Saturday, 11 January 2014

காப்பிய வளர்ச்சி நோக்கில் கண்ணகி

               

கட்டுரை-3

    காப்பிய வளர்ச்சி நோக்கில் கண்ணகி    

    ஆ.கலைச்செல்வி,முனைவர் பட்ட ஆய்வாளர்,அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), சேலம்-636 007.
உலகியல் உண்மைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தொடர்நிலைச் செய்யுளான  காப்பியம், தன்னுணர்ச்சிப் பாடல்களை அடுத்துத் தமிழில் தோன்றிய இலக்கிய வடிவமாகும். அது, ஒன்பான் சுவைகளையும் உள்ளடக்கியதாக அமைகிறது.    தமிழ்க் காப்பியம் சங்க காலத்திலேயே தோன்றி, வளர்ந்து, வாழ்ந்து வருகிறது.  காப்பியத்தின் இடத்தைப் புதின இலக்கியம் கைப்பற்றிக் கொண்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  ஆனால் தமிழில் காப்பியம் இன்றும் தோன்றிக் கொண்டுதான் உள்ளது.  அது கால வளர்ச்சிக்கேற்பத் தன்னைப் பல்வேறு விதத்திலும் மாற்றியமைத்துக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளது.  பழைய தமிழ்க்காப்பியங்கள் அமைப்பு, உத்தி, கதை, கருத்து, பாத்திரம் ஆகியனவற்றில் புதுமைகளைச்சேர்த்துப் புதிய காப்பியங்களாகத் தோன்றுகின்றன. காப்பிய வளர்ச்சியில் பாத்திர வளர்ச்சி இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.  அத்தகைய நோக்கில் இளங்கோ படைத்தளித்த கண்ணகி, வலம்புரி சோமநாதனின் பார்வையில் வளர்ச்சி பெற்றுள்ளதையும் அப்பாத்திர வளர்ச்சி `கண்ணகி காவியம்’ என்ற புதிய காவியம் தோன்றக் காரணமாக இருந்த பாங்கும் இக்கட்டுரை வழி ஆராயப்பட்டுள்ளன.


கண்ணகி காவியம்          

    சிலப்பதிகாரத்தை, வலம்புரி சோமநாதன், புதிய சிந்தனையில் `கண்ணகி காவியம்’ என்னும் குறுங்காப்பியமாகப் படைத்துள்ளார்.  இளங்கோவின் சிலப்பதிகாரம் அக்காலச் சிந்தனை மரபில் இயற்றப்பட்டுள்ளது.  கண்ணகி காவியம் புதிய பார்வையுடன், இக்காலத்திற்கு ஏற்ற உவமைகள், ஊடல், சமயச்சிறப்பு, பழக்க வழக்கங்கள் முதலானவற்றுடன் படைக்கப்பட்டுள்ளது. பதிகம், உரைபெறு கட்டுரை முதலானவை இல்லாமல் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம் ஆகிய இரு காண்டங்களில்  தன் காவியத்தை வலம்புரி சோமநாதன் படைத்துள்ளார்.

கண்ணகியின் அறிமுகம்

    சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்துக் காதையில் திருமணக் கோலத்தில் கண்ணகி அறிமுகமாகிறாள்.வலம்புரி சோமநாதனும் கண்ணகியைத்  திருமணத்திலேயே  அறிமுகப்படுத்தியுள்ளார்.  இளங்கோ படைத்த கண்ணகி போன்றே வலம்புரி சோமநாதனின் கண்ணகியும் அமைகிறாள். ஆனால் அவர் கண்ணகியை  அறத்தின்  வடிவமாகப் படைத்துள்ளார்.                      
        """"அறமே நெறியாய் அன்பே இயல்பாய்
        திறமே வலியாய்த் திகழும் இறைவி’’ (கண்ணகி காவியம், ப-10)
என    அவர் கண்ணகியைப் போற்றுகிறார். 

கண்ணகியின் அழகு

     கண்ணகி, அழகை,  இயற்கையாகவே பெற்றிருந்தாள். சிலம்பில் கோவலன் கண்ணகியைப் பார்த்து, `இயற்கை அழகு படைத்த உனக்கு, உன் தோழியர் ஒப்பனை செய்தது அறியாமையாகும்’ என  மொழிகிறான். கண்ணகி காவியத்தில்,
        """"கண்களை விரித்தாள் காமமே விரிந்தது’’ (கண்ணகி காவியம் ப-17)
என அவளது  பார்வையின் மயக்கும் தன்மை கூறப்பட்டுள்ளது. பா.விஜய், காற்சிலம்பு ஓசையிலே…’ எனும் தன் காவியத்தில் `பிறரை மயக்கும் காந்தக் கண்கள்’ எனக் கண்ணகியின் கண்ணழகைக் கூறுகிறார்.  மேலும் அவர் அவளை ‘உயிர் நிலா’ என வருணிக்கிறார்.

பெரியோரை மதித்தல்

    பெரியோரை மதிக்கும் பண்புடையவளாகக் கண்ணகி  காணப்படுகிறாள். சிலம்பில் அவளது   கூற்று, புகார்க் காண்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் அமைகிறது. கண்ணகி காவியத்தில் வலம்புரி சோமநாதன் நேர்க்கூற்றில் பதினொரு இடங்களில் உரை நிகழ்த்துவதாக அமைத்து அப்பாத்திரத்திற்கு மெருகூட்டியுள்ளார்.  அவர், தனிக்குடி அமர்த்தும் போது கோவலனின் பெற்றோரிடம் கண்ணகி உரை நிகழ்த்துவதாகக் காட்டியுள்ளார்.  அவள், `எங்களைத் தனிமையில் ஆழ்த்துதல் சிறந்ததல்ல. ஆதலால் சேர்ந்தே வாழலாம்’ என்கிறாள்.
        """"போற்றுதற் குரிய மாமன் மாமீர்!
        மாலுமி இல்லா மரக்கலம் போலே
        நூலுமே இல்லாப் பட்டம் போலே
        ஆடும், அலையும் எங்கள் வாழ்வு!
        கூடி வாழ்வதே கோடி நன்மை’’ (கண்ணகி காவியம், ப-20)
எனும்    அடிகளில்    கண்ணகியின்   நற்பண்பு      புலனாகிறது.   `உலக   இயல்பை அறிய
தனிக்குடி புகுதலே சிறந்தது’ என அறிவுரை பகர்ந்த கோவலனின் பெற்றோரை மதித்த  கண்ணகியின்  பண்பை,
        """"நன்றாய் வாழ்ந்தவர் நவின்ற இவ்வுரை
        கன்றாம் கண்ணகி கருத்தில் நிலைத்தது’’(கண்ணகி கோவியம், ப-23)
என்னும் அடிகள் வழிக் கவிஞர் காட்டியுள்ளார்.
இல்லறம்
    இல்லறம் என்பது நல்லறமாகும். இளங்ககோ, """"இற்பெருங்கிழமையின் காண்தகு சிறப்பின் கண்ணகி’’ (சிலப்பதிகாரம் 1-2-89-90) என அவள் சிறப்பாக இல்லறம் நிகழ்த்தியதை உரைக்கிறார்.
இல்லறமாம் நல்லறத்தை, `ஏழடுக்கு மாளிகையில் நான்காவதான  இடை அடுக்கில் அவர்கள் துவக்கினர். நந்தவன அறை, தந்தக்கால்ச் சந்தனக்கட்டில், மயிலிறகுப்பஞ்சணை, தாழம்பூத்தலையணை, தென்றலைச் கலித்து அனுப்பும்  வெட்டி வேர்த் திரை என இன்பத்துடன் கோவலனும் கண்ணகியும் இல்லறம் துவக்கினர்.’ (காற்சிலம்பு ஓசையிலே…, பாகம் 1, ப-64) என பா.விஜய் இயம்புவார்.
     இல்லறத்தைப் பிறர் வியக்கும் வண்ணம் கண்ணகியும் கோவலனும் நடத்தினர்.
        """"கண்ணகி கோவலன் காணும் இல்லறம்
        மண்ணில் பலர்க்கும் மாதிரி இல்லறம்’’(கண்ணகி காவியம் ப-23)
என வலம்புரி சோமநாதன் விளக்குகிறார்.  கண்ணகி, கணவன் போற்றும் மனைவியாகத் திகழ்ந்தாள்.  கணவனோடு மகிழ்ந்தும், அதே வேளையில் இல்லாதவர், உற்றார், நண்பர், துறவியர் ஆகியோருக்கு வேண்டுவன வழங்கியும் அவர்களுக்கு உவமை எவரும் இலரென்று பிறர் வியந்து போற்றும் வண்ணம் வாழ்ந்து வந்தனர் என அவர்களின் சிறந்த இல்லறத்தை  அவர் எடுத்துக் காட்டுகிறார்.

