Sunday, 17 June 2018

2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்3



விமலையார் இலம்பகம்
1
முருகு கொப்புளிக்கும் கண்ணி
முறி மிடை படலை மாலைக்
குருதி கொப்புளிக்கும் வேலான்
கூந்தல் மா இவர்ந்து செல்ல
உருவ வெம் சிலையினாற்குத் தம்பி
இஃது உரைக்கும் ஒண் பொன்
பருகு பைங் கழலினாருள்
பதுமுகன் கேட்க என்றே

(இ - ள்.) முருகு கொப்புளிக்கும் கண்ணி - தேனைப் பிலிற்றும் தலை மாலையினையும்; முறிமிடை படலைமாலை - தளிர் கலந்த வகைமாலையினையும்; குருதி கொப்புளிக்கும் வேலான் - செந்நீரை உமிழும் வேலினையும் உடைய சீவகன்; கூந்தல் மா இவர்ந்து செல்ல - குதிரை மீதேறிச் செல்ல; உருவ வெஞ்சிலையினாற்குத் தம்பி - அழகிய கொடிய வில்லேந்திய சீவகனுக்குத் தம்பியான நந்தட்டன்; ஒண் பொன் பருகு பைங்கழலினாருள் பதுமுகன் கேட்க என்று இஃது உரைக்கும் - ஒள்ளிய பொன் பொருந்திய கழலணிந்த தோழர்களில் பதுமுகனைக் கேட்பாயாக என விளித்து இதனைக் கூறுவான்.

(வி - ம்.) அது மேற் கூறுகின்றார். 'சிலையினாற்கு' உருபு மயக்கம் என்பர் நச்சினார்க்கினியர்.

முறி - தளிர். கண்ணி - தலையிற் சூடுமாலை. படலைமாலை - தழை விரவிய மாலை. வேலான் : சீவகன். தம்பி : நந்தட்டன். கழலினாருள் - தோழருள். பதுமுகன் : விளி.

2. 
விழு மணி மாசு மூழ்கிக் கிடந்தது இவ் உலகம் விற்பக்
கழுவினீர் பொதிந்து சிக்கக் கதிர் ஒளி மறையக் காப்பின்
தழுவினீர் உலகம் எல்லாம் தாமரை உறையும் செய்யாள்
வழுவினார் தம்மைப் புல்லாள் வாழ்க நும் கண்ணி மாதோ
(இ - ள்.) விழுமணி மாசு மூழ்கி இவ்வுலகம் விற்பக் கிடந்து - சிறந்த மணி மா சேறி இவ்வுலகை விலையாகப் பெறும் படி கிடந்ததனை; கழுவினீர் - கடுக வெளியாக்கி விட்டீர்; சிக்கப் பொதிந்து கதிர் ஒளி மறையக் காப்பின் - இனி, முன்போல அகப்படப் பொதிந்து கதிரொளிக்கு மறைவாகக் காப்பீராயின்; உலகம் எல்லாம் தழுவினீர் - உலகம் முழுதும் கைக்கெண்டீராவீர்; தாமரை உறையும் செய்யாள் விழுவினார் தம்மைப் புல்லாள் - தாமரையில் வாழும் திருமகள் காவாது வழுவினவரைச் சேராள்; (ஆகையால், காவாது வழுவாதீர்); நும் கண்ணி வாழ்க! - நும் கண்ணி வாழ்வதாக.

(வி - ம்.) மாது ஒ : அசைகள், 'நும் கண்ணி வாழ்க!' என்பதனைக் கழுவினீர் என்பதன்பின் சேர்ப்பர் நச்சினார்க்கினியர்.

சீவகன் தன் பிறப்புண்மையைப் பண்டே உணர்ந்திருந்தானாயினும் அவனும் இதுகாறும் மறைவாகவே அதனைப் போற்றி வந்தானாகலின், இப்போது நந்தட்டன் அனைவரும் உணர்ந்தமை கருதி விழுமணி மாசு மூழ்கிக்கிடந்தது இவ்வுலகம் விற்பக் கழுவினீர் என அவன்பிறப்பு வெளிப்பாட்டைத் தோழர் மேலதாக்கியே உரைக்கின்றான். சிக்க - அகப்பட. செய்யாள் - திருமகள்.

3. 
தொழுத தம் கையின்  உள்ளும் துறு முடி அகத்தும் சோர
அழுத கண்ணீரின் உள்ளும் அணிகலத்து அகத்தும் மாய்ந்து
பழுது கண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றாது
ஒழிக யார் கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே
(இ - ள்.) தொழுத தம் கையினுள்ளும் - தொழுத தம் கையிலும்; துறுமுடி அகத்தும் - மயிர் நெருங்கிய முடியிலும்; சோர அழுத கண்ணீரின் உள்ளும் - ஒழுக அழுத கண்ணீரிலும்; அணிகலத்தகத்தும் - அணிகலன்களிலும்; கொல்லும் படை உடன் ஒடுங்கும் - கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; ஆய்ந்து - அதனை ஆராய்ந்து; பழுது கண்ணரிந்து - அக் கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி; யார்கண்ணும் தேற்றம் பற்றாது ஒழிக - யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக; தெளிகுற்றார் விளி குற்றாரே - அன்றித் தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர்.

(வி - ம்.) அரசர்க்கு ஒரு துன்பம் வந்தவிடத்துப் பகைவர் நட்புடையார்போல் அழுக்கண்ணீரும் கொலைசூழ்தலின் கண்ணீரிலும் படையொடுங்கிற்றாம். 'ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து' (குறள்-828) என்றார் தேவரும்.


4. 
வண்ணப் பூமாலை சாந்தம் வால் அணி கலன்கள் ஆடை
கண் முகத்து உறுத்தித் தூய்மை கண்டலால் கொள்ள வேண்டா
அண்ணல் அம் புள்ளோடு எல்லா ஆயிரம் பேடைச் சேவல்
உண்ணு நீர் அமிழ்தம் காக்க ஊகமோடு ஆய்க என்றான்

(இ - ள்.) வண்ணப்பூ மாலை சாந்தம் வால் அணிகலன்கள் ஆடை - அழகிய மலர்மாலை சந்தனம் தூய பூண்கள் ஆடை முதலியவற்றை; அண்ணல் அம்புள்ளோடு அல்லா ஆயிரம் பேடைச் சேவல் - அரச வன்னமும் அதுவே அன்றி ஆயிரம் பெடையுடன் நிற்கும் சக்கரவாகப் புள்ளும் ஆகிய இவற்றின்; கண் முகத்து உறுத்தி - கண்ணினும் முகத்தினும் பொருத்தி; தூய்மை கண்டலால் கொள்ளவேண்டா - தூய்மை கண்டல்லது  கொள்ளுதல் வேண்டா; உண்ணும் நீர் அமிழ்தம் காக்க யூகமொடு ஆய்க என்றான் - உண்ணும் நீரையும் உணவையுந் தீங்கு வாராமற் காத்தற்குக் கருங்குரங்கிற் கிட்டு ஆராய்க என்றான்.

(வி - ம்.) அன்னத்தின் கண்ணிலும் சக்கரவாகத்தின் முகத்திலும் என முறையே கொள்க. அன்னத்தின்கண் குருதி காலும்; சக்கரவாகம் முகம் கடுக்கும்; கருங்குரங்கு உண்ணாது.

5. 
அஞ்சனக் கோலின் ஆற்றா நாகம் ஓர் அருவிக் குன்றின்
குஞ்சரம் புலம்பி வீழக் கூர் நுதி எயிற்றில் கொல்லும்
பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா
அஞ்சித் தற்காத்தல் வேண்டும் அரும் பொருளாக என்றான்
(இ - ள்.) அஞ்சனக் கோலின் ஆற்றா நாகம் - அஞ்சனக் கோலால் அடித்தற்குப் பற்றாத நாகப்பாம்பு; அருவிக் குன்றின் குஞ்சரம் புலம்பி வீழக் கூர்நுதி எயிற்றின் கொல்லும் - அருவியை யுடைய குன்றைப் போன்ற மதயானை புலம்பி வீழும் படி எயிற்றாற் கடித்துக் கொல்லும்; பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா - பஞ்சியினும் மெல்லியதா யினும் பகையைச் சிறிது என்று கருதவேண்டா; அரும் பொருளாக அஞ்சித் தற்காத்தல் வேண்டும் என்றான் - அதனை அரும்பொருளாக நினைத்து அஞ்சித் தன்னைக் காக்க வேண்டும் என்றான்.

(வி - ம்.) பகைவரின் சிறுமைக்கு அஞ்சனக் கோலினாற்றா நாகம் உவமை. அஞ்சனக்கோல் கண்ணுக்கு மைதீட்டுஞ் சிறுகோல். அருவிக் குன்றின்பால் வாழும் குஞ்சரம் எனல் நன்று. சிறு பகையையும் பெரும் பகைபோல மதித்து அஞ்சித் தற்காத்தல் வேண்டும் என்பதாம்.

6. .
பொருந்தலால் பல்லி போன்றும் போற்றலால் தாயர் ஒத்தும்
அருந்தவர் போன்று காத்தும் அடங்கலால் ஆமை போன்றும்
திருந்து வேல் தெவ்வர் போலத் தீது அற எறிந்தும் இன்ப
மருந்தினால் மனைவி ஒத்தும் மதலையைக் காமின் என்றான்
(இ - ள்.) பொருந்தலால் பல்லி போன்றும் - விடாமல் இவனிடத்திருத்தலாற் பல்லியைப் போன்றும்; போற்றலால் தாயர் ஒத்தும் - வேண்டுவன தந்து காப்பாற்றலால் அன்னையர் போன்றும்; அருந்தவர் போன்று காத்தும் - அருந்தவர் சீல முதலியவை தப்பாமற் காக்குமாறு போல இவற்கும் அவை தப்பாமற் காத்தும்; அடங்கலால் ஆமை போன்றும் - ஐம்பொறியும் தமக்கு அடங்கலின் ஆமை போன்றும்; திருந்து வேல் தெவ்வர் போலத் தீது அற எறிந்தும் - திருந்திய வேலேந்திய பகைவர் போன்று இவனுக்குண்டான தீது தீரும்படி இடித்துக் கூறியும்; இன்பமருந்தினால் மனைவி ஒத்தும் - இன்பந்தரும் உணவுகளை நுகர்வித்தலால் மனைவியை போன்றும்; மதலையைக் காமின் என்றான் - நமக்கு ஆதரவான சீவகனைக் கப்பாற்றுமின் என்றான்.

(வி - ம்.) மதலை - ஆதரவு; தூண். 'வானம் ஊன்றிய மதலை போல' (பெரும்பாண். 346) என்றார் பிறரும். தாம் அடங்கியே இவனை அடக்கல் வேண்டுமெனக் கூறுகின்றவன் இங்ஙனங் கூறினானென்க. பதுமுகனிடங் கூறினானெனினும் பலரும் கேட்டலின்,. 'காமின்' என்றான்.

தான் வாழும் மரமுதலியவற்றில் நன்கு பொருந்தியிருத்தல் பல்லிக் கியல்பு.அச்சுடைச் சாகாட்டாரம் பொருந்திய சிறுவெண் பல்லி போலஎன்றார் புறத்தினும் (256). ”ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்என்றார் வள்ளுவர். பகைவர் போன்று கண்ணற இடித்துரைத்தும் என்றவாறு, மருந்து - அடிசில். மதலை - பற்றானவன்.

7. 
பூந் துகில் மாலை சாந்தம் புனை கலம் பஞ்ச வாசம்
ஆய்ந்து அளந்து இயற்றப்பட்ட அடிசில் நீர் இன்ன எல்லாம்
மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று ஆங்கு
ஏந்து பூண் மார்பன் ஏவ இன்னணம் இயற்றினானே
(இ - ள்.) பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம் - பூந்துகிலும் மாலையும் சாந்தமும் பூணும் முகவாசம் ஐந்தும்; ஆய்ந்து அளந்து இயற்றபப்பட்ட அடிசில் நீர் இன்ன எல்லாம் - ஆராய்ந்து பார்த்துச் செய்யப்பட்ட உணவும் நீரும் இத் தன்மையானவற்றை யெல்லாம்; மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று - மக்களிலே சிங்கம் போன்ற ஆற்றலையுடைய பதுமுகன் காப்பானாக என்று; ஏந்து பூண் மார்பன் ஏவ - விளங்கும் பூணணிந்த மார்பனாகிய சீவகன் பணிக்க; இன்னணம் இயற்றினான் - அவனும் இப்படிக் காத்தலை நடத்தினான்.

(வி - ம்.) பஞ்சவாசம் : தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம், கப்பூரம் சாதியோடைந்து மடங்கலாற்றல் - சிங்கத்தை ஒத்த வலிமை.
உடையும் அடிசிலுடம் உருமண்ணு வாவிற்குக்
கடனா வைத்தலிற் கைபுனைந் தியற்றி
அகன்மடி யவன்றான் அமர்ந்து கொடுப்பஎன்றார்

8. 
சிறு கண் யானையின் இனம் சேர்ந்து சேவகம் கொளத்
துறுகல் என்று உணர்கலாத் துள்ளி மந்தி மக
நறிய சந்தின் துணி நாற வெந்தனகள் கொண்டு
எறிய எள்கி மயிர்க் கவரிமா இரியுமே
(இ - ள்.) சிறுகண் யானையின் இனம் சேர்ந்து சேவகம் கொள - சிறிய கண்களையுடைய யானைத்திரள் கூடித் துயில் கோடலின்; மந்திமக உணர்கலா துறுகல் என்று துள்ளி - குரங்கின் குட்டிகள் யானையென்றுணராமல் பெரிய கல் என்று நினைத்து மேலே துள்ளி; நறிய சந்தின் துணி வெந்தனகள் கொண்டு நாற எறிய - நல்ல சந்தனக் கட்டைகள் வெந்தனவற்றைக் கொண்டு மணம் வீசுமாறு ஒன்றையொன்று எறிய; மயிர்க் கவரி மாஎள்கி இரியும் - மயிரையுடைய கவரிமா துணுக்கென அச்சுற்று ஓடும்.

(வி - ம்.) 'துள்ளும்' என்பது பாடமாயின், 'துள்ளும் மகவு' என்க.

சேவகம் : ஆகுபெயர். துறுகல் - குண்டுக்கல். மந்திமக துறுகல் என்றுணர்கலா துள்ளி என மாறுக. மக - குட்டி. சந்தின் துணி - சந்தனக்குறடு. வெந்தனகள் என்புழிக் கள் விகுதிமேல் விகுதி. 'மந்திம்மக, வெள்கிம் மயிர்' என்பவற்றுள் மகரவொற்று வண்ணநோக்கி விரிந்தது.

9. .
புகழ் வரைச் சென்னி மேல் பூசையின் பெரியன
பவழமே அனையன பல் மயிரப் பேர் எலி
அகழும் இங்குலிகம் அஞ்சன வரைச் சொரிவன
கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்தவே
(இ - ள்.) பவழமே அனையன பன்மயிர்ப் பேரெலி - பவழமே போன்றனவாகிய மிகுதியான மயிரையுடைய பேரெலிகள்; புகழ்வரைச் சென்னிமேல் - புகழப்படுகின்ற மலையுச்சியின் கண் வாழும்; பூசையின் பெரியன - பூனையினும் பெரியவனாய்; அகழும் இங்குலிகம் - அகழும் சாதிலிங்கம்; அஞ்சனவரை சொரிவன - அஞ்சன வரையின் தாழ்வரையிலே வீழ்கின்றவை; கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்த - கவள முண்ணும் - யானையின் நெற்றியிலே தவழும் பட்டுக் கச்சைப் போன்றன.
(இ - ள்.) வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் (தொல். மரபு - 68) என்றார்.

எலி அகழும் சாதிலிங்கம் தாழ்வரையில் சொரிந்து கிடப்பனவாக அத் தோற்றம் யானை நுதலிற் கச்சுப்போலத் தோன்றிற்று என்பதாம். பூசை - பூனை. இங்குலிகம் - சாதிலிங்கம். அஞ்சனவரை - கரிய தாழ் வரை. கவழம் - கவளம்.

10. 
அண்ணல் அம் குன்றின் மேல் வருடை பாய்ந்து உழக்கலின்
ஒண் மணி பல உடைந்து ஒருங்கு அவை தூளியாய்
விண் உளு உண்டு என வீழும் மா நிலமிசைக்
கண் அகன் மரம் எலாம் கற்பகம் ஒத்தவே
(இ - ள்.) அண்ணல் அம் குன்றின்மேல் - பெரிய குன்றுகளின்மேல்; வருடை பாய்ந்து உழக்கலின் - வருடை மான் பாய்ந்து மிதித்தலின்; ஒண் மணி பல உடைந்து - சிறந்த மணிகள் பலவும் உடைந்து; அவை ஒருங்கு தூளியாய் - அவை ஒருசேரச் செந்தூளியாய்; விண் உளு வுண்டு என மா நிலமிசை வீழும் - அத்தூளி வானுலக உளு வுண்ட தென்னும்படி பெரிய நிலத்திலே வீழா நிற்கும்; கண் அகல் மரம் எலாம் கற்பகம் ஒத்த - (அஃது அங்ஙனம் வீழ்தலின்) பரப்புடைய நிலத்தின் மரங்கள் யாவும் அத்தூளி போர்த்துக் கற்பகத்தைப் போன்றன.

(வி - ம்.) அண்ணலங்குன்று - பெரிய அழகிய மலை. வருடை - மலையாடு, உளுவுண்டென - உளுத்தது என்னும்படி. கற்பகம் - வானுலகத்துள்ளவொரு மரம்.

11. 
மானிடம் பழுத்தன கிலுத்தம் மற்று அவற்று அயல்
பால் முரண் பயம்பிடைப் பனை மடிந்த அனையன
கானிடைப் பாந்தள் கண் படுப்பன துயில் எழ
ஊன் உடைப் பொன் முழை யாளி நின்று உலம்புமே
(இ - ள்.) கிலுத்தம் மானிடம் பழுத்தன - கிலுத்தம் என்னும் மரம் மக்கள் வடிவாகப் பழுத்தனவாய் இருந்தன. மற்று அவற்று அயல் கானிடை - பின்னை, அவற்றின் அயலிலே கானிடையிலே; பால் முரண் பயம்பிடை - பால்போல வெண்மையான ஏற்றிழிவுடைய நிலத்திற் குழியிடையிலே; பனை மடிந்தனையன பாந்தள் - பனை கிடந்தனையவாகிய பாம்புகள்; கண் படுப்பன துயில் எழ - துயில்வன துயில் எழும்படி; ஊன் உடைப் பொன் முழை யாளி நின்று உலம்பும் - ஊன் பொருந்தியதனாற் பொன் போன்ற குகையிலிருந்து யாளிகள் முழங்கும்.

(
வி - ம்.) முரண் மாறுபாடு. 'முரட் பரம்பு' எனவும் பாடம். 'மானிடம் பழுக்கும் கிலுத்தம் நீள் வனம்' (கூர்ம - சம்பு - 32). கிலுத்தம் - ஒருவகை மரம்.

12.
சாரல் அம் திமிசிடைச் சந்தனத் தழை வயின்
நீர தீம் பூ மரம் நிரந்த தக்கோலமும்
ஏர் இலவங்கமும் மின் கருப்பூரமும்
ஒரு நாவி கலந்து ஓசனை கமழுமே
(இ - ள்.) அம் திமிசு சாரலிடைச் சந்தனத் தழை வயின் - அழகிய திமிசு சூழ்ந்த சந்தன மரத்தில் தழைக்கு நடுவே; நீர தீம்பூ மரம் - நீர்மையை யுடைய தீம்பூ மரமும்; நிரந்த தக்கோலமும் - நிரவலாக இருந்த தக்கோல மரமும்; ஏர் இலவங்கமும் - அழகிய இலவங்க மரமும்; இன் கருப்பூரமும் - இனிய கருப்பூரமும்; நாவி கலந்த ஓசனை கமழும் - புழுகுடன் கலந்து நாற்காத எல்லை கமழும்.

(வி - ம்.) திமிசு, தீம்பூ : மரவகைகள். ஓரும் : அசை.

13. 
மைந்தரைப் பார்ப்பன மா மகள் மாக் குழாம்
சந்தனம் மேய்வன தவழ் மதக் களிற்று இனம்
அந்தழைக் காடு எலாம் திளைப்ப ஆமான் இனம்
சிந்த வால் வெடிப்பன சிங்கம் எங்கும் உள
(இ - ள்.) மைந்தரைப் பார்ப்பன மாமகள் மாக்குழாம் - மைந்தரைப் பார்ப்பனவாகிய பெரிய மகண்மாக்களின் திரளும்; சந்தனம் மேய்வன தவழ் மதக் களிற்றினம் - சந்தனத் தழையை மேய்வனவாகிய மதம் தவழும் களிற்றின் திரளும்; அம் தழைக்காடு எலாம் திளைப்ப ஆமான்இனம் - அழகிய தழையை உடைய காடுகளில் எல்லாம் பயில்வனவாகிய ஆமானின் திரளும்; சிந்த - சிதறி ஓடும்படி; வால் வெடிப்பன சிங்கம் எங்கும் உள - வாலை வீசுவனவாகிய சிங்கங்கள் எங்கும் உள்ளன.

(வி - ம்.) இனி, இவை நான்கும் எங்கும் உள எனினும் ஆம்.

மகண்மா - ஒருவகை விலங்கு. தவழ்மதம் : வினைத்தொகை. அந்தழை - அழகிய தழை. ஆமானினம் - காட்டுப் பசுவின் கூட்டம். எங்கும்முள, மகரம் வண்ணநோக்கி விரிந்தது.

14. .
வருக்கையின் கனிதொறும் வானரம் பாய்ந்து உராய்ப்
பொருப்பு எலாம் பொன் கிடந்து ஒழுகி மேல் திருவில் வீழ்ந்து
ஒருக்கு உலாய் நிலமிசை மிளிர்வ ஒத்து ஒளிர் மணி
திருக் கிளர் ஒளி குலாய் வானகம் செகுக்குமே
(இ - ள்.) வருக்கையின் கனி தொறும் வானரம் பாய்ந்து - பலாவின் கனி தொறும் வானரங்கள் பாய்தலால்; பொருப்பெலாம் உராய் ஒழுகி - மலையெங்கும் பரவி ஒழுகி; பொன் கிடந்து ஒளிர் மணி திருக்களர் ஒளி குலாய் - பொன் கிடந்து ஒளிரும் மணிகளின் அழகிய கிளர்ந்த ஒளியுடன் குலாவி; மேல் திருவில் வீழ்ந்து - மேலுண்டாகிய வானவில் வீழ்ந்து; ஒருக்குலாய் நிலமிசை மிளிர்வ ஒத்து - ஒருங்கு வளைந்து விளங்குவன போன்று; வான் அகம் செகுக்கும் - வானத்தை வெல்லும்.

(வி - ம்.) செய்தென் எச்சங்களைக் காரணம் ஆக்குக. பொருப்பெலாம் செகுக்கும். ஒருங்கு குலாய் : ஒருக்குலாய் : விகாரம்.

15. 
வீழ் பனிப் பாறைகள் நெறி எலாம் வெவ் வெயில்
போழ்தலின் வெண்ணெய் போல் பொழிந்து மட்டு ஒழுகுவ
தாழ் முகில் சூழ் பொழில் சந்தனக் காற்று அசைந்து
ஆழ் துயர் செய்யும் அவ் அருவரைச் சாரலே
(இ - ள்.) அவ் அருவரைச் சாரல் நெறியெல்லாம் - அந்த அரிய மலைச்சாரலின் வழியெங்கும்; வீழ் பனிப் பாறைகள் - வீழ்ந்த பனிப் பாறைகள்; வெவ்வெயில் போழ்தலின் - கொடிய வெயில் உருக்குவதால்; வெண்ணெய் போல் பொழிந்து - வெண்ணெய்போலப் பொழிவதும் புரிந்து; மட்டு ஒழுகுவ தாழ்முகில் சூழ் பொழில் - தேனொழுகுவன வாகிய, முகில்சூழ் பொழிலிலே; சந்தனக் காற்று அசைந்து - சந்தனக் காற்றும் வீசி; ஆழ்துயர் செய்யும் - மிகுதுயரைச் செய்யும்.

(வி - ம்.) வீழ்பனிப்பாறை : வினைத்தொகை. மட்டு - தேன். தாழ் முகில் : வினைத்தொகை. சூழ்பொழில் : வினைத்தொகை. நெறிகள் பொழியப்பட்டு அசையப்பட்டுத் துயர் செய்யும் என்க.

16.
கூகையும் கோட்டமும் குங்குமமும் பரந்து
ஏகல் ஆகா நிலத்து அல்கி விட்டு எழுந்து போய்த்
தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது ஓர்
நாக நன் காவினுள் நயந்து விட்டார்களே
(இ - ள்.) கூகையும் கோட்டமும் குங்குமமும் பரந்து - கூகை என்னுங் கொடியும் கோட்டம் குங்குமம் என்னும் மரங்களும் பரவியிருப்பதால்; ஏகல் ஆகா நிலத்து அல்கி - அழகாற் போதற்கு அரிய நிலத்தே தங்கி; விட்டு எழுந்து போய் - அவ்விடத்தைவிட்டு எழுந்து சென்று; தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது - மயிலும் அன்னமுங் கூடி ஆரவாரிப்பதாகிய, ஓர் நாக நன்காவினுள் நயந்து விட்டார்கள் - ஒரு நாகமரப் பொழிலிலே விரும்பித் தங்கினார்கள்.

(வி - ம்.) கூகை - ஒருகொடி. கோட்டம் குங்குமம் என்பன மரங்கள். பரத்தலால் ஏகலாகா எனலே அமையும். அழகால் போதற்கரிய என்பர் நச்சினார்க்கினியர். அல்கி - தங்கி. விட்டார்கள் - தங்கினார்கள்.

17. 
பொறி மயில் இழியும் பொன் தார் முருகனின் பொலிந்து மாவின்
நெறிமையின் இழிந்து மைந்தன் மணிக்கை மத்திகையை நீக்கி
வெறுமையின் அவரைப் போக்கி வெள்ளிடைப் படாத நீரால்
அறி மயில் அகவும் கோயில் அடிகளைச் செவ்வி என்றான்
(இ - ள்.) மைந்தன் - சீவகன்; பொறிமயில் இழியும் பொன்தார் முருகனின் பொலிந்து - புள்ளிகளையுடைய மயிலினின்றிறங்கும் பொன்மாலை அணிந்த முருகனைப் போலப் பொலிவுற்று; மாவின் நெறிமையின் இழிந்து - குதிரையிலிருந்து இறங்கும் முறையான் இறங்கி; கைமணி மத்திகையை நீக்கி - கையிலிருந்து மணிகள் இழைத்த குதிரைச் சம்மட்டியை நீக்கி; வெறுமையினவரைப் போக்கி வெள்ளிடைப் படாத நீரால் - அறிவிலாதாரைப் போகவிடுத்து, அடிகளை வெளியிடும் வகை நேராதவாறு; மயில் அகவும் கோயில் அடிகளைச் செவ்வி அறி என்றான் - மயில் அகவும் தவப் பள்ளியிலே சென்று அடிகளைச் செவ்வியறிவாயாக என்றான்.

(வி - ம்.) அன்பு செலுத்தலின் அவனோடே கூடச் செல்கின்றவன் செவ்வி அறிந்தே சேறல் முறையாகலானும், பதுமுகன் தன்னை அறிவிக்க விசயை அறிய வேண்டுதலானும் செவ்வியறி என்றான்.

18. 
எல் இருள் கனவில் கண்டேன் கண் இடன் ஆடும் இன்னே
பல்லியும் பட்ட பாங்கர் வரும் கொலோ நம்பி என்று
சொல்லினள் தேவி நிற்பப் பதுமுகன் தொழுது சேர்ந்து
நல் அடி பணிந்து நம்பி வந்தனன் அடிகள் என்றான்
(இ - ள்.) எல்இருள் கனவில் கண்டேன் - விடியற்காலத் திருளிலே கனவிலே கண்டேன்; கண்இடன் ஆடும் இடக்கண் ஆடும்; இன்னே பல்லியும் பாங்கர் பட்ட - இப்பொழுதே பல்லியும் நல்ல இடத்தே பட்டன; நம்பி வருங்கொலோ என்று சொல்லினள் - (ஆதலால்) நம்பி வருவானோ என்று கூறியவளாய் - தேவி நிற்ப - விசயை நிற்ப; பதுமுகன் தொழுது சேர்ந்து - பதுமுகன் தொழுதவாறு சென்று; நல்அடி பணிந்து - அழகிய அடியிலே வணங்கி; அடிகள் நம்பி வந்தனன் என்றான் - அடிகளே! நம்பி வந்தான் என்றான்.

(வி - ம்.) எல் - பகல். நம்பி : 'நம்' என்பது முதனிலையாக 'நமக்கு இன்னான்' என்னும் பொருள்பட வருவதோர் உயர்ச்சிச்சொல்.

எல்லிருள் - விடியற்காலத்திருள். விடியற்காலத்திருளிலே கண்ட கனா அண்மையிலேயே பலிக்கும் என்பது கனா நூற்றுணிபு. இதனைப் படைத்த முற்சாமமோ ராண்டிற் பலிக்கும் பகரிரண்டே கிடைத்த பிற் சாம மிகுதிங்கள் எட்டிற் கிடைக்குமென்னும் இடைப்பட்ட சாமமோர் மூன்றினிற் றிங்களொர் மூன்றென்பவால்என்னும் கனா நூலானும் உணர்க; (சிலப். 15 : 95-106. அடியார்க். மேற்.)

19. 
எங்ஙணான் ஐயன் என்றாட்கு அடியன் யான் அடிகள் என்னாப்
பொங்கி வில் உமிழ்ந்து மின்னும் புனை மணிக் கடகம் ஆர்ந்த
தங்கு ஒளித் தடக்கை கூப்பித் தொழுது அடி தழுவி வீழ்ந்தான்
அங்கு இரண்டு அற்பு முன்னீர் அலை கடல் கலந்தது ஒத்தார்

(இ - ள்.) எங்கணான் ஐயன் என்றாட்கு - எங்குளான் என் ஐயன் என்றாட்கு; அடியன் யான் அடிகள் என்னா - அடியேன் ஈங்குளேன் அடிகளே என்று; பொங்கி வில் உமிழ்ந்து மின்னும் புனை மணிக்கடகம் ஆர்ந்த - மிகுதியாக ஒளியை உமிழ்ந்து விளங்கும் அழகிய மணிக் கடகம் பொருந்திய; தங்கு ஒளித் தடக்கை கூப்பித் தொழுது - ஒளி தங்கிய பெரிய கையைக் குவித்துத் தொழுது; அடிதழுவி வீழ்ந்தான் - (பிறகு) அன்னையின் அடிகளைத் தழுவி வீழ்ந்தான்; அங்கு இரண்டு அற்பு முன் நீர் அலைகடல் - அவ்விடத்து அவ்விருவரும் முன்னீராலே இரண்டு் அற்புக் கடல் கலந்தது போன்றார்.

(வி - ம்.) முன்நீர் - முற்பட்ட நீர்மை : 'உதிரம் உறவறியும்' என்னும் பழமொழியை நோக்குக. இது கருதியே, முன் (சீவக. 1908) 'வெள்ளிடைப் படாத' என்றார். அடிகள் அன்பும் சீவகன் அன்பும் சொல்லொணா அளவிற்று. அம்முறையால் அவ்விரண்டனையும் இரண்டு கடலென்று உருவகித்தார்.


20. 
வாள் திறல் குருசில் தன்னை வாள் அமர் அகத்துள் நீத்துக்
காட்டகத்து உம்மை நீத்த கயத்தியேற் காண வந்தீர்
சேட்டு இளம் பருதி மார்பின் சீவக சாமியீரே
ஊட்டு அரக்கு உண்ட செந் தாமரை அடி நோவ என்றாள்
(இ - ள்.) சேடு இளம் பருதி மார்பின் சீவக சாமியீரே! - பெருமையையுடைய இள ஞாயிறு போலும் மார்பினையுடைய சீவக சாமியீரே!; வாள் திறல் குருசில் தன்னை வாள் அமரகத்துள் நீத்து - வாள் வலி பெற்ற அரசனைப் போரிலே கைவிட்டு; உம்மைக் காட்டகத்து நீத்த - நும்மைச் சுடுகாட்டிலே கைவிட்ட; கயத்தியேற் காண - கொடியேனைக் காண; ஊட்டு அரக்கு உண்ட செந்தாமரை அடிநோவ - ஊட்டிய செந்நிறங்கொண்ட செந்தாமரை அனைய அடிகள் நோமாறு; வந்தீர் என்றாள் - வந்தீரே! நும் அன்பிருந்தவாறு என்னே! என்றாள்.

(வி - ம்.) 'சீவக சாமியீரே' என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் முடிபு : 'பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே' (தொல் - விளிமரபு, 23) என்ற சூத்திரத்தில், சீவக சாமியென்னும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. தன்னினம் முடித்தல் என்பதனாற் சீவக சாமியார் என ஆரீறாய்ச் சீவக சாமியீரே என ஈரொடு ஏகாரம் பெறுதல கொள்க' எனக் கூறினார்.


21. 
கெடல் அருங் குரைய கொற்றம் கெடப் பிறந்ததுவும் அன்றி
நடலையுள் அடிகள் வைக நட்பு உடையவர்கள் நைய
இடை மகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த துன்பக்
கடல் அகத்து அழுந்த வேண்டா களைக இக் கவலை என்றான்
(இ - ள்.) கெடல் அருங் கொற்றம் கெடப் பிறந்ததுவும் அன்றி - கெடாத வெற்றியையுடைய அரசன் கெடுமாறு பிறந்ததுவும் அல்லாமல்; அடிகள் நடலையுள் வைக - அடிகள் வருத்தத்திலே தங்க; நட்புடையவர்கள் நைய - நண்பர்கள் வருந்த; இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த - இடையன் வெட்டிய துன்புறும் மரத்தின் தன்மையுடையேனாகிய யான் தந்த; துன்பக் கடலகத்து அழுந்த வேண்டா துன்பக்கடலிலே அழுந்த வேண்டா; இக்கவலை களைக என்றான் - இனி இத்துன்பத்தைக் கைவிடுக என்றான்.

(வி - ம்.) குரைய : அசை. கொற்றம் - தொழிலாகுபெயராய் அரசனை உணர்த்தியது. நட்புடையவர் : சச்சந்தனுடைய நண்பர்கள்; சீவகன் தோழருடைய தந்தையர். 'உயிருடன் இருந்தேனாய்ப் பகையை வென்றேனும் அல்லேன்; உயிரை நீத்தேனும் அல்லேன்' என்று கருதி, 'மரத்தினேன்' என்றான். 'இடையன் எறிந்த மரம்' (பழ. 314) என்றார் பிறரும்.

22. 
யான் அலன் ஒளவை ஆவாள் சுநந்தையே ஐயற்கு என்றும்
கோன் அலன் தந்தை கந்துக் கடன் எனக் குணத்தின் மிக்க
பால் நிலத்து உறையும் தீம் தேன் அனையவாய் அமிர்தம் ஊற
மான் நலம் கொண்ட நோக்கி மகன் மனம் மகிழச் சொன்னாள்
(இ - ள்.) ஐயற்கு ஒளவை யாவாள் சுநந்தையே, யான் அலன் - ஐயனுக்குத் தாயாவாள் சுநந்தையே, யானல்லேன்; தந்தை கந்துக் கடன், கோன் அலன் - தந்தையாவான் கந்துக் கடனே, அரசனல்லன்; என - என்று; பால்நிலத்து உறையும் தீதேன் அனையவாய் அமிர்தம் ஊற - பாலிடத்தே தங்கும் இனிய தேனைப் போன்றனவாய் இனிமையூறும்படி; குணத்தின் மிக்க மான் நலம் கொண்ட நோக்கி - குணத்திற் சிறந்தவளும், மானின் அழகைக்கொண்ட நோக்கத்தை யுடையவளுமான விசயை; மகன் மனம் மகிழச் சொன்னாள் - சீவகன் மனங்களிக்கக் கூறினான்.

(வி - ம்.) இருமுது குரவர்க்குந் துன்பஞ் செய்தே னென்றலின், உனக்கு இவரன்றோ இருமுது குரவர் என்றாள், ஐயன் : முன்னிலைப் படர்க்கை.

23. 
எனக்கு உயிர்ச் சிறுவன் ஆவான் நந்தனே ஐயன் அல்லை
வனப்புடைக் குமரன் இங்கே வருக என மருங்கு சேர்த்திப்
புனக் கொடி மாலையோடு பூங் குழல் திருத்திப் போற்றார்
இனத்து இடை ஏறு அனானுக்கு இன் அளி விருந்து செய்தாள்
(இ - ள்.) எனக்கு உயிர்ச் சிறுவன் ஆவான் நந்தனே; ஐயன் அல்லை - எனக்கு உயிர்போலும் சிறுவனாவான் நந்தட்டனே, நீ அல்லை; வனப்புடைக் குமரன் இங்கே வருக என மருங்கு சேர்த்தி - (ஆதலால்) அழகுடைய மகனே! இங்கே வருக என்று கூறி (அவனை) அருகே அணைத்து; புனக் கொடி மாலையோடு பூங்குழல் திருத்தி - புனக்கொடி போன்றாள் அவனுடைய மாலையையும் மலர்க் குழலையுந் திருத்தி; போற்றார் இனத்திடை ஏறு அனானுக்கு - பகைவர் திரளிலே சிங்கம் போன்ற நந்தட்டனுக்கு; இன் அளி விருந்து செய்தாள் - இனிய தண்ணளியாகிய விருந்தைச் செய்தாள்.

(வி - ம்.) உயிர்ச்சிறுவன் - உயிர்போன்ற மகன். குமரன் : விளி. புனக்கொடி : அன்மொழித்தொகை; விசயை. போற்றார் - பகைவர்.

24. 
சிறகரால் பார்ப்புப் புல்லித் திரு மயில் இருந்ததே போல்
இறைவி தன் சிறுவர் தம்மை இரு கையினாலும் புல்லி
முறை முறை குமரர்க்கு எல்லாம் மொழி அமை முகமன் கூறி
அறு சுவை அமிர்தம் ஊட்டி அறுபகல் கழிந்த பின் நாள்
(இ - ள்.) இறைவி - விசயை; சிறகரால் பார்ப்புப் புல்லித் திருமயில் இருந்ததேபோல் - சிறகினாலே குஞ்சுகளைத் தழுவி அழகிய மயில் இருந்ததைப்போல; தன் சிறுவர் தம்மை இரு கையினாலும் புல்லி - தன் மக்களை இரண்டு கையாலும் தழுவி; குமரர்க்கு எல்லாம் முறைமுறை மொழி அமை முகமன்கூறி - மற்றைய மைந்தர்கட்கெல்லாம் முறைமுறையாக இன்மொழி கலந்த முகமன் மொழிந்து; அறுசுவை அமிர்தம் ஊட்டி - அறுசுவை உண்டியை உண்பித்து; அறுபகல் கழிந்த பின்னாள் - ஆறுநாட்கள் கழிந்து ஏழாவது நாளிலே,

(வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.

பார்ப்பு - குஞ்சு. சிறகர் - சிறகு. புல்லி - தழுவி. இறைவி : கோப்பெருந்தேவி; விசயை. இன்மொழி என்க. அமிர்தம் - உணவு.

25. 
மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம்
குரவம் கோங்கம் குடம் புரை காய் வழை
விரவு பூம் பொழில் வேறு இருந்து ஆய் பொருள்
உருவ மாதர் உரைக்கும் இது என்பவே
(இ - ள்.) மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம் குரவம் கோங்கம் குடம்புரை காய் வழை - மரவமும் நாகமும் மணம் பொருந்திய சண்பகமும் குரவமும் கோங்கமும் குடம் போன்ற காயையுடைய சுரபுன்னையும்; விரவு பூம்பொழில் - கலந்த மலர்ப் பொழிலிலே; உருவமாதர் - அழகினையுடைய விசயை; வேறு இருந்து - மைந்தருடன் தனியே இருந்து; ஆய்பொருள் இது உரைக்கும் ஆராய்ந்த பொருளாகிய இதனை உரைப்பாள்.

(வி - ம்.) மரவம், நாகம், சண்பகம், குரவம், கோங்கம், வழை என்பன மரங்கள். புரை : உவமவுருபு. வழை - சுரபுன்னை. ஆய்பொருள் - ஆராய்ந்த பொருள். மாதர் பொருள் இது உரைக்கும் என இயைக்க. என்ப. ஏ : அசைகள்.

26. 
நலிவு இல் குன்றொடு காடு உறை நன்பொருள்
புலி அனார் மகள் கோடலும் பூமி மேல்
வலியின் மிக்கவர் தம் மகள் கோடலும்
நிலை கொள் மன்னர் வழக்கு என நேர்பவே

(
இ - ள்.) நலிவு இல் குன்றொடு காடு உறை நன்பொருள் புலியனார் மகள் கோடலும் - அழித்தற்கரிய மலையிலும் காட்டிலும் உறைகின்ற பெரும் பொருளையுடைய குறுநில மன்னர் மகளைக் கொள்ளுதலும்; பூமிமேல் வலியின் மிக்கவர் தம்மகள் கோடலும் - புவியிடை வலிய அரசர் மகளைக் கொள்ளுதலும்; நிலைகொள் மன்னர் வழக்கு என நேர்ப - தம்முன்னோர்போல் நிலைகொள்ளும் அரசரின் முறைமையென்று நூல்வல்லோர் ஒப்புவர்.

(
வி - ம்.) நன்பொருள் என்புழி நன்மை பெருமைமேனின்றது, புலியனார் என்றது வலிமிக்க குறுநில மன்னரை. நூல்வல்லோர் நேர்ப என்க. எனவே வலியின் மிக்கவர் மகளை நீ கொண்டது நன்னென்றாள்.

27. 
நீதியால் அறுத்து அந்நிதி ஈட்டுதல்
ஆதி ஆய அரும் பகை நாட்டுதல்
மோதி முள்ளொடு முள்பகை கண்டிடல்
பேது செய்து பிளந்திடல் பெட்டதே
(இ - ள்.) நீதியால் அறுத்து அந்நிதி ஈட்டுதல் - அரசியல் முறையாலே ஆறிலொன்றாக வரையறுத்து அப் பொருளைச் சேர்த்தல்; ஆதி ஆய அரும்பகை நாட்டுதல் - தொன்மையான பகையைத் தம் நெஞ்சிலே நிலைபெறுத்துதல்; முள்ளொடு முள்பகை பேதுசெய்து மோதிக் கண்டிடல் - முள்ளைக்கொண்டு முள்ளைக் களையுமாறுபோலத் தமக்குப் பகைஞராய் உறவாயிருப்பவர் இருவரைத் தம்மில் வேறுபடுத்தி ஒருவரைக்கொண்டு ஒருவரை மோதியிடுதல்; பிளந்திடல் - தம்மிற் கூடி வந்து வினை செய்வாரைப் பிரித்துத் தம்மோடு கூட்டிக்கொள்ளுதல் : பெட்டது - அரசர் விரும்பப்பட்ட பொருளாகும்.

(வி - ம்.) 'முள்ளினால் முட்களையுமாறு' (பழ. 54) வினை செய்வாரைப் பிரித்தலாவது பகைமன்னரிடம் வினை செய்வாராய்ச் சிறந்திருப்பாரைப் பிளவுபடுத்தித் தம்முடன் கூட்டிக் கொள்ளுதல்.

28. 
ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்
கற்ற மாந்தரைக் கண் எனக் கோடலும்
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது அரோ
கொற்றம் கொள் குறிக் கொற்றவற்கு என்பவே
(இ - ள்.) ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும் - ஒற்றரை ஒற்றரைக் கொண்டே ஆராய்தலும்; கற்ற மாந்தரைக் கண்எனக் கோடலும் - அறநூல் கற்ற அமைச்சரைக் கண்போலக் கொள்வதும்; சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் - மந்திரிச் சுற்றத்தையும் தந்திரிச் சுற்றத்தையும் இவன் இதற்குரியன் என்று ஆராய்ந்து பெருக்கலும்; கொற்றம் கொள் குறிக் கொற்றவற்குச் சூது என்ப - வெற்றிகொள்ளுங் கருத்தையுடைய அரசற்குச் சூழ்ச்சி யென்ப.

(வி - ம்.) இச் செய்யுட் கருத்தோடு,

ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்எனவும், (குறள். 588)
ஒற்றொற் றுணராமை யாள்கஎனவும், (குறள். 589)
சூழ்வார் கண்ணாக ஒழுகல்எனவும், (குறள். 445)
வரும், வள்ளுவர் மெய்ம்மொழிகளையும் ஒப்பிட்டுக் காண்க.

29. 
வென்றி ஆக்கலும் மேதகவு ஆக்கலும்
அன்றியும் கல்வி யோடு அழகு ஆக்கலும்
குன்றி னார்களைக் குன்று என ஆக்கலும்
பொன் துஞ்சு ஆகத்தினாய் பொருள் செய்யுமே
(இ - ள்.) பொன் துஞ்சு ஆகத்தினாய் - திருமகள் தங்கும் மார்பினாய்!; வென்றி ஆக்கலும் - வெந்றியை உண்டாக்கலும்; மேதகவு ஆக்கலும் - மேம்பாட்டை உண்டாக்கலும்; அன்றியும் - இவைகளே அல்லாமல்; கல்வியோடு அழகு ஆக்கலும் - கல்வியையும் அழகையும் உண்டாக்கலும்; குன்றினார்களைக் குன்று என ஆக்கலும் - மெலிந்தவரை மலையென வலியுடையராக்கலும்; பொருள் செய்யும் - பொருளாற் செய்ய வியலும்.

(வி - ம்.) வென்றி - வெற்றி, ஆக்கல் - உண்டாக்குதல், மேதகவு. கேம்பாடு. குன்றினார் - குறைந்தவர். பொன் : திருமகள். ஆகம் - மார்பு.

30. 
பொன்னின் ஆகும் பொருபடை அப்படை
தன்னின் ஆகும் தரணி தரணியில்
பின்னை ஆகும் பெரும் பொருள் அப் பொருள்
துன்னும் காலைத் துன்னாதன இல்லையே
(இ - ள்.) பொன்னின் பொருபடை ஆகும் - இப் பொருளாலே போருக்குரிய படையுண்டாகும்; அப் படைதன்னின் தரணி ஆகும் - அப்படையினாலே நாடு கிடைக்கும்; தரணியின் பின்னைப் பெரும் பொருள் ஆகும் - நாட்டினாலே பிறகு பெரிய பொருள் கிடைக்கும்; அப்பொருள் துன்னும் காலைத் துன்னாதன இல்லை - அப்பொருள் கைகூடுமானால் வீடும் கிடைக்கும்.

(வி - ம்.) பொன் - ஈண்டுப் பொருள், பொருபடை : வினைத் தொகை, தரணி - நிலம், துன்னாதன இல்லை எனவே வீடும் கிடைக்கும் என்றாளாயிற்று. துன்னாதன் - எய்துதற்கரியன.


31. 
நிலத்தின் நீங்கி நிதியினும் தேய்ந்து நம்
குலத்தில் குன்றிய கொள் கையம் அல்லதூஉம்
கலைக் கணாளரும் இங்கு இல்லை காளை நீ
வலித்தது என் என வள்ளலும் கூறுவான்
(இ - ள்.) காளை - காளையே!; நிலத்தின் நீங்கி - நிலத்தையிழந்து; நிதியினும் தேய்ந்து - செல்வத்தினுங் குறைந்து; குலத்திற்குன்றிய கொள்கையாம் - நல்குலத்தில் தாழ்ந்த கொள்கையினை உடையேம்; அல்லதூஉம் - அல்லாமலும்; கலைக்கணாளரும் இங்கு இல்லை - (இந்நிலையை நீக்கற்குரிய) அமைச்சரும் இவ்விடத்தே இல்லை; நீ வலித்தது என் என - நீ துணிந்தது யாது என்று வினவ; வள்ளலும் கூறுவான் - சீவகனும் உரைப்பான்.

(வி - ம்.) நிலம் என்றது - நமக்குரிய நாடு என்பது பட நின்றது. கொள்கையம் : தன்மைப்பன்மை வினைமுற்று. அல்லதூஉம் : இன்னிசை யளபெடை. கலையைக் கண்ணாக உடையர்; அமைச்சர், காளை - விளி. வலித்தது - துணிந்தது. வள்ளல் : சீவகன்.


32. 
எரியொடு நிகர்க்கும் ஆற்றல்
இடிக் குரல் சிங்கம் ஆங்கு ஓர்
நரியொடு பொருவது என்றால் சூழ்ச்சி
நல் துணையோடு என் ஆம்
பரிவொடு கவல வேண்டா
பாம்பு அவன் கலுழன் ஆகும்
சொரி மதுச் சுரும்பு உண் கண்ணிச்
சூழ் கழல் நந்தன் என்றான்
(இ - ள்.) எரியொடு நிகர்க்கும் ஆற்றல் - தீயொடு நிகர்க்கும் ஆற்றலையுடைய; இடிக்குரல் சிங்கம் ஆங்கு ஓர் நரியொடு பொருவது என்றால் - இடிபோலும் முழக்கத்தையுடைய சிங்கம் ஆங்கு ஒரு நரியுடன் போர் புரிவதென்னின்; சூழ்ச்சி நல்துணையொடு என் ஆம்? - அவ்விடத்து அருளிச் செய்த சூழ்ச்சியும் துணைகளும் என்னவாகும்?; பரிவொடு கவலவேண்டா - என்மேல் வைத்த அன்பினால் இதற்கு வருந்த வேண்டா; அவன் பாம்பு - கட்டியங்காரன் பாம்பு ஆவான்; சொரிமதுச் சுரும்பு உண் கண்ணிச் சூழ்கழல் நந்தன் கலுழன் ஆகும் - பொழியுந்தேனைச் சுரும்புகள் பருகுங் கண்ணியையும் சூழ்ந்த வீரக்கழலையுமுடைய நந்தட்டன் கருடன் ஆவான்; என்றான் - என்று சீவகன் கூறினான்.

(வி - ம்.) 'நான் அவனுடனே பொருவதனால் சூழ்ச்சியுந் துணையும் வேண்டாமையோடு, நானும் சென்று பொரவேண்டியதில்லை ; நந்தட்டன் ஒருவனே போதும்; மேலும் இவனைக் கண்டவுடனே கட்டியங்காரன் கெடுவான்' - என்று கூறினானாகக் கொள்க.

33. 
கெலுழனோ நந்தன் என்னாக்
கிளர் ஒளி வனப்பினானைக்
கலுழத் தன் கையால் தீண்டிக்
காதலின் களித்து நோக்கி
வலி கெழு வயிரத் தூண் போல்
திரண்டு நீண்டு அமைந்த திண் தோள்
கலி கெழு நிலத்தைக் காவாது
ஒழியுமோ காளைக்கு என்றாள்
(இ - ள்.) நந்தன் கெலுழனோ என்னா - (அதுகேட்ட விசயை) நந்தட்டன் கலுழனோ என்று கூறி; கிளர் ஒளி வனப்பினானைக் கலுழத் தன் கையால் தீண்டி - விளங்கும் ஒளியும் அழகும் உடைய அவனை மனமுருகும்படி தன் கையினாலே தீண்டி; காதலிற் களித்து நோக்கி - அன்பினாற் களிப்புற்றுப் பார்த்து; வலிகெழு வயிரத் தூண்போல் திரண்டு நீண்டு அமைந்த திண்தோள் - ஆற்றல்பொருந்திய வயிரத் தூணைப்போலத் திண்ணியவாய்த் திரண்டு நீண்டு அமைந்த தோள்கள்; கலிகெழு நிலத்தைக் காளைக்குக் காவாது ஒழியுமோ என்றாள் - கட்டியங்காரனிடத்துப் பொருந்திய நிலததைக் காளைக்குக் கொண்டு தந்து காவாமல் நீங்குமோ என்றாள்.

(வி - ம்.) காளை : சீவகன். கலி - கட்டியங்காரன். தந்தென வருவிக்க.

கெலுழன் - கலுழன்; கருடன். கலுழ - மனமுருகும்படி. இத் திண்டோள் என்க. ஒழியுமோ என்புழி ஓகாரம் எதிர்மறை அதன் உடன்பாட்டுப் பொருளை வலியுறுத்தி நின்றது. காளைக்கு; முன்னிலைப் படர்க்கை.

34. 
இடத்தொடு பொழுது நாடி
எவ்வினைக் கண்ணும் அஞ்சார்
மடப்படல் இன்றிச் சூழும்
மதி வல்லார்க்கு அரியது உண்டோ
கடத்து இடைக் காக்கை ஒன்றே
ஆயிரம் கோடி கூகை
இடத்து இடை அழுங்கச் சென்று ஆங்கு
இன் உயிர் செகுத்தது அன்றே
(இ - ள்.) கடத்திடைக் காக்கை ஒன்றே - காட்டிலுள்ள ஒரு காக்கையே; ஆயிரங்கோடி கூகை இடத்திடை - எண்ணிறந்த கூகையிருக்கின்ற இடத்திலே; அழுங்கச் சென்று - அவை வருந்துமாறு பகற்காலத்தே சென்று; ஆங்கு இன்உயிர் செகுத்தது அன்றே? - அங்கே அவற்றின் இனிய உயிரைக் கெடுத்தது அன்றோ?; (ஆகையால்) இடத்தொடு பொழுதும் நாடி - இடத்தையும் காலத்தையும் எண்ணி; எவ்வினைக் கண்ணும் அஞ்சார் - ஆண்டுச் செய்யும் எத் தொழிலுக்கும் அஞ்சாராய்; மடப்படல் இன்றிச் சூழும் மதி வல்லார்க்கு - அறியாமையிற்படுதலில்லாமல் ஆராயும் அறிவினையுடையார்க்கு; அரியது உண்டோ? - முடியாதது உளதோ?

(வி - ம்.) இடம் - தகுந்த இடம். பொழுது - தகுந்த பொழுது. ஞாலங் கருதினுங் கைகூடும், காலம் கருதி இடத்தாற் செயின்என்றார் வள்ளுவனாரும் (குறள். 484) ஆயிரங்கோடி காக்கை என்றது மிகுதிக்கோர் எண் காட்டியவாறு. எண்ணிறந்த காக்கை என்றவாறு.

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (குறள். 481)
என்றார் வள்ளுவனாரும்.

35. 
இழை பொறை ஆற்ற கில்லாது
இட்டிடை தளர நின்ற
குழை நிற முகத்தினார் போல்
குறித்ததே துணிந்து செய்யார்
முழை உறை சிங்கம் பொங்கி
முழங்கி மேல் பாய்ந்து மை தோய்
வழை உறை வனத்து வன்கண்
நரி வலைப்பட்டது அன்றே
(இ - ள்.) முழையுறை சிங்கம் மைதோய் வழையுறை வனத்து பொங்கி முழங்கிமேற் பாய்ந்து - குகையில் இருந்த சிங்கம் இடமறியாமல் முகில் தங்கும் வழை பொருந்திய காட்டிலே கிளர்ந்து ஆரவாரித்து (நரியின்)மேற் பாய்ந்து; வன்கண் நரி வலைப்பட்டது அன்றே? - கொடிய அந் நரியாகிய வலையிலே அகப்பட்டுக் கொண்டது அன்றோ?; (ஆகையால்) இழை பொறை ஆற்றகில்லாது இட்டிடை தளர நின்ற - அணிகலன்களைச் சுமக்கமாட்டாது நுண்ணிடை சோர நின்ற; குழை நிற முகத்தினார் போல் - குழையணிந்த ஒள்ளிய முகமுடைய மகளிரைப்போல; குறித்ததே துணிந்து செய்யார் - யாம் வீரமுடையேம் என்று நினைத்ததை (காலம் இடம் உணராமல்) நினைத்த படியே செய்ய முற்படார்.

(வி - ம்.) 'மடம் பாடல்' என்பது, 'மடப்படல்' என வந்தது விகாரம் 'காலாழ் களரின் நரியடும்' (குறள். 50) என்றார் தேவர்.


36. 

ஊழி வாய்த் தீயோடு ஒப்பான்
பதுமுகன் உரைக்கும் ஒன்னார்
ஆழிவாய்த் துஞ்ச மற்று எம்
ஆற்றலான் நெருங்கி வென்று
மாழை நீள் நிதியம் துஞ்சும்
மாநிலக் கிழமை எய்தும்
பாழியால் பிறரை வேண்டேம்
பணிப்பதே பாணி என்றான்
(இ - ள்.) ஊழி வாய்த் தீயொடு ஒப்பான் பதுமுகன் உரைக்கும் - ஊழிக் காலத்தீயைப் போன்றவனாகிய பதுமுகன் கூறுவான்; ஒன்னார் ஆழிவாய்த் துஞ்ச - பகைவர் கடலிலேபட; எம் ஆற்றலால் நெருங்கி வென்று - எம் வல்லமையால் அடர்த்து வென்று; மாழை நீள் நிதியம் துஞ்சம் மாநிலக்கிழமை எய்தும் - பொன் மிகுந்த செல்வம் தங்கிய பெருநில ஆட்சியை அடைவோம்; பாழியால் பிறரை வேண்டோம் - வலிமையால் மற்றவரை நாடுகிலேம்; பணிப்பதே பாணி என்றான் - அடிகளின் அருளே தடையாகும் என்றான்.

(வி - ம்.) எய்தும் : தன்மைப் பன்மை வினைமுற்று. 'பாழியேம்' என்றும் பாடம்.
ஊழிவாய்த்தீ - ஊழிமுடி வினுலகத்தைஅழிக்கும் நெருப்பு. ஆழி - சக்கரப்படையுமாம். குருதிக் கடலிடத்தே என்றுமாம். துஞ்ச - இறந்துபட. மாழை - பொன். பாழி - வலிமை.

37. 
பொரு அருங் குரைய மைந்தர் பொம் என உரறி மற்று இத்
திரு இருந்து அகன்ற மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள்
எரி இருந்து அயரும் நீர்மை இரும் கதிர் ஏற்ற தெவ்வர்
வரு பனி இருளும் ஆக மதிக்க எம் அடிகள் என்றார்
(இ - ள்.) பொரு அருமைந்தர் பொம்என உரறி - உவமை கூறுதற்கரிய (பதுமுகன் நீங்கலான) தோழர்கள் கடுக முழங்கி; திரு இருந்து அகன்ற மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள் - திருமகள் தங்கிய பரந்த மார்பனாகிய சீவகனுடைய சேவடியை அடைந்த யாங்கள்; எரிஇருந்து அயரும் நீர்மை இருங்கதிர் - (வெப்பத்திற்கு யாம் ஆற்றேம் என்று) தீசோர்வுற்றிருந்து அயரும் தன்மையையுடைய ஞாயிறு ஆகவும்; ஏற்ற தெவ்வர் வருபனி இருளுமாக-எம்மை எதிர்ந்த பகைவர் பனியும் இருளுமாகவும்; எம் அடிகள் மதிக்க என்றார் - எம் அடிகள் மதித்திடுக என்றனர்.

(வி - ம்.) குரைய : அசை. பொம்மென : குறிப்புமொழி. திருவிருந்த மார்பன் எனச் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. மார்பன் : சீவகன். இருங்கதிர் - ஞாயிறு. தெவ்வர் - பகைவர்.

38. 
கார் தோன்றவே மலரும் முல்லை கமலம் வெய்யோன்
தேர் தோன்றவே மலரும் செம்மல் நின் மாமன் மற்று உன்
சீர் தோன்றவே மலரும் சென்று அவன் சொல்லி னோடே
பார் தோன்ற நின்ற பகையைச் செறற்பாலை என்றாள்
(இ - ள்.) செம்மல்! - செம்மலே!; முல்லை கார் தோன்றவே மலரும் - முல்லை கார் தோன்றினால் மலரும்; கமலம் வெய்யோன் தேர் தோன்றவே மலரும் - தாமரை ஞாயிற்றின் தேரைக் கண்டால் மலரும்; மாமன் உன் சீர்தோன்றவே மலரும் - (அவ்வாறே) நின் மாமன் உன்னுடைய சீர்தோன்றிய பொழுதே மலரும்; சென்று அவன் சொல்லினோடே பார்தோன்ற நின்ற பகையைச் செறற்பாலை என்றாள் - (ஆதலால்) நீ அவனிடத்தே சென்று அவன் மொழிப்படியே உலகம் நின்னாலே விளங்க, நிலை பெற்று நின்ற பகையைக் கொல்வாயாக என்றாள் விசயை.

(வி - ம்.) கார் - கார்ப்பருவம். கமலம் - தாமரை. வெய்யோன் - ஞாயிறு. செம்மல் : அண்மைவிளி. மாமன் என்றது, கோவிந்தனை. நின்சீர் தோன்றிய அளவிலேயே நின் மாமன் (மனம்) மலரும் என்க. பார்தோன்ற - உலகம் விளங்கும்படி. பகை : கட்டியங்காரன்.

39. 
நன்று அப் பொருளே வலித்தேன் மற்று அடிகள் நாளைச்
சென்று அப் பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி
அன்றைப் பகலே அடியேன் வந்து அடைவல் நீமே
வென்றிக் களிற்றான் உழைச் செல்வது வேண்டும் என்றான்
(இ - ள்.) அடிகள்! - அடிகளே!; நன்று - கூறியது நல்லது; அப்பொருளே வலித்தேன் - நீர்கூறிய பொருளையே யானும் துணிந்தேன்; மற்று - இனி; நாளைச் சென்று - நாளைக்குப் போய்; அப் பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி - இராசமாபுரத்தே எம் சுற்றத்தார்க்கு மட்டும் யான் உயிருடன் இருப்பதை அறிவித்துவிட்டு; அன்றைப் பகலே அடியேன் வந்து அடைவல் - அன்றையத்தினமே அடியேன் மாமனிடம் வந்து சேர்வேன்; வென்றிக் களிற்றானுழை நீம் செல்வது வேண்டும் என்றான் - வென்றிக் களிற்றையுடைய மாமனிடம் நீர் செல்லுதல் வேண்டும் என்று சீவகன் கூறினான்.

(வி - ம்.) 'கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்' (தொல். குற்றியலுகரம். 78) என்றதனால், நும் என்னுஞ்சொல் நீயிரென முழுவதுந் திரியாது, மகரம் நிற்பத் திரிந்து 'நீம்' என நின்றது; இனி, நீ மென்பது ஒருதிசைச் சொல்லுமாம்; ஏகாரம் : பிரிநிலை என்பர் நச்சினார்க்கினியர். நீம் என்பது திசைச்சொல் என்பதே பொருந்தும். மற்றும் அவர் 'இளையவண் மகிழ்வ கூறி' (சீவக. 2101) என்னுஞ் செய்யுளானும் 'வீட்டகந்தோறும்' (சீவக. 2610) என்னுஞ் செய்யுளானும், 'அன்றைப் பகலே வருவேன்' என்றல் பொருந்தாமை யுணர்க என்றுகூறி, 'ஒருநாளிலிருந்து மற்றைநாளே போந்து அடியேன் அடைவேன்' என்றும் பொருள் கூறுவர்.

40. 
வேல் தைவந்து அன்ன நுதி வெம் பரல் கானம் உன்னி
நூற்று ஐவரோடு நடந்தாள் நுதி வல் வில் மைந்தன்
காற்றின் பரிக்கும் கலிமான் மிசைக் காவல் ஓம்பி
ஆற்றற்கு அமைந்த படையோடு அதர் முன்னினானே
(இ - ள்.) வல்வில் மைந்தன் காற்றின் பரிக்கும் கலிமான் மிசைக் காவல் ஓம்பி - வலிய வில்லேந்திய சீவகன் காற்றைப் போலச் செல்லும் குதிரைகளின் மேற் படைகளைக் காவலிட; வேல் தைவந்தன்ன நுதி வெம்பரல் கானம் முன்னி - வேலைத் தொட்டாற்போன்ற நுனிகளையுடைய கொடிய பரல்களையுடைய காட்டின் வழியே செல்ல எண்ணி; நூற்றைவரோடு நுதி நடந்தாள் - நூற்றைந்து மகளிருடனே (மகன் செல்வதற்கு) முன்னே சென்றாள்; ஆற்றற்கு அமைந்த படையோடு அதர் முன்னினான் - (பிறகு) ஆற்றலையுடைய படைகளுடன் தான் செல்லவேண்டிய வழியிலே செல்லத் தொடங்கினான்.
(வி - ம்.) நுதி - முன்பு என்றும் பொருள்படும். 'மதியேர் நுதலார் நுதிக் கோலஞ் செய்து' (சிற். 360) என்றாற்போல. ஓம்பி - ஓம்ப : எச்சத்திரிபு.

பகைவர்க்கஞ்சி அவன் படையைக் காவலிட்டபின்பு, விசயைதான் தனக்குக் காவலாகத் தன்னைப்போல நோன்பு கொண்ட மகளிராய்ப் பள்ளியிலுறைவார் நூற்றைவரோடு போனாள். தவஞ் செய்வார் தனியே போதல் மரபன்றென்று. இனி, வல்வின் மைந்தன் முன்பு படையோடே மான் மிசையிலே ஏறி அதரை முன்னினவன் தேவிக்குக் காவல் ஓம்ப, அவள் நோன்பு கொண்ட மகளிர் நூற்றைவரோடே நடந்தாள் என்றுமாம். இனி 'நடந்தான்' என்று பாடம் ஓதி, முன்பு படையோடே அதர் முன்னினவன், மாமிசையிலுள்ளாரைத் தேவிக்குக் காவலாக ஓம்பித் தான் நூற்றைவரோடும் போனான் என்பாருமுளர் 

41. 
மன்றற்கு இடன் ஆம் மணிமால் வரை மார்பன் வான் கண்
நின்று எத்திசையும் மருவிப் புனல் நீத்தம் ஓவாக்
குன்றும் குளிர் நீர்த் தடம் சூழ்ந்தன கோல யாறும்
சென்று அப் பழனப் படப்பைப் புனல் நாடு சேர்ந்தான்
(இ - ள்.) மன்றற்கு இடன் ஆம் மணிமால் வரை மார்பன் - மணத்திற்கு இடனாகிய மணிகளையுடைய பெரிய மலைபோலும் மார்பனாகிய சீவகன்; வான் கண் நின்று - வான் தன்னிடத்தே மாறாது பெய்தலின்; எத் திசையும் மருவிப் புனல் நீத்தம் ஓவா - எத் திசையினும் பொருந்தி நீர்ப்பெருக்குக் குறையாத; குன்றும் - குன்றையும்; குளிர் நீர்த்தடம் சூழ்ந்தன கோலயாறும் - குளிர்ந்த நீரையுடைய குளங்களைச் சூழக் கொண்ட அழகிய யாற்றையும்; சென்று - கடந்து; அப் பழனம் படப்பை புனல்நாடு சேர்ந்தான் - அவ் வயல்களையும் தோட்டங்களையும் நிரையும் உடைய அந்த ஏமாங்கதத்தைச் சேர்ந்தான்.

(வி - ம்.) மன்றல் - திருமணம். இடனாய் என்பது ஈறுகெட்டு நின்றது. வான்கண் நின்று என்புழிச் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாகக் கொள்க. வான் : ஆகுபெயர். கண் - இடம், சூழ்ந்தன : முற்றெச்சம். படப்பை - தோட்டம்.

42. 
காவின் மேல் கடிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
வாவியுள் இனமலர் உயிர்த்த வாசமும்
பூ விரி கோதையர் புனைந்த சாந்தமும்
ஏவலாற்கு எதிர் எதிர் விருந்து செய்தவே
(இ - ள்.) காவின்மேல் கடிமலர் தெகிழ்ந்த நாற்றமும் - காவிலுள்ள மணமலர்கள் நெகிழ்ந்த மணமும்; வாவியுள் இனமலர் உயிர்த்த வாசமும் - பொய்கையில் திரளாகிய மலர்கள் விடுத்த மணமும்; பூவிரி கோதையர் புனைந்த சாந்தமும் - மலர் நிறைந்த மாலைமகளிர் அணிந்த சந்தன மணமும்; ஏவலாற்கு எதிர் எதிர் விருந்து செய்த - வில்வல்லானுக்கு எதிரெதிராக விருந்தூட்டின.

(வி - ம்.) தெகிழ்ந்த - நெகிழ்ந்த. சாந்தம் - சந்தனங் குங்குமம் முதலியன. ஏ - எய்தற்றொழில்.

உரை- பெருமழைப்புலவர். பெ.வே. சோமசுந்தரனார்.

No comments: