Saturday, 11 January 2014

பாரதியின் பெண்ணியப் பார்வை

கட்டுரை-4

பாரதியின் பெண்ணியப் பார்வை

ஆ.கலைச்செல்வி,  முனைவர் பட்ட ஆய்வாளர்,
  அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),     சேலம் - 7.


இலக்கியங்கள் ஒவ்வொன்றும், அவை தோன்றும் காலக்கட்டத்தின் வெளிப்பாடுகளாக விளங்குகின்றன. தொடக்கக் காலப்படைப்புகளில் இருந்த ஆணாதிக்கப் போக்கு மறைந்து, இக்கால இலக்கியங்களில் ஆண், பெண் சார்ந்த சமத்துவ நோக்கு வளர்ந்துள்ளது. அத்தகைய படைப்புகளில் ‘பெண்ணிய நோக்கு’ குறிப்பிட்டத்தக்க ஒன்றாகத் திகழ்கிறது. அதனினும் மேலாகப் பெண்ணியப் படைப்புகளில் பெண்ணியச் சார்பும் பெண்ணின் மேலாதிக்கமும் விதந்து பேசப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பெண்ணியக் கருத்துகளையும் பெண்ணுரிமையையும் தீவிரமாக வலியுறுத்தி, பெண்ணியச் சிந்தனை பரவவும் பெண்ணியப் படைப்புகள் தோன்றவும் வழிவகுத்தவர்களுள் நடுவராகவும் அவர்களுள் முதன்மையானவராகவும் கொள்ளத்தக்க பாரதியின் பெண்ணியக் கருத்துகளை அவரது பாஞ்சாலி சபதத்தின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.


பாரதியும் பாஞ்சாலிசபதமும்

    பழைய மரபில் காப்பியங்கள் தோன்வதற்கு வாய்ப்பு இல்லை என்னும்  படியான  20ம் நூற்றாண்டிலும் காப்பியங்கள் தோன்றியுள்ளன. முதல் காப்பியமாக 1912ல் தெளிவான முகவுரையுடன் பாரதியின் பாஞ்சாலிசபதம் வெளிவந்தது. அது இரு பாகங்களையும் ஐந்து சருக்கங்களையும் கொண்டு எளிய நடையில் இயற்றப்பட்டுள்ளது. அதன் முகவுரையில் """"எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது. பொரும்பான்மையாக, இந்நூலை வியாசர் பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது ‘கற்பனை’ திருஷ்டாந்தங்களில் எனது ‘சொந்தச் சரக்கு’ அதிகம் இல்லை. தமிழ்நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி""1 என்று பாரதி உரைத்துள்ளார்.

பெண்ணியம் - விளக்கம்

    பெண்ணியம் என்பது உலகளாவியது. """"பெண்ணியத்தைக் குறிக்கும் feminism என்ற ஆங்கிலச்சொல் ‘femina’ என்ற இலத்தின் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். ‘femino’ என்ற சொல்லுக்குப் பெண்ணின் குணாதிசியங்கள் என்பது பொருளாகும். இச்சொல் முதலில் பெண்ணின் பாலியல் குணாதிசியங்களைக் குறிப்பிடவே வழங்கப்பட்டது. பின்பே, பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்கு எடுத்தாளப்பட்டது""2 என்றும் """" பெண்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறை வடிங்களையும் இனங்கண்டு, அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி அறிவு ரீதியாகச் சிந்தித்து செயல்படுவதும் ஆகும்""3 என இரா.பிரேமா அவர்கள் குறிப்பிடுகின்றார்.
ஆணின் பார்வையில் பெண்ணியம்
பெண்ணியம் செல்வாக்குப் பெற்றுள்ள நிலையில் பெண்ணின் உணர்வுகளைப் பெண்களாலேயே திறம்படப் படைக்க இயலும் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடக்ககாலப் பெண்ணியவாதிகள் பலரும் ஆண்களாகவே இருந்துள்ள நிலையில் ஆணின் பார்வையிலான பெண்ணியக் கருத்தை வெளிப்படுத்துவதாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது.
கடவுள் வாழ்த்து
 சமயக் கோட்பாட்டு விளக்கங்களாகத் தோன்றிய காப்பிய இலக்கிய வடிவம் கடவுள் வாழ்த்துக்கு முதலிடம் தந்தது. காப்பிய காலத் தொடக்கத்தில் இயற்கையையும் ஆண்தெய்வங்களையும் பாடும் வாழ்த்து மரபு இருந்தது. அந்நிலையை மாற்றி பாரதி சரஸ்வதி, பராசக்தி முதலான பெண்தெய்வங்களை முன்நிறுத்திக் கடவுள் வாழ்த்து அமைத்தள்ளார். கடவுள் வாழ்த்துப் பகுதியில் அவர்,
        """".........       .........     ஐவர்
            பூவை, திரௌபதி புகழ்க்கதையை
        மாணியல் தமிழ்ப்பாட்டால் - நான்
            வகுத்திடக் கலைமகள் வாழ்த்துகவே""4
        """"ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
            இருங்கலைப் புலவனாக் குதியே""5
என்று பெண் தெய்வங்களைப்  புகழ்ந்துரைத்துள்ளார்.

பெண்மைக்குண்டான இழிவு

    பெண்கள் அரசாண்ட நிலைமாறி பாரதியின் காலகட்டத்தில் பெண்கள் வீட்டைவிட்டும் அகலாதநிலை ஏற்பட்டது. இதனைக் கண்டித்த பாரதி,
        """"வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
            விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்""6
என்று ஆணாதிக்கவாதிகளைக் கண்டித்துப் பெண்களை ஊக்குவித்தார். வியாசர் காவியத்தைத் தழுவி பாஞ்சாலிசபதம் இயற்றப்பட்டதால் பெண்குறித்த வருணனைகள் பல இடங்களில் காணப்படுகின்றன. பெண்களைத் தானமாக அளிக்கும் இழிநிலையை பாரதியார் இக்காப்பியத்தில் வன்மையாகக் கண்டித்துள்ளார். பாண்டவர்கள் இந்திரபிரஸ்த நகரை அமைத்து வேள்வி செய்கையில், அவர்களுக்கு மன்னர்கள் பலர் பெண்களைத் தானமாக வழங்கியனர். அதனைக் கண்டித்துப் பாரதியார்,
        """"சேயிழை மடவா ரும் - பரித்
            தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ?""7
        """"கண்ணைப் பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர் - பல
        காமரு பொன்மணிப் பூண்க ளணிந்தவர் தம்மையே
        மண்ணைப் புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில் - கொண்டு
        வாழ்த்தி யளித்தனர் பாண்டவர்க்கே""8
என்று துரியோதனன் வழி உரைக்கிறார்.
    ஒருவர் அறியாமல் தடுமாறி கீழே விழும் போது நகைத்தல் என்பது இயல்பான நிகழ்வு ஆகும். அதனை மனதில் கொண்டு, ஒருவரைப் பழிவாங்குதல் என்பது தகாத செயலாகும். துரியோதனன், தான் இந்திரபிரஸ்த நகரான பாண்டவர் மாளிகையில் தவறி விழுந்தபோது ,  பெண்ணாண  பாஞ்சாலியும் அவளது தோழிகளும் நகைத்ததை மனதில் கொண்டுப் பாண்டவர்களையும் பாஞ்சாலியையும் பழிவாங்க எண்ணுகிறான்.
        """".......      .......    அந்த
            ஏந்திழை யாளும் எனைச்சிரித்
        தாளிதை எண்ணுவாய்""9
        """"வாள்விழி மாதரும் நம்மையே - கய
            மக்களென் றெண்ணி நகைத்ததிட்டார்""10
என்ற அடிகளில் சுட்டிக்காட்டிப் பெண் இயல்பாக நகைத்தலும் குற்றமாகக் கருதப்பட்ட நிலையை உரைக்கிறார் பாரதி. ‘பொம்பள சிரிச்சாப் போச்சு ; புகையிலை விரிச்சாப் போச்சு’  என்ற பழமொழியாகவும் பெண்ணின் நகைப்பு ஆணாதிக்கச் சமுதாயத்தில் மறுக்கப்பட்டதைப் பாரதி கண்டித்துள்ளார். இந்த இழிநிலையை எதிர்த்து திரிதராட்டிரன் வழி பாஞ்சாலி நகைத்தது இயல்பான திறம் என்பதை எடுத்துரைத்துள்ளார்.
       
""""         ........   ........  மயல்
        அப்பி விழிதரு மாறியே - இவன்
            அங்கு மிங்கும் விழுந் தாடல்கண்டு - அந்தத்
        துப்பிதழ் மைத்துனி தான் சிரித் - திடில்
            தோஷ மிதில்மிக வந்ததோ?
        தவறி விழுபவர் தம்மையே - பெற்ற
            தாயுஞ் சிரித்தல் மரபன் றோ!""11
என்று பாரதி பெண்மைக்குக் குரல் கொடுத்துள்ளார். இதிலிருந்து """"காலங்காலமாகப் பெண்கள் அலங்காரப் பதுமைகளாக, நம் பொறிகளுக்கு இன்பம் தரும் விந்தைமிகு இயந்திரங்களாக, ஆண்களுக்கு அடிப்பணிந்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் தாதிகளாக, குடும்பத்தைக் கட்டிக்காக்கும் குலவிளக்குகளாக மட்டுமே கண்டு எழுதி வந்த கவிஞர்களின் மத்தியில் பாரதி பெண்ணைப் பெண்ணாகவே பார்க்கத் தலைப்பட்டார். அதனால்தான் அவர் பார்வை மற்றவர் பார்வையில் இருந்து தனித்து நின்றது. அவர்க்கு அடிமை இருளில் சிக்கி வழி தெரியாமல் தவிக்கும் பெண்மை தெரிந்தது. அவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக மாறினார் பாரதி""12 என கு.கண்ணப்பன் பாரதியை பெண்ணியவாதியாக அடையாளப்படுத்துகிறார்.

பெண்மையின் மேம்பாடு

    துரியோதனன் பாண்டவர்களைப் பழிவாங்கும் எண்ணத்தில் சூதாட அழைத்த போதிலும் தருமன் தன்மானத்தின் விளைவாகவே சூதாடினான். அவன் அனைத்தையும் அனைவரையும் இழந்து,  இறுதியாக பாஞ்சாலியையும் இழந்தான். இந்தக் கீழான செயலை யாரும் கண்டிக்காத நிலையில்,  அச்செயலைக் கண்டிக்கும் பெண்ணாகப் பாரதி பாஞ்சாலியை அமைந்துள்ளார். அடிமையான தருமன் சூதுப்பொருளாகத் தன்னை வைத்திழக்கும் உரிமையற்றவன் என அவள் மொழிகிறாள்.
        """"நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் - என்னை
            நல்கும் உரிமை அவர்க்கில்லை - புலைத்
        தாயத்தி லேவிலைப் பட்டபின், என்ன
            சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்""13
எனஅவள் பெண்ணியவாதியாகக் கேள்வி கேட்கிறாள். தன்னைப் பற்றி இழுத்துப் போக வந்த துச்சாதனனிடமும் அத்தகைய உரிமைக்குரலை எழுப்புகிறாள்.    பல்லோர் அவையில்,
        """"மங்கியதோர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே
        என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய்
        நின்னை எவரும் """"நிறுத்தடா"" என்பதிலர்""14
என ஆணாதிக்கப் போக்கை எதிர்க்கும் துணிவுடைவளாகப் பாஞ்சாலியைப் பாரதி படைத்துள்ளார். இதனை ஓர் அடிமைப்பெண்ணின் நிலையாகப் பார்க்காமல், பாரதி அவர் காலக்கட்டத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த சமூகத்தினைத் தட்டியெழுப்பும் ஒரு பெண்ணின் குரலாகப் பதிவு செய்துள்ளார்.

பெண் எழுச்சி

    ஒரு பெண் தன் இழிநிலைக் கண்டு எவரும் தடுக்க இயலாச் சூழலில் அவள் எழுச்சி கொண்டு, தானே போராடும் நிலைக்கு மாறுகிறாள். கேள்வி கேட்கும் நிலையிலிருந்து சபதம் ஏற்கும் நிலைக்கு அவள் உயர்கிறாள். இந்நோக்கில் பாஞ்சாலி தன் கூந்தலைப் பற்றி இழுத்த துச்சாதனனையும் அதற்குக் காரணமான துரியோதனனையும்,
        """"      .........     ஆணை யுரைத்தேன்
        பாவி துச்சாதனன் செந்நீர் - அந்த
             பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம்,
        மேவி இரண்டுங் கலந்து - குழல்
            மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
        சீவிக் குழல் முடிப்பேன் யான் - இது
            செய்யும் முன்னே முடியேன்""15
என்று சபதம் ஏற்று, அவர்களை அழிக்கும் காளியாக உருவெடுக்கிறாள். பாஞ்சாலியின் இழிநிலையைக் கண்டு பொறுக்க மாட்டாத பாரதி,
        """"இது பொறுப் பதில்லை - தம்பி
            எரி தழல் கொண்டு வா,
        கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
            கையை எரித்திடுவோம்""16
என்று தன் எண்ணத்தை வீமன் வழியே உரைத்துள்ளார்.
ஆணாதிக்கத்தின் தாக்கம்
    பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த பாரதியையும் மீறி அவர்கால ஆணாதிக்கத் தன்மையும் சில இடங்களில் வெளிப்படுகின்றன. துரியோதனின் பொறாமை குறித்துக் கூறும் போது """"கிழவியர்""17 பழங்கிளிக்கதை உரைப்பவன் எனவும் துச்சாதனன் பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றி இழுத்து வருதைக்கண்டு வருத்தும் மக்களின் நிலையைப் """"பெட்டைப் புலம்பல்""18 எனவும் கூறுயுள்ளார். இதிலிருந்து சில இடங்களில் பாரதியின் ஆணாதிக்கப் போக்கு வெளிப்படுகிறது.

முடிவுகள்

    பாஞ்சாலி சபதத்தின் வழி அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியப் பெண்களை பாரதியார் அடிமைத் தளையிலிருந்து நிமிர்த்த முற்படுகிறார். கௌரவர்களை ஆங்கிலேயர்களாகவும் பாண்டவர்களை இந்தியர்களாகவும் பாஞ்சாலியைச் சுதந்திர தேவியாகவும் உருவகப்படுத்திக் காப்பியத்தை அவர் கட்டமைத்துள்ளார். ஆணாதிக்கச் சமுதாயத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பாரதி பெண் விடுதலைக்கு ஓங்கிக் குரல் கொடுத்துள்ளார். பெண்ணிய நோக்கில் ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடும் பாத்திரமாக அவர் பாஞ்சாலியைப் படைத்துள்ளார்.
சாண்றென்விளக்கம்
1.    பாரதியார், பாஞ்சாலிசபதம் : முகவுரை, ப - 5.
2.    இரா.பிரேமா, பெண்ணியம், ப - 1.
3.    இரா.பிரேமா, பெண் - மரபிலும் இலக்கியத்திலும், ப - 131.
4.    பாரதியார், பாஞ்சாலிசபதம், ப - 9.
5.    மேலது, ப - 111.
6.    பாரதியார் கவிதைகள், ப - 290.
7.    பாரதியார், பாஞ்சாலிசபதம், ப - 17.
8.    மேலது, ப - 29.
9.    மேலது, ப - 34.
10.    மேலது, ப - 41.
11.    மேலது, பக் - 46 - 47.
12.    கு.கண்ணப்பன், பாரதியும் பெண்மையும், ப - 144.
13.    பாரதியார், பாஞ்சாலிசபதம், ப - 144.
14.    மேலது, ப - 154 - 155.
15.    மேலது, ப - 175.
16.    மேலது, ப - 161.
17.    மேலது, ப - 19.
18.    மேலது, ப - 153.

துணைநூற்பட்டியல்

1. பாரதியார்.- பாஞ்சாலிசபதம்,
   முல்லை நிலையம், 9, பாரதிநகர் முதல் தெரு,
  தி.நகர், சென்னை - 600017. முதற்பதிப்பு - 1992. மறுபதிப்பு - 2007.
2. பாரதியார்., - பாரதியார் கவிதைகள்,   ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,     தபால் பெட்டிஎண் : 8836,   ப.எண்.24,கிருஷ்ணா தெரு,பாண்டிபஜார்,
 சென்னை - 600017.     முதற்பதிப்பு - 1996. 6ம் பதிப்பு - ஜுன் 2001.
3. கண்ணப்பன்.கு.,    - பாரதியும் பெண்மையும்,  முத்தமிழ் பதிப்பகம்,   9ஏ,மேக்மில்லன் காலனி, நங்கநல்லூர், சென்னை - 6000061.முதற்பதிப்பு - 2007.
4. பிரேமா.இரா.,   - பெண்ணியம்,    உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,                        சென்னை - 13.  முதற்பதிப்பு - 1994
5. பிரேமா.இரா.,   - பெண் - மரபிலும் இலக்கியத்திலும்,
   தமிழ்ப்புத்தகாலயம்,34, சாரங்கபாணி தெரு, தி.நகர்,
  சென்னை - 6000017.முதற்பதிப்பு - 2001. 2ம் பதிப்பு - 2006.

Post a Comment