பிரிவும் துயரும்

    கோவலன் பிரிவிற்குரிய நுட்பமான காரணத்தை இளங்கோ எடுத்தியம்பவில்லை.  ஆனால் வலம்புரி சோமநாதன் தன் காவியத்தில்,
        """"கண்ணகி யாள் அன்று
        ஆவியாம் கணவன் நீங்கி
        ஆலயம் விதியால் சென்றாள்’’ (கண்ணகி காவியம் ப-38)
என்பதிலிருந்து,     கண்ணகி    ஆலயம்    சென்றதால்     ஊழின்  வலியால்     மாதவியின் நடனத்தைத் தனியே கோவலன் காண நேரிட்டது.  அதுவே கண்ணகி-கோவலன் பிரிவிற்கு வித்திட்டது எனப் பிரிவிற்குரிய காரணத்தை உரைக்கிறார். அப்பிரிவை எண்ணி,  கண்ணகி கோவலனின் பெற்றோரிடம் அழுது புலம்புகிறாள்.
        """"இரவும் பகலும் அவரையே தொழுதேன்!
        எனக்கென ஒரு மனம் இல்லா தொழித்தேன்!
        மனமாய் அவர்மனம் ஒன்றையே கொண்டேன்!
        தோழியாய், தாயாய், துணையாய், தொழும்பளாய்
        ஆழிபோல் சுழன்றே அவர்நலம் காத்தேன்!
        எனக்கே முழுமையாய் இருந்த இறைவரை
        தனக்கென ஒருத்தி தட்டிப் பறித்த பின்
        வாழ்வது அழகோ?’’ (கண்ணகி கோவியம் ப-57)
எனத் தன் பிரிவுத் துன்பத்தை வெளிப்படுத்துகிறாள்.
    சிலம்பில் கண்ணகி மடமைத்தன்மை பொருந்திய பெண்ணாகக் காட்டப்படுகிறாள்.  தன் துயரை எவரிடமும் வெளிப்படுத்துவது தக்க செயல் அன்று என எண்ணித் தன்னை ஒப்பனை செய்து கொள்வதையெல்லாம் விடுத்துத் தன் நெஞ்சுக்குள்லேயே புலம்புகிறாள்.  ஆதலாலேயே.
        """"கையறு நெஞ்சத்துக் கண்ணகி’’ (சிலப்பதிகாரம்,  1-4-57)
என இளங்கோ இயம்புகிறார். பா.விஜய்,
""""அந்த மேக நிலாதான்
புகார் மாளிகை ஒன்றில்
சோக நிலவாய்
அமர்ந்திருக்கிறதே’’ (காற்சிலம்பு ஓசையிலே பாகம் 1, ப-140)
எனக்கண்ணகியின் பிரிவுத் துயரைச் சித்தரித்துள்ளார்.

மன்னிக்கும் மனம்

    ஒருவனை மனிதனாகக் காட்டுவது அவனிடம் உள்ள நற்குணமே ஆகும். பிறர் தனக்குத் துன்பம் செய்த போதும் அவர்களை மன்னித்தலே சிறந்த பண்பாகும்.  தன் கணவன், தனக்குப் பிழை இழைத்தவிடத்தும் இளங்கோவின் கண்ணகியைப் போலவே, கண்ணகி காவியக் கண்ணகியும் மாதவியைப் பிரிந்து தன்னை நாடி வந்த கோவலனை ஏற்று, தான் நோற்ற நோன்பின் பலன்களைப் பெற்றதாக எண்ணி மகிழ்கிறாள். வாழ வழி தெரியாத நிலையில் கோவலனிடம்  `சிலம்பினை விற்று வாழ்வோம்’ எனவும் இயம்புகிறாள்.  மேலும்,
        """"கொண்ட கணவன் கொள்ளா அழகை
        கொண்டது காலம்’’ (கண்ணகி காவியம், ப-90)
என அனைத்துச் செயல்களுக்கும் விதியே காரணமாக அமைந்ததாக ஏற்கிறாள்.

அறியாமையும் அறிவும்

    இளங்கோ, கண்ணகி மதுரைக்குச் செல்லும்போது கோவலனிடம்,""""மதுரை மூதூர் யாது’’(1-10-41) என உரைப்பது போன்றே வலம்புரி சோமநாதனின்  கண்ணகியும் """"இன்னும் மதுரை எவ்வளவு தூரம்’’(கண்ணகி காவியம்,ப-92) என உரைப்பது அவளது   அறியாமையை உணர்த்துகிறது. ஆனால் இளங்கோவின் கண்ணகியைக் காட்டிலும் வலம்புரி சோமநாதனின் கண்ணகி அறிவுத்திறம் படைத்தவளாகக் காட்டப்படுகிறாள். `மதுரை எவ்வளவு தொலைவு’ எனக்கேட்ட கண்ணகியிடம் கோவலன், """"ஐந்தாறு காதமே; அதுவோர் தொலையா?’’(கண்ணகி காவியம், ப-94) எனப்பதில் உரைக்கிறான். அதற்கு மறுமொழியாகக் கண்ணகி,
        """"பைந்தமிழ் வல்லீர்! பதிலொரு புதிரே!
        ஐந்தோ ஆறோ என்றுசொல் பிரிப்பதா?
        கூட்டல் செய்து பதினொன் றென்பதா?
        பாட்டில் பெருக்கி முப்பது என்பதா?
        முப்பொருள் காட்டி மெய்ப்பொருள் மறைத்தீர்
        இப்பா வைஇதயம் சோர்வுறு மென்று’’ (கண்ணகி காவியம், ப-93)
என்று உரைப்பதிலிருந்து அவள் அறிவுத்திறம் புலப்படுகிறது.

கோவலனை இழந்த கண்ணகி நிலை

    கோவலன் கொலையுண்டதை ஆயர்மகள் வழி அறிந்ததும் கார்மேகம் போலக் கண்ணகி நிலத்தில் விழுந்து அறற்றுகிறாள். கதிரவனை நோக்கி வினவி, அவனிடமிருந்து `நின் கணவன் கள்வன் அல்லன்’ என்ற பதிலைப்பெறுகிறாள். அதன்பின் சினம் மிகுந்தவளாய் மதுரை மாநகருக்குள் சென்று மன்னனின் இழிசெயலை மக்களிடம் உரைத்துப் புலம்புகிறாள். கொலையுண்ட தன்கணவனைக் கண்டு கண்ணீர் உகுக்கிறாள் என்னும் செய்திகள் இரு காப்பியங்களிலும் உள்ளன.
கண்ணகி காவியத்தில் கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்ட கண்ணகி சினத்துடன் மதுரைக்குள் நுழையும்போது அங்கு மாதரியைக் கண்டு தன் இழப்பை அவளுக்குரைத்து `கணவனைப்பிரிந்து வாழ்தலை விடச் சாதலே சிறந்தது’ என உரைக்கிறாள். மேலும் வெட்டுண்ட தன் கணவன் நிலைகண்டு புலம்புவது மட்டுமின்றி மாடலன், கோவலன் சிறப்புக் குறித்துச்சிலம்பில் உரைக்கும் செய்திகளை இக்காவியத்தில் கண்ணகி உரைக்கிறாள். இங்கு அவள் கணவன் பெருமைகளை உரைப்பதால் அவனது பெருமைகளுடன் அவன் தீங்கு புரியாதவன் என்பதையும் மதுரை மக்கள் அறிகின்றனர்.

வீரமகள்

    கோவலன் கொலையுண்ட பின் கண்ணகி தன் மடப்பத்தை உதறியவளாகவும் வீரமகளாகவுமே இரு காப்பியங்களிலும் காட்டப்பட்டுள்ளாள். சிலப்பதிகாரத்தில் ஒற்றைச்சிலம்புடன் அவைக்குள் நுழைந்தவளை நோக்கி, `நீ யார்?’ என வினவும் பாண்டியனுக்கு,
        """"என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற்
        கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி!
        கண்ணகி என்பது என் பெயரே’’ (சிலப்பதிகாரம், 2-20-59-62)
என ஆவேசமாகத் தன்னை அறிமுகப்படுத்துகிறாள். ஆனால் வலம்புரி சோமநாதனின் கண்ணகி, `நீ யார்?’ என வினவிய பாண்டியனிடம் தன்னை யார் என்று கூறாமல் அவனையும் அவையையும் இகழ்கிறாள்.
        """"நீதி தூங்கும் பள்ளி!
            நேர்மை காணாக் கூடம்!
        சாதலை வழங்கும் மன்னன்!
            சரித்திரம் இனிமேல் பேசும்!
        நாதனென் றுன்னைக் கூற
            நானிலம் இனிமேல் நாணும்!
        பாதகம் பெரிதாய் செய்தாய்!
            பாவையென் வாழ்வைத் தின்றாய்! ’’ (கண்ணகி காவியம், ப-172)
என வீரவுரை பகர்கிறாள். `காற்சிலம்பு ஓசையிலே …’ கண்ணகியும் பாண்டியனை இகழ்பவளாய்,
        """"அழகு உடல் கழுகு கொத்த …
        அமுதவாய் ஈ மொய்க்க …
        நல்ல நல்ல குருதி என்று
        நரி வந்து அதைக் குடிக்க …
        தலைவேறு உடல் வேறாய்ச்
        செய்தவனே!
        செய்தவனே!
        செத்துப்போய் வாழ்பவனே! ‘’’ (காற்சிலம்பு ஓசையிலே… பாகம்-2, ப-177)
என்று கடுமையாகச் சாடுகிறாள்.

கண்ணகி கோவில்

    மதுரையைத் தீக்கிரையாக்கி அங்கிருந்து வெளியேறிய கண்ணகி, பதினான்கு நாள்கள் மேற்கு நோக்கி நடந்து வேங்கை மரத்திடியில் நின்றபோது, கோவலன் வானவர் சூழ வந்து அவளை வானுலகம் அழைத்துச் செல்கிறான். தன்னாடு வந்து வானுலகம் சென்ற கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் இமயம் சென்று கல்லெடுத்து வந்து சிலை வடித்துக் கோயிலெடுத்தான் என்பதை இளங்கோவடிகள் வஞ்சிக்காண்டத்தில் பாடியுள்ளார்.
    கண்ணகி காவியம், சேர நாட்டில் `திருச்செங்குன்றம்’ என்னும் மலையில், ஒரு மர நிழலில் பதினான்கு தினமிருந்த கண்ணகி, கோவலனுடன் வானூர்தி ஏறி விண்ணகம் சென்றாள் என உரைத்துள்ளது. மேலும்,
        """"இருபது வயதைத் தாண்டிய பின்னர்
        ஒருதனி மாதாய் உழன்ற கொடுமை’’ ( கண்ணகி காவியம், ப-193)
என அவளது வயதைக் கவிஞர் குறிப்பிட்டுள்ளார். குன்றக் குறவர் கண்ணகிக்குக் கோவிலெடுக்க முடிவு செய்து குரவைக் கூத்தாடினர் என வலம்புரி சோமநாதன் காவியத்தை முடித்துள்ளார்.

முடிவுகள்

1.    பழைய காப்பியங்கள் இருபதாம் நூற்றாண்டில் புதிய வடிவத்தில் படைக்கப்படுகின்றன. அவை அமைப்பிலும் உத்தியிலும் பாத்திர வார்ப்பிலும்
வளர்ச்சி பெற்றனவாகக் காணப்படுகின்றன.
2.    இளங்கோ படைத்த கண்ணகியை வலம்புரி சோமநாதன் திறனாய்வுக்கு உட்படுத்தி இன்றைய காலத்தின் கருத்து வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகினவற்றிற்கேற்பப் படைத்துக்காட்டியுள்ளார்.
3.    இருபதாம் நூற்றாண்டில் மேலோங்கியுள்ள பெண்னுரிமைச் சிந்தனைகளை உள்வாங்கியவளாகவே கண்ணகி காவியத்தில் கண்ணகி படைக்கப்பட்டுள்ளாள்.

துணைநூற் பட்டியல்

1) வலம்புரி சோமநாதன்,        -கண்ணகி காவியம்,  வானதி பதிப்பகம்,
       தி.நகர், சென்னை-17,   முதற்பதிப்பு, ஜூன்-2003.
2) புலியூர்க்கேசிகன்,(உ.அ.)    - சிலப்பதிகாரம்,
 பாரி நிலையம்,   சென்னை-600 108. முதற்பதிப்பு- சூன், 1958,   மறுபதிப்பு - 2005.
3) பா.விஜய்,  -  காற்சிலம்பு ஓசையிலே…(பாகம்-1)   காற்சிலம்பு ஓசையிலே…(பாகம்-2)       குமரன் பதிப்பகம்,      சென்னை-600 017Post a Comment