Saturday 11 January 2014

கவிஞர்களின் படைப்புகளில் பரதன்

                     

கட்டுரை-5

கவிஞர்களின் படைப்புகளில் பரதன்

 ஆ.கலைச்செல்வி,முனைவர் பட்ட ஆய்வாளர்,அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),சேலம்-636 007.

படைப்பாளானின் ஒவ்வொரு படைப்பிலும் இன்றியமையாத இடம்பெறுவன கதாபாத்திரங்கள். சில பாத்திரங்கள் கற்பனையின் உருவாக இருக்கலாம்; சில பாத்திரங்கள் உண்மையின் நிழலாக அமையலாம். எப்படி இருப்பினும் படைப்பாளனுக்கு அப்பாத்திரங்கள் பெருமிதத்தைத் தருவனாவகாவே அமைகின்றன. அத்தகு பான்மையில் கம்பனை முற்றிலும் எதிர்த்தும் வான்மீகத்தைச் சிறிது தழுவியும் புலவர் குழந்தை படைத்த ‘இராவண காவியம்’ மற்றும் கம்பனை முற்றிரும் தழுவிய கவிதை பாவான கவிஞர் வாலி இயற்றிய ‘அவதார புருஷன்’ ஆகிய படைப்புகளில் படைப்பாளர்கள் பார்வையில் ‘பரதன்’ என்ற பாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் """"கவிஞர் படைப்புகளில் பரதன்’’ என்னும் இவ்வாய்வு கட்டுரையின் வழிக் காண்போம்.


கவிகளும் கதாபாத்திரங்களும்

    படைப்பாளனின் நுட்பமான புலமை வெளிப்பட காரணமாக அமைவது, அவர்தம் பாத்திரப்படைப்பே ஆகும். இதனை """"பாத்திரங்களைப் புனைவதிலும் பிரதிநிதித்துவப் படுத்துவதிலும் படைப்பாளனுக்கு இருக்கும் ஆற்றலைப் பொறுத்தே காப்பிய கவிதையின் வெற்றி அமைய முடியும்’’1 என்று ஆங்கில அறிஞர் ற.யீ.கெர் புலப்படுத்துகிறார். மேலும் """"பாத்திரம் எல்லாம் ஒருவகையால் புலவன் படைப்பு. உண்மைப் புலவனுக்குத்தான் படைத்த எப்பாத்திரத்திலும் விருப்பு, வெறுப்பு இருக்காது’’2 என இரா.வ.கமலகண்ணனும் உரைக்கின்றார். இத்தகு பான்மையில் நோக்கினால் படைப்பாளனின் வெற்றி படைக்கப்படும் பாத்திரங்களைப் பொருத்து அமையும் என்பது புலப்படும்.

பரதன் - பாத்திரப்படைப்பு

    கதா பாத்திரங்களை கா.மீனாட்சிசுந்தரம்,
1.    முதன்மைப்பாத்திரங்கள்
2.    துணைமைப்பாத்திரங்கள்  - அ. ஒன்றிய பாத்திரங்கள்    ஆ. ஒட்டிய பாத்திரங்கள்
 3. எதிர்மைப்பாத்திரங்கள்            - அ. அருவமுதன்மை எதிர்மைப்பாத்திரம்
ஆ. உருவமுதன்மை எதிர்மைப்பாத்திரம்        இ. துணைமை ஒன்றிய எதிர்மைப்பாத்திரம்  ஈ. துணைமை ஒட்டிய எதிர்மைப்பாத்திரம்
4. குறுமை அல்லது ஊன்று பாத்திரங்கள்    - அ. உருவ ஊன்று பாத்திரங்கள்
   ஆ. அருவ ஊன்று பாத்திரங்கள்  இ. குழு ஊன்று பாத்திரங்கள்’’3
என்று பகுத்தாய்ந்துள்ளார். இம்முறையில் பரதன் இரு காப்பியங்களிலும் துணைமைப் பாத்திரத்துள் ஒன்றிய பாத்திரமாகக் காட்டப்படுகிறான். ஒன்றிய பாத்திரம் என்பது """"முதன்மைப்பாத்திரங்களின் வாழ்க்கையில் தொடர்புகொண்டு, அவர்கள் வாழ்க்கையைத் திருப்புகின்ற அல்லது துணைபுரிகின்ற பாத்திரங்களை அல்லது வாழ்க்கைப் போக்கில் மாறுதலை ஏற்படுத்தி மாற்றம் செய்வதற்கு வெளிப்படையாக உதவும் பாத்திரங்கள்’’4 ஆகும்.

பரதனும் கவிகளும்

    பரதனை இருகவிகளும் பற்பல இடங்களில் அறவடிவினனாகவும் சிற்சில இடங்களில் பிற பாத்திரங்களின் எண்ண ஓட்டத்தில் குறுங்குணம் உடையவனாகவும் நினைக்கப்பட்டு, பின் அவனது செயல்கண்டு, நற்குணம் உணர்ந்து போற்றும் பெருமையுடைவனாகவும் காட்டியுள்ளனர். ஆனால், புலவர் குழந்தை மட்டும் மேற்கண்ட பார்வையில் மட்டுமல்லாது சகோதரனால் வஞ்சிக்கப்படும் பாத்திரமாகவும் காட்டியுள்ளார்.
    பரதனின் குணநலன்களையும் ஆளுமைத்தன்மையும் மூன்றுநிலைகளில் ஆராயப்படுகிறது. அவையாவன:
1.    பரதனுடன் உறவுடைய பாத்திரங்கள் வழி அறிதல்
2.    பரதனுடன் உறவில்லாத பாத்திரங்கள் வழி அறிதல்
3.    பரதன் வழி அறிதல்
என்பவையாகும். பரதன் பற்றிய பிறருடைய கூற்றுவழி, கூற்று நிகழ்த்துவோரின் குணநலனும் சற்று வெளிப்படுகிறது.

1.பரதனுடன் உறவுடைய பாத்திரங்கள் வழி அறிதல்

    இந்நிலையில் பரதனுடன் இரத்த உறவுள்ள மற்றும் அவன் மனைவியுடன் உறவுள்ள பாத்திரங்கள் வழி பதரன் குறித்த கண்ணோட்டங்கள் பெறப்படுகின்றன. இவ்வழியில்,
அ.தயரதன் ஆ.கைகேயி இ. கோசலை  ஈ.இராமன்  உ.இலக்குவனன் ஊ.சீதை
ஆகிய பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, பரதன் பற்றிய முரண்பாடுகளும் நல்லுணர்வுகளும் பெறுவதோடு கூற்றுரைப்போரின் பண்புநலன்களையும் அறியலாம்.

அ.தயரதன்

    தயரதன் பரதனுக்குத் தந்தையாக இருப்பினும் இராமன் மீது அதிக பற்றும் பாசமும் கொண்டவனாக விளங்குகிறான் என்பது இரு கவிகளிலும் வாதம். தசரதன் பரதனை கேகய நாட்டிற்கு அனுப்பும் போது மனதுள் உட்கருத்து பொதிந்து அனுப்பியதாக இராவண காவியம் உரைக்கிறது. இக்கருத்து வான்மீகத்தில் """"உன் தம்பி பரதன் நல்லவன். ஆனாலும் மாமன் வீடு சென்று வெகுநாட்களாகிவிட்டன. சாதுர்களாவும் தரும வழியில் வெல்லும் மனம் உடையவர்களாகவும், பிறரால் கலைக்க முடியாத மனதுடையவர்கள் கூட மனம் மாறிவிடுவார். ஆகையால் பரதன் ஊர் திரும்புவதற்கு முன் பட்டாபிஷேகத்தை முடிப்பது நல்லது’’5 என்று கூறப்படுகிறது. இதனை அடியொற்றி தம்முடைய கருத்தையும் நிலை நாட்ட எண்ணிய புலவர் குழந்தை, தயரதன் ‘தான் முன்னாள் கேகய மன்னனிடம் உன் மகளுக்கு என் நாட்டைக் கொடுப்போன்’ என்று கூறிய இக்காரணத்தால் நான் சூழ்ச்சி செய்து கேகய நாட்டிற்கு பரதனை அனுப்பிதாக,
        """"கெடுத்தனன் காமப் பித்தால் கேகயன் மகட்கு நாட்டைக்
        கொடுத்தனன் அதனை மீட்டுக் கொடுத்துனை அரசன் ஆக்க
        அடுத்தனன் பெரிதோர் சூழ்ச்சி பரதனை அதற்கே நாடு
        கடத்தினன் மைந்தா’’ (இராவண காவியம் - 3:8:3)
என்று இராமனிடம் உடைக்கிறான். கைகேயி தன் வரத்தைச் செயலாக்கும் முன்பே இச்செயல் அரங்கேறியுள்ளது.
    ஆனால் கம்பன் வழி அடியொற்றிய அவதார புருஷனில் இத்கைய சுவடே இல்லை.
    கூனியின் கூற்றால் கைகேயி மனம் திரிபுற்றவுடன், அவள் தன் வரத்தை நிறைவேற்ற எண்ணி தசரதனிடம் பரதன் நாடாள, இராமன் 14ஆண்டுகள் காடேகும்படி உரைக்கும் தருணத்தில், அவன் மனதிலுள்ள பரதன் பற்றிய நல்லெண்ணம் வெளிப்பட்டு, இராமன் மீது கொண்ட மிக ஆழமான அன்பின் காரணமாக அவ்வெண்ணத்தில் மாறுபாடு தோன்றுகிறது. வான்மீகி,
        """"ந கதஞ்சித்ருதே ராமாத் பரதோ ராஜ்யம் ஆவசேத்’’6
என்ற ஸ்லோகத்தின் வழி பரதன் இராமனின்றி ஒரு பொழுதும் அயோத்தியில் இருக்கமாட்டான் என்று கூறுகிறார். அக்கூற்றையே பின் வந்த கம்பரும் """"கொள்ளான் நின்சேய் இவ்வரசு’’7 என்று உரைக்கிறார். பின் வந்த காப்பியங்களில் இந்நிலைக் காணப்படவில்லை. கைகேயி, தசரதன் உரையாடலை இராவண காவியம் விரிவாக விளக்கினாலும் மேற்கண்ட நேர்த்தி இல்லை. கவிஞர் வாலியின் பார்வையில் இருவருக்கிடையே நிகழ்ந்த உரையாடலில் தயரதன் வழி பரதனைக் குறித்து,
        """"எனக்கு நீ
        தாரமு மல்ல - உன் மகன்
        பரதன்
        எனக்கு
        தனயனுமல்ல!
        நான் -
        வானம் போனாதும் - உங்களுக்கு
        மானம் போகும்’’ (அவதார புருஷன் - ப-38)
என்று ஒரே ஒரு இடத்தில் கூறியதாக குறிப்பிடுகிறார்.

ஆ.கைகேயி

    கைகேயி பரதனை பெற்றதாய் . ஆனால் கோசலையே முழுமையான பெற்றதாய் போல் இருந்து வளர்த்தவள். கைகேயி இராமனைப் பெறாவிடினும் அவனைத் தன் கண் போல் பாதுகாத்தவள். இத்தகைய சிறப்புடைய கைகேயி மனமானது கூனியால் மாற்றமடைந்து ‘பரதன் தான் தன்மகன்; அவனே நாடாள வேண்டும்’ என்பதற்குரிய மனத்தட்பத்தை அடைகிறாள். இந்நிலை அனைத்து தாய்மார்களுக்கும் உண்டான இயல்புநிலை ஆகும். இராமனைத் தன் மகனாக எண்ணியவள் ஒரு கட்டத்தில் இயல்பான தாய்மார்களுக்கு உண்டான மனத்துடன் தன் மகன் பரதனுக்கு அனைத்து உரிமையும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறாள். இதில் தவறொன்றும் இல்லை. ஆனால் தான் விரும்புவதை, தன் மகன் விரும்புவானா? என்று சிறிதும் எண்ணாமல் தன் தாயன்பை வெளிப்படுத்துகிறாள் கைகேயி.
    தன்னுடைய மதிநுட்பத்துடன் தன் மகள் பரதனுக்குரிய உரிமையை தயரதனிடம் வேண்டுகிறாள். இராமன் மீது தயரதன் கொண்ட அன்பைப் பணயமாக்குகிறாள்.
        """"நினைவிருக்கட்டும்...
        ராமன் மீது ஆணை! ரவிகுல
        சோமன் மீது ஆணை!
        நான் நம்புகிறேன் -
        சூரிய குலத்து ஆணை!’’ (அவதார புருஷன் - ப-36)
என்று வரம் கேட்பதற்கு முன்பும் பின்பும் சேர்த்து இருமுறை இக்கூற்றைப் பயன்படுத்துகிறாள். இக்கூந்றை கைகேயி உரைப்பதாக கவிஞர் வாலி இயம்ன, புலவர் குழந்தை, ‘தன் தலைக்குத் தானே வெடி வைத்து கொள்வது போல’ தசரதனே, கைகேயி மேல் கொண்ட காம மிகுதியால், """"நன்னுதல் தவறேன் நல்ல ராமன்மேல் ஆணை என்றான்’’ (இராவண காவியம் - 3:8:82-4) என்பார். மேலும் இக்காவியத்தில் கைகேயி ‘மிகவும் நல்லவனான ஏதும் அறியாத என் மகனுக்கு அரசைக் கொடுக்கவில்லை என்றால் உன்னுடைய சூழ்ச்சிகளை மக்களுக்கு அம்பலப்படுத்துவேன்’ என தயரதனை அச்சுறுத்துகிறாள். இதன் மூலம் தன்னுடைய மகன் இயல்பை எண்ணி, அவனுக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்தவளாக மனநிம்மதி அடைகிறாள்.
    பரதன் பாட்டன் நகர் நீங்கி கைகேயி அரண்மனை அடைந்து அன்னையை வணங்கினான். பின் தாயிடம் தன் தந்தையைப் பற்றி வினவுகிறான். இதிலிருந்து பரதனுக்கு தந்தைமேல் உள்ள அன்பு வெளிப்படுகிறது. அவனது கேள்விக்கு எவ்வித அவலமும் இல்லாமல், தன் கணவன் மேல் பற்றற்ற நிலையையும் உடைய கைகேயி உன் தந்தை இறந்துவிட்டார் என்றும்,
        """"------------------------ நீ அர
        சாய் அயோத்தியை ஆளுவை உந்தைஅன்
        பாய் அளித்த பரிசென’’(இராவண காவியம் - 3:9:38-3-4)
என்றும் உரைப்பதிலிந்து,தன் அகத்தில் மகனுக்கு கிடைத்த அரசால் பெற்ற மகிழ்ச்சி மட்டுமே புலப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இராமனை தன் மகனுக்காக வஞ்சகன் எனவும் தூற்றுகிறாள்.
    கவிஞர் வாலியும் அரசு தன் மகனுக்கு கிடைத்ததால் பெற்ற மகிழ்வை,
        """"உயிரினும் இனிய மகனே! நான்
        உனக்காகப் பெற்றேன்
        மணிமுடி! அந்த
        மணிமுடியை தரி’’ (அவதார புருஷன் - ப-48)
என்கிறாள். இதிலிருந்து தன் அவலத்தையும் தாண்டி, தன் நற்பண்பு நிறைந்த மகனுக்கு அரசைப் பெற்று தந்தேன் என்ற கைகேயி மனமகிழ்வுநிலை வெளிப்படுகிறது.

இ.கோசலை

    கோசலை பரதனை ஈன்ற தாய்போல் பேணியவள். பரதனைப் பற்றி நன்கு அறிந்தவள். ஆதலால் தன் மகனான இராமன், தான் காடேகும் செய்தியை கூறும் பொழுது,
        """"உன்னிலும் நல்லவன்
        உன் தம்பி பரதன்’’ (அவதார புருஷன் - ப-40)
என கூறுகிறாள். கவிஞர் வாலியின் இக்கூற்று வால்மீகி, கம்பனைத் தழுவியது. அ.ச.ஞானசம்பந்தன் """"கைகேயி இடம் வளர்ந்த காரணத்தாற்போலும் இராமன் இரண்டொரு சிறு பிழைகளையாவது செய்ய, கோசலையிடன் வளர்ந்ததால் பரதன் பிழையென்று கூறக்கூடிய ஒன்றையும் கனவிலும் கருதாதவனாய் வளர்ந்துவிட்டான்’’8 என்று கூறுவது கவிஞர் வாலியின் கூற்றுக்குப் பொருத்தமுடையது. ஆனால் புலவர் குழந்தை, கோசலையை கொடுமனம் கொண்டவளாக படைத்துக் காட்டுகிறார். பரதன் கைகேயி அரண்மனையில் உள்ளான் என்பதறிந்து அவ்விடம் வந்து ‘அவனை உன் தாயொடு சேர்ந்து சூழ்ச்சி செய்து என் மகனை காட்டு விரட்டிவிட்டாய்’ என கடிகிறாள். கோசலையால் இராவண காவியத்தில் எவ்விடத்திலும் பரதன் புகழப்படவில்லை. இதிலிருந்து மாற்றந்தாயுக்கு உரிய ஆழ்ந்த வெளிபாடு புலப்படுகிறது.

ஈ.இராமன்

    இராமனுக்கு பின் பிறந்த மாற்றந்தாய் மகனாக பரதன் இருந்தாலும், இராமனைத் தன் தந்தையாக எண்ணுகிறான் பரதன். கம்பன் மற்றும் வால்மீகியில் இராமன் போற்றும் வரதனாக பரதன் காட்டப்படுகிறான். இராவண காவியத்தில் மாற்றந்தாயின் மகன் பரதன் என்ற நிலைப்பாட்டுடன் இராமன் பரதனை நல்லவன், நற்பண்பு நிறைந்தவன் என்ற எண்ணத்துடன் ஏற்றுக்கொள்ளும் திறன் அறியபடுகிறது. ஆனால், இவ்வெண்ணம் இருப்பதனால் தான் பரதன் தன் பாட்டன் வீட்டிலிருந்து வரும் முன்னம் தான் அரியணையில் ஏற வேண்டுமென்று தன் தந்தை செய்த சூழ்ச்சிக்கு உடன் இருந்து உதவுகிறான். தம்பிக்குரிய அரசைத் தனதாக்க முயல்கிறான். தன் தாய் கோசலையிடம் காடு செல்கிறான் என்பதை மட்டும் கூறாது, ‘பரதன் நான் காடு சென்றாலும், என்னை அவன் பார்க்க வருவான். அரசை எனக்கு தருவான். அப்பொழுது அவனிடமிருந்து வஞ்சகமாக சூழ்ச்சிசெய்து நாட்டை பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது’ என கூறுவதாக இராவண காவியம் இயம்புகிறது. இதனை,
        """"அன்றிநான் இன்றே கானம் ஏகினால் அவன் கட்டாயம்
        மன்றலம் கானம் தேடி வருகுவன் என்னைப் பார்க்கத்
        துன்றிய பொழுது தோன்றும் சூழ்ச்சியால் அவன்பால் நாட்டை
        நன்றியான் பெறுதல் கூடும் எனச்சொலி நடக்கல் ஆனான்’’
                                (இராவண காவியம் - 3:8:127)
என்ற பாடல் தெளிவுறுத்துகிறது. மேலும் சில இடங்களில் பரதன் மிகவும் உயரிய பண்பு நிறைந்தவன் (பாடல் எண்: 3:8:160, 3:8:134) இராமன் கூறுகிறான். இக்காவியத்தில் ஆட்சிக்கு ஆசைப்படும் இராமனாக பிரதிபலிக்கப்படுகிறான். ஆனால் அவதார புருஷனில் தன் தம்பிக்கு அவனுக்குரிய அரசை விட்டுக்கொடுக்கும் பண்பினாகக் காட்டப்படுகிறான். பரதனை தன்னைப் போல கருதி அவனுடைய நற்குணத்தைத் தன் தாய் கோசலையிடம்,
        """"அம்மா!
        பின்னவன் பரதன்
        மன்னவன் ஆனால்...
        அன்னவன் பெற்ற தெல்லாம்
        இந்த
        முன்னவன் பெற்றதாகும்’’ (அவதார புருஷன் - ப-39)
என்கிறான். இதிலிருந்து பரதன் மேல் உண்மையனான அன்பு பொதிந்து பாத்திரமாக இராமன் விளங்குகிறான் என்பது புலப்படுகிறது.
உ.இலக்குவணன்
    இராமனுடன் என்றும் இணைபிரியாத பாத்திரமாகவும் பரதன் மேல் வெறுபுற்று, பின் இராமனின் அறிவுரையாலும் பரதனின் செயல்கண்டும் அவனை ஏற்றுக்கொள்ளும் பாத்திரமாக இலக்குவணன் அமைகிறான். இராமன் மட்டும்தான் தனக்கு தமையன் என்ற உள்ளுணர்வுடன் செயல்படுகிறான். இராமன் காடேகக் காரமாணவர்களை,
        """"அண்ணலே!
        ஆணையிடுங்கள்!
        சொல்லால்
        திருத்தமுடியாதவர்களை -
        வில்லால் திருத்துகிறேன்;
        திருத்திவிட்டு -
        தகத்தகாயமான தங்கக்
        கிரீடத்தைத்
        தங்கள் தலையில் பொருத்துகிறேன்!’’ (அவதார புருஷன் - ப-40)
என பரதனும் இச்சூழ்ச்சியில் உட்பட்டான் என எண்ணி கடிகிறான். இவ்வொரு இடத்தில் இலக்குவனன், பரதன் மீது கோபம் கொண்டாதாக வாலி இயம்புகிறார். இராவண காவியத்தில் புலவர் குழந்தை, ‘பண் இல்லாத பாடல் போல இனிமை இல்லாத பரதனை மட்டுமல்லாது அவனுடைய உறவினர்களையும் சேர்த்துக் கொல்வதாகவும், தசரதனைச் சிறைப்படுத்தியோ அல்லது கொன்றோ, கொடியவளாகிய கைகேயியோடு பரதனையும் காட்டுக்கு ஓட்டுவது என் கடமை’ என இலக்குவணன் உரைப்பதாக படைத்துக்காட்டுகிறார். இதிலிருந்து பரதன் மேல் கொண்டுள்ள தவறான எண்ணப் பிரதிபலிப்பை அறியமுடிகிறது. இதனை,
        """"பண்ணழி பாடல் போலப் பரதனுக்கு உரியோர் தம்மை
        மண்ணிடை வீழ்த்திச் செம்பொன் மணிமுடி புனைந்த அன்னை
        புண்ணினை ஆற்றி நாட்டைப் புகழொடு பொருத்தி ஆள்வோம்’’
                            (இராவண காவியம் -    3:8:124 -2-3)
        """"தீயவள் கணவன் தன்னைச் சிறையினில் இட்டோ அன்றி
        வீயவே செய்தோ நாட்டை மீட்குவென் கொடியோள் ஒரு
        போயொடு நொடியிற் கானம் போக்குவென் அவனை’’                                        (இராவண காவியம் -    3:8:125 -2-3)
என உரைகிறது. இதிலிருந்து  தன்னிலை மறந்த ஒரு தமையனுக்காக, இன்னொரு தனையனைக் கொலைப்புரியும் எண்ணத்தைக் கொண்டுள்ளான் இலக்குவணன் என்பது உணரப்படுகிறது. இராமனைத் தேடி கானகம் செல்லும் பரதனின் உண்மை தன்மையறியாது,
        """"என்ன வென்னப் பரதன் எதிர்த்தனன்
        துன்னு தானைத் தொகையொடு வந்தனன்
        இன்னை யேஅவ னின் உயிர் போக்கியான்
        மன்னான உனை வாழவைப் பேன்என்றான்’’                                                 (இராவண காவியம் -    3:9:16)
என்று பரதன் மேலுள்ள பகையினை வெளிப்படுத்துகிறான்.

ஊ.சீதை

    சீதை, பரதனுக்கு அண்ணி மட்டுமல்லாது, தன் மனைவியின் தமக்கையும் ஆவாள். சீதையானாவள் பரதனுடன் உரையாடுவதாக இரு காப்பியங்களிலும் ஓரிடத்தில் கூட காட்டப்படவில்லை. இலக்குவன் மேல் உள்ள கோபத்தில், அவனிடம் பரதனைப் பற்றி கடியும்போது அவனைக் குறித்த சீதைக்குள்ள கண்ணோட்டம் அறியப்படுகிறது.
        """"அண்ணன்
        பேனால் - அண்ணனுக்குரிய
        மண்ணையடையலாம் - என்று
        அன்றொரு தம்பி நினைத்தான்’’ (அவதார புருஷன் - ப-90)
என்று அவதார புருஷன் காப்பியத்தில் உரைக்கிறாள். இராமனது பாதுகையை ஏற்றுக்கொண்டு பரதன் சென்ற பின்னும் அவள் மனத்துள் தோன்றும் எண்ணத்தை இதுகாறும் அமைதியின் செல்வியாக இருந்த சீதை வெளிப்படுத்துகிறாள். புலவர் குழந்தை படைத்த சீதையும் இலக்குவனனைப் பார்த்து, """"நீ பரதன் சூழ்ச்சியால் என் கணவனைக் கொன்று என்னை அடைய விரும்பி எங்களுடன் கானகம் வந்தாயோ?’’(இராவண காவியம் -4:4:20)  என உரைக்கிறாள். இதிலிருந்து பரதன் மீது அவளுக்குள்ள ஐயப்பாடு புலப்படுகிறது.

2. பரதனுடன் உறவில்லாத பாத்திரங்கள் வழி அறிதல்

    பரதனுடன் உறவில்லாத பாத்திரங்களாக கருதப்படும்,
    அ. மந்தரை (எ) கூனி
    ஆ. குகன்
ஆகியோர் மூலம் இரு காப்பியங்களிலும் பரதன் பற்றிய எண்ணங்கள் வெளிப்படக்காணலாம்.

அ. மந்தரை (எ) கூனி
    மந்தரை கைகேயியின் பணிப்பெண். கைகேயி மீதும் அவள் மகன் பரதன் மீதும் மிகுந்த அன்புக் கொண்டவள்.
    """"பண்டை நாள் இரகவன் பாணி வில் உமிழ்
        உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்’’9
என கம்பர் கூறியது போல மந்தரை உள்ளர்த்த கூற்றுகளாக, இராவண காவியம் இயம்பவில்லை. உள்ளார்ந்த அன்புடன் பேசுவதாக கூறுகிறது.
    பரதனை தன் மகனாக பாவிக்கும் கூனி இராமன் அரசேற்கும் செய்தி கேட்டதும்,
        """"வென்றிவிற் பரதா நீயும் வீணுக்கோ பிறந்தாய் அப்பா’’
                            (இராவண காவியம் -    3:8:35-4)
என்று  பரதனின் வீரநிலையைக் கூறி வருந்துகிறாள். ‘பரதன் பிறரிடம் அண்டி வாழும் நிலை ஏற்பட்டு விடுமோ’ என்று அச்சம் கொள்கிறாள். ‘பரதன் இன்று மட்டும் அயோத்தில் இருந்திருந்தாள் அரசுக்காக அவனை இராமன் கொன்றிருக்கக்கூடும்’ என்று புலம்புகிறாள். இதனாலேயே கூனியை """"நாடியே பரதற்காகும் நலஞ்செயும் தோழி’’ (இராவண காவியம் -    3:8:60-1) என குழந்தை உரைக்கிறார். ஆனால் கவிஞர் வாலி படைத்த கூனி பரதன் நிலை பற்றி ஒரே வரிகளில்,
        """"ராமனுக்கு ராஜ்ஜியம்
        பரதனுக்குப் பூஜ்ஜியம்’’ (அவதார புருஷன் - ப-32)
என்று கூறுவதாக படைத்துக்காட்டுகிறார்.

ஆ.குகன்

    குகன் வேடர்குலத்தலைவன். சிருங்கிபேரம் என்னும் சிற்றூருக்கு அரசன். பரதனை கங்கையாற்றின் எதிர்கரையில் பார்த்த குகன்,
        """"எம்பிரான் தம்பி! பெயர் பரதன்!
        தோற்றத்தில்தான் தூயவன்!
        ஆனால் தாயின் சாகசத்தால்
        தமையன் முடிபறித்த தீயவன்!’’ (அவதார புருஷன் - ப-51)
என்று மனவோட்டத்தில் எண்ணி, பரதனை வதம் செய்ய துடிக்கிறான். மறுதரை அடைந்து குகன், பரதனைக் மரவுரியில் கண்டதும் அவனின் பாதம் பணிந்து,
        """"ஒழுங்கல்ல செங்கோல்
        ஓச்சுவது என்று -
        ஒதுக்கினாய் நாடு - அம்மம்மா!
        ஓராயிரம் ராமர் -
        ஒரு சேர வரினும் -
        உனக்காவரோ ஈடு?’’ (அவதார புருஷன் - ப-52)
என்று கூறி பூரித்துபோகிறான். இராமனைத் தெய்வமாக வணங்கிய குகன் ஆயிரம் இராமனாக, அதவாவது ஆயிரம் கடவுள்களின் ஒன்று சேர்ந்த உருவமாக பரதனை எண்ணுகிறான். ஆனால் இராவண காவியத்தில் """"நண்ணி னேன்என நம்பியைப் போற்றினான்’’    (இராவண காவியம் -    3:10:8-4) என ஒரு வரியில் முடித்துவிடுகிறார்.

3.பரதன் வழி அறிதல்

    ஒருவருடைய ஆளுமைத் தன்மை மற்ற பாத்திரங்களின் வெளிப்பாட்டில் காண்பதை அன்றி, அந்த பாத்திரத்தின் செயல்பாட்டின் வழியும் திறம்பட அறியலாம். பரதன் குறித்து தருமநடராசன் """"தசரதன் மைந்தர் நால்வருள் பரதன் இராமனுக்கு இளையோன். கைகேயி பெற்றெடுத்த மைந்தன். கோசல நாட்டை ஆளவும் உரிமையுடைவன். மனிதப் பண்பாட்டின் சிகரமாய் திகழ்பவன். காப்பியத்தலைவன் இராமனைப் பழிக்கும் பாத்திரங்களும் புகழும் பெருமை பெற்றவன். பகைவனாலும் பழிக்க இயலாத பண்பாடு உடையவன்’’10 என்று உரைக்கிறார்.
அ. இத்தகைய பண்புடைய பரதன் தன் தந்தை தயரதன் மீது மிகுந்த அன்புக் கொண்டவன். இராமனைத் தன் உயிராக எண்ணியவன். ஆதலால் தான், தன் நன்மைகாக தன் தாய் கைகேயி செய்த செயலறிந்து தாயென்றும் பாராமல் கடிகிறான்.இதனை, இராவண காவியத்தில் (பாடல் எண்கள் : 3:9:39,40) ஆகிய இரு பாடல்களில் உரைக்கிறார்.
‘அண்ணனைக் காடேக செய்து, தந்தையைக் கொன்று வாழ வைத்தாயே’ என்று கொதிக்கிறான். இதிலிருந்து அவன் தன் தமையன் மேல் வைத்த பற்று வெளிப்படுகிறது. அவதார புருஷன் காவியத்தில்,
        """"மாங்கல்யத்தை விற்று - மகனுக்கு
        மகுடத்தை வாங்கிய
        மாதாவின் கதை - எந்த
        ஏட்டிலும் இல்லை! பாட்டிலும்
        இல்லை!
        வீட்டிலும் இல்லை! நாட்டிலும்   
        இல்லை!’’ (அவதார புருஷன் - ப-48)
என்று பலவாறு ஏசுகிறான் என்பதிலிருந்து பரதன் இரு காவியத்திலும் நாட்டையாள ஆசைக்கொள்ளாத தகைமையாளனாக விளங்குகிறான் என்பது தெளிவாகிறது.
ஆ. கவிஞர் வாலி , கோசலை தன் மகன் காடேக பரதன்தான் காரணமென ஐயப்பாடுக் கொண்டு தன் அகத்துள் அடக்கினாள். பரதன் அவள் அரண்மனைக்கு வந்து கதறும் போதே ‘உனக்கு ஒன்று தெரியாதா’ என வினவுகிறாள். அதனைக் கேட்ட பரதன் உயிர் போனது போல் பதறி,
        """"நான் ஏதுமறியா பிள்ளை!
        இது என் -
        தாய் புனைந்த சூது’’ (அவதார புருஷன் - ப-49)
        """"நான் உரைப்பது -
        நிஜமல்ல வென்றால்...
        நானிலத்தார் நிகழ்த்தும்
        பாவமெல்லாம்
        நானொருவனே ஏற்று -
        நரகத்தில் கிடப்பேன்’’ (அவதார புருஷன் - ப-49)
என பொருமுகிறான். அவனது இத்தகைய வஞ்சினப்பண்பால் எத்தகையவர்க்கும் துரோகம் எண்ணாத நல்லுள்ளம் படைத்தவன் என்பது புலப்படுகிறது. இராவண காவியத்தில் இத்தகைய நிகழ்வு இல்லை. கோசலை, கைகேயி மாளிகை அடைந்து பரதனை எள்ளுவதாக மட்டுமே காட்டப்படுகிறது.
இ. பரதன், இராமனை அழைத்துவர மரவுரி தரித்து சென்றான். தமையன் படும் இடரைத் தானும் ஏற்றான். இராமனைக் கண்டு பாதத்தில் விழுந்து மன்றாடியும் பயன்படாததால், அவனது பாதுகளைச் சென்னிமேல் இருத்தி அயோத்திக்கு செல்லாமல் நந்திக்கிராமத்தில் இராமன் பாதுகைகளைக் கொண்டு அரசோச்சினான். 14 ஆண்டுகள் முடிந்து குறித்த இராமன் வரவில்லையெனில் ‘தீ புகுவேன்’ என உரைத்தான். ‘தீ புகுவேன்’ என்ற குறிப்பு பரதன் பாதுகையைப் பெறும் இடத்தில் கவிஞர் வாலி குறிப்பிடவில்லை. இறுதியாக இராமன் வழியாக பரதன் உரைத்ததாகக் கூறப்படுகிறது. இராவண காவியம்,
   
        """"உரிமை யாகின் உனக்கதை யீந்தனன்
        அருமை யாய்அர சாளுமண்’’     (இராவண காவியம் -    3:10:26-1-2)
என அறத்தின் வடிவமாக பரதன் தனக்குரிய அரசை இராமனுக்கு அளிக்கிறான். அதனை இராமன் ஏற்காத போது, இறுதியில் இராமனின் பாதுகையைக் கொண்டு சத்துருக்கனன் உதவியுடன் நந்திக்கிராமத்தில் ஆட்சி செய்தான். இதிலிருந்து பரதனின் படிநிலை மேம்பாடு அறியபடுகிறது.
இ.  வசிட்டர் போன்ற பலர் ஆட்சி பொறுப்பை ஏற்க பரதனிடம் வற்புறுத்தியும் அவன் அரசாட்சியை ஏற்கவில்லை. ‘என் அண்ணனுக்குரிய அரசு இது; இதுவே அறமும் ஆகும்’ என கூறினான் என்று இருகவிகளும் இயம்புகின்றனர். """"பரதன் நாட்டிற்கோ, மற்றவர்க்கோ பயப்படவில்லை. தருமத்திற்கு மட்டுமே பயப்பட்டான் என்பதை விட அவனே தருமமாகி நின்றான்’’11 என்று பரதனை உயர்த்துகிறார் தரும நடராசன். இவ்வகையில் பரதனுடைய ஆளுமைத்திறம் திறம்பட வெளிபடுகிறது.

முடிவுகள்

1.    பரதன் பெரும்பாலும் அவனுடைய குணநலன்களால் மதிப்பீடு செய்யப்படாமல், அவன் தாய் கைகேயியின் செயல்பாட்டால் மட்டுமே பிறரால் நோக்கப்படுகிறான்.
2.    இவ்விரு காவியங்களிலும் வால்மீகி, கம்பன் போன்றோர் படைத்த விசுவாமித்திரர், கோசலை, இராமன், வாலி போன்றோரின் பார்வையில் போற்றப்பட்ட பரதன் பண்புகள் காட்டப்படவில்லை.
3.    பரதன் பாத்திர ஆளுமை மட்டும் பிறபாத்திரங்களின் வழி வெளிபடுவதல்லாமல், அவனைக் குறித்து கூற்று நிகழ்த்துவோரின் பண்புநலன்களும் இக்கட்டுரை வழி வெளிப்படுகிறது.
4.    பரதன் பிறரிடம் நடந்துக்கொள்ளும் விதம் மற்றும் உரையாற்றும் பாங்கினால் பிற பாத்திரங்களிலிருந்து வேறுபடும் தன்மையோனாக விளங்குகிறான் என்பதை உணரமுடிகிறது.
5.    பரதன் அரசாட்சியை விரும்பாத, அறத்திற்கு அஞ்சும் அறவடிவினனாக காட்சியளிக்கிறான் என்பது புலனாகிறது.

சான்றெண் விளக்கம்

1.    இரா.வ.கமலகண்ணன், உலகப்பெருங்கவிஞர் கம்பர், ப - 208.
2.    மேலது, ப- 208.
3.    முனைவர் க.மீனாட்சி சுந்தரம், சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும், ப - ஓஐ
4.    மேலது, ப - 115.
5.    ஸ்ரீ பாரதி தீர்த்ததாசன், கம்பனும் வால்மீகியும், ப - 33.
6.    மேலது, ப - 36.
7.    கம்பராமாயணம் - 2:2:30-1
8.    அ.ச.ஞானசம்பந்தன், தம்பியர் இருவர், ப - 90.
9.    கம்பராமாயணம் - 2:2:49-3-4
10.    பி.தருமநடராசன், காவிய பாத்திரங்கள், ப - 52.
11.    மேலது, ப . 58.




No comments: