிறாள்.
கோவலன் கொலைப்பட்ட துன்ப நிகழ்ச்சியைப் பற்றி மாதவி கூறக் கேட்ட மணிமேகலை கண்ணீர் வடிக்கிறாள். அவள் கண்ணீர்த் துளி புத்த பெருமானுக்காகத் தொடுத்த பூமாலையில் பட்டுப் புனிதம் இழக்கச் செய்கிறது. அதனால் புதிய பூக்கள் பறித்து வந்து மாலை தொடுக்க மணிமேகலையும், அவள் தோழி சுதமதியும் உவவனம் என்னும் பூங்காவுக்குச் செல்கின்றனர்.
உதயகுமரன் வருகை
அப்போது, மதங்கொண்ட யானையை அடக்கிய சோழ மன்னனின் மகன் உதயகுமரன், மணிமேகலை மலர் வனம் புகுந்ததை அறிந்து அவளைத் தேடி உவவனம் வருகிறான். உதயகுமரன் தன்பால் மிகுந்த வேட்கை கொண்டுள்ளான் என்பதை உணர்ந்த மணிமேகலை, செய்வதறியாது அங்குள்ள பளிக்கறை மண்டபத்தில் ஒளிந்து கொள்கிறாள். அவளைப் பற்றிச் சுதமதியிடம் உதயகுமரன் கேட்க, அவளோமணிமேகலை தவ ஒழுக்கம் உடையவள்; சபிக்கும் வன்மையும் காமம் கடந்த வாய்மையும் உடையவள்என்கிறாள். பளிக்கறைக்குள் மணிமேகலையின் உருவத்தைக் கண்ட உதயகுமரன், உள்ளே செல்ல வழியறியாது தடுமாறுகிறான். மணிமேகலையைச் சித்திராபதியால் அடைவேன் எனச் சினத்துடன் கூறி நீங்குகிறான்.
மணிபல்லவம் செல்லல்
பளிக்கறை விட்டு வெளிவந்த மணிமேகலை, தன் நெஞ்சம் அவன்பால் செல்வது கண்டு, “அவன் என்னை இகழ்ந்து பேசினான். இருந்தும் என் நெஞ்சம் அவனை நோக்கிச் செல்கிறது. காதலின் இயற்கை இது தானா? அப்படியாயின் அது கெட்டு அழியட்டும்என்று தோழியிடம் கூறுகிறாள். அப்போது, இந்திரவிழாக் காண வந்த மணிமேகலா தெய்வம் அவர்களை அணுகி, “இது முனிவர் வனமாதலின் உதயகுமரன் தீங்கு செய்யாது சென்றனன்; நீவிர் இருவரும் சக்கரவாளக் கோட்டம் செல்கஎன அறிவுறுத்துகிறது. சக்கரவாளக் கோட்டத்தில் சுதமதி சிறிது கண் துயில்கிறாள். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மயக்கி மணிபல்லவம் எடுத்துச் செல்கிறது. பின் அத்தெய்வம் உதயகுமரனைக் கண்டுதவத்திறம் பூண்ட மணிமேகலைபால் வைத்த வேட்கை ஒழிகஎன அறிவுறுத்துகிறது. தொடர்ந்து மணிமேகலா தெய்வம் சுதமதியிடம் சென்று, “மணிமேகலை மணிபல்லவத்தில் இருக்கிறாள்; அங்குத் தன் பழம் பிறப்பை அறிந்து ஏழு நாட்களில் திரும்பி வருவாள்என்கிறது. சக்கரவாளக் கோட்டத்திலுள்ள கந்திற்பாவையும், மணிமேகலை ஏழு நாட்களில் தன் பிறப்பதனோடு நின்பிறப்பும் உணர்ந்து வருவாள்என்கிறது. அப்போது பொழுது விடிகிறது. சுதமதி மாதவியிடம் வந்து நிகழ்ந்தவற்றைக் கூறி வருந்தி இருக்கிறாள்.
3.2.2 மணிபல்லவத்தில் மணிமேகலை
மணிபல்லவத்தில் தனித்து விடப்பட்ட மணிமேகலை உவவனத்தையோ சுதமதியையோ காணாது புலம்புகிறாள். தன் தந்தை கோவலனை நினைக்கிறாள். பலவாறு புலம்பும் மணிமேகலையின் முன் புத்த பெருமானின் மறுவடிவான தரும பீடிகை காட்சியளிக்கிறது. கண்ணில் நீர் வழிய, கைகள் தலைமேல் குவிய, பீடிகையை மும்முறை வலம் வந்து முறைப்படி தொழுகிறாள். தொழுத அளவில் தன் முந்திய பிறவி பற்றி அறிகிறாள். தான் அசோதர நகர் அரசன் இரவிவர்மனுக்கும் அவன் மனைவி அமுதபதிக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்து, அத்திபதி அரசன் மகன் இராகுலனை மணந்ததை அறிகிறாள். இராகுலன்திட்டிவிடம்என்னும் பாம்பு தீண்டி இறந்துபடத் தான் தீப்புகுந்து இறந்ததுமாகிய பழம்பிறப்பினை உணர்கிறாள். பின், அங்குத் தரும பீடிகை தொழுது நிற்கும் மணிமேகலா தெய்வத்தின் மூலம் மாதவி, சுதமதி ஆகியோர் தம் முற்பிறப்பு வரலாற்றை அறிகிறாள். முற்பிறப்பில் இராகுலன் ஆக இருந்தவன்தான் உதயகுமரன் என்பதையும் அறிகிறாள். மணிமேகலா தெய்வம், மணிமேகலைக்கு இனி எதிர்காலத்தில் நிகழ விருப்பதைக் கூறுகிறது. வேற்று உருவம் கொள்ளுதல், பசியைத் தாங்கிக் கொள்ளுதல், வான்வழிச் செல்லுதல் ஆகிய ஆற்றல்களைத் தரும் மூன்று மந்திரங்களை மணிமேகலைக்கு அருளிச் செல்கிறது.
அமுத சுரபி பெறல்
பின் மணிமேகலை அங்குள்ள மணற்குன்றுகள், பூஞ்சோலை, பொய்கை முதலானவற்றைக் கண்டு களிக்கிறாள். அவள்முன் தீவ திலகை என்னும் தெய்வம் தோன்றி, “கோமுகிப் பொய்கையில் அமுதசுரபி தோன்றும் நாள் இது; ஆபுத்திரன் கையில் இருந்த அப்பாத்திரம் உன் கைக்குக் கிடைக்கும்என்று கூறி அழைத்துச் செல்கிறது. இருவரும் கோமுகிப் பொய்கையை வலஞ்செய்து வணங்க, அமுதசுரபி மணிமேகலையிடம் வந்து சேர்கிறது.
அமுத சுரபியின் சிறப்பு
அமுதசுரபியில் இடும் அன்னம் எடுக்க எடுக்கக் குறையாது பெருகும் என்று அதன் சிறப்பினைத் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துரைக்கிறாள்.
ஆங்கு அதின்பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்

                          
(பாத்திரம் பெற்ற காதை : 48-50)
(ஆருயிர் மருந்து = உணவு; தான் தொலைவு இல்லா = தான் குறையாத)
என்றும்,
அறம் கரியாக அருள்சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது

                         
(பாத்திரம் பெற்ற காதை :  120-121)
(கரியாக = சான்றாக; சுரவாது = பெருகாது)
என்றும் அமுதசுரபியின் சிறப்பும், அது சுரப்பது அருள் உடையவர்க்கே என்பதும் இங்கு எடுத்து உரைக்கப்படுகின்றன.
3.2.3 புகார் நகரில் மணிமேகலை
மணிபல்லவத்தில் ஆபுத்திரனின் அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வறியவரின் பசிப்பிணி தீர்க்க வான்வழியே புகார் வருகிறாள். அங்கு மாதவியையும் சுதமதியையும் கண்டு அவர்தம் பழம்பிறப்பும் அமுதசுரபியின் சிறப்பும் கூறுகிறாள். இங்குப் பழம்பிறப்பில்இலக்குமியாகப் பிறந்த மணிமேகலைக்குத் தாரை, வீரை என்ற தமக்கை (அக்காள்) யராகப் பிறந்தவர்களே மாதவி, சுதமதி என்பது தெரிய வருகிறது. பின்பு மூவரும் அறவண அடிகளைக் கண்டு தொழுது நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்கின்றனர். அடிகள் அவர்களின் பழம்பிறப்பை உணர்த்தி, அவர்களைப் புத்த நெறிப்படுத்துகிறார். இங்கு, அவரால் ஆபுத்திரன் வரலாறு சொல்லப்படுகிறது.

ஆபுத்திரன் சிந்தாதேவி என்னும் தெய்வத்தின் அருளால் அமுதசுரபி பெற்றுப் பசிப்பிணி தீர்த்து வருகிறான்; இதனால் அவன் புகழ் பரவுகிறது. பொறாமை கொண்ட இந்திரன் நாட்டை மழையால் செழிக்கச் செய்கிறான். இதனால் அமுதசுரபிக்குத் தேவையில்லாமல் போகிறது. எனவே சாவக நாடு சென்று பசிப்பிணி போக்கச் செல்லும் ஆபுத்திரன் மணிபல்லவத்தில் தனித்து விடப்படுகிறான். அங்கு மக்களே இல்லாததால் வருந்திய ஆபுத்திரன் அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையில் எறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான். அவன் செய்த அறப்பயனால் சாவக நாட்டில் ஒரு பசு வயிற்றில் தோன்றி, பூமிச்சந்திரன் என்ற அரசனால் தத்தெடுக்கப்பட்டு அரசனாகி நல்லாட்சி செய்கிறான்.
சிறையும் அறமும்
இவ்வாறு ஆபுத்திரன் வரலாறு கூறிய அடிகள் மணிமேகைலையைப் பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை மேற்கொள்ளப் பணிக்கிறார். அவளும் துறவுக் கோலங்கொண்டு, காயசண்டிகை வழிப்படுத்த ஆதிரையிடம் பிச்சை ஏற்றுப் பசிப்பிணி தீர்க்கிறாள்; காய சண்டிகையின்யானைத் தீஎன்னும் அடங்காப் பசிநோயும் நீங்க அவள் தன்னுடைய விண் நாடு புறப்பட்டுச் செல்கிறாள்.
மணிமேகலையின் துறவு வாழ்வை விரும்பாத சித்திராபதி உதயகுமரனைத் தூண்டி விடுகிறாள். அவன் மணிமேகலையை அடைய முயற்சி செய்ய, அவள் காய சண்டிகையாக உருவத்தை மாற்றிக் கொண்டு அறம் செய்கிறாள். காய சண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலை என உணர்ந்த உதயகுமரன் பாதி இரவில் அவளைக் காண வருகிறான். இதனை அறிந்த காய சண்டிகையின் கணவன் காஞ்சனன், தன் மனைவியிடம் உதயகுமரன் தவறுதலாக நடந்து கொண்டதாக நினைத்து அவனைக் கொன்று விடுகிறான். மணிமேகலை இதனை உணர்ந்து புலம்ப அவளைக் கந்திற்பாவை தடுத்துத் தேற்றுகிறது. இளவரசன் கொலைக்குக் காரணமான மணிமேகலையை அரசன் கைது செய்கிறான். அவன் தேவி, அவளைப் பலவாறு துன்புறுத்த, மணிமேகலை தான்பெற்ற மந்திரத்தால் அனைத்துத் துன்பத்திலிருந்தும் விடுபடுகிறாள். சிறையிலும் அறம் செய்கிறாள். இதனால் அஞ்சிய தேவி மணிமேகலையை வணங்க, அவள் காமம், உயிர்க்கொலை, பொய் முதலானவற்றின் குற்றங்களைத் தேவிக்கு எடுத்துரைக்கிறாள்.
மீண்டும் மணிமேகலையைக் கலை வாழ்வில் ஈடுபடுத்தச் சித்திராபதி அரசமாதேவியிடம் வேண்டுகிறாள். தேவி மறுத்து விடுகிறாள். அதே நேரத்தில் மணிமேகலையை மீட்க அறவண அடிகள், மாதவி, சுதமதி வருகின்றனர். தேவிக்கு அறவுரை கூறிய அறவணர் வேற்று நாடு செல்கிறார்.
ஆபுத்திரனோடு மணிமேகலை
சிறையிலிருந்து விடுதலை பெற்ற மணிமேகலை, ஆபுத்திரன் புண்ணியராசனாய் ஆட்சி புரியும் சாவக நாடு செல்கிறாள். அங்குத் தருமவாசகன் எனும் முனிவன் இருப்பிடம் உள்ளது. அங்கு வந்த ஆபுத்திரன் மணிமேகலையை யார் என அறிகிறான். அவனது பழம்பிறப்பை அறிய மணிபல்லவத்துக்கு மணிமேகலை அழைத்துச் செல்கிறாள்; அங்குத் தரும பீடிகையை வணங்கித் தன் முற்பிறப்பு வரலாற்றை அறிகிறான். பின் தீவ திலகையும் மணிமேகலையும் ஆபுத்திரனை அவன் நாடு செல்லப் பணிக்கின்றனர்; மணிமேகலை வான்வழியாக வஞ்சி நகர் அடைகிறாள்.
3.2.4 துறவு வாழ்வில் மணிமேகலை
வஞ்சி நகர் வந்த மணிமேகலை கண்ணகிக் கடவுளை வணங்குகிறாள். பத்தினி கடவுளாகிய கண்ணகி தன் பழம்பிறப்பு வரலாற்றை மணிமேகலைக்கு விரித்துரைக்கிறாள். பின்னர் வேற்றுருக் கொண்டு பிற சமயக் கருத்துக்களை அறிந்து வர வேண்டுகிறாள். மணிமேகலையும் மாதவன்வடிவு கொண்டு பிரமாணவாதி முதல் பூதவாதி வரை, அனைத்துச் சமயவாதிகளின் கொள்கைகளைத் தெரிந்து கொள்கிறாள். பின் அங்குள்ள பௌத்தப் பள்ளியில் தவம் செய்யும் கோவலன் தந்தை மாசாத்துவானைக் காணுகிறாள். அவன், தன்வரலாறு கூறியதுடன், மாதவியும் சுதமதியும் கச்சி மாநகர் சென்றுள்ளதை அறிவிக்கிறான். அங்கு மழையின்றி மக்கள் பசியால் வாடுவதை எடுத்துக் கூறி, அங்குச் சென்று பசிப்பிணி நீக்குமாறு வேண்டுகிறான்.
மணிமேகலை தன் உண்மை வடிவுடன் கச்சி மாநகர் அடைந்து, அந்நாட்டு அரசன் இளங்கிள்ளிக்கு நல்லறம் கூறி, நாட்டு மக்களின் பசிப்பிணி போக்குகிறாள். அங்குத் தீவ திலகைக்கும், மணிமேகலா தெய்வத்துக்கும் படிமமும் கோவிலும் எழுப்பப்படுகின்றன. அறவணர், மாதவி, சுதமதி ஆகியோர் அவளது அறச்சாலை அடைந்தனர். அவர்களை, மணிமேகலை இனிதே வரவேற்க, அடிகள் காவிரிபூம்பட்டினம் கடலால் அழிந்ததை எடுத்துரைக்கிறார். மணிமேகலை, தான் பல சமயக் கணக்கர் கொள்கைகளை அறிந்தும், அவற்றில் சிறப்பில்லை என்று உணர்ந்ததாகக் கூறுகிறாள். பௌத்த சமயத் தருக்க நெறிகளை அறவணர் அவளுக்குப் போதிக்கிறார். மணிமேகலை புத்தம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்ற மந்திரத்தை மும்முறை தியானம் செய்து தன் பவத்திறம் நீங்க நோன்பு மேற்கொள்கிறாள். இத்துடன் மணிமேகலைக் காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.

No comments